Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

மலீனா [ MALENA ] -உமா ஷக்தி

சினிமா பாரடிஸோ என்னும் இத்தாலியத் திரைப்படத்தை இயக்கிய க்யூசேபே டர்னடோரின் (Giuseppe Tornatore) மற்றொரு அற்புதமான திரைப்படம் மலீனா (Malena)


மலீனாவாக நடித்துள்ளார் மோனிக்கா பெல்லூச்சி. அழகி எனும் சொல்லிற்கு அப்பாற்பட்ட பேரழிகி மலீனா. 1940-ல் இரண்டாம் உலகப் போருக்கு சென்றிருந்த கணவனுக்காகத் தனிமையில் காத்திருக்கின்ற பேரழகியான மலீனாவின் மீது அவ்வூரில் இருக்கும் ஆண்களால் ஏற்படும் பாலியில் அழைப்புக்களும், அதை அவள் எதிர்கொண்ட விதமுமே படத்தின் மையக் கதை. அந்த ஊரின் மிக அழகிய பெண்ணாக மலீனா இருந்ததால் மற்ற பெண்களின் பொறாமைத் தீயும் அதன் காரணமாக சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவர்கள் மலீனாவை வார்த்தை எனும் விஷ ஊசிகளால் குத்திக் குதறுவதை வலியுடன் எடுத்தியம்பும் படம் இது.


கதை ரெனொடோ அமரொஸோ எனும் 12 1/2 வயதே நிரம்பிய விடலைச் சிறுவனின் பார்வையிலிருந்து காட்சிப்படுத்தப்படுகிறது. ரெனாடோ தன் வயதையொத்த சிறுவர்களுடன் கடற்கரையோர சுவற்றில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறான். மற்ற சிறுவர்கள் அவன் அரைக்கால் சட்டை அணிந்தவன் தங்களைப் போல உயரமானவன் இல்லை என கேலி செய்து விடலையர் கூட்டத்தில் சேர்க்க மறுத்து விரட்டியடிக்கிறார்கள். சிறுவன் ரெனொடோ அவமானத்தைப் பொறுத்துக்கொண்டு பொருமிக்கொண்டே அவர்களுடன் திரிகிறான்.


முசோலினி போர் அறிவிப்பு செய்த தினம்தான் ரெனொடோ தனக்கான புது சைக்கிள் வாங்கியிருந்தான். அன்றைய நாட்களில் இளம் பையன்கள் வாழ்க்கையில் சைக்கிள் என்பது பெருமையான பூஜிக்கக் கூடிய பொருள். அதனால் ரெனொடோவை போனால் போகிறது என நண்பர்கள் தங்கள் கூட்டணியில் அனுமதிக்கிறார்கள். விடலைகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த தருணம் வந்தது. தேவதை போன்றதொரு பெண் ஓவியம் உயிர் பெற்றதைப் போல அவர்களை கடந்து போனாள். நீண்ட அழகிய தொடைகள் தெரியும்படியான ஸ்கர்டும், கவர்ச்சியான உடலழகை எடுத்துக்காட்டும்படியான இறுக்கமான மேலாடையும் அணிந்து, ஆப்பிள் பழம் போலிருந்த குதிகால்கள் தெரிய அலட்சியமாக நடந்து சென்றாள். இக்காட்சிக்காகவே தெருவில் காத்துக்கிடந்த ஆண்கள், வயது வித்யாசமின்றி அவளைப் வெறித்துப் பார்த்தார்கள். அவளைக் கண்ட கண்கள் அப்படியே அவளில் தொலைந்து உறைந்துவிடுகின்றன. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் அவள் ஒருபோதும் இருந்ததில்லையாதலால் அவ்விடத்தை விரைவாகக் கடந்தாள். அவளைக் கட்டிப்பிடிக்கவும் முத்தமிடவும் இறுக்கிக் கசக்கவும் விழையும் விழிகளின் காமம் அவள் மீது பட்டுத் தெறித்து வீதியில் சிதறுவது நித்தம் நடந்தேறும் காட்சி.


மலீனாவின் தரிசனத்திற்காக காத்திருக்கும் அத்தனைச் சிறுவர்களும் ரெனொடோ உட்பட வாயைப் பிளந்தபடி கண்கள் கொள்ளும் வரை அவளை உற்று உற்றுப் பார்த்தார்கள். பின் அவரவர் சைக்கிளில் ஏறி அவளைப் பின் தொடர்ந்து பள்ளிக்கு சென்றார்கள். அவர்களின் பள்ளியில்தான் மெலீனா ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தாள். ரெனாடோவிற்கு மலீனா மீது என்னவென்று வரையறுக்க முடியாத அளவில்லாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. மற்ற சிறுவர்களுடன் தினந்தோறும் காலையில் அவளை பள்ளி வரை பின் தொடர்வதும் பின் தனியாக மாலையில் அவள் தினமும் செல்லும் ஒரிடத்திற்கு பின் தொடர்ந்து செல்வதும் அதன் பின் இரவில் அவள் வீட்டுத் தோட்டத்தில்லுள்ள பெரிய மரமொன்றில் ஏறி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து தனியாக வசிக்கும் அவளை நினைத்து உருகுவதுமாய் அவனுடைய நாளும் பொழுதும் கரைகிறது. ஊர்ப்பெண்கள் அவளை விமர்சிப்பது போல அவள் தப்பானவள் அல்ல என்பதை அறிந்து அவன் மகிழ்கிறான். தன் மனதில் ரகசியமாய் அவள் உருவை ஏற்றி அதையே பூஜித்து உருகிக் கரைந்தான். மாலையில் மலீனா வயோதிகர் ஒருவருக்கு சேவை செய்வதை கண்டு நெகிழ்ந்து போகிறான்.

தனிமையின் பிடியில் சிக்கியிருக்கும் இளம் பெண்ணான மலீனா பெரும் பாலும் தனியே நடனமாடிக்கொண்டிருந்தும், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஏக்கத்தும் படுத்துக் கிடப்பதை ஜன்னலினூடே பார்த்த ரெனெடோ வருத்தம் அடைகிறான். ’கவலைப்படாதே என் தங்க தேவதையே நான் வளர்ந்து உன் தனிமையை போக்கி, உனக்கு எல்லாமுமாய் இருப்பேன்’ என்று தனக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வான்.


விடலைப் பையன்களின் பாலியில் இச்சைகள் படத்தின் சிறுபகுதியில் சிறு காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது. அப்பருவத்திற்கே உரிய கிளர்ச்சியும் கேள்விகளுமாய் அவர்கள் கண்ணில் படும் எதையும் தன் உடலுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதும், மலீனாவின் மீது பெரும் காமத்துடனும் ஏக்கத்துடன் திரிவதுமாய் இருக்கிறார்கள். ரெனொடோ ஒரு படி மேல் சென்று மலீனாவை தன் வருங்கால காதலியாகவே நினைத்தான்.காணும் காட்சிகள் யாவிலும் அவனின் கற்பனைக் குதிரை பறந்து எல்லாமும் எல்லாரும் மலீனாகவே காட்சிக்குத் தென்பட்டு அவனைப் பித்தேறச் செய்தார்கள். அவன் கண்ணை மூடினால் மலீனா, கண்ணைத் திறந்தாலும் அவளின் உருவம் என தேவதையாகவும், டீச்சராகவும் மாறி மாறி உருமாறி பெரும் பரவசத்துக்குள்ளாளானான்.


ரெனொடோ தன்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்ள அப்பாவின் கோட்டைத் திருடி தனக்கு முழுக்கால் சட்டை தைத்துக்கொள்கிறான். விஷய்ம தெரிந்த அவன் அப்பா அவனைப் அடித்துத் துவைக்கிறார். அம்மா அவனைக் காப்பாற்றுகிறாள். ரெனோடோவிற்கு சீக்கிரம் வளர்ந்து தொலைய மாட்டோமா மலீனாவிற்கு இணையாக இருக்க மாட்டோமா எனும் ஏக்கம் தீயாய் வளர்ந்த வண்ணம் இருந்தது. நித்ய கடமையான ஜன்னலில் எட்டிப் பார்த்த ஓர் தினத்தில் அவள் கேட்டுக் கொண்டிருந்த இசை அவன் கவனத்தைக் கவரவே அந்த இசைத்தட்டை அரும்பாடுபட்டு வாங்கி இரவில் கேட்க ஆரம்பித்தான். அன்றுமுதல் பொக்கிஷமாக அதை பாதுகாத்தான். இரவில் ரெக்கார்ட் இசையை ஓடவிட்டு, மலீனாவை நினைத்துக் கொண்டே அவள் வீட்டிலிருந்து திருடி வந்திருந்த அவளின் உள்ளாடைகளை கட்டிப் பிடித்தபடி சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதை அவன் வீட்டினர் பார்த்து விடுகிறார்கள். அவன் செய்கையைப் பார்த்து அருவருப்படைந்து தனி அறையில் அடைத்து வைக்கிறார்கள். இது பேய்களின் சேட்டை என அவனை சர்ச்சிற்கு அழைத்துச் சென்று மந்திரித்தார்கள். அவனுடைய அப்பாவிற்கு விதயம் விளங்குகிறது, தன் மனைவியிடம், ’உன் மகனை பேய் எதுவும் செய்துவிடவில்லை, அவன் தினவெடுத்து வளர்ந்துவிட்டான், பெண் கேட்கிறது அவனுடலிற்கு’ என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமால் பிராத்தல் வீட்டின் விலைமாதுவிடம் அழைத்துச் சென்று ஓரிரவு தங்கிவரும்படி சொல்லிவிட்டு திரும்புகிறார்.


ஆசுவாசமடைந்த ரெனொடோ அன்றிலிருந்து தன்னை ஓரளவிற்கு பெரியவனாக நினைக்க ஆரம்பித்தான். அவன் தினப்படியில் எது வேண்டுமானாலும் நடக்காமல் இருக்கும் ஆனால் மலீனாவின் பின் செல்லுதல் தவறாது. அதை ஒரு தவம் போல செய்து வந்தான். அந்த ஊரின் பெண்கள் அனைவரும் தன் தேவதைப் பெண் மீது மிகுந்த பொறாமையும் எரிச்சலுமாய் இருந்தார்கள் என்பதை அறிந்து அவளுக்காக பரிதாபப்பட்டான். ஆண்கள் அவளை விழுங்குவதைப் போலப் பார்ப்பதை வெறுத்தான். தான் மிகவும் ரசிக்கப்படுகிறோம் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமால் பேசாத பைங்கிளியாய் மலீனா தன் இருப்பை ஆழ்ந்த மெளனத்தாலும் தனிமை இரவுகளாலும் ஊர்க்காரர்களின் கண்காணிப்பில் துயர் ததும்பும் வாழ்க்கையை நொந்தபடி வாழ்ந்தாள். இந்நிலையில் போரில் கணவன் இறந்த செய்தி அறிந்து மீளாத் துயரில் வீழ்ந்தாள். துக்கம் அனுஷ்டிக்க அவள் கறுப்பாடை அணிந்து ஊரின் பொது மேடைக்கு வந்தாள். ஆறுதல் சொல்ல வந்த அனைத்து ராணுவ வீரர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் க்யூவில் நின்று அவளின் கரங்களில் முத்தமிடுகிறார்கள். அதில் துக்கத்தை பகிர்ந்துகொள்ளும் எண்ணமேதும் இல்லை, அவள் வாழ்வே அழிந்துகிடக்கும் துன்பத்தில் இருக்கும்போதுகூட அவளுடலை ரசிக்கிறது அக்கழுகுக் கூட்டம்.


ஒவ்வொரு ஆணும் அவளை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளும் இச்சையை அவளிடம் இரவில் வந்து தெரிவித்தார்கள். ரெனொடோ வ்ழக்கப் போல அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். அவளை எப்போதும் போல் தொலைவில் இருந்தே பார்த்து வருகிறான். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த மலீனா ஒரு கட்டத்தில் தன்னை அடைய விரும்பும் பக்கத்து வீட்டுக்காரனிடம் சாப்பாட்டுக்காக தன்னை இழந்தாள். தன் அன்புற்குரியவளிற்கு உணவு கூட கொடுத்து உதவ முடியாத சூழலில் இருக்கிறோமே என மனம் பதைத்தான் ரெனெடோ.


ஊர்ப் பெண்கள் முன்னெப்போதையும் விட அவளைத் தீவிரமாக வெறுத்தார்கள். அவள் விதயத்தை கோர்ட்டுக்கு இழுத்து அவமானப்படுத்தினார்கள். அவள் செல்லுமிடமெல்லாம் வேசை என வசைபாடினார்கள். வழக்கறிஞருக்கு தன்னையே பீஸாகத் தந்து வழக்கிலிருந்து மலீனா தப்பினாள். சொற்பத் தேவைகளுக்க்காக வேசை நிலைக்கு தள்ளப்பட்ட மலீனா ஒரு முடிவெடுத்தாள். ஆண்களின் உலகம் அவளைப் பெரிதும் வரும்புவதை அறிந்த அவள் நன்றாக தன்னை அலங்கரித்து ராணுவ முகாமில் அதிகாரிகளுக்கு நடுவே சேரில் அமர்ந்து தன் கையில் இருந்த சிகரெட்டை எடுத்தாள். அதைப் பற்ற வைக்க நீளும் கரங்கள் ஒன்றோ இரண்டோ அல்ல. அவள் தொழில்ரீதியாகவே வேசையாகிவிட்டதை விளக்கிய இக்காட்சியின் கொடும் துயரம் சொல்லில் அடங்காதது.


ரெனொடோ தன் இனிய காதலியிடம் ஊர்க்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து மனமொடிந்து போகிறான். மலீனாவின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஊர்ப்பெண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமாக கூடி ஊர் முச்சந்தியில் அவளை அடித்து நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்கிறார்கள். தங்களின் கணவன்மார்களை கவர்ந்து இழுத்தவள், தங்களைவிட பன்மடங்கு அழகானவள் ஆகிய காரணங்கள் அவர்களின் மிருக வெறியை அப்பெண்ணின் மீது தாக்குதல்களாக்கி அரங்கேற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கூட்டமாக இக்காட்சியை எல்லாரும் வேடிக்கைப் பார்த்தார்களின்றி அவளை ஒருவரும் காப்பாற்றுவாரில்லை. விதயத்தை கேள்விப்பட்ட ரெனொடோ ஓடிவரும் முன் அவள் பெரும் ரத்தக் காயத்துடன் மயங்கி வீழ்கிறாள். அவள் முடியை கத்தரித்து அவளை இதற்கு மேல் கேவலப்படுத்தமுடியாத அளவிற்கு அலங்கோலப்படுத்துகிறார்கள் குல விளக்குகளான ஊர்ப்பெண்கள். குற்றுயிரும் குலை உயிருமாய் அவமானத்துடன் எஞ்சிய உயிரைக் கையில் பிடித்து மலீனா அழுதபடி அவ்வூரை விட்டு ரயிலில் வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறாள். ரயிலடி வரை அவளைப் பின் தொடர்ந்த ரெனொடோவிற்கு இதயம் படபடக்கிறது. அவள் மீது இரக்கமும் பேரன்பும் மாறாக் காதலும் உடைய அவன் கண்ணீர் பொங்க அவள் பிரிந்து போகும் சோகக் காட்சியைப் பார்க்கிறான்.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS