மாந்தரின் பண்புகள் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 05:52
- Written by editor
சமீபத்தில் எனக்கு பழக்கமான என்னை விட இருபது வயது இளையவர்கள் இராமகிருஷ்னனும், ராஜனும். ஒரு நாள் இராமகிருஷ்னனுடன் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கிற ராஜனின் பெற்றோரைப் பார்க்க ராஜனுடைய வீட்டிற்கு காரில் நானும் உடன் செல்கிறேன்.
இராணிப்பேட்டையில் இருக்கிற அவர் வீட்டிற்குச் சென்று அவர்களுடைய வீட்டின் முன் அறையில் அமர்ந்திருக்கிறோம். ராஜனுடைய தந்தை எனக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். அவருடைய தாயார் எங்களுக்குச் சிற்றுண்டி பரிமாறுகிறார். உள் அறையிலிருந்து கூனிய உடம்புடன் 85 வயது தாண்டிய பாட்டி வருகிறார். நாங்கள் அறிமுகப்படுத்தப் படுகிறோம். அவர் எங்களை வணங்குகிறார். நாங்கள் எழுந்து வணங்குகிறேம். கண்களை மூடி அவர் வணங்கிய முறையில், எதிர்வருகிற மனிதரை வணங்குவதிலும், தான் விரும்புகிற கடவுளை வணங்குவதிலும் பெரிய வித்தியாசம் இல்லாத நிலையைக் கண்டேன். கண் கலங்கிச் சிலிர்த்து வணங்கி வெகுநேரம் நின்றேன். ராஜனின் தந்தையார் என்னிடம், ”என் தாயார், என் தந்தை மறைந்தபின் சிறிது தளர்ந்துவிட்டார்” என்று பாட்டி போன பின் சொன்னார்.
முதலில் சொன்ன பழைய நன்பனின் தாயையும் விட கடினப்பாதயில் உழைத்துச் சிறந்த வழி ராஜனின் பாட்டி வழி என்று எனக்குத் தெரிந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான், ரவி இளங்கோ, சாரங்கன், கோணங்கி ஆகிய நால்வரும், ஒரு மாற்றத்திற்காக ஓய்வாக ராமேஸ்வரம் சென்றோம். புகைப்படங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பதே எனக்கும், சாரங்கனுக்கும் பிடித்தமானது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கோவில் என்று சுற்றிவிட்டு கோவிலுக்கு எதிரில் கடற்கரையை ஒட்டி உள்ள அரசினர் தங்கும் விடுதியில் தங்கி ஒரு நாள் மாலை, அதன் அருகில் உள்ள சாலையில் எல்லோரும் நடந்து வரும் போது ஒரு பாட்டி பனங்கிழங்கு விற்பதைக் கண்டு வாங்க நான் முற்பட்டேன். எழுபது வயதைக் கடந்திருந்த அந்தப் பாட்டியிடம் நான்கு கிழங்கு வாங்கிக் கொண்டு இருபது ரூபாயைக் கொடுத்தேன். அந்த பாட்டி சில்லரை தர முயற்ச்சித்து அதன் பையை எடுத்து செயல்படுகிற தாமததிற்க்கு “பரவாயில்லை பாட்டி இருக்கட்டும்” என்று புறப்பட முயற்சித்த என்னை அதட்டலாக "இந்தா, இரு இரு! மிச்சத்தை வாங்கிட்டு போ, இந்த பாவத்தை நான் எங்க போயி கழுவுறது” என்று சொன்னதும் நான் அதிர்ந்து விட்டேன்.
அந்த பாட்டி, ஒன்று. வீட்டில் சும்மா இருக்க முடியாமல் இவ்வியாபரம் செய்ய வேண்டும், அல்லது இதன் மூலமே வயிற்றைக் கழுவ வேண்டும். அல்லது யாராவது விற்று வரச் சொல்லியிருக்க வேண்டும். எது எப்படியாகிலும் பலர் இந்தியா முழுவதும் இருந்து வந்து பாவத்தை கழுவிக் கொண்டிருக்கிற இடத்தின் மிக அருகிலேயே அதுவும் பத்தடி தூரத்திலேயே இப்படி ஒரு பாட்டி சொன்னதும் மீதம் பணம் எட்டு ரூபாயை வேண்டாம் எடுத்து செல் என்று கூறுகிற அப்பாட்டியின் வேகத்தையும் இன்றும் நான் சொல்லிவருகிற கதை. அதிர்ச்சியிலிருந்து மீண்டவுடன் நடக்கும் போதே திரும்பி எடுத்த படம்தான் இப்பாட்டி படம்.
பண்பற்றவர்கள், குறுக்கு வழிப்பணம் நோக்கி நடக்கிறவர்கள் இந்தப் பாட்டியோடு சமகாலத்தில் வாழ்கிறார்கள் தான்.






