Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

LIFE ON A STRING -உமா ஷக்தி

“அன்புடையவர்கள் பைத்தியம் போலத்தான் தெரிகிறார்கள். பைத்தியமேதான். அன்பு ஒரு பைத்தியம். ஆனால் சாதாரணமான இவ்வுலகத்து விஷயங்கள் பாற்பட்ட உணர்வை விட உயர்ந்தது. அன்புக்கு கண்ணில்லை. ஆனால் இல்லாத கண் கொண்டு காணாததையெல்லாம் காண முடிகிறது” - (தம்மபதம் - ஓஷோ)


கண் பார்வையற்ற இருவரின் பயணமும் அவர்களின் எதிர்கால நம்பிக்கையுமே இந்த சீன திரைப்படம். அன்றாட வாழ்வியலில் அவர்களின் ஆசைகளும் தேவைகளும் மிகச் சொற்பமே. அவர்களின் சொத்து பேன்ஜோ எனும் இசைக்கருவி. சிறுவனாய் இருந்தபோது அவருடைய குரு ரகசியம் ஒன்றை பகர்ந்துவிட்டு மறைந்திருந்தார். ஆயிரமாவது தடவை அந்த இசைக்கருவியை மீட்டும்போது அதன் தந்தி அறுந்துவிடும் அப்போது கண்பார்வை பெற்றுத் தரக்கூடிய சூத்திரம் அந்த பேஞ்சோவிலிருந்து அடியிலிருக்கும் சட்டத்தில் கிடைக்கும் என்பதே. இன்னிசையும், பயணங்களும் முடிவற்ற தேடலுமாய் கண்பார்வையற்ற தன் சீடனான ஷிடோவுடன் அவர் வாழ்க்கையை போகிற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் தேவை ஒன்றே ஒன்றுதான்..வெளிச்சம்.


ஷிடோ இளைஞன். தன் குரு மீது நிகரற்ற அன்பும் மரியாதையும் உடையவன். ஆனால் அவனிடம் விளையாட்டுத்தனங்கள் மீதமிருந்தன. எதிர்படும் நகரத்தில் சூதாட்டும் இடத்திற்கு வந்து ஒரு கை குறையும் போது விளையாடுவான். குருவின் கோபமான அழைப்பு கேட்கையில் அவ்விடத்தை விட்டு அவரிடம் ஓடோடி வந்துவிடுவான். இவ்வகையில் அவ்வப்போது தென்படும் வாழ்வின் ருசியை சுவைத்துவிட விரும்புவன் அவன். ஆனால் குருவின் பாதையை பின்பற்றி முடிந்த வரை அவரிடம் நற்பெயர் வாங்குபவன். இருவரும் இணைபிரியாமல் ஊர் ஊராகச் சென்று தங்களின் இசையால் மக்களுக்கு அமைதியளித்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் மாஸ்டரின் பேன்ஜோ இசைக்கும் அவரின் குரலுக்கும் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான பெயர் கிடைக்கிறது.


அருவிக் கரையோரம் இருக்கும் கிராமமொன்றின் டீக்கடையில் ஒயிலான பெண்ணும், மரணத்தின் தேவன் என அறியப்படும் அவள் கணவனும் அழகான குழந்தையொன்றும், மனம் பிறழ்ந்த ஒரு வேலையாளும் எப்போதும் இருக்கிறார்கள். அழகியலுடன் அமானுஷ்யமாக இருக்கும் அந்த இடத்தை கடந்துவிட்டால் மலையடிவாரத்தில் இருக்கும் மற்றொரு கிராமத்திற்கு சென்றுவிடலாம். மாஸ்டரின் மீதும் அவரின் அழகான சீடன் மீதும் அவர்களுக்குத் தனி பரிவு உண்டு. டீயும், நூடில்ஸும், அருமையான உணவையும் சுடச் சுட அளித்து பணத்திற்கு பதிலாக இசையை ரசித்தபின் படகில்ல் ஏற்றி வழியனுப்புகிறார்கள்.

ஒரு வழியாய் மலையடிவார கிராமத்திற்கு வந்து சேரும் குருவையும் சீடனையும் குடியானவர்களான அந்த ஊர் மக்கள் மரியாதையுடன் வரவேற்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் புத்த விகாரக் ஆலயத்தில் தங்க அனுமதிக்கிறார்கள். நள்ளிரவில் தீப்பந்தம் பிடித்தபடி குருவின் பேன்ஜோ இசையில் தங்களை மறக்கிறார்கள். லான் சூ எனும் இளம் பெண் குருவும் சீடனும் வந்த நாள் முதல் அவர்களை தோழிகள் புடைசூழ பலவிதமான குறும்புகள் செய்து இவர்கள் தத்தளிப்பதைப் பார்த்து சிரிக்கிறார்கள். வீட்டுக்கு அடங்காத அப்பெண் எப்போதும் சிரிப்பும் குறும்புமாக ஊரை வளைய வருபவள். அவள் கூட குருவின் ஆத்மார்த்தமான இசையில் தன்னை மறக்கிறாள்.


குருவும் சீடனும் அவ்வூரிலேயே சிறிது காலம் தங்க முடிவு செய்கிறார்கள். 994, 995, 996 என தந்தி அறுபட்டுக் கொண்டிருக்கிறது. எப்போது ஆயிரமாவது முறை அறுபடுமோ எனக் காத்து தவித்துக் கிடக்கிறார் வயதான குரு. தன்னுடைய அறுபதாண்டு கால தவம் அது, எப்போது உலகைப் பார்ப்போம் இயற்கை எழிலையெல்லாம் கண்டு களித்து பின் முக்தி நிலைக்கு செல்ல தன்னை எப்போது ஆயப்படுத்திக் கொள்வோம், ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. ஆயிரமாவது தந்தி அறுபடவே இல்லாமல் தன்னுயிர் விடைபெற்றுவிடுமோ எனும் அச்சத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார்.


தினமும் ஊர் மைதானத்தில் இளைஞர்களுடனும் சூ மற்றும் தோழிகளுடனும் விளையாடுவான் ஷிடோ. தன் உள்ளுணர்வின் தெளிவால் சூ இருக்கும் இடத்தை மனதால் அறிந்து நேரே கைகள் நீட்டியபடி அவள் முகத்தை ஏந்துவான். அவள் வெட்கப்பட்டபடி ஓடிவிடுவாள். இவ்விதமாய் ஷிடோவிற்கும் கிராமத்து பைங்கிளி லான் சூவிற்கும் மெல்லியதாய் காதல் மலர்கிறது. அவனை வீட்டிற்கும் வயல் காட்டிற்கும் மலையடிவாரத்திற்கும் கைபிடித்து அழைத்துச் செல்கிறாள். அவளின் ஸ்பரிச்சால் மிகவும் நெகிழ்ந்து போகிறான் ஷிடோ. அவனுடைய உடல் அதிர்கிறது. முன்னெப்போதும் அறிந்திராத பெண் வாசனை அவனை பித்தேற்றியது. சீடனின் மனத் தடுமாற்றத்தை அறிந்த குரு அவனிடம் பக்குவமாக விளக்குகிறார். பெண்ணின் பின் சென்ற எவரும் உய்வதில்லை, உள்ளுணர்வால் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் போன்றவர்களுக்கு காதலும் காமமும் தேவையற்றது. கடமையும் இறைதேடலும் இசையும்தான் நம் வாழ்வின் நோக்கம் இதை ஏற்க மறுத்தால் நீ குருட்டுப் பிச்சைக்காரனாய் வாழ்நாள் முழுவதும் திரியவேண்டியதுதான் என்கிறார். குருவின் சொற்களில் இருக்கும் அக்கறையும் அன்பும் ஷிடோவிற்கு புரிந்தாலும் பெண் எனும் மாயை அவன் அறிவுக் கண்ணை மறைக்கிறது. அவனால் லான் சூவை மறக்க முடியவில்லை. இதற்கிடையில் அந்த கிராமத்தாருக்கும் பக்கத்து கிராமத்தாருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு நடக்கும். கத்தி கம்புகளைத் தூக்கிக்கொண்டு ஆக்ரோஷமாக அனைவரும் ஓடுவதை கண்ணுற்ற லான் சூ பெரும் பதட்டத்திற்கு உள்ளாகிறாள். ஷிடோவிடம் இதைப்பற்றி சொன்னபோது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குரு கையில் பேன்ஷோவுடன் குன்றின் மீதேறி அதை இசைக்க ஆரம்பிக்கிறார். இசையையும் பாடலையும் கேட்ட இரு தரப்பினரும் சாந்தியடைந்து போரைக் கைவிட்டு அவரரவர் ஊர் திரும்புகிறார்கள். குருவிடம் பெரும் மதிப்பு ஏற்படுகிறது அம்மக்களுக்கு.


அதிகாலையில் ஷிடோவைத் தேடி குமித்து வைத்திருக்கும் வைக்கோல் போரின் ஏணியில் தட்டுத்தடுமாறி ஏறி தன் கரங்களால் அவர்கள் இருவரும் கட்டியணைத்தபடி தூங்குவதை அறிகிறார். பேசாமல் வந்த வழியே திரும்பிச் செல்கிறார். அதன் பின் அவர்களின் காதலைப் தடுப்பதற்கு அவரிடம் எந்த சொல்லும் இல்லை. ஆனால் தனிமையில் உணர்வெழுச்சியில் அவர் படும் துயரை அறிந்த ஷிடோ அவருக்கு எப்போதும் போல உதவியாகவே இருக்கிறான். ஷிடோ என் ஆயிரமாவது தந்தி எப்போது உடையும் அது எப்போது உடைந்து என் பிறவிப் பயன் ஈடேறும் என அனத்திக் கொண்டேயிருக்கிறார்.


ஆயிரமாவது தந்தி ஓரிரவில் அறுந்துவிடவே மிகவும் உற்சாகமடைந்து ஷிடோவிடமும் லான்சூவிடமும் பிரியாவிடை பெற்று கிளம்புகிறார். மலையே உன்னை நான் சீக்கிரம் காண்பேன், அருவியே உன்னில் நான் இனி மூழ்குவேன் வானகமே இளம்வெயிலே மரச் செறிவே என இனி நான் பாடமுடி ஷிடோவிற்கு பரிசாக வெள்ளிச் சட்டகத்தாலான முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசளித்துவிட்டு, லான்சூவிற்கு பட்டாம்பூச்சி வடிவத்திலான காற்றாடியை திரும்பி வரும்போது வாங்கி வருவதாகச் சொல்லி அவர்களை வாழ்த்திவிட்டு நெடிய பயணத்தை துவக்குகிறார்.


ஷிடோ லான் சூ காதல் அவளின் அப்பாவிற்கு தெரிய வரும்போது அவர் மிகவும் கோபமடைந்து அவனை கட்டிப் போட்டு கிராமத்தவர் அனைவரையும் ஒன்று திரட்டி அடித்துத் துவைக்கின்றார். லான் சூவின் வாய் கட்டப்பட்டிருக்கிறது. இக்காட்சியைக் கண்டு அவள் துடிதுடிக்கிறாள். ரத்த வெள்ளத்தில் தன் காதலனை கண்டு பதறி அவனுடன் அவ்விரவில் தங்கிவிட்டு அவன் கையில் கடிதமொன்றைத் தந்துவிட்டு மலையுச்சியிலிருந்து கீழே குதித்து தன்னுயிரை விடுகிறாள் லான் சூ. தன்னால் தன் காதலியின் உயிரைக் காப்பாற்றமுடியவில்லையே எனும் துக்கத்தில் அழுது புலம்புகிறான் ஷிடோ. அவளின் கடிதத்தை தன் பேன்ஜோவில் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்கிறான்.


நகரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் குரு தன் பேன்ஜோவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவ குறிப்பை எடுத்துக் கொண்டு மருந்தகத்திற்கு செல்கிறார். அக்குறிப்பு எதற்கும் பயன்படாது என ஏளனத்துடன் சிரிக்கவே வாழ்வின் மிகப் பெரிய தோல்வியை ஏற்க முடியாத துன்பத்தையும் சுமந்து கொண்டு மீண்டும் தன் பயணத்தை துவக்குகிறார். தன் வாழ்வின் பயன் என்ன, முடிவற்ற தேடலாய் போன கண் திறப்பு இனி ஒரு போதும் வாய்க்கவே வாய்க்காதோ என மனமுடைந்து பிதற்றுகிறார். ஆனால் இதுநாள் வரை அவரிடம் தானே வந்து சேர்ந்த விவேகமும் உள்ளொளியும் அவரின் தேடலை நிறுத்தச் செய்கிறது. பிறவிக் குருடனான தனக்கு ஒருபோதும் பார்வை கிடைக்க வழியில்லை எனும் உண்மையை பக்குவமாய் ஏற்றுக் கொள்கிறார். பட்டாம்பூச்சி காற்றாடியை வாங்கிக் கொண்டு தன் சீடனையும் சூவையும் பார்க்க ஆவலாக ஊருக்குத் திரும்புகிறார். வழியில் டீக்கடையை கடக்கும்போது அப்பெண் நீங்கள் முன்பு நான் பார்த்த அதே மனிதரா நிரம்ப மாறியுள்ளீர்கள் என்கிறாள்.


அவசரமாக கிராமத்தை அடைந்த குரு ஷிடோவின் துயரை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். பேன்ஜோவின் அடியிலிருக்கும் குறிப்புகளை இனி நம்பாமல் வாழ்க்கையை நேரடியாய் தரிசித்து அக்கணத்திற்கேற்ப தன்னை உள் வாங்கிக் கொள்ளவே இப்பிறவி எனும் ஞானத்தை குரு அடைகிறார். அதை பாடல் ஒன்றின் மூலம் கடைசியாக அந்த ஊரில் காற்றில இசையை நிரப்பி தங்களின் பயணத்தை தொடர்கிறார்கள்.

வாழ்க்கை நெடியது. தனிமை, மகிழ்ச்சி, துயர், போர், மரணம் போன்ற பல நிகழ்வுகள் ஒன்றுசேர்ந்ததாகும். ஆனால் தன்னை உணர்ந்தவருக்கு இவையாவும் ஒன்றே. துயர் வரின் வீழாமலும் இன்பத்திலேயே திளைத்துக் கிடக்காமலும் கடந்து செல்லும் எதிலும் தன்னை மையப்படுத்திக் கொள்ளாமல் தாமரை இலையின் மீதான நீரைப் போல பற்றற்று எல்லாரிடமும் பரந்து பட்ட அன்பைச் செலுத்தி உன்னத நிலைக்கு செல்வதே இவ்வாழ்வின் பெரும் நோக்கமாகும் என்பதை அறிந்து கொள்கிறார் குரு. அகத் தேடல் உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை அற்புதமான இரு கதாப்பாத்திரங்கள் மூலமாக திரைக்காவியமாக்கியிருக்கிறார் இயக்குநர் சென் கெய்கே.


சீனத்தின் மலைகளையும் வரண்ட பிரதேசங்களையும், அருமையான கிராமங்களையும், சிற்றோடைகளையும், சீறிப் பாயும் அருவியையும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளியமைப்பாளர்.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS