தொன்மங்களில் தோய்ந்த தூரிகை -இல.சைலபதி
- Details
- Published on Wednesday, 10 August 2011 19:09
- Written by editor
“நான் ஒரு ஓவியனே! இந்தியத் தேசத்தில் நம்பிக்கை கொண்டவன்! எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏழு வர்ணங்களும் அதன் கலவைகள் மாத்திரமே”. எம்.எஃப்.ஹுசைன்.
பொதுவாகத் தொண்ணூற்றி ஐந்து வயதில் ஒருவர் மரணம் அடைந்த செய்தியைக் கேட்கிறபோது பெரிதும் மனம் வருந்துவதில்லை. இந்த வயதைக் கடந்தவர்களின் மரணத்தை எங்கள் கிராமங்களில் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லிக் கொள்வோம்.
மகன், மகள், மருமகள், மருமகன், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என அனைவரும் கூடியிருக்கும் அந்த துஷ்டி வீட்டின் ஒரு மூலையில்கூட துக்கம் இல்லாமல் துடைத்தெறியப்பட்டு கலகலப்பாக இருக்கும். பிணத்தை எடுக்கும்போது மட்டும் வீட்டுப் பெண்களின் அழுகை வெடித்துச் சிதறும். அதுவும் பிணம் தெருமுனை கடக்கும்வரைதான். அடுத்த நொடி வீடு இயல்பிற்குத் திரும்பிவிடும்.அப்படிப்பட்ட கடைசிநேரக் குரலெடுப்பைப்போல, இந்தியத் தலைவர்கள் எம்.எஃப் ஹுசைனின் மரணத்திற்கு வருந்தி முடித்தனர். அவர்களது இரங்கல் செய்திகள் சடங்காச்சாரமாக இருந்தது.உண்மையில் அவர்கள் உள்ளத்தில் எந்த விதமான குற்றவுணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் பிறந்த ஒரு கலைஞன் தனது கடைசி நாட்களை ஒரு பாலைவனத்தின் வறண்ட கலாசாரத்திற்குப் பழக்கிக் கொண்டது பற்றிய எந்த வருத்தமும் இவர்களுக்கு இல்லை.
எம்.எஃப்.ஹுசைன் மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தவர்.ஜே.ஜே. கலைப்பள்ளி, மும்பையில் தன் கலைக்கல்வியைக் கற்ற ஹுசைன் திரைப்பட விளம்பரத் தட்டிகள் வரைந்து அதன்மூலம் தன் வாழ்க்கைக்கான வருமானத்தைத் தேடிக்கொண்டார்.விரைவிலேயே அவரது ஓவியங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது. 1952ல் சூரஜ் நகரில் தனது முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது புகழ் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பரவியது.இந்திய அரசின் உயர் விருதுகளான, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவை இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட்டன. இப்படி உலகின்முன், இந்தியக் கலை உலகின் நவீன முகமாக அறியப்பட்ட ஹுசைன் மீதாக, பல்வேறு குற்றச்சாட்டுகளும், தாக்குதல்களும் கடந்த இருபது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதை ஒரு கலைஞனின் படைப்புகளுக்கு எதிரான எதிர்வினைகள் என்று கொள்ளவியலாது. இந்திய அரசியல் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் ஆன நிகழ்வாகவே இதை அறிய வேண்டியுள்ளது. இச்சிக்கலை மேலும் புரிந்துகொள்ள இரு காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, அவரது படைப்புகள், அவற்றில் எவை எதிர்ப்புக்குள்ளாகிறது என்று மற்றொன்று அவர் படைப்புகள் மேலான பெரும்பான்மையினரின் உளவியல் நெருக்கடி.
இந்தியாவில் பிறந்து கலை படைக்கும் எந்த ஒரு கலைஞனும், இந்திய மரபிலுள்ள தொன்மங்களை விட்டுவிட்டுத் தன் கலையை விரிவாக்க இயலாது. ஹுசைன் தனது இளமைக்காலம் முதலே இந்தியத் தொன்மங்களினால் ஈர்க்கப்பட்டவராகக் காணப்படுகிறார்.அவற்றைத் தனது படைப்புகளிலும் பின்பு வெளிப்படுத்தினார். 1968 முதல் இராமாயணம் முழுமையையும் எட்டு வருடங்களில் 150 ஓவியங்களாக வரைகிறார்.பனாரஸின் இந்து குருக்களை வரவழைத்து அதுகுறித்த கருத்துக்களைக் கேட்டறிந்திருக்கிறார். தனது வாழ்நாளில் 100க்கும் மேலான கணேஷ் (விநாயகர்) ஓவியத்தை வரைந்திருப்பதாகவும், எந்த ஒரு பெரிய ஓவியத்தை வரையும் முன்பும் கணேஷ் வரைந்துவிட்டே ஓவியத்தை வரைந்துள்ளேன் என்றும் குறிப்பிடுகிறார்.
நெருக்கடி காலம் பிரகடனம் செய்யப்பட்ட அன்று இந்திராகாந்தியைத் துர்க்கையாகச் சித்தரித்து படம் வரைந்தார்.இந்தியத் தொன்மங்கள் குறித்த அவர் பார்வை விரிவானது.அப்பொழுதெல்லாம் எழாத எதிர்ப்புகள் அவரது பிற்காலப் படைப்புகளால் நிகழ்கிறது.
அவரது பாரதமாதவின் கற்பழிப்பு மற்றும் நிர்வாண சரஸ்வதி ஆகிய ஓவியங்கள் மற்றும் தனது மகனின் திருமண அழைப்பிதழில் வரைந்த சிவன், பார்வதி ஓவியம் போன்றவை கடும் கண்டனங்களுக்கு ஆளானது.
சுதந்திர இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சில பயங்கரவாதச் சம்பவங்கள் இந்திய மக்களிடையே மதப்பிரச்சனைகளை உருவாக்கின.சிறுபான்மை முஸ்லீம்கள்மீது பெரும்பான்மையின மக்கள் நம்பிக்கையின்மையைக் கொள்ளத் தொடங்கினர். இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லீமையும் தீவிரவாதியாகப் பெரும்பான்மையினரின் மனம் சந்தேகிக்கத் துவங்கியது.இது ஒரு தேசத்தின் உளவியலாகவே மாறிவிட்டது எனலாம்.அதற்கு இந்திய அரசியல்வாதிகளும் ஒரு காரணம்.சல்மான்ருஷ்டியின் நூலுக்குத் தடை விதித்த இந்திய அரசு, எம்.எஃப் ஹுசைனின் ஓவியங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டின.இந்திய அரசியல் பிரமுகர்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையினரின் இயக்கங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகப் பெரும்பான்மையினர் நம்பினர். பெரும்பான்மையினரின் உணர்வுகள் புண்படுத்தப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் கூறினர். இத்தகைய காரணங்களின் பின்னணியில்தான், தங்களை இந்துமத மரபின் காவலன் என்று சொல்லிக் கொள்ளும் சங்பரிவார் போன்ற அமைப்புகள்,ஹுசைனுக்கு எதிரான போராட்டங்களில் இறங்கின.
கலை பற்றிய எந்தப் புரிதல்களும் இல்லாத இவற்றின் போராட்டங்கள் எந்த விவாதத்தையும் முன்வைக்காமல், நேரடியாகப் படைப்புகளை அழிக்கும் ஓர் பயங்கரவாதப் போக்கில் இறங்கின. மக்களின் அறிவைத் தூண்டாது, உணர்வைத் தூண்டி போராடக் கிளம்பும் எந்த இயக்கமும், தனது கருத்துக்களுக்கு எதிரான எந்த விவாதங்களையும் முன்னெடுக்க விரும்பாது, முரட்டுத்தனமான ஒற்றைப் புரிதலோடே பேராடுகின்றனர். இது சில பகுத்தறிவு இயக்கங்களுக்குக்கூட பொருந்தும். திராவிட இயக்க வரலாற்றில்கூட இதைக் காண இயலும்.உயர் சாதியினருக்கு எதிராக உருவான திராவிட இயக்கங்கள் ஒற்றைப் பகுத்தறிக் கொள்கையினைக் கைக்கொண்டு, மரபார்ந்த தொன்மங்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்தும், அவை பற்றிய எந்த விவாத்தையும் மறுத்தும், அதே வேளையில் அவற்றின் குறியீட்டுட்த்தன்மையினை எதிர்மறையாக அணுகிக் கேலிசெய்யும் போக்கும் கொண்டன.
எம்.எஃப் ஹுசைனின் ஓவியங்களின்மீது கண்டனங்களை எழுப்புவது, அவர் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைகிறார் என்பது தான்.இதைச் சரியாகச் சொன்னால் இஸ்லாமியரான ஒருவர் இந்து தெய்வங்களை எப்படி நிர்வாணமாக வரையலாம் என்பதுதான். நிர்வாணம் பற்றிய இந்திய மரபின் புரிதல்கள் ஆழமானதாகும்.ஆனால்,அதைப் பற்றியெல்லாம் மதவெறி அரசியல் பிரமுகர்களிடம் விவரிப்பது என்பது இயலாத ஒன்று. இந்திய ஞானமரபில் (எல்லாவற்றையும் இந்து ஞானமரபு என்ற ஒன்றுக்குள் உள்ளடக்குவது சரியல்ல) நிர்வாணம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதைப் பற்றிக் கூறும் ஹுசைன்,
“இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது புனிதமானது. எனக்கு மிகவும் நெருக்கமான அந்த உணர்வை நான் அவமதிப்பேனா?” என்கிறார். (தெகல்கா பேட்டி தமிழில் காலச்சுவடு). ஆனால், இவற்றையெல்லாம் ஏற்கும் மனநிலையிலிருந்து மத அமைப்புகள் விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
பால் தாக்ரே, ஹுசைன் இந்து மரபை உடைக்கும்போது, தான் அவர் வீட்டை உடைப்பது குற்றம் இல்லை என்கிறார். இத்தனைக்கும் ஹுசைனை இஸ்லாமியர்கள் கொண்டாடவில்லை, குறைந்தபட்சம் அவரை இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளக்கூட இல்லை.
ஹுசைன் இந்துக் கடவுள்களை வரைவது தவறு என்று மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வரைவதே தவறு என்கிறார்கள் முஸ்லீம் மதவாதிகள். எந்த ஓவியமும் பிற்காலத்தில் வழிபாட்டுக்குரியதாகி விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமியர்கள் கருத்து.அதனால் ஓவியம் வரைதலையே அவர்கள் தடுக்கின்றனர். அந்த விதத்தில் ஹுசைன் முதலில் தனது மதத்தின் எல்லையை விட்டு வெளியே வந்து விடுகிறார். எனவே, அவரை இஸ்லாமியர் என்று பார்க்கும் போக்கு தவறானது. ஆனாலும், அப்பார்வை தவிர்க்க இயலாததாகிறது. ஹுசைன் இவற்றையெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை. படைப்பு பற்றிக் கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு என்று சொல்லும் ஹுசைன், வன்முறையற்று, தனது படைப்பின்மீதான விவாதங்களை எதிர்பார்த்து ஏமாந்தார். சிலமுறை வருத்தம்கூடத் தெரிவித்தார். ஆனால், இவை எல்லாம் வரலாற்றில் நிகழ்பவையே என்று சொல்லும் அவர், இந்தியாவின் மீதான நம்பிக்கையை இழந்து விடவேயில்லை.
திரைப்படத்துறை சார்ந்த அவரது ஈர்ப்பும், ஈடுபாடும் தீவிர கலைப்பணியிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட இடைவேளைகள் என்று கருத இடமுண்டு. ‘மீனாட்சி’ திரைப்படத்திற்கு இஸ்லாம் அமைப்புகளின் எதிர்ப்புகள் மிகுந்ததன் காரணத்தால் அப்படம் திரையரங்குகளைவிட்டு ஒரேவாரத்தில் ஓடியது. அதன் விளைவாக அவருக்கு நேர்ந்த பொருளாதார இழப்புகள் அதிகம். ஹுசைன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தியவர் அல்லர். அவரது ஓவியங்கள் கோடிக்கணக்கில் விற்பனையாகின. இவையெல்லாம் இந்தியப் படைப்பாளிகள் மத்தியில் கொஞ்சம் பொறாமையைக்கூடத் தோற்றுவித்தன. அவர் நாட்டைவிட்டுத் துறத்தப்பட்டதைவிட அவரின் செல்வச் செழிப்பே பலரின் கவனத்தை ஈர்த்த்து. கத்தாரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசுக்காரை ஹுசைன் மிகச் சர்வசாதாரணமாக வாங்கிக்கொண்டு போனார். அதுவும் கோடீஸ்வர ஷேக்குகளே அக்காரைத் தவணைமுறையில் வாங்கும்பொழுது இவர் மொத்தப் பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்.இதை தமிழ் எழுத்தாளர் ஒருவர் கூறியிருப்பதன் பிண்ணனியிலான ஏக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஹுசைனுக்கு இந்திய அரசு உரிய பாதுகாப்பு தந்து இந்தியாவில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். கத்தார் அரசு அவருக்குக் குடியுரிமை தந்தது. ஹுசைன் ஒருபோதும் இந்தியா பற்றித் தவராகப் பேசியவர் இல்லை.
அவர் சொல்வதெல்லாம் இந்தியக் கலை வடிவம் பற்றிய ஒரு அடையாளப்படுத்துதலை இளைய தலைமுறைக்குத்தரத் தவறிவிட்டோம் என்பது தான்.
“இந்தியா சுதந்திரம் அடைந்து 60 வருடங்களுக்கு மேலாகியும் ஓவியம் கற்பவர்களுக்குக் கிரேக்கக் கலை சார்ந்த உடலைப் பற்றி மட்டும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர், கீட்ஸ் சொல்லிக் கொடுத்துவிட்டுக் காளிதாசனைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க மறந்துவிடுகிறோம்”
ஹுசைன் இன்று நம்மிடையே இல்லை.அரசியல் செய்வதற்கான ஒரு காரணி தொலைந்து போனது குறித்து சங்பரிவார் வருந்திக்கொண்டிருக்கலாம்.இரங்கல் செய்தியோடு தன் கடமையை முடித்துக் கொண்டது இந்திய அரசு.
நன்றி:காலச் சுவடு, உயிர்மை,ஜெயமோகன்,அரவிந்த்






