தி லெமன் ட்ரீ [ LEMON TREE ] -உமா ஷக்தி
- Details
- Published on Thursday, 04 August 2011 14:22
- Written by editor
பாலஸ்தீன விதவைப் பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம்.
இவ்வாறு இருக்கையில் அந்த நாட்டின் முக்கிய குடிமகனான பாதுகாப்பு அமைச்சரும் அவரின் மனைவியும் மிராவும் பக்கத்து வீட்டுக்கு குடியேறுகிறார்கள். தன் அண்டை வீட்டில் பெரிய எலுமிச்சை தோட்டம் இருப்பதை கண்ணுற்ற மிரா அதைப் பார்த்து அதன் அழகில் பரவசப்படுகிறாள், ஆனால் அவள் கணவனோ அடர்ந்த சிறிய காடு போலிருக்கும் அத்தோட்டம் தனக்கு பாதுகாப்பானது அல்ல, எதிரிகள் யாரேனும் மறைந்து தங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்க நேரிடலாம் எனச் சந்தேகம் கொள்கிறான். வீட்டின் கிரகப்பிரவேச தினத்தை குறித்த கையோடு அத்தோட்டத்தை அழிக்கச் சொல்லிவிடுகிறான். தன் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்களை சல்மா கடிந்த போது அவர்கள் அவளை தோட்டத்திலிருந்து வெளியேற சொல்கிறார்கள். மனத் துயருடன் உறக்கம் வராத இரவை எப்படியோ கடக்கிறாள். என்ன ஆனாலும் சரி தன் தோட்டம் அழிக்கப்படக்கூடாது என உறுதியுடன் அவள் போராட்டத் துவங்குகையில் சட்டம் எனும் துப்பாக்கியால் அவள் மென் இதயத்தை துளையிடுகிறார்கள் பாதுகாப்பு அமைச்சரின் வீரர்கள். எலுமிச்சை மரமோ தனி மனித எதிர்ப்புக் குரலோ எதுவாயினும் அது அழிக்கப்படவேண்டியது என்பது அமைச்சரின் நிலைப்பாடு.
சல்மா தனிமையில் வாழ்பவள் அவளுக்கு உதவிகரமாக இருப்பவன் வயதான அவளின் தோட்டக்காரன் ஒருவன் மட்டும்தான். அவனுக்குச் செடிகளுக்கு நீரூற்றத் தெரியுமேயன்றி வலிமையான மனிதர்களை எதிர்க்க திராணியற்றவன். அஞ்சா நெஞ்சுடன் சல்மா பிரபலமான இளம் வழக்கறிஞன் ஜியாத்திடம் தன் பிரச்சனையை சொல்லி உதவக் கோருகிறாள். முதலில் மறுத்த ஜியாத் இவளின் உறுதியைக் கண்டு இளகுகிறான். இருவருக்கும் இடையே மெல்லிய நீரோடையாய் ஒரு நேசம் அரும்புகிறது. சல்மா அவனிலும் வயதில் மூத்த பெண் அதுவும் விதவையாகிவிட்டவள் ஜியாத்தோ இளமையானவன், மனைவியும் இரண்டு வயதுப் பெண் குழந்தையும் வேறு ஊரில் வாழ்கிறார்கள். ஜியாத் சல்மா இடையே முகிழ்ந்த நேசம் சமூக கலாச்சாரக் பாதுகாவலர்களால் வெகு விரைவில் வேர் அறுக்கப்படுகிறது. ஜியாத்துக்கு சல்மா பெரும் ஈர்ப்பாக இருந்தபோதினும் தனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்த சமயத்தில் அவளிடமிருந்து சொல்லாமலே விடைபெறுகிறான். ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கையின் கசப்பை சல்மா வெறுப்பினூடே ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறாள். வேறு வழியில்லை, இங்கு வாழ்க்கை இவ்விதம்தானே?
அமைச்சரின் மனைவி மிராவாக நடித்துள்ள ரோனா லிபாஸ் சிறப்பாக நடித்துள்ளார். தன் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மீது பரிவு ஏற்பட்டு அவள் படும் துயரங்களை தூரத்திலிருந்து பார்த்து மனம் கலங்குகிறாள் மிரா. ஆனால் மிராவின் மீது சல்மாவிற்கு நம்பிக்கை இல்லை. சல்மாவின் பார்வையில் அவள் அதிகார மையத்தின் ஓர் அங்கம். மிரா ஓரிரு சந்தப்பங்களில் அவளிடம் பேச முன் வருகையில் சல்மா எட்டியே நிற்கிறாள். மிரா வீட்டுக் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் சமையல்காரரின் கவனக் குறைவால் எலுமிச்சை பழம் வாங்கப்படவில்லை. வேறு வழியின்றி அவர்கள் பக்கத்துத் தோட்டத்தில் பழத்தை பறிக்கிறார்கள். அதைப் பார்த்த சல்மா தன் தோட்டத்தை அழிக்கச் சொன்னதுடன் அதிலிருந்து திருடுகிறீர்களே என சத்தம் போடுகிறாள். அப்போதும் அவள் வன்முறையாக அனுப்பப்படுகிறாள். நடந்த சம்பவத்திற்கு மிரா அவளிடம் மன்னிப்புக் கேட்க பூட்டியிருந்த கேட் ஏறிக் குதித்து சல்மாவின் வீட்டுக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு வீரன் ஒருவனால் தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறாள். கனத்த மனதுடன் அவள் பத்திரிகை ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் தங்கள் தவறுகளால் அப்பாவிப் பெண்ணொருத்தியின் வேதனையப் பற்றிக் மனம் திறந்து பேசவே அது பரபரப்புச் செய்தியாகிவிடுகிறது. சஞ்சிகையில் தன்னைப் பற்றி தன் மனைவியே அவதூறாகச் சொல்லியிருப்பதை வாசித்த அமைச்சரும் அவர் வட்டாரமும் பெரும் கோபத்துக்குள்ளாகிறார்கள். மனைவியை மிரட்டி தான் சொன்ன கருத்துக்கள் உண்மையில்லை என்று வாபஸ் வாங்க வைக்கிறான். வேறு வழியில்லாமல் மிரா அதற்கு உடன் படுகிறாள். இறுதியில் தன்னுடைய எதிர்ப்பை வீட்டை விட்டு வெளியேறுவதின் மூலம் காட்டுகிறாள். அவளால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை.
ஆண்கள் உருவாக்கும் சட்டங்களில் பெண்கள் எப்படியெல்லாம் கைப்பாவையாகி ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதை அவர்கள் எதிர்க்கும் தருணங்களில் எப்படி அடக்கியாளப்படுகிறார்கள் என்பதையும் சல்மா மற்றும் மிராவின் கதாப்பாத்திரங்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மிராவால் வீட்டை துறக்க முடிந்தது ஆனால் சல்மா போன்ற எளிய பெண்கள் தங்கள் இருத்தலுக்காக வாழ்வியலுக்காக இறுதி வரை போராட வேண்டிய நிர்ப்பந்ததிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சராக நடித்திருக்கும் டோரன் டவேரியின் மிகையில்லாத நடிப்பு இயல்பாக கதையோட்டத்துடன் இயைந்து செல்கிறது. சிரித்துக் கொண்டே அவர் அளிக்கும் ஆணைகள், எலுமிச்சை மரத்தை அழிக்கச் சொல்லும்போது அவரின் முகபாவம், அதிகாரத்தினால் தலைக்குள் ஏறியிருக்கும் கர்வம், அகங்காரம், எகத்தாளம் என எப்போதும் முகத்தில் இறுக்கமும் இளக்காரமுமாய் வளைய வரும் அவரின் பாத்திரப்படைப்பு அற்புதமாய் செதுக்கபட்டிருக்கிறது. மேல் கோர்ட்டுத் தீர்ப்பும் சல்மாவுக்கு எதிராக கிடைத்ததும் அவர் நிற்கும் தோரணை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிக்கக் கூடிய காட்சியாகும்.
’தி லெமன் ட்ரீ’யின் ஒளிப்பதிவு வெகு அற்புதம். சல்மாவின் வீடும் அத்தோட்டமும், பாதுகாப்பு அமைச்சரின் வீடும் என உள்புறக் அதிகம் இருக்குமான காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் துல்லிய ஒளிப்பதிவால் மிரட்டியிருக்கிறார் எலுமிச்சை மரம், அதன் அடர்த்தி, எலுமிச்சைப் பழத்தின் வாசனை நமக்குள் படியும் படியான காட்சியமைப்புகளால் காண்பவரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்கு சுவையான எலுமிச்சை பழரசம் தருவதை வழக்கமாக கொண்டிருப்பார் சல்மா. படம் நெடுகிலும் மஞ்சள் ஒளியை எலுமிச்சை பழத்தின் குறியீடாக ஒளிப்பதிவாளர் ரைனர் க்ளஸ்மன் அற்புதமாக படமாக்கம் செய்திருக்கிறார். எடிட்டர் டோவா ஆஷரின் பங்கும் இத்திரைப்படத்தில் குறிப்பிடத் தகுந்தது. பிசிரில்லாத காட்சிகள், சம்பவங்களின் கோர்வையென படம் பார்ப்பவர்களை ஒரு வாழ்க்கையை பார்க்கும்படியாக அற்புதமான இத்திரைக்கதைக்குள் பார்வையாளரை தடையின்றி நுழையச் செய்திருக்கிறார்.
நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை, அடக்குமுறைகளை எலுமிச்சை தோட்டத்தை குறியீடாக வைத்து உணர்த்தியிருப்பார் இயக்குநர். நேரடியாக இப்பிரச்சனை எங்கும் பேசப்படாது ஆனால் படத்தில் அதிகார மையங்களின் கொடுங்கரங்கள் தனிமனித வாழ்வையும் சுதந்திரத்தையும் எப்படியெல்லாம் பறிக்கிறது, அதையும் மீறி அவர்கள் போராடத் துணிந்தால் இறுதியில் தோல்வியே கிடைக்கும் என்பதை அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளார்கள்.
’தி லெமன் ட்ரீ’ சற்றுப் புளிப்பாகவும் காட்டமாகவும் இருக்கிறது ஆனால் மனம் முழுவதும் நீண்ட நேரம் சுவைக்கிறது.






