ATONEMENT -உமா ஷக்தி
- Details
- Published on Friday, 05 August 2011 14:50
- Written by editor
நான்கு வெவ்வேறு காலகட்டங்களின் மூவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை போர்ச்சூழலின் பின்புலத்தில் எழுதப்பட்ட ’அடோன்மெண்ட்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் Atonement.
நிகழ்வொன்று அதில் பங்கேற்பவரைத் தவிர தூரத்துக் காட்சியாக மற்றொருவரின் பார்வையில் பதியும் போது ஏற்பட்ட காட்சிப் பிழை சிக்கலாகி அதன்பின் நடக்கின்ற விபரீதத்தை அழகியல் அழியாமல் விவரிக்கின்றது இத்திரைப்படம். கண்ணால் காண்பதும் பொய் என்பதை மெய்ப்பிக்கிறது திரைப்படத்தின் மிக முக்கியமான அக்காட்சி.
பதின்ம வயதுச் சிறுமியான பிரியோனி டாலிஸ் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பவள். கதை, கவிதைகள் எழுதி இளம் படைப்பாளியாக வீட்டில் அறியப்படுபவள். இளமையின் எழிலோடிருக்கும் அவளுடைய அக்கா சிசிலியா டாலிஸ் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருப்பவள். பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு சந்தோஷங்களுக்கு குறைவில்லை.மூத்தவன் லியோனுக்கு இருவரும் செல்லத் தங்கைகள். இவர்களின் அத்தை பிள்ளைகளான லோலாவும், அவளின் இரட்டைச் சகோதரர்களும் தங்கள் பெற்றோரின் விவாகரத்தினால் மன வருத்தத்தில் டாலிஸ் வீட்டின் விருந்தினராக வந்துள்ளார்கள். சிறுவர்களான தம்பிகளை எப்படி அரவணைத்துக் கொள்வது என்பது தெரியாமல் லோலா மனநிம்மதிக்காக பிரியோனியுடன் பேசி ஆற்றாமையை சரி செய்து கொள்ள விரும்பினாள். அவர்களின் அன்பிற்கினிய பிரியோனி அவர்களுக்காகவே ஒரு நாடகத்தை எழுத ஆரம்பிக்கிறாள்.
டாலிஸ் குடும்பத்தில் பணிப்பெண்ணின் மகன் ராபி டர்னரின் படிப்புச் செலவுகளை சிசிலியாவின் குடும்பம் பொறுப்பேற்றிருந்தது. கேம்ப்ரிட்ஜில் படிப்பை முடித்துவிட்டு அடுத்து டாக்டருக்கு படிக்க விரும்பி விடுமுறையைக் கழிக்க ராபி எஸ்டேட்டுக்கு வந்திருக்கிறான். நன்றி கடனாகவும் பொழுதைப் போக்குவதற்காகவும் தோட்ட வேலை செய்கிறான். சிறுவயது முதல் சிசிலியாவின் மீது ராபிக்கு ஒருதலைக் காதல். பல வருடங்கள் கழித்து அவளைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் மனம் அந்த அழகியைச் சுற்றியே வளைய வருகிறது. சிசிலியாவைப் பொறுத்தவரை அவன் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை. நல்ல நண்பனாகவே அவனை நினைத்தாள்.
பிரியோனி தோட்டத்திலும் சோலையிலும் அமர்ந்து தன் நாடகத்தை எழுதி முடிக்கிறாள். லோலா மற்றும் தம்பிகள் பேசக் கூடிய வசனங்களைத் தாளில் எழுதி அவர்களிடம் கொடுத்த போது அச்சிறுவர்கள் அதில் எவ்வித ஈடுபாடும் காட்டவில்லை. ஏதோ சாக்கு சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள் இது பிரயோனிக்கு வருத்தம் அளித்தது. சோகத்துடன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவள் ஒரு தேனியின் சத்தத்தால் கவரப்பட்டு ஜன்னல் அருகே வந்து நிற்கிறாள். ஜன்னலூடே தொலைவில் தோட்டத்தில் செயற்கை நீரூற்றின் அருகில் சிசிலியா ராபியின் முன்னால் நிற்பது தெரிகிறது. அடுத்து அவள் பார்த்த காட்சி அவள் மனதை துடிதுடிக்க வைத்தது.அவள் கண்களுக்கு ராபியின் முதுகுப்புறம் தெரிகிறது. அவனுக்கு நேரெதிராக சிசிலியா நின்றுகொண்டிருந்தாள். அவள் மென்னுதடுகள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று தன் மேலாடையை அவசரமாக கழற்றுகிறாள். இப்போது உள்ளாடை மட்டுமே அணிந்திருந்த சிசிலியா நீர்த்தேக்கத்துல் பாய்ந்து குதிப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பிரியோனி. சில நொடிகள் கழித்து எதையோ ராபியிடம் சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக உடையை அணிந்து கொண்டு அங்கிருந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து மூச்சிரைக்க ஓட்டமாய் ஓடிப்போகிறாள். இதையெல்லாம் கண்ணுற்ற பிரியோனி தன் அக்காவின் செய்கையின் காரணங்கள் ஏதும் அறியாமல் மனம் உடைந்து போகிறாள்.
உண்மையில் நடந்த சம்பவம் ராபி தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் போது சிசிலியா அவனைக் கடந்து போகிறாள். நீரூற்றின் அருகில் அவள் கையில் இருந்த பூங்கொத்தை நனைக்க முற்படுகையில் ராபி அவளை வழிமறித்து ஏதோ பேச முயல்கிறான். பதட்டத்தில் சட்டென்று கையிலிருந்த பூங்கொத்துச் ஜாடி உடைந்து அதிலிருந்து ஒரு பகுதி நீரின் அடியில் விழுந்து விடுகிறது. அவனை திட்டியபடி தன் மேலாடையை அவசரமாய் கழட்டினாள் சிசிலியா. அவன் தடுப்பதற்கு முன் நீரினுள் மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்தப் பொருளை மீட்டெடுக்கிறாள். அவசரமாக உடையணிந்து கொண்டு அங்கிருந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டமாய் கிளம்புகிறாள் தூரத்தில் வீட்டின் மாடியின் ஜன்னலுக்குப் பின் ஜோடிக் கண்கள் இதை கவனிப்பதை அறியாமல்...
சிசிலியாவின் மூத்த சகோதரன் லியோன் பால் மார்ஷல் என்ற நண்பனை தங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைத்து வருகிறான். அன்றிரவு அவர்கள் வீட்டில் விருந்து ஏற்பாடு நடக்கிறது. ராபியை விருந்துக்கு அழைக்கிறாள் சிசிலியா அவன் மீது மறைந்திருந்த ப்ரியம் மெல்லியதாய் மீண்டும் மலரத்தொடங்கியிருந்தது. நீருற்றின் அருகே நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க அவளுக்கு கடிதமொன்றை டைப் செய்கிறான். அவளை நினைத்தபடியே காதலின் தீவிரத்தால் காமம் மீதேற அந்தரங்கமான ஓர் வரியை டைப் செய்கிறான். ’என் கனவினில் உன் யோனியில் முத்தமிடுவேன்,. என் நினைவினில் உன்னுடன் நாள் முழுவதும் கூடல் செய்வேன்’ டைப் செய்ததை வாசித்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டு அதை பக்கத்தில் வைத்துவிட்டு அடுத்து மன்னிப்புக் கடிதத்தையும் டைப் செய்கிறான்
காதலியைச் சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் உடை மாற்றி அவசரமாக கிளம்புகையில் மன்னிப்புக் கடிதத்திற்கு பதில் காமக் கடிதத்தை வைத்துவிடுகிறான். வரும் வழியில் தோட்டத்தில் பிரியோனி தென்படவே அவளை அழைத்துக் அக்கடிதத்தை சிசிலியிடம் தந்துவிடுமாறு கொடுத்தனுப்புகிறான். அவள் தயங்கியபடி அவனிடமிருந்து வாங்கி ஓடிச் செல்லுகிறாள். அடுத்த நொடி கடிதத்தை மாற்றி அனுப்பிவிட்டதை உணர்கிறான் ராபி, தடுப்பதற்குள் பிரியோனி கண்ணின் பார்வைக்கு மறைந்து விடுகிறாள். மூச்சிரைக்க ஓரிடத்தில் கடிதத்தை அவசரமாய் வாசிக்கிறாள் பிரியோனி, அதில் இருந்த வாசகத்தை படித்து அவள் ராபியை அடியோடு வெறுக்கிறாள். ராபி எப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதன் என மனம் நொந்து போகிறாள். அதே வெறுப்புடன் சிசிலியிடம் கடிதத்தை ஒப்படைக்கிறாள். வாசித்த சிசிலிக்கும் அதிர்ச்சியே ஆனால் அவன் மீது புத்தம் புது பூவாய் மலர்ந்திருந்த காதல் அவ்வரிகளை ரசிக்கச் செய்து அவளுள் இனம் தெரியாத கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அவன் தனக்கேயான ஆண் என்பதை உணர்ந்து அவளுடல் சிலிர்க்கின்றது. இரவு விருந்தில் அவனைக் காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறாள்.
விருந்தினர் அனைவரும் கூடிவிட்ட நிலையில், சிசிலியாவும் ராபியும் இன்னும் வந்திருக்கவில்லை. அவர்களைத் தேடி பிரியோனி போகிறாள். மாடிப்படியருகே சிசிலியாவின் ஒற்றைக் காதணி கிடக்கிறது. புத்தக அறைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே லேசாக திறந்து எட்டிப் பார்க்கிறாள். அதிர்ச்சியின் எல்லைக்குச் சென்று விட்ட பிரியோனி செயலற்றுத் திகைத்து நிற்கிறாள். ராபி அப்பாவியான தன் அக்காவை வல்லுறவு கொள்வதாய் நினைத்து மன வேதனையுடன் அக்காட்சியைப் பார்க்கிறாள். ராபியை அடியோடு வெறுக்கிறாள் ப்ரியோனி.
உண்மையில் நடந்தது ராபியும் சிசிலியாவும் தனியாக சந்தித்திக்கிறார்கள். இருவருக்குமே அது முதல் காதல், ஆசை வெட்கத்தை விழுங்கிவிடவே மோக வயப்பட்டு உதட்டில் உதடு பதித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். முத்தச் சுவை வேகமாய் வளர்ந்து காமத் தீயில் அவர்களை வீழச் செய்து கணப்பொழுதில் வேட்கையில் வீழ்ந்த மலர்களானார்கள். உலகம் அமைதியில் நிறைந்திருக்கும்போது எழுதப்பட்ட ஓர் உன்மத்தமான புத்தகம் போல இனிமையான ரகசியங்களால் நிறைந்து ததும்பி வழிந்தோடிக் கொண்டிருந்தது அவர்களின் உடலின் நுழைதல்கள். அவர்கள் அறியாமல் ஜோடிக் கண்கள் கண்ட காட்சியை மறுக்க முடியாமல் பிரியோனியின் வருகையை அவசரமாய் உணர்ந்த அவர்கள் சட்டென தங்களை சரி செய்து கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தமர்கிறார்கள். ஆவேசத்துடன் ராபியை பார்க்கிறாள் பிரியோனி. செம்மை படர்ந்திருந்த முகத்துடன் அவனின் ஸ்பரிசத்தை மறக்க இயலாத சிசிலியா டேபிளின் அடியில் அவன் கரங்களை பற்றியபடி சொல்ல இயலாத செய்திகளை மென்கரங்கள் மூலமாய் கடத்திக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பெண்மையின் எழுச்சி அவனுக்குள் நிகழ்த்திய பரவசங்களின் உச்சங்கள் இன்னும் அசாதாரண வலுவுடன் அவனுள் நிரம்பிக் கிடந்தது.
புற உலகம் இயங்கிக் கொண்டிருப்பது அக்காதலர்களுக்கு கனவு போல இருந்தது.
லோலாவின் தம்பிகள் சாப்பிட இன்னும் வந்திருக்கவில்லை அவர்களை அழைத்துவர அங்கிருந்து கிளம்பிப் போனாள் பிரியோனி, திரும்பி வந்து அவர்களை காணாமல் போன செய்தியை அறிவிக்கிறாள். எல்லாரும் அவர்களைத் தேட டார்ச் லைட்டுடன் கிளம்புகிறார்கள். இருட்டில் பாதை தெரியாமல் பிரியோனி தட்டுத் தடுமாறி ஓரிடத்தில் நிற்கிறாள். அங்கு அவள் கண்ட மற்றொரு காட்சி அவளை ஸ்தபிக்கச் செய்கிறது. லோலா புல்தரையில் கவிழ்ந்து கிடக்க, அவளினின்று அவசரமாய் ஓர் உருவம் விலகி ஓடிப்போகிறது. யாரோ தன்னை இப்படி செய்துவிட்டார்கள் யாரென்றே தெரியவில்லை என அழுகிறாள் லோலா. ராபியின் மீது வெறுப்புடன் இருந்த பிரியோனி இதை செய்திருப்பவன் யாரென தனக்குத் தெரியும் என உறுதியுடன் சொல்கிறாள். லோலாவை தூக்கிச் சென்று படுக்க வைக்கிறார்கள். போலீஸ் வரவழைப்படுகிறது. ராபியின் மீது பழி சுமத்துகிறாள் பிரியோனி. அவன் மீதிருந்த வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி ‘அது அவன் தான். நான் பார்த்தேன் ஆம் நான் என் கண்களால் பார்த்தேன் என்று அடித்துச் சொல்கிறான்’.என்கிறாள் ஆதாரத்திற்காக அவன் சிசிலிக்கு எழுதிய கடிதத்தை காண்பிக்கிறாள். இரட்டையரை கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வந்த ராபி வீட்டினுள் நுழையும் முன் கைது செய்யப்படுகிறான். சிசிலியாவைத் தவிர யாரும் அவன் கூற்றை நம்பவில்லை. சிசிலியா தன் அன்புக் காதலனைக் காப்பாற்ற இயலாத கையறு நிலையில் பரிதவிக்கிறாள். பிரியோனி குரூர சந்தோஷத்துடன் மன நிம்மதியடைகிறாள்.
வருடங்கள் கடக்கின்றன. சிறைக் காலம் முடிந்து ராபி ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். சிசிலியா தன் குடும்பத்தைப் பிரிந்து செவிலியாக ஓர் ஆஸ்பத்திரியில் சேவை செய்கிறாள். பிரியோனியும் வளர்ந்து இளம் பெண்ணாக தான் செய்த தவறுகளையும் அதனால் தன் அக்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பையும் உணர்ந்து மிகவும் வருந்துகிறாள். எவ்வளவு முயன்றும் சிசிலியை அவள் சந்திக்கவே முடியவில்லை. எல்லோரிடமிருந்து விலகி தனித் தீவாய் தன் காதலன் ராபியின் திரும்பி வருதலுக்காக மட்டுமே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் காத்துக் கிடக்கிறாள் சிசிலியா. ராணுவ முகாம்களில் எப்போதாவது அவனைச் சந்தித்து தன்னிடம் வந்துவிடுமாறு கெஞ்சுவாள். கடற்கரையின் அழகான தனிமையான ஒரு வீட்டில் தங்களின் புது வாழ்க்கையைத் துவங்கலாம் என கடிதம் எழுதி அவ்வீட்டின் புகைப்படங்களை இணைத்து அவனுக்கு கடிதங்கள் எழுதுவாள். ராபி அவளுக்கு ஆறுதல் சொல்லி போர் முடிந்ததும் அமைதியான புதிய வாழ்க்கையை நிச்சயம் ஆரம்பிக்கலாம் என்பான்.
ப்ரியோனி டாலஸும் பயிற்சி செவிலியாக மருத்துவமனையொன்றில் சேர்ந்துவிடுகிறாள். ஆனால் கடினமான அந்த வேலை அவளுக்கு பழக்கமில்லாதது. மருத்துவமனையை பெருக்கித் துடைப்பதிலிருந்து பாத்திரங்களை விளக்கி வைப்பது வரை எந்நேரமும் பணிகள் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையை தனக்கான தண்டனையாக அவள் ஏற்றுக் கொள்கிறாள். டாலிஸ் என்ற பெயரில் அவள் இலக்கிய படைப்பாளியாக இருப்பது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் அவள் எழுதுவதை ஒரு போதும் கைவிடாமல் இருக்கிறாள். அங்கிருந்த மற்றொரு செவிலி காதல் அனுபவம் ஏதேனும் இருக்கிறதா எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்கையில் புன்னகையுடன் தன் வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவமொன்றை பகிர்ந்து கொள்கிறாள் டாலஸ். பதின்ம வயதுச் சிறுமியாக இருந்த சமயத்தில் ராபி என்பவன் மீது இனம் தெரியாத உணர்ச்சி எழும்பியது, அது காதலாகத் தான் இருக்கும், தனக்காக அவன் ஏதேனும் செய்வானா என நினைத்து அங்கிருந்த நீர் வீழ்ச்சியில் குதித்துவிடவே அவனும் அடுத்த நொடி அதில் குதித்து அவள் உயிரைக் காப்பாற்றுகிறான். ஏன் இப்படி செய்தாய் எனக் கேட்டபோது காதலைச் சொல்லியிருக்கி்றாள். அவளைக் குழந்தையாக நினைத்துக் கொண்டிருந்த ராபி நன்றாகத் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். அக்காதலை வெளிப்படுத்தியதும் அவன் மீதிருந்த அத்தகைய உணர்வானது காணாமல் போய்விட்டது என்றாள் டாலஸ்.
அந்த மருத்துவமனையில் போர்க்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறாள். பல நாள் தயக்கத்திற்குப்பின் சிசிலியின் வீட்டிற்கு பிரியோனி சென்ற போது அங்கு சிசிலியாவும் ராபியும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கிறாள். இருவரும் அவளை திட்டுவதைப் பொருட்படுத்தாமல் அன்றிரவு லோலாவை சீரழித்தவன் தன் அண்ணனின் நண்பன் பால் மார்ஷல் என்ற உண்மையைச் சொல்கிறாள். அன்றைய தினத்தில்தான் இருவருக்கும் திருமணம் நடந்தது என்ற உண்மையை சொல்கிறாள். அவர்களிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கவே சிசிலியும் ராபியும் குடும்பத்தாரிடமும் போலீசிடமும் உண்மையைச் சொல்லும்படி வலியுறுத்துகிறார்கள். அது இயலாது பால் மார்ஷன் ராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான் காலம் கடந்து இவ்வுண்மையை சொல்லி பயனில்லை லோலாவின் வாழ்க்கை பாதிக்கும் எனச் சொல்லி திரும்பிவிடுகிறாள் சோகம் ததும்ப சிசிலியாவின் வீட்டிற்கு கீழே வெகு நேரம் நின்று அவர்களை தூரத்திலிருந்து பார்க்கிறாள். என்றோ அவன் மீது கொண்ட ஆசை நினைவில் தோன்ற அவ்விடத்தை விட்டு வேகமாய் செல்கிறாள் பிரியோனி.
பல வருடங்கள் கழித்து வயதான நங்கையாக புகழ்பெற்ற எழுத்தாளாராக டாலிஸ் தொலைக்காட்சி சானலுக்கு பேட்டி அளிக்கிறாள். தனக்கு மிகவும் வயதாகிவிட்டதென்றும் ஞாபக மறதி நோய்க்கு ஆட்பட்டுவிட்ட காரணத்தால் தன் கடைசி நாலவலான ‘அடோண்ட்மெண்ட்’ பற்றி நேயர்களுக்குச் சொல்கிறாள். அது தன் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் என்றும், பெயர்கள் கூட மாற்றப்படாமல் மிகுந்த குற்ற உணர்ச்சியில் எழுதப்பட்டது என்றும் தெரிவிக்கிறாள். உண்மை நிகழ்வில் போர் முடிந்து அவரவர் ஊருக்குச் செல்ல கப்பல்கள் வந்திருந்தது. மிகுந்த களைப்பாலும், பசி தாகத்தாலும் நா வரண்ட ராபி தன் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு கடும் குளிரில் தோழன் ஒருவனுடன் நடக்கிறான். அவனின் ஒரே ஆசை சிசிலியாவிடம் எப்பாடு பட்டாவது சென்று அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் கனவு வீட்டில் கடைசி காலம் வரை நிம்மதியாக வாழ வேண்டும். ஆனால் மிகவும் சோர்வடைந்து அவன் ஓரிடத்தில் படுத்துத் தூங்கிவிடுகிறான். அதன் பின் அவன் விழிக்கவில்லை. அவன் இறந்ததை அறியாத சிசிலியா செவிலியர் அறையில் ஏற்பட்ட மின் விபத்தொன்றில் தாக்கப்பட்டு அதே இரவில் மரித்துப் போகிறாள். வாழ்வில் ஒன்று சேராத அவர்களை சாவின் கொடும்நிழலில் சங்கமம் ஆகிறார்கள். ஆனால் நாவலின் கடைசியில் சிசிலியாவும் ராபியும் அவர்கள் மிகவும் ஆசைப்பட்ட கடற்கறை வீட்டிற்கு கொஞ்சியபடி அலைகளில் கால்கள் புதையப் புதைய நடந்து போகிறார்கள் என்று டாலிஸ் வாழ்வில் ஒன்று சேராத அவர்களை தன் கடைசி நாவலில் அவர்களை எல்லாக் காலத்திலும் உயிருடன் வாழவைத்துவிடுகிறாள்.
காட்சிகள் மறைகிறது. ரோலிங் டைட்டில் ஓடிக்கொண்டிருக்க கனத்த இதயத்துடன் இது திரைப்படமா அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற ஏதேனும் சம்பவமா எனும் பரிதவிப்பை உருவாக்கிவிட்டது அடோண்ட்மெண்ட்.






