Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

Not One Less -உமா ஷக்தி

வ்வீய் மின்ஸி சூக்ஸியன் கிராமத்துக்கு டீச்சராக வருகை தருகிறாள். டீச்சர் என்றவுடன் நம் நினைவிற்கு வரும் பிம்பத்தை தகர்த்து விடுகிறாள் பதிமூன்று வயதே நிரம்பிய அச்சிறுமி. அந்த கிராமத்தின் வயதான் டீச்சர் காவோ தன் சொந்த வேலையாக நகரத்திற்கு ஒரு மாத காலம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால், மாணவர்களின் படிப்பு நின்று போகக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் பதின்ம வயது சிறுமியான வீய்யை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்.


வ்யீ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவள், சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் இல்லாதவள் என்பதனை அவளுடன் பழகிய சிறிது நேரத்தில் கோவோ புரிந்து கொள்கிறார். அவளுக்குத் தெரிந்த ஒரே பாடலை அபிநயத்துடன் மாஸ்டரிடம் அவள் ஒப்பிக்கும்போதே பாதியை மறந்துவிடுகிறாள். உனக்கு வேறு என்ன தெரியும் என்று அவர் கேட்கையில் அவளிடம் பதிலேதுமில்லை. ஆனாலும் அவளைத் தவிர அவருக்கு மாற்று ஏற்பாடு யாருமில்லை. எனவே வேறு வழியில்லாமல் புத்தகம் ஒன்றை தந்து தான் வரும் வரை மாணவர்களுக்கு அதை அப்படியே கரும்பலகையில் எழுதிக் காண்பித்து அவர்களை அதை தினமும் எழுதச் செய்வது அவளின் பொறுப்பு என்கிறார். சந்தேகத்துடன் தலையசைக்கிறாள் வ்யீ.

சிறிய சாக்பீஸ் பெட்டியை அவளிடம் ஒப்படைத்து பள்ளி நிலைமை சரியில்லை, கிராமத்திலும் ஏழ்மைதான் நிலவுகிறது எனவே நாளுக்கு ஒன்றாய் மட்டும் சாக்குக் கட்டியை உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்துகிறார். அவளுக்கு மாசம் சம்பளமாக ஐம்பது யான் கிராமத்தின் மேயர் தருவாரென்றும் அப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாகி நகரத்திற்கு சென்றுவிடும் கொடும் சோகம் நடப்பதாகவும் வ்யீ இதை கருத்தில் கொண்டு ”ஒருவரைக் கூட இழக்காமல்” (Not one Less) எல்லாரையும் தக்க வைத்து, கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை திறம்படச் செய்தாள் எனில் தன் சொந்தப் பணத்தில் அவளுக்கு பத்து யான்கள் மேலதிகமாய் தருவதாயும் வாக்குறுதி அளிக்கிறார் கோவா. அதன்பின் ஜீப்பில் ஏறி மலைப்பாதை வழியாக சென்றுவிடுகிறார். மேயரிடம் பணம் விதயமாக பேசுகையில் அவர் கோவோ தான் அவளுக்குப் பணம் தர வேண்டும் தன்னுடைய பொறுப்பல்ல என்று சொல்லவே மனமொடிந்த வ்யீ அந்த ஜீப்பைத் தொடர்ந்து மலைப்பாதையில் நிறுத்தும்படி கத்திக்கொண்டே ஓடுகிறாள். ஜீப் நின்றதும் தன் சம்பளத்தைப் பற்றி கேட்கவே கோவொ மறுபடியும் அது கட்டாயம் கிடைக்கும்படி செய்கிறேன் ஆனால் வாக்குத் தவறாமல் ஒரு மாணவனையும் விட்டுவிடக்கூடாது எனச் சொல்லி அவளைத் திருப்பி அனுப்புகிறார்.


மிகச் சிறிய அந்த வகுப்பறையின் உள் அறையில் வ்யீக்கு தங்குமிடமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவளே சிறிய பெண் அவளால் அங்கிருக்கும் மாணவ மாணவிகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. மாணவ மணிகளின் அட்டகாசத்தை சகிக்க முடியாமல், சமையல் அறைக்குள் அடிக்கடி சென்று ஒளிந்து கொள்வதும், வகுப்பறையின் வாசலுக்கு வந்து செயலற்று அமர்ந்திருப்பதுமாய் இருக்கிறாள். யாரும் வெளியேறிவிடக் கூடாது என்ற பயம் வேறு!

மாஸ்டர் சொன்னது சாக்பீஸை தங்கமாய் மதித்து ஒன்றே ஒன்றை எடுத்து மாஸ்டர் கொடுத்திருந்த புத்தகத்திலிருப்பவற்றை அப்படியே கரும்பலகையில் எழுதி எல்லாரையும் அதைப் பார்த்து எழுதச் சொல்கிறாள். குறும்புக்கார மாணவர்களுக்கு அவளுடைய நடவடிக்கைகள் ஏற்கனவே சிரிப்பாய் இருக்கையில் பாடம் நடத்தத் தெரியாத ஆசிரியை எனப் புரிந்து ’சுத்தமாய் புரியவில்லை மிஸ்’ எனக் கத்தி கலாட்டா செய்கிறார்கள். வ்யீ பதட்டமடைந்து வழமைப் போலவே வாசல்படிக்கு வந்து அமர்ந்துவிடுகிறாள். வகுப்பிலேயே சேட்டைகளுக்கு பெயர் போன சாங் எனும் சிறுவன் அவளைத் தாண்டி ஓடுகிறான். அவள் துரத்தி வருகையில் போக்காட்டிவிட்டு கடைசியில் சிறுநீர் கழிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான். மிகவும் சோர்வுற்ற வ்யீ பாத்ரூம் வாசலிலேயே காத்திருக்கிறாள். அவள் பயம் அவன் வகுப்பிலிருந்து தப்பி விடக் கூடாது, மாஸ்டர் திரும்பும் வரை ஒரு நம்பர் கூட குறையக்கூடாது.


வ்யீன் தவிப்புகளை கவனித்துக்கொண்டிருந்த பொறுப்பான மாணவி மிங் சிங்ஹாங் அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். பயப்படாமல் எதையும் கையாளுங்கள் மிஸ் உங்களால் முடியும் என்று தன்னம்பிக்கை அளிக்கிறாள். சாங் அவளைப் பார்த்தால் டீச்சர் மாதிரியே தெரியவில்லை தனக்குத் தெரிந்த பெண் வ்யீ சுங்ஸியின் அக்கா போலவே இருக்கிறாள் என்று வம்புக்கிழுக்கிறான். ஒருவாறு பள்ளியின் நடப்புகள் வ்யீற்கு புரிபடுகிறது. வகுப்பை அதன் போக்கில் விட்டுவிட்டு தன்னால் முடிந்த அளவிற்கு கட்டுக்கோப்பாய் வைத்திருக்கிறாள். இவ்வாறு இருக்கையில் மேயர் வெளியூர்ப் பள்ளியிலிருந்து ஒரு பி.டி. மாஸ்டரை அழைத்துவருகிறார். பள்ளியிலேயே சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான மிங்கை பரிசோதித்து அதில் அவள் தேர்ச்சி பெறவே நகரத்திற்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறு செல்கிறார். அடுத்த நாள் மேயர் பள்ளிக்கு வரவே வ்யீ பதைபதைத்து மிங்கை அனுப்ப மறுத்து அவளை ஓரிடத்தில் ஒளித்து வைக்கிறாள். மேயர் டியன் வ்யீயைத் திட்டி, நல்ல வாய்ப்புக்களை விடக்கூடாது மாஸ்டர் வந்தால் நான் சொல்லிக்கொள்கிறேன் எனச் சொல்லி மிங்கைக் கண்டுபிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றுவிடுகிறார். அழுதபடி ஜீப்பின் பின் வெகுதூரம் ஓடிச் செல்கிறாள் வ்யீ. ஆனால் அது அதிவிரைவாய்ச் சென்று அவள் கண்பார்வைக்கு மறைகிறது.


மிங் திரும்பி வரும் நாளை எதிர்ப்பார்த்தபடி மற்ற மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறாள். குறும்புக்காரன் சாங் மற்றொரு மாணவனான மிங்ஷானை துன்புறுத்தியதை அறிந்த வ்யூ அவனை மன்னிப்பு கேட்கவைக்கிறாள். இதற்கிடையில் மாணவர்கள் எல்லாம் சாக்பீஸை உடைத்து நொறுக்கிவிடுகிறார்கள். இதைப் பார்த்த வ்யீ பெரும் மனத்துயர் அடைகிறாள். மாஸ்டருக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்குகிறாள். ஒரு நாள் ஸாங் பள்ளிக்கு வராமல் போகவே மற்றவர்களிடம் விசாரிக்கிறாள். யாரும் சரியாக பதில் அளிக்காத காரணத்தால் அவன் வீட்டிற்கே செல்கிறாள். அங்கு வயதான அவனுடைய தாய் தாங்கள் வறுமையின் கோரப்பிடியிலும் கடனிலும் சிக்கியிருப்பதால் வேறு வழியின்றி ஸாங்கின் படிப்பை நிறுத்திவிட்டு நகரத்திற்கு வேலைக்கு அனுப்பிவிட்டதாய் சொல்கிறாள் நோயாளியும் ஏழையுமான அவனின் அம்மா. இதைக்கேட்ட வ்யீ இடியே தன் தலையில் வீழ்ந்ததுபோல் துடிக்கிறாள். ஸாங்கின் முகவரியை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு சோகத்துடன் கிளம்பி மேயரிடம் வருகிறாள். நகரத்திற்கு செல்ல சிறிது பணம் வேண்டும் எனக் கேட்கவே அவர் தன்னிடம் பணமேதும் இல்லை என அவளைத் திட்டித் திருப்பியனுப்புகிறார்.


பணத்தை எப்படியாவது சம்பாதித்து நகரத்திற்கு போக வேண்டும் என முடிவு செய்து வகுப்பு மாணவர்களிடம் இதைப் பற்றி பேசுகிறாள். யாரிடமாவது பணம் இருக்கிறதா என்று கேட்கையில் அனைவரும் அத்தனை பணத்திற்கு தாங்கள் எங்கு போவது என்கிறார்கள். ஒரு மாணவி பக்கத்தில் இருக்கும் செங்கல் சூளைக்குச் சென்று செங்கல் அடுக்கித் தந்தால் பணம் கிடைக்கும் என்ற யோசனையைச் சொல்கிறாள். மாணவப் படையை அழைத்துக் கொண்டு செங்கல் சூளைக்கு விரைகிறாள் வ்யீ. நூறு செங்கலை நகர்த்தி வைத்தால் பத்து யான்கள் கிடைக்கும் அப்ப அம்பது யான் சம்பாதிக்க எத்தனை செங்கலை தூக்கி வைக்க வேண்டும் என க்ளாஸில் அவர்கள் செய்கின்ற ப்ராக்டிக்கல் வேலையைக் கொண்டே கணக்கு சொல்லிக் கொடுக்கிறாள். மாணவர்கள் உற்சாகமாக அவளுக்கு வேலை செய்கிறார்கள், அதே சமயம் வகுப்பில் கணக்கும் கற்றுக் கொள்கிறார்கள். சிறுகச் சிறுக பணமும் சேர்ந்துவிடுகிறது. இவ்வளவு உழைத்த அவர்களுக்கு எதாவது வாங்கித் தர ஆசைப்பட்டு கடைக்கு அழைத்துச் செல்கிறாள் வ்யீ. அவர்கள் கஷ்டப்பட்டு செங்கல் செங்கலாகத் தூக்கி சம்பாதித்த பணம் வெறும் கூல் ட்ரிங்க்ஸ் (அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் கூட கோக்கின் ஆதிக்கம் இருப்பதைக் உணர்த்தும் காட்சி) மற்றும் ஸ்நாக்ஸுக்கே சரியாகிவிடுகிறது. மிச்சமாக சில்லறைகள் மட்டுமே இருக்கிறது. கவலைப்படாதீர்கள் சமாளித்துக் கொள்ளலாம் என தன்னம்பிக்கையுடன் சொல்லிய மிஸ்ஸின் மீது இப்போதெல்லாம் மாணவர்களுக்கு ப்ரியம் ஏற்பட்டுவிடுகிறது. நகரத்தை நோக்கி கிட்டத்தட்ட அவள் நடந்தே போகிறாள்.


இடம் : ஸாங்ஜியாகோ - நகரம்
கையில் சிறிய தோல்பையுடனும் மனத்துணிவுடனும், நகரத்திற்கு வந்து சேர்கிறாள் வ்யீ. ஆனால் வந்தவுடன் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஸாங் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக சொல்லப்பட்ட இடத்தில் அவன் இல்லை. ஸன் எனும் சிறுமி அவன் ரயில் நிலையத்தில் தொலைந்துவிட்டான் என சாதாரணாமச் சொல்கிறாள். மிகவும் பதட்டமடைந்த வ்யீ அவன் எப்படித் தொலைந்தான் ஏன் இப்படி பொறுப்பற்று இருக்கிறீர்கள் என ஸ்ன்னை திட்டுகிறாள். முதலில் கோபப்பட்ட ஸன் சிறிய குற்றவுணர்வு காரணமாக தன்மையாக பேசுகிறாள், வ்யீயுடன் திரிந்து கொண்டிருந்தால் தன் பிழைப்பு கெட்டுவிடும் எனவே அன்றைய சம்பளப் பணத்தை தனக்கு வ்யீ தருவதாக இருந்தால் அவளுடனே வந்து ஸாங் தொலைந்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்கிறாள். வ்யீ இதற்கு உடன்பட்டு ஸன்னை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்று விசாரிக்கிறாள். காணாமல் போனவர்கள் பட்டிய்லில் ஸாங் பெயரை இருப்பதைப் பார்த்து வருந்துகிறாள். ஆனால் எப்படியும் அவனைக் கண்டுபிடித்தே தன் ஊருக்குச் செல்வதாய் முடிவு செய்கிறாள்.


ரயில் நிலைய ஒலிபெருக்கியில் ஸன்னுடன் சென்று ஸாங்கின் விபரங்கள் அனைத்தையும் சொல்லி உதவி கேட்கிறாள். நான்கைந்து முறை அச்செய்தி ஒலிபரப்பாகியும் ஸாங்கைப் பற்றி அவளுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பசியும் களைப்பும் அவர்களை சோர்வுறச் செய்கிறது ஸன் அவளிடம் சண்டைபோட்டு தன் பணத்தைத் பிடிவாதமாய் வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறாள். தனிமையில் அந்நகரத்தில் பெரும் சோகத்துடன் வீதி வீதியாய் அலைகிறாள் வ்யீ. தன்னிடமிருந்த சொற்ப பணத்தில் மையும், ப்ரஷும், நூறு வெள்ளைத் தாள்களும் வாங்கி ரயில் நிலைய சேரில் அமர்ந்து கஷ்டப்பட்டு வியர்வை சிந்தியபடி ‘காணவில்லை’ நோட்டீஸை கைப்பட எழுதுகிறாள். களைப்பாக இருந்தாலும் இங்க் தீரும் வரை எழுதித் தீர்க்கிறாள். பயணி ஒருவர் இதைப் பார்த்து கேலியாக ’எந்தக் காலத்தில் இருக்கிறாய், இப்போதெல்லாம் கம்யூனிகேஷன் எங்கேயோ சென்றுவிட்டது தாளில் இருக்கும் செய்தியை வாசிக்க யாருக்கும் நேரமிருக்காது, அதுவும் இது தொலைந்துபோனவர் பற்றிய செய்தி நிச்சயம் இது கவனப்படாது’ என்கிறார். தன் ஒவ்வொரு முயற்சியும் தோற்றுப் போவதை அறிந்து மனமொடிந்து போனாலும் நம்பிக்கையை கைவிடாமல் அடுத்த கட்ட முயற்சிக்கு நகர்ந்து போகிறாள் வ்யீ.


தீவிரமான யோசனைக்குப் பின் டீவி ஸ்டேஷனுக்குப் போய் அங்கு விபரங்கள் கொடுத்தால் பயனளிக்கும் ஸாங்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கையின் மீதேறி அங்கு செல்கிறாள். மிகவும் கண்டிப்பான ரிசப்ஷெனிஸ்ட் ஃபெங் யூயிங் என்பவள் வ்யீயின் நடை உடையைப் பார்த்து சந்தேகப்பட்டு அவளை உள்ளே விடவே மறுக்கிறாள். தான் கிராமத்து டீச்சர் என்றும் தொலைந்து போன தன் மாணவனை எப்படியாவது கண்டுபிடிக்க வந்திருக்கிறேன் என்றம் தன்னை உள்ளே விட்டால் அவளுக்கு புண்ணியமாகப் போகும் என்றெல்லாம் கெஞ்சிக் கேட்கிறாள் வ்யீ. ஐ.டி கார்ட் கூட இல்லாத பெண்ணிற்கு தொலைக்காட்சி நிலையத்தில் என்ன வேலையென்று சொல்லி துரத்துகிறாள். வ்யீ ஸ்டேஷன் மாஸ்டரை சந்திக்க வேண்டும் அவரைப் பற்றி எதாவது சொல்லுங்கள் வாசலில் நின்று அவரைப் பார்த்துக் கொள்கிறேன் எனக் கெஞ்சவும், வேண்டா வெறுப்பாக அப்பெண் அவர் கண்ணாடி அணிந்திருப்பார் என்று வேண்டும் என்றே பொத்தாம் பொதுவாக சொல்லிவைக்கிறாள். அப்பாவி வ்யீ இதனைப் பற்றிக் கொண்டு போவோர் வருவோரிடம் சலிப்படையாமல் நீங்கள்தான் ஸ்டேஷன் மாஸ்டரா எனக் கேட்கிறாள். கிட்டத்தட்ட நூறு பேர்களுக்கு மேல் கேட்டுவிட்டு தொலைக்காட்சி நிலையம் மூடும் வரை கவலையுடன் அங்கிருந்துவிட்டு மிகவும் சோர்வடைந்து குழாய்த் தண்ணீரைக் குடித்துவிட்டு தெருவோரத்தில் படுத்து தூங்கிவிடுகிறாள். அடுத்த நாள் காலை மீண்டும் அங்கு படையெடுக்கிறாள். அதே விரட்டியடிப்புக்கள், வாசலில் சோகத்துடன் நிற்கும் அவளை தன் அறையின் ஜன்னல் கண்ணாடி வழியாக பார்த்து யாரென்று விசாரிக்கிறார் ஸ்டேஷன் மாஸ்டரான வூ வான்லூ. ரிசப்ஷனிஸ்டை திட்டிவிட்டு வ்யீயை அழைத்து அன்புடன் விசாரிக்கிறார். நடந்தவற்றைக் சொல்கிறாள் வ்யீ, விளம்பரம் தர தன்னிடம் பணம் ஏதுமில்லை என்பதையும் சொல்லி அழுகிறாள். அவள் பிரச்சனை அவர் மனதை அசைக்கவே, அதனை அப்படியே நிகழ்ச்சியில் சொல்லுமாறு சொல்லிவிட்டு ஏற்பாடுகளை செய்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.


அன்றைய இரவின் டாக் ஷோவில் வ்யீயை நிகழ்ச்சி தொகுப்பாளினி கேள்வி கேட்கிறாள். பயத்திலும் தயக்கத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் கண்ணீர் மல்க கேமரா முன் அமர்ந்திருக்கிறாள் வ்யீ. தொகுப்பாளினி உங்கள் மாணவனைப் பற்றிய தகவலைச் சொல்லுங்கள் லைவில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அழுகை வந்தாலும் பரவாயில்லை பேசுங்கள் அதுவே முக்கியம் என்கிறாள். மறுமுனையில் சாப்பாட்டிற்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்திருந்த ஸாங் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து அங்கேயே உணவுக் பிரச்சனையை முடித்துக் கொள்கிறான். அக்கடையின் முதலாளி வ்யீயை டீவியில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொகுப்பாளினி கேட்கக் கேட்க கண்ணீர் மல்க ஸாங்கின் விபரங்களைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் வ்யீ. இரக்கமுள்ள அப்பெண் ஸாங்கை அழைத்து உன்னைப் பற்றியா சொல்கிறார்கள் கவனித்துச் சொல் என்கிறாள். டீவியில் தன் டீச்சரைப் பார்த்து திகைத்த பின் அழுகை மேலிட தலையாட்டுகிறான் அச்சிறுவன். ’ஸாங் – எங்கே இருந்தாலும் வந்துவிடு...நீயில்லாமல் என்னால் திரும்பிப் போகமுடியாது....பள்ளியில் ஒருவர் குறைந்தாலும் என்னால் தாங்க முடியாது. மாஸ்டருக்குக் கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும், உன் அம்மாவும் உன்னைத் தேடுவார்கள், உன்னை நானும் மிகவும் தேடுகிறேன் எனக் கண்ணீர் வழிய வழிய அதைத் துடைக்கக் கூட மனமில்லாமல் அழுகையுடன் சொல்லி முடிக்கிறாள் வ்யூ.

அதன்பின் நடக்கும் விதயங்கள் யாவும் மகிழ்ச்சிகரமானதே. ஸாங் தொலைக்காட்சி நிலையத்தில் ஒப்படைக்கப்படுகிறான். நிலைய இயக்குநர் ஒரு ஜீப்பில் தன் பரிவாரங்களுடன் இளைய டீச்சரையும் கைவிடப்பட்ட மாணவனையும் அனுப்புகிறார். ஜீப்பில் சிறுவன் ஸாங்கிடம் நேர்முகம் எடுக்கப்பட்டபோது அவன் நெகிழ்வாய் தன் டீச்சருக்கு நன்றி சொல்கிறான், அவனால் மறக்க முடியாதது வீதியில் பிச்சை எடுத்தது என வருத்தமாய் சொல்கிறான் வளர்ந்து பெரியவனாகியதும் நிச்சியம் மற்றவர்களுக்கு உதவுவேன் என்றும் சொல்கிறான். கிராமத்தை அடைந்த அவர்கள், அப்பள்ளியின் நிலையை படம்பிடிக்கிறார்கள். தொலைக்காட்சி கேமரா மூலம் இதைப் பார்த்த நகரத்துவாசிகள் பள்ளிக்கு நன்கொடையாக நிறைய பணம் அனுப்புகிறார்கள். மிங்கும் அதற்குள் வந்து சேர்ந்துவிடவே தான் வாக்களித்தபடி ‘ஒருவரும் குறையாமல்’ வகுப்பு நிறைந்த மாணவர்களோடு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் வ்யீ. பெட்டி பெட்டியாக பரிசாய் கிடைத்த வண்ண வண்ண சாக்பீஸ்களை எல்லோருக்கும் கொடுத்து அவரவர் மனதில் நினைப்பதை கரும்பலகையில் எழுதச் சொல்கிறாள் வ்யீ. ஒவ்வொருவரும் ஒரு எழுத்தை எழுதுகிறார்கள். வரைப்படம் போலிருக்கும் சீன எழுத்தில் தங்கள் பெயர்களையும் செய்துகொண்டிருக்கும் பணியையும் எழுதும் காட்சியுடன் படம் நிறைவடைகிறது.


சீன கிராமத்தின் கல்வி நிலைமையை இதைவிட அற்புதமாய் படம் பிடித்திருக்க முடியாது. கொஞ்சம் தவறினாலும் டாக்குமெண்டரி படம் போலாகிவிடும் அபாயம் அதிகமாய் இருக்கும் இத்திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்டும் அரசாங்கத்தால் கண்டனத்துக்கு உட்பட்டும் உருவாகியிருக்கிறது. 2000-ம் ஆண்டு ’வெனிஸ் ப்லிம் பெஸ்டிவலில்’ சிறந்த படத்திற்கான கோல்டன் லயன் அவார்ட் மற்றும் ’கோல்டன் ரூஸ்டரில்’ சிறந்த இயக்குனருக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றிருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் தொழில் சார்ந்த நடிகர்கள் என்று யாரும் கிடையாது. இயக்குநர் ஸாங் யூமொவ் (Zhang Yimou) கதைக்கேற்ற நடிகர்களை நிஜவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளார். சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கேள்வியை படைப்பாளி தன் அற்புதமான படைப்பின் மூலமாகத்தான் கேட்க முடியும். சீன அரசாங்கத்தை மறைமுகமாக சாடியிருக்கும் இயக்குனர் தங்கள் நாட்டு குழந்தைகள் ஒருவர் விடாமல் அத்தனை பேருக்கும் கல்வியறிவு கிடைக்கும் ஆசையிலேயே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.


சீனாவின் முக்கிய இயக்குநர்களின் ஒருவரான ஸாங் யீமொவ் இயக்கியிருக்கும் மற்ற திரைப்படங்களும் உலகப புகழ் பெற்றவை. The Road Home, Raise the Red Lantern, To Live, Red Sorghum, Happy Times, House of Flying Daggers, Hero போன்றவை முக்கியமானவை.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தும் படிக்க ஏலாமல் இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கி தங்கள் கனவுகளை இழந்துகொண்டிருக்கும் எத்தனை எத்தனை சிறுவர் சிறுமிகளை நாம் அன்றாடம் வீதியில் பார்க்கிறோம். நம்மில் எத்தனை பேர் அவர்களுக்காக யோசித்திருக்கிறோம்? இத்தகையோரின் மீது அக்கறைக்காட்டும் சில தொண்டு நிறுவனங்களை கேள்விக்கு உட்படுத்தாமல் உதவிகள் செய்திருக்கிறோமா? தெருவெங்கிலும் திரிந்து கொண்டிருக்கும் அக்குழந்தைகளை அடையாளம் கண்டுபிடித்து நாம் செய்யத் தகுந்த சிறு உதவியும் அவர்களின் மொத்த வாழ்க்கையையே புரட்டிப் போடுமெனில் அதைச் செய்வது எல்லோருடைய கடமை அல்லவா?

சில திரைப்படங்கள் உற்சாகம் மேலிட கண்டு களிக்க, , சில அழகியலில் திளைத்து ஆழ்ந்து ரசிக்க, வெகு சில படங்களே நம் ஆத்மாவிற்கானது. சில கேள்விகளை அது எழுப்பும்போது மெளனமாக கடந்துவிடாமல் மனசாட்சிக்குப் பதில் சொன்னாலே போதும். ஆக நாம் அனைவரும் நல்லவர்களே!!!!


ல் நடித்தவர்கள்:
பெயர் ----- ரோல் ----- நிஜ வாழ்க்கையில்
வ்யீ மின்சி ----- டீச்சர் வ்யீ ----- பள்ளி மாணவி
சாங் ----- குறும்புக்கார ----- மாணவன் பள்ளி மாணவன்
டியன் மேயர் ----- டியன் ----- மேயர் (யாங்க்விங்)
கோவோ ----- டீச்சர் ----- கோவோ கிராமத்து டீச்சர்
ஸன் ----- வ்யீவியுடன் ஸாங்கை தேட உதவியவள்----- பள்ளி மாணவி
பெங் ----- ரிசப்ஷனிஸ்ட் டிக்கெட் ----- க்ளர்க்
வூ வான்லூ டிவி ----- ஸ்டேஷன் மாஸ்டர் டெபுடி ----- மேனேஜர்

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS