Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

முருகபூபதியின் “மிருக விதூஷகம்” -பார்த்திபராஜா

தமிழ் நவீன நாடகத்தின் மிக முக்கியமான அசைவியக்கம் முருகபூபதி. புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் (அப்போது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி) பயின்ற காலத்திலிருந்தே அவருடைய நாடகப்பனுவல்களும் நாடக நிகழ்த்துமுறைகளும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிலங்குகின்றன.

வனத்தாதி, கூந்தல் நகரம், குற்றம் பற்றிய உடல் என்ற நாடகங்களைத் தொடர்ந்து முருகபூபதியின் அண்மைக்கால நாடகம் “மிருக விதூஷகம்”. விதூஷகம் என்பதன் பொருள் கோமாளித்தனம் என்பதாகும். விதூஷகன் வடமொழி நாடகங்களில் நகைச்சுவை அளிக்க வரும் கோமாளிப் பாத்திரத்தைக் குறிப்பது. விலங்குகளின் கோமாளித்தனம் எனும் பொருளில் நாடகத்தின் தலைப்பு இருப்பினும் நாடகம் கோமாளித்தனத்தைப் பற்றியதல்ல. நாடகத்தில் கோமாளியும் கோமாளித்தனமும் ஒரு அங்கமாக வருகிறதேயன்றி, முதன்மை பெறவில்லை. விலங்குகளின் உடலசைவும் இயக்கமும் பண்புகளும் நாடகம் எங்கும் வியாபித்திருக்கிறது.

மிருக விதூஷகம் நாடகம் அண்மையில் மதுரை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏராளமான பார்வையாளர்களுக்கிடையே இந்நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. திறந்தவெளியில் மண்தரையில் மரங்கள் சூழ்ந்த வெளியில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் உணர்வுப்பூர்வமான ஒன்றிப்பையும் பார்வையாளர்களுடனான நெருக்கத்தையும் சாத்தியமாக்கியிருக்கிறது. முருகபூபதியின் நாடகங்களில் நிகழ்த்துவெளியும் ஒரு பாத்திரமாக ஆகிவருவதை அவருடைய அண்மைக்கால நாடகங்களில் காணமுடிகிறது. விளாத்திகுளத்திற்கு அருகாமையிலுள்ள தேரிக்காடு, முருகபூபதியின் அண்மைக்கால நாடகங்கள் நிகழ்த்தப்படும் இடமாக இருந்தது. அந்த நிலத்தின் பண்புகளும் இயல்புகளும் சுவறிய நடிகர்களாகத் தங்களின் நடிகர்கள் உருமாற்றம் அடைகிறார்கள் என்பது முருகபூபதியின் கருத்தாகும். மிருக விதூஷகம் நாடகத்தின் நிகழிடங்களும் நாடகத்தின் இயல்புக்குப் பொருந்துவனவாக அமைந்தன.

முருகபூபதியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியானவை அல்ல; ஒருவகையில் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்றும் ஒன்றை எடறுத்துச் செல்லுவது மற்றொன்றுமாக அமைகின்றன. எனவே ஒரே விதமான காட்சிப் படிமங்கள் அவருடைய வெவ்வேறு நாடகங்களில் இடம்பெறுவதை நாம் காணமுடியும். உதாரணமாக உயிரை அசைக்கும் மயிர்க்கால்களில் வேதனையைப் படரச்செய்யும் பிரசவ வேதனையும் அதனையொட்டிய குழந்தைப் பிறப்பும் அவருடைய முந்தைய நாடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பிரசவிக்கப்படும் குழந்தை வேறுவேறானதாக இருக்கலாம். ஆனால் பிரசவத்திற்கான அத்தவிப்பும் நெகிழ்ச்சியும் அவருடைய சில நாடகங்களில் இடம்பெற்றே வந்திருக்கின்றன.

அதைப்போலவே அவருடைய நாடகங்களில் சில காட்சிப்படிமங்கள் சிற்சில மாற்றங்களுடன் புதிய பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவை குறிப்பிட்ட அந்தந்த நாடகங்களுக்குத் தனியான வலுவை எட்டப் பயன்பட்டேயிருக்கின்றன.

மிருகவிதூஷகம் நாடகத்தில் பயன்படுத்தப்படும் அரங்கப் பொருட்களும் முகமூடிகளும் சில உடல் அசைவுகளும் வெளிப்பாட்டு முறைமைகளும் ஏற்கனவே அவருடைய நாடகங்களில் இடம்பெற்றவையாக இருப்பினும் இந்நாடகத்தைப் பொறுத்தவரை புதிய அர்த்தங்களைக் கற்பிப்பதற்குத் துணைசெய்யும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

மிருக விதூஷகம் நாடகம் முருகபூபதியின் மற்ற நாடகங்களிலிருந்து தனித்த தன்மைகளைக் கொண்டுள்ள நாடகம் என்று உறுதிபடக் கூறலாம். ஏனெனில் அது பார்வையாளனுடன் கொள்ளத்துடிக்கும் உணர்வுப்பூர்வமான தொடர்பாடலைப் பற்றி (கம்யுனிகேஷன்)ய அக்கறை கொண்டிருக்கிறது. நாடகத்தின் அமைப்பொழுங்கில் ஒரு சீரான தன்மையை மிருக விதூஷகம் கொண்டிருக்கிறது. இது முருகபூபதியின் முந்தைய நாடங்களில் தவிர்க்கப்பட்ட விடயம் ஆகும்.

மிருக விதூஷகம் நாடகம் பல்வேறு பிரச்சினைப்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. தொல்குடியினரின் பிரச்சினைகள், விவசாயக்குடியினரின் பிரச்சினைகள், உழத்தமிழரின் பிரச்சினைகள் என்று உலகமெங்கும் விரிந்து பரந்து கிடக்கும் மக்களின் வலிகளை, வேதனைகளைக் குறித்து நாடகம் பேசுகிறது. எனவே துண்டு துண்டான விடயங்களைக் குறித்த ஒட்டுமொத்த சிந்தனைகளை வெளிப்படுத்தும்போதும் அதன் உள்ளமைப்பொழுங்கு சிதையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் முருகபூபதி.

நாடகத்தில் வலியும் வேதனையும் மிக்க அத்தனை விடயங்களையும் பேசியாக வேண்டும் என்ற முனைப்போடு பேசும்போது அது நாடகத்தின் கட்டுக்கோப்பைக் குலைப்பதாகிவிடுகிறது. தனித்தனிச் சட்டகங்களாகச் சிறப்புற்றிருக்கும் நாடகம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது நாடகம் அல்லது நிகழ்வு என்ற பொதுச்சட்டகத்தைமீறித் துருத்திக் கொண்டு நிற்பது புலனாகிறது.

ஒட்டுமொத்த உலகின் அத்தனை துயரங்களையும் வஞ்சிக்கப்பட்டோரின் நெருக்கடிகளையும் கண்ணீரையும் முழுவதுமாக ஒரே நாடகத்தில் பேசிவிட நினைப்பது அல்லது அவ்வாறு முழுவதும் பேச முயலுவது முற்றிலும் நிகழ்வது நாடகம் என்ற புரிதலிலிருந்து விலகிச் செல்வதாகும்; சாராம்சத்தில் பார்வையாளனைப் புறந்தள்ளுவதாகும்.

மிருக விதூஷகம் நாடகத்தில் வசனங்கள் பொதிந்த காட்சிகள் தரும் உணர்வு ஒன்றிப்பு, புரிதல், நெருக்கம் ஆகியவற்றைச் சில வசனங்களற்ற காட்சிகள் கூடுதலாகத் தருகின்றன என்பது பாராட்டிற்குரிய அம்சமாகும். நாடகத்தின் நெறியாளுனர் வெற்றி பெற்ற இடங்கள் என அவற்றைச் சொல்லலாம். உதாரணமாக நாய்கள் கூடித் தங்களை மிரட்டும் சிங்கத்தை அழித்தொழிக்கும் காட்சி. இக்காட்சி மிக முக்கியமான சமகால அரசியல் பிரச்சனைப்பாட்டை முன்வைத்து அதில் கற்பனா ரீதியான மனவிருப்பத்தை நிகழ்வாக்கிக் காட்டுகிறது.

அதைப்போலவே பீறிட்டு வரும் உணர்வுகளை உணர்வெழுச்சியுடன் ஒருவன் பகிர்ந்து கொள்ள முயலும்போது, அவனுடைய வாயினைப் பொத்தி… “டேய் வேண்டாம்டா… வேண்டாம்டா…” என்று கெஞ்சும் சேக்காளிகளை மீறி உதடுகள் துடிக்க வேறு வேறு நபர்கள் பகிர்ந்துகொள்ளும் காட்சியும் சிறப்பானதே.

அலைபேசிகளோடு வரும் நடிகர்கள், தங்கள் இணைப்பில் வரும் ஒருவருடன் உரக்கப்பேச, நடிகர்களின் குரல் முன்னும் பின்னுமாய் சிக்கி ஒரு புது அழகு பெறுகிறது. கூட்டத்தின் குரல்களிலிருந்து ஒவ்வொன்றாய் இழை பிரித்து அழகாக வெளிப்படும் வகையில் அமைத்திருக்கிறார் நெறியாளுனர் முருகபூபதி. இந்த மண்ணின் அடையாளங்கள் புராஜெக்ட் ஏஜென்ட்களால் காட்டிக்கொடுக்கப்படுவதும் நாட்டார் கலைகள் விலைபேசப்படுவதும் உண்மையான நாட்டார் நிகழ்த்துக்கலைஞன் நிகழ்ச்சி வாய்ப்பின்றித் தவிப்பதும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இக்காட்சியில்.

விதூஷகர்கள் மகிழ்ச்சியை விதைப்பவர்கள்; ஆனால் இந்நாடகம் விதூஷகர்களைக் கொண்டு கண்ணீர் பற்றிப் பேசுகிறது. அதனாலேயே இது பேசுபொருளிலும் காட்சி முறையிலும் தனித்தன்மை கொண்டிருக்கிறது.

தமிழ் நவீன நாடக உலகில் முருகபூபதிக்கென்று தனித்த இடம் உண்டு; முருகபூபதியின் நாடகங்களிலேயே அவருடைய இந்த மிருக விதூஷகத்திற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. முருகபூபதியின் நாடகத்தை உள்வாங்குவது, புரிந்துகொள்வது என்பதில் இந்நாடகம் மிக முக்கியமான திருப்பத்தைச் செய்திருக்கிறது. அதுவே இந்நாடகத்தின் மிக முக்கியமான வெற்றியுமாகிறது.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS