Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

WHERE IS MY FRIEND’S HOUSE -உமா ஷக்தி

அபாஸ் கியாரஸ்டமி குழந்தைகளின் உலகை நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறார். நம் பரபரப்பான வாழ்க்கையில் குழந்தைகளின் அக உலகத் தேவைகளை நாம் நிராகரிக்கவே செய்கிறோம். அவனுடைய புறத்தேவைகளுக்காகத் தான் நம் வாழ்வியில் போராட்டங்கள். ஆனாலும் நின்று நிதானித்து அவர்களின் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் நொடிதோறும் எழும் அவர்களின் ஆசைகளையும் நாம் எதிர்கொண்டோமா என்பது கேள்விக்குரியதுதான். மிகச் சிறிய ஓர் விஷயத்தினூடே சிறியவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையே நிலவிக் கொண்டிருக்கும் தூரத்தை வெகு இயல்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு வகுப்பறை, இரண்டு கிராமங்கள். இரு சிறுவர்கள். இவ்வளவுதான் இத்திரைப்படத்தின் பேக் ட்ராப். ஆனால் இதற்குள் அப்பாஸ் வரைந்துள்ள சித்திரம் மகத்தானது.



வகுப்பறைக்கு அன்று மாஸ்டர் லேட்டாக வருகிறார். அதற்குள் கூச்சலும் குழப்பமுமாக சிறுவர்கள் கத்தி பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வாத்தியார் இல்லாத பொழுதை மகிழ்ச்சியாய் கொண்டாடிக் கொண்டிருக்றார்கள். கடுப்பான மாஸ்டர் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, வீட்டுப்பாடத்தை எடுத்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். எல்லோரும் ஒழுங்காக செய்து முடித்திருக்கின்றனர் ரசோ எனும் சிறுவனைத் தவிர. அவன் தன் உறவினர் வீட்டில் நோட்டுப் புத்தகத்தை விட்டுவிட்டு வந்ததால் வீட்டுப் பாடம் செய்ய இயலாம் போனது என்று அழுதபடி சொல்கிறான். அவனுடைய நண்பன் அஹமத் அவனை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மாஸ்டர் அவனைத் திட்டுகிறார், அவன் அழுகை நிற்காததால் அறிவுரைகள் சொல்லிவிட்டு மன்னிக்கிறார். அஹமத் தன் நண்பனுக்காக மனம் இரங்குகிறான்.



வீட்டுக்கு வந்த அஹமத்திற்கு உடனே விளையாடப் போகவோ ஹோம்வொர்க் செய்யவோ முடியாமல் சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்ய நேர்கிறது. அவனுடைய அம்மா அவனை திட்டிக் கொண்டே வேலைகளை ஏவிக்கொண்டிருக்கிறாள். கைக்குழந்தையான தம்பியை தொட்டிலில் ஆட்டுவதிலிருந்து துவைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு பக்கெட் எடுத்து வைப்பது வரை அவனுடைய உதவி அவளுக்குத் தேவைப்படுகிறது. அதன் பின் ஹோம்வொர்க் செய் என்று அவனை கடிந்து கொள்கிறாள். புத்தக பையைத் திறந்த அஹமத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய நண்பன் ரசோவின் நோட்டையும் தான் தவறுதலாக எடுத்து வந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய நோட்டும் ரசோவின் நோட்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதைக் கண்ட அஹ்மத் பெரும் பதட்டத்திற்குள்ளாகிறான். உடனடியாக அதை ரசோவிடன் கொடுத்துவிட துடிக்கிறான். அம்மாவிடம் பலமுறை சொல்லியும் அவள் அவனை விடுவதாக இல்லை.



வேறுவழியின்று அவன் அம்மா உள்ளே போனதும் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ரசோவின் வீட்டிற்கு நோட்டை கொண்டு போய் ஒப்படைக்க முடிவு செய்து ஒரே ஓட்டமாக ஓடுகிறான். ஒற்றையடிப்பாதைகள், மரங்கள் அடர்ந்த சோலை இவற்றைக் கடந்து பெயர் தெரியாத கிராமம் ஒன்றை அடைந்து கண்ணில் தென்பட்ட வீடுகளின் கதவைத் தட்டி ‘ரசோ ரசோ’ என்று கத்துகிறான். அவன் தட்டிய கதவுகள் பெரும்பாலும் திறக்கப்படவேயில்லை. ஒரு வீட்டு மாடியிலிருந்து துணி விழவே அதை எடுத்துத் தந்து உதவுகிறான் அஹமத், அதை பாராட்டிய பெண்மணியிடம் ரசோவின் பெயர் சொல்லி அவனைத் தெரியுமா என்று கேட்கிறான். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் ரசோவின் உறவினனத் தெரிந்திருந்தது. அவனுடைய கிராமம் எங்கிருக்கிறக்கிறது என்று கேட்கிறான். அவளும் வழி சொல்கிறான், பறந்தோடி அரும்பாடுபட்டு அவனின் வீட்டை கண்டுபிடிக்கிறான், ஆனால் ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அவன் தன் தந்தையுடன் அஹ்மத் இருக்கும் கிராமத்திற்கு ஏதோ வேலையாக சென்றிருப்பதை அறிந்து மீண்டும் வந்த வழியே ஓட்டமாய் திரும்புகிறான்.



வழியில் தன் தாத்தாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறான். அவர் அவனிடம் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறாய் போய் சிகரெட் வாங்கி வா என வேலை ஏவுகிறார். ஏற்கனவே ரசோவை கண்டுபிடிக்க முடியாத ஆற்றாமையில் இருக்கும் அஹ்மத் தாத்தாவிடம் பிறகு வாங்கித் தருவதாய் சொல்கிறான். அவர் அவனைத் திட்டுகிறார். வேறுவழியின்றி கடைக்குச் செல்கிறான். இக்காலப் பிள்ளைகள் எப்படி உருப்படாமல் இருக்கிறார்கள் என்று தாத்தா ஒரு பிரசங்கமே நடத்துகிறார். இடைப்பட்ட பல தடைகளை சமாளித்தவாறே மீண்டும் தன் தேடலை தொடங்குகிறான் அஹமத் .



இம்முறை அவனுக்கு உதவியாக ஒரு முதியவர் அவனுடன் தனக்கு ரசோவின் வீடு தெரியும் என்று அவனை அழைத்துச் செல்கிறார். நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. தாத்தாவினால் வேகமாக நடக்க முடியவில்லை. வீட்டுக்கு வேறு திரும்ப வேண்டும். புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கவலை ததும்பும் முகத்தோடு அஹமத் தாத்தாவின் கரம் பிடித்து ஒரு வழியாக ரசோவின் வீட்டருகே சென்றுவிட்டான். தாத்தாவால் அதற்கு மேல் வரமுடியாததால் அஹ்மத் அங்கு செல்கிறான். அந்த வீட்டருகே ஒரே கும்மிருட்டு. குதிரை ஒன்று கோபத்துடன் தன் குளம்புகளை தேய்த்துக் கொண்டிருக்கிறது. இருட்டும் இனம் தெரியாத அச்சமும் சிறுவன் அஹ்மத்தை வாட்டியெடுக்கின்றன. மெளனமாக தாத்தாவிடம் திரும்பி வருகிறான். என்ன சத்தமே காணும் நோட்டை நண்பனிடம் கொடுத்து விட்டாயா என்ற அவரின் கேள்விக்கும் மெளனமே அவன் பதிலாகிறது. வேகமாக வா தாத்தா என கெஞ்சுகிறான். ஆனால் அவரால் நடக்க முடியாமல் போகவே ஓடுகிறான். ஆனால் தெருநாய்களின் குலைப்பிற்கு பயந்து மீண்டும் தாத்தாவிடம் தஞ்சமடைகிறான். ஒருவழியாக தன் வீட்டிற்கு வந்து சேர்கிறான்.



அவன் முகம் வாடியே இருக்கிறது. அவன் அம்மா சாப்பிட சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் உணவை புறக்கணிக்கிறான். அம்மா கடிந்து கொள்ளவே வீட்டுப்பாடம் செய்யப் போகிறேன், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு குனிந்தபடி எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் அப்பா மெளனமாக குரான் ஓதிவிட்டு அவனை எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறார். நிம்மதியான அஹமத் தன் அறைக்கு வந்து எழுத்துப் பணியை தொடர்கிறான். புயல் காற்று அடித்து கதவு திறந்து திறந்து மூடுகிறது. அஹமத்தின் மனதில் கூட. மாலையில் அம்மா துவைத்துக் காயப்போட்ட துணிகளை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.



அடுத்த நாள் காலை. வகுப்பறையில் எல்லாரும் இருக்கிறார்கள் அஹமத்தைத் தவிர. மாஸ்டர் எல்லார் நோட்டையும் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு ரவுண்ட்ஸ் வருகிறார். ரசோ மிகவும் பதட்டத்துடன் காணப்படுகிறான். அவன் பையில் கையை விட்டு துழாவிக் கொண்டேயிருக்கையில், அஹமத் வகுப்பறைக்குள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு உள் நுழைகிறான். ஏன் தாமதம் என்று மாஸ்டர் கேட்கையில் தன் நண்பனின் கிராமத்தின் பெயரைச் சொல்லி தூரத்திலிருந்து வருவதால் லேட்டாகிவிட்டது என்கிறான். அவசரமாக உள்ளே வந்து ரசோவிடம் நோட்டை கொடுக்கிறான். மிகச் சரியாக மாஸ்டர் இவர்களின் டேபிளுக்கு அருகே வந்து நோட்டை கேட்க அவரிடம் பயந்தபடி தருகிறான். அது ரசோவின் நோட் என்று மாஸ்டர் படிக்கவே அவனிடமிருந்த தன்னுடைய நோட்டை அவசரமாக வாங்கி அவரிடம் தருகிறான். அவர் அதைத் திருத்திவிட்டு அவனிடம் திருப்பித் தருகிறார். பெரும் பதட்டத்துடன் ரசோ தன் நோட்டை நீட்ட மாஸ்டர் பக்கங்களை திருப்புகிறார். கவலைப்படாதே நான் உனக்க்கா சேர்த்து நானே எழுதிவிட்டேன் என்று ரசோவின் காதில் அதற்குள் கிசுகிசுத்திருந்தான் அஹமத். ரசோவின் நோட்டில் ‘நன்று’ என்று போடுகிறார் மாஸ்டர். அஹமத் ராசோவின் பதட்டம் முற்றிலும் வடிந்துவிட்டு அவர்கள் சந்தோஷ மனநிலைக்கு வருவதற்குள் படம் நிறைவடைகிறது.


அஹமத்தின் நேர்மையும் நண்பன் மாட்டிக் கொண்டு மாஸ்டரிடம் திட்டு வாங்கக் கூடாது, அதன் காரணமாக அவன் பள்ளையை விட்டே துரத்தப்பட்டுவிடக் கூடாது என்ற குழந்தைத் தனமான அச்சங்களால் என்ன நடந்தாலும் சரி புத்தகத்தை அவனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற அவனின் மெய்த்துடிப்பு பெரியவர்களுக்கே கூட பாடமாகிறது.


இத்திரைப்படத்தில் மிக அற்புதமான காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். ரசோவைத் தேடி மீண்டும் அஹ்மத் கிளம்புகையில் வழியில் அவன் பெயருடைய ஒரு மனிதனை சந்திக்கிறான். அவன் அஹமத்தின் நோட்டிலிருந்து எழுத ஒரு பக்கம் கேட்கிறான். இது தன்னுடையது அல்ல தன் நண்பனுடையது எனச் சொல்வதை கண்டுகொள்ளாமல் வலுக்கட்டாயமாக ஒரு பேஜை கிழித்து நோட்டை அடியில் வைத்து எழுத ஆரம்பிக்கிறான். அவர் எழுதி முடிக்கும் வரையில் பொறுமையாக நின்று கொண்டிருந்த அஹமத் அவரிடம் உங்கள் பெயர் ரசோவா எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறான். அவனுடைய குரல் அவரின் காதுகலை எட்டவில்லை. அலட்சியமாக நோட்டைத் திருப்பித் தந்துவிட்டு குதிரையில் ஏறி போய்விடுகிறான். அவன் ஒருவேளை ரசோவின் தந்தையாக இருக்கக் கூடும் என நினைத்த அஹமத் அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். சிறுவர்களின் கேள்விகள் பெரியவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை, அப்படியே எட்டினாலும் அதில் தென்படும் அலட்சியத்தின் குறியீடாக இக்காட்சியை அப்பாஸ் வெகு அற்புதமாய் திரைப்படுத்தியுள்ளார்.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS