FACING WINDOWS -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 11:52
- Written by editor
இயக்குநர் பெர்சான் ஒஸ்பெடெக் இயக்கியுள்ள "Facing Windows" அழகியலுடன் கூடிய மென்காதல் கதை, நினைவேடுகளில் படிந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகியலுடன் வெளிப்படித்தியிருக்கும் திரைப்படம். அரசியலும் வரலாறும் மெல்லிய நூலிழையில் இணைந்து படம் நெடுக ஒருவித மர்மத் தன்மையுடனான காட்சிகளாய் விரிகிறது.
கியோவென்னா திருப்தியற்ற மணவாழ்வில் இரு குழந்தைகளுடன் கணவன் பிலிப்போவுடன் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறாள். வாழ்வியலுக்காக சிக்கன் பேக்டரி ஒன்றில் கணக்காளராக பணி புரிகிறாள். மனதிற்கு பிடிக்காத வேலையினாலும் கணவனின் நைட் ஷிப்ட் அலுப்புகளாலும், பிள்ளைகளின் ஓயாத தேவைகளும் கவனிப்புகளுமாக அவளின் வாழ்க்கை ஏதோ சீராகச் சென்று கொண்டிருந்தது போலத்தான் இருந்தது, ஒரு மனிதனை சந்திக்கும் வரை...
கியோவும் பிலிப்போவும் ஷாப்பிங் முடித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டே வீடு திரும்புகையில் வயதான ஒருவரை வீதியில் சந்திக்கிறார்கள். பிலிப்போ அவரிடம் யாரென்று கேட்க அவருக்கு எல்லாமும் மறந்துவிட்டிருக்கிறது. தான் யாரென்பதே அவருக்கு நினைவில்லை. இரக்கப்பட்ட அவன் தன் காரில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். ஏற்கனவே அவன் மீது கடும் கோபத்தில் இருந்த கியோவிற்கு அவன் செய்கை பெரும் எரிச்சலைத் தருகிறது. அவளது தோழி அதே ப்ளாட்டில் வசிப்பளவள். கியோவின் சமையலறை ஜன்னலில் இருந்து பார்த்தால் எதிர் ஜன்னலினூடே ஒரு இளைஞன் தெரிவான். அவனை அவனுக்குத் தெரியாமல் பார்த்து ரசிப்பாள் கியோ. அவளின் அன்றாட வேலைச் சுமைகளை இறக்கும் விதமாக இச்செய்கை அவளுக்கு இனம் தெரியாத ஆறுதலை அளிக்கிறது. புகைத்துக் கொண்டே அழகான அந்த இளைஞன் சாப்பிடுவதையும், உடை மாற்றுவதையும், தோழிகளை அழைத்துக் கொண்டு வருவதையும் விவரிக்க இயலாத மென் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அன்றைய நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இரவு உணவு அம்முதியவர் அவர்களுடன் சாப்பிடுகிறார். அவர்களுடைய பிள்ளைகளுக்கு குறிப்பாக மகளுக்கு அம்முதியவரை மிகவும் பிடித்துவிடுகிறது. அவரின் பெயர் சிமொனே என அறிகிறார்கள். கியோ அவரை போலீஸில் உடனடியாக ஒப்படைக்கும்படி கணவனை நச்சரிக்கிறாள். அவனும் மறுநாள் அவரை போலீஸில் விட்டுவிடுகிறேன் என வாக்களிக்கிறான்.
அடுத்த நாள் பிலிபோவினால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலவில்லை. கியோவிற்கு ஏற்கனவே நிறைய பிரச்சனைகள். இதில் புதிதாய் ஒரு வயோதிகரை பராமரிக்க அவளுக்கு தெம்பிருக்கவில்லை. முணுமுணுத்தபடி பலவிதமான கேக்குகளை தயாரித்துக் கொண்டிருக்கிறாள். சிமொனே அதைப் பார்ப்பதை அறிந்து இதெல்லாம் விற்பனைக்கு என்கிறாள். அவர் குழாய் தண்ணீரை உபயோகப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். இவரின் திடீர் வருகையால் தன் அந்தரங்கம் பாதிக்கபடுவதால், தானே இதற்கொரு வழி செய்ய வேண்டும் என்றெண்ணி அவரை காரில் ஏறச் செய்து அழைத்துச் செல்கிறாள். அவரிடம் எதாவது நினைவிற்கு வருகிறதா என்று கேட்ட போது தொடர்பற்ற ஏதேதோ செய்திகளை சொல்கிறார் ஆனால் அது ஏதும் பயனில்லை. போகின்ற வழியில் தான் செய்து வைத்திருக்கின்ற கேக்குகளை ஒரு சிறிய ஹோட்டலில் தருவதாகச் அவரை காரில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறாள். அந்த ஹோட்டலில் அவள் ரசித்து மகிழும் எதிர்வீட்டு ஆண் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு பின் தொடர்ந்து அவளை மறித்து தன் பெயர் லோரென்ஸோ எதிர் ப்ளாட்டில் இருக்கிறேன் உங்கள் அப்பா காரிலிருந்து இறங்கி எங்ஜோ போகிறார் என சுய அறிமுகம் செய்துகொள்கிறான்.
அவர் தன் தந்தை இல்லைனென்றும் அவரைப் பற்றி ஏதும் தெரியாமல் தங்கள் வீட்டில் தங்க வைத்திருப்பதைப் பற்றியும் வருத்தத்துடன் சொல்கிறாள். ஆனால் அவர் தொலைந்து போனால் சிக்கல் என்கிறாள். அவனும் இவளும் அவரை எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் கண்டுபிடிக்கிறார்கள். நம்பர்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இனம் தெரியாத ஈர்ப்பு அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கிறது.
அடுத்த சில நாள்களில் அம்முதியவரை அவள் மதிக்க ஆரம்பித்துவிட்டாள். அவரின் மீதுள்ள அக்கறையில் அவர் போட்டிருந்த கோட்டை சலவைக்கு போடுகிறாள். அவருடன் மனம் விட்டு பேசுகிறாள். தன்னுடைய விருப்பமான வேலையான கேக் கடை வைக்க இயலாத சூழலில் இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறாள். தனிமை சூழ்ந்துள்ள இரவொன்றில் அவருடன் உணவு முடித்துவிட்டு இசைக்கேற்றவாறு நடனம் ஆடுகிறாள். சிமெனோ மரியாதைக்குரிய நண்பராகிவிட்டார். அதைவிடவும் லொரொம்ன்ஸோ மேல் இருக்கும் மோகமும் வளர்ந்து அவளை வேலை செய்ய விடாமல் கொன்றது. அவளது தோழியின் அறிவுரைக்கேற்ப அவனுடன் ஓரிரவு தங்க முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்கிறாள். அவன் கேண்டில் லைட் ஏற்றி வைத்து அழகான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறான். ஜன்னலினூடே அவளை அவன் தினந்தோறும் ரசித்து வந்ததை மனம் திறந்து கொட்டுகிறாள். அவள் என்பது அவனைப் பொறுத்தவரை பெரும் கனவு, அவள் அவனின் தேடலின் தேவதை. அவளுடனான இத்தகைய பொன் நேரத்திற்காக அவன் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருந்தான். அந்த ஜன்னலில் வழியேதான் அவளை அனுதினம் தரிசிப்பதாக அவன் சொன்ன நொடியில் அவளுக்குள் ஏதோ உடைந்தது. அணைத்திருந்த அவன் கரங்களில் இருந்து விடுபட்டு அந்த ஜன்னலருகே போய்ப்பார்த்தாள். பிலிப்போவின் நடவடிக்கை தெரிந்தது. அவன் தனிமையில் அவ்வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தான். பிள்ளைகளை தோழியின் வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். நைட் ஷிப்ட் செய்யாமல் பிலிப்போ இவ்வளவு சீக்கிரம் திரும்புவான் என அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லைல். குற்றவுணர்வு கவிய அந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பிச் செல்கிறாள்.
அதன்பின் அடுக்கடுக்காக அவளுக்கு துயரமான செய்திகளே வருகிறது. சிமொனே வேறு காணாமல் போய் விடுகிறார். எதிர்வீட்டுக் காதலன் வேலை மாற்றத்தில் வேறு ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவனை சந்திக்காமல் தவிர்க்க நினைத்து கடைசி நொடியில் படிகளில் இறங்கி ஓடோடி வருகிறாள். ஆனால் அதற்குள் அவன் வண்டி நகர்ந்து போய்விடுகிறது. கனவு போன்ற அக்காதல் அவளின் நேர்மையினால் கைவிட்டுப் போகிறது. சண்டைபிடிக்கும் கணவன் ஆனாலும் பிலிப்போவின் மீது அவளுக்கு பெரும் பாசம் இருந்தது. தனக்கிருக்கும் வாழ்க்கையே போதும் என்றெண்ணி அவள் தன்னை சமாதானம் செய்து கொள்கிறாள்.
சலவை செய்து வைத்திருந்த சிமோனேவின் உடையில் ஒரு கடிதம் அவளுக்குக் கிடைக்கிறது. அதை அவள் வாசித்த போது சிமோனேவைப் பற்றிய தகவல்கள் பனிமூட்டமாய்க் கிடைக்கிறது. எப்படியோ அவர் தொலைபேசி நம்பரைக் கண்டுபிடித்து அவர் வீட்டுக்குச் சென்று அவரை சந்திக்கிறாள். அவர் அந்த ஊரின் தலைசிறந்த கேக் தயாரிப்பாளர் என்பதை அறிகிறாள். இவளுக்காக அவர் விதவிதமான கேக்குகளை தயார் செய்து கொடுக்கிறார். அவர் மனைவி யாரையும் அவர் தன் கேக் செய்யும் கிச்சனுக்குள் அனுமதிப்பதில்லை. முதன்முறையாக உன்னைத்தான் அவர் விட்டிருக்கிறார் என்கிறாள். அவரின் பெயர் சிமோனெ அல்ல டாவிடோ என்பதையும் அறிகிறாள். அன்றிரவு பிலிப்போவிடம் சொல்லி தனக்குப் பிடிக்காத வேலையை உதறுகிறாள். தன் கனவினைத் துரத்த மனதிற்குப் பிடித்த வேலையான கேக் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாக சொல்கிறாள். முதலில் மறுத்த பிலிப் அவளின் எதிர்காலக் கனவு மின்னும் கண்களை கண்டபின் சரியென்கிறான்.
டாவிடோவின் வாழ்க்கையின் ரகசியம் க்யோவிற்கு மட்டுமே தெரிந்தது. அவரிடம் கடித்ததை வாசித்ததிற்கு மன்னிப்பு கேட்டாள். அவர் பரவாயில்லை என்கிறார். இளம் வயதில் டாவிடோ உருகி உருகி காதலித்தது பற்றிய கடிதம் அது. தினமும் அவர் காதலுக்காக ஓரிடத்தில் ரகசியமாக கடித்தத்தை ஒளித்து வைப்பதும் அவரின் காதலன் அந்த கடிதத்தை எடுத்துவிடுவதுமாய் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது. அக்காதல் பெயர்தான் சிமோனே...அவன் பெண்ணல்ல ஆண். அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பின்னர் தெரிகிறது. தான் மிகவும் விரும்பிக் காதலிக்கும் சிமோனேவைத் தானே கொல்லும் படியான சூழலில் சிக்கியதால் அத்துயர் தாங்க ஏலாமல் அடிக்கடி நினைவுத் தப்பிவிடும் அத்தகைய நினைவு தப்பிய ஓர் நாளில்தான் பிலிப்போவும் இவளும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். சிமோனையை ஏன் கொன்றார் எனில் டாவிடோ மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற யூதர்களைக் கொல்வதற்கு நாஜிப் படை வருகிறது. சிமோனெ அவர்களிடம் பேசி டாவிடோவை காப்பாற்றிவிடுகிறான். ஆனால் டாவிடோ மற்றவர்களை காப்பாற்றுவதற்காக காதலுடன் கைகலப்பில் அவனை கொல்ல நேர்ந்துவிடுகிறது. தன்னுடைய சிமோனேவைத் தானே கொன்றதை எண்ணி அவன் வாழ்நாள் முழுவதும் அழுது புலம்புகிறான். ஆனால் அன்று இரவு அவன் காப்பாற்றிய பெண்கள், சிறுவர்கள் இன்றும் அவனை நன்றியுடன் எங்கிருந்தாவது நினைத்துக் கொள்வார்கள் என்றும் தெரியும் அவருக்கு.
காலத்தின் ரத்தக் கரை படிந்த பக்கங்களாய் சிலர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. டாவிடோவாக நடித்திருக்கும் மாஸிமோ கிரோட்டி தன்னுடைய அற்புத நடிப்பாற்றலால் மனதை மிகவும் நெகிழச் செய்துவிடுகிறார். க்யோவின் எதிர்காலத்தை பிரகாசமாக்க அவளின் புதிய ஜன்னலைத் திறந்துவிடுகிறார். ஜன்னல் என்பது எல்லார் வீடுகளிலும் இருக்கிறது. எதற்காக திற்க்கிறோம் என்பது தான் முக்கியம். வேடிக்கையும் பார்க்கலாம் ஒரு வாழ்க்கையும் சீரமைத்துக் கொள்ளலாம். டாவிடோவின் வழிகாட்டுதலால் தனக்கான ஜன்னலை இம்முறை சரியாகத் திறக்கிறாள் க்யோவென்னா.






