புதுமைப்பித்தன் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 06:11
- Written by editor
முதன் முதலாக, நான் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்புக்கு போகப் போகும் இடைவெளி நேரத்தில், மதுரையில் ஒரு நூலகத்திலே தான் புதுமைப்பித்தனின் கதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. பொன்நகர் தான் நான் படித்த முதல் கதை. படித்ததுமே எனக்கு ஒரே அதிர்ச்சி.
அதுவரை பள்ளிக்கூடத்திலே சொல்லிக் கொடுத்து வந்த கருத்திற்க்கும், இந்த கதைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக உணர்ந்தேன். அதே ஆண்டுக்குள் கிட்ட தட்ட முப்பது, முப்பத்திரண்டு கதைகளை படித்து முடித்துவிட்டேன்.
பத்தாம் வகுப்பு பரிட்சை முடித்ததும், தாத்தா சோலைமலை அவர்களை சந்திக்க சென்னைக்கு வந்துவிட்டேன். தாத்தா, புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் அதிகம் வயப்பட்டவர். ஒருமுறை நானும் தாத்தாவும் பேசிக்கொண்டிருக்கும் போது, நான் புதுமைப்பித்தனின் கதைகளை படித்ததை சொன்னவுடன், அவர் மிகவும் பெருமையாக என்னை நோக்கி, கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை கலைமகளில் வந்த அந்த வாரமே புத்தகத்தை எடுத்துக் கொண்டு என் தந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கே வந்து “எப்படி எழுதியிருக்கான் பாரு” என்று மிகுந்த பரபரப்போடு நீட்டினதாக சொன்னார்.
தாத்தா புதுமைப்பித்தனால் அதிகம் வயப்பட்டவர். ஒருமுறை சென்னைக்கு வந்து புதுமைப்பித்தனைத் தேடி மணிக்கொடி பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, புதுமைப்பித்தனே அங்கிருந்து தாத்தாவை உட்கார வைத்து தனக்கு வைத்திருந்த கடலையை கொடுத்து சாப்பிடச் சொல்லி தன்னை அவரே அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதை மிகவும் மகிழ்ச்சியாக என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
நான் படிக்கிற காலத்தில் புதுமைப்பித்தனின் மனைவியும், மகளும் மந்தைவெளியில் இருந்தது தெரியவந்ததும், தாத்தவின் வீடும் அங்கே இருப்பதும், எப்படியாவது புதுமைப்பித்தனை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு எப்போதும் மேலோங்கியே இருந்த்து. அதன் பிறகு நான் அவரை சந்தித்ததை மனதிற்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இன்றும் நினைத்து வருகிறேன்
புதுமைப்பித்தனின் ஓவியத்தை தினமணி பத்திரிக்கைக்காக 1980ல் வரைந்து கொடுத்திருந்தேன். அதன் பிறகு பெரும்பாலான பத்திரிக்கை ஆசிரியர்களை, நண்பர்களைப் பார்க்கும் போது, தினமணியில் வெளிவந்த படத்தை தான் அவர்கள் தங்கள் மேசையின் கண்ணாடிக்கடியில் வைத்திருப்பதாக கூறினார்கள்.
இந்த படம் 1997 கதா அவர்கள் புதுமைப்பித்தனை ஆங்கிலத்தில் மொழிபெயர்தற்காகவும், காலச்சுவடு கண்ணன் கேட்டுக் கொண்டதிற்காகவும் வரைந்தது.






