தீக்சா பூமி - கோசின்ரா
- Details
- Published on Sunday, 16 October 2011 15:42
- Written by Super User
தனித்துவிடப்பட்ட ஒரு மழைத்துளி விண்ணிலிருந்து நிலத்தில் விழுகிறது. அது அடையாளமற்றுப் போகிறது. மீண்டும் ஒரு மழைத்துளி வருகிறது. மறைந்து விடுகிறது. பின்னர் மீண்டும் மீண்டும் வரும் மழைத்துளிகள் மறையாமல் பல்கிப் பெருகி ஒரு மரத்தின் சிறு கிளையென ஓடி ஒரு நதியை சந்திக்கிறது.
அதனோடு கலந்து தன் பயணத்தில் மாபெரும் நீர் சமுத்திரத்தைக் கண்டடைந்து அதில் கலந்திடும் போது அது புரிந்து கொள்கிறது. தான் சமுத்திரத்தின் அங்கமென்று உணர்கிறது. பெருத்த அலைகளும் ஆரவாரங்களும் புதிய எழுச்சியைப் போல கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்த்துளிகளின் சங்கமம். அதிலிருந்து ஒரு துளியை எடுத்துவிட்டாலும் அது தன்னைக் கடலாகப் பாவிக்கிறது. கடல்தான் என்று உணர்ந்து கொள்கிறது. எப்போதும் தான் மாபெரும் சமுத்திரத்தின் பங்களிப்பாளன் என்றும் தனக்குப் பின்னால் இத்தனை பெரிய படை இருக்கிறதென உலகுக்குச்சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த உணர்வைத்தான் ஒவ்வொரு தலித்தும் தீக்சா பூமியைப் பார்க்கும் போது உணர்கிறான். தீக்சா பூமி தன்னை நோக்கி வருகிறவர்களுடன் மௌனமாக உரையாடுகிறது. அவனுக்குள் நம்பிக்கையைத் தருகிறது. அவன் தனிமரமல்ல மாபெரும் ஐனத்திரள்களில் ஒருவன் என அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவனுக்குமட்டுமல்ல அவனைப் போலிருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதியென சொல்லிக் கொடுக்கிறது.
தீக்சா பூமி மற்றவர்களுக்கு வேண்டுமானால் சுற்றுலாத் தளமாக இருக்கலாம். ஆனால் மதம் மாறிய தலித் மக்களுக்கு அது கண்ணாடியாக இருக்கிறது.
தீக்சா பூமி ஒரு நினைவுக் சின்னம்தான். புரட்சியாளர் டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்களின் மதமாற்றப் புரட்சியை நினைவூட்டும் இடம். இன்றைக்கும் அது இதுவரை உலகில் நடந்த மாபெரும் மதமாற்றம் நிகழ்வில் முதலாவது எனப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் தான் ஏறத்தாழ 54 வருடங்களுக்கு முன்பு 1956 அக்டோபர் மாதம் 14-ம் தேதியில் அதாவது அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்குத் தன்னைத் தீண்டத்தகாதவன் என்று எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருந்த இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்திற்குள் சென்றார்.
நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என்று 1935-ல் சொன்னதைச் செய்துகாட்டினார் அம்பேத்கார்.
அம்பேத்கார் மதம் மாறவேண்டுமென்று முடிவெடுத்தவுடன் அவர் நாக்பூரைத் தான் தேர்வு செய்தார். ஏன் நாக்பூரைத் தேர்ந்தெடுத்தேன் என்றும் காரணங்களை அவரே சொல்கிறார்.
புத்த மதத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது இந்தியாவில் பரவுவதற்கு யாராவது ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் காரணமெனில் அது நாகர் இனத்து மக்களாகத்தான் இருந்திருக்க முடியும் என்கிறார். அந்த நாகர்கள் ஆரியர்களால் பெரிதும் துன்பப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவர்களுக்கிடையே சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததாகப் புராணங்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். புராணக் கதைப்படி அகத்திய முனிவர் ஒரு நாகர் இனத்து மனிதனை ஆரியர்களிடமிருந்து தப்பிக்க வழிவகை செய்ததாகவும் தப்பிச்சென்ற அந்த மனிதனின் வாரிசுகள்தான் நாம் என்றும் சொல்கிறார். அப்படி நாகர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்க தலைவர்கள் தேவைப் பட்டனர். அந்தக் காலத்தில் அவர்கள் கண்டடைந்த மாபெரும் தலைவர்தான் கவுதம புத்தர் என்றும் அந்த புத்தரின் தத்துவங்களை கோட்டுபாடுகளை இந்தியா முழுக்கப் பரவ நாகர்களே காரண மென்றும் அப்படிப் பட்ட நாகர்கள் அதிகமாக இருந்த ஊரே நாக்பூர் என்றும் சொல்கிறார். நாக் நதி என்கிற ஆறு இந்தப்பகுதியில் ஓடிக்கொண்டிருப்பது. இந்தப் பகுதியில் வாழ்ந்த நாகர்களின் பெயரில் தான் என்றும் அதற்காகத்தான் இந்த நாக்பூரைத் தேர்ந்தெடுத்ததாகவும் காரணம் சொல்கிறார்.
மனிதனுக்காத்தான் மதமே தவிர மதத்திற்காக மனிதன் இல்லை என்று உறுதியாகச் சொல்லும் புரட்சியளார அம்பேத்கார் மதமாற்றம் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்கிறார். தன் இனத்து மக்களைப் பார்த்துச் சொல்கிறார்...
“வலிமை பெறுவதற்கு மதம் மாறு. அமைப்பாகச் செயல்பட மதம் மாறு . சமத்துவப் பாதுகாப்பிற்காக மதம் மாறு. சுதந்திரத்தைப் பெறுவதற்கு மதம் மாறு. வாழ்க்கை சந்தோசமாக இருக்க மதம் மாறு.”
மதமாற்றம் என்பது உன்மையில் மனமாற்றம்தான். வெறுமனே கடவுளை மாற்றிக் கொள்வதோ பிரார்த்தனைகளை மாற்றிக் கொள்வதோ அல்ல.
ஒரு தலித் மதம் மாறிவிடுவதால் அவன் மீதான பார்வையை சமுகம் மாற்றிக் கொள்கிறதா? அது உடனடியாக நிகழக் கூடியதா? அப்படி மதம் மாற்றிக் கொண்டவனின் மீதான பார்வையை உயர் சாதி இந்துக்கள் மாற்றிக் கொள்ளவில்லையெனில் இந்த மதமாற்றம் எப்படி வெற்றி என்று புரிந்து கொள்ளப்படும்.
அம்பேத்கார் சொல்கிறார்... மதமாற்றத்தில் இரண்டு கூறுகளிருக்கின்றன. ஒன்று... ஒரு சமுகத் தளத்திலிருந்து இன்னொரு சமூகத் தளத்திற்குச் செல்லுதல். மற்றொன்று... ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்குச் செல்லுதல். இதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் மீது நிகழ்த்தப்படும் அநீதிகள் கொடுமைகளைத் திரும்பிப் பார்த்தோமானால் ஏன் இதெல்லாம் நிகழ்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையான மூலாதாரக் காரணம் எதுவாக இருக்க முடியுமெனப் புரிந்து கொண்டால் இந்த மதமாற்றம் ஏன் என்று புரிந்துவிடும் என்கிறார்.
தீக்சா பூமியைப் பார்க்கிறவர்கள் தன் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கிறான். அது அவனைப் பார்க்குபடித் தூண்டுகிறது. தீக்சா பூமிக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தன் சொந்த நிலத்தில் காலடி வைப்பதைப் போல உணர்கிறான். அவன் இந்து மதத்திலிருந்தபோது அத்தகைய உணர்வைப் பொற்றதில்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பௌத்த மதத்திற்கு மாறிக் கொண்டவர் சொல்கிறார்... தான் மீண்டும் புதிதாகப் பிறந்திருப்பதாக. இந்து மதத்திலிருந்து வந்த பிறகு புதுவிதமான அடையாளத்தைக் காண்டதாக. அவருடைய கிராமத்தின் கோவில் பூசாரி சொன்னாராம்... இந்தப் பிறவியில் ஒரு நல்ல தலித்தாக வாழ்ந்து காட்டினால் அடுத்த பிறவியல் இன்னொரு நல்ல சாதியில் பிறக்கலாமென்று. நான் ஏன் அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டுமெனக் கேள்வி கேட்கிறார்.
மதமாற்றம் பழைய தாழ்வு மனப்பான்மையை உரித்தெடுக்கிறது. புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறது மதம் மாறுவதால் அவனுடைய பொருளாதாரம் உயர்ந்து விடவில்லை. அவனுடைய கூரைவீடு பொன்னாலாகவில்லை. ஆனாலும் அவன் உணர்கிறான்... ஒரு மதத்தின் கீழ்த்தட்டில் வைத்து அவமானப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து மீண்டெழுந்ததாக. ஒவ்வொரு தலித்தும் மதம் மாறிய பிறகு இதைத்தான் உணர்கிறான். சமுக இழிவிலிருந்து தன்னை சுலபமாக விடுவித்துக் கொள்கிறான். இந்த உலகத்தை எந்தவிதக் குற்றவுணர்ச்சியின்றிப் பார்க்கிறான்.
இங்கே இன்னொரு சம்பவத்தை நினைவு கூறுவது சரியென்று கருதுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் மெகம் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. 5 தலித்துகள் உயிரோடு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு சாதி இந்துக்கள் சொன்ன காரணம்... தாங்கள் தெய்வமாகக் கருதும் பசுவின் தோலை உரித்தார்களென்பது. அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊர்ப் பெரியவர்களும் பெண்களும் குழந்தைகளும் எல்லோரும் கூடி முடிவு செய்தனர்... இனி இந்துக் கடவுளை வணங்கப் போவதில்லையென. இந்து மதச் சடங்குகளைச் செய்யப் போவதில்லை. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடப்போவதில்லை என அவர்கள் கோபமாகச் சொன்னார்கள். நீங்கள் எங்களைவிடப் பசுக்களைத்தான் உயர்ந்ததாகக் கருதுகிறீர்கள். நாங்கள் ஜனாதிபதியாக வந்தாலும் உங்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்யக்கூடிய ஒரு கீழ் சாதிக் காரனாகத்தான் எங்களைப் பார்க்கிறீர்கள். சாதியை மறக்க மாட்டீர்கள் என வெம்பி வெகுண்டெழுந்து உங்கள் மதத்தையும் பசுக்களையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் வெளியே செல்கிறோம் என்று இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்திற்குச் சென்றார்கள்.
இது தான் அம்பேத்கார் எதிர்பார்த்த சமுகமாற்றம். உளவியல் நீதியான மனமாற்றம். அப்படி மதம் மாறியவர்கள் சிறுகூட்டமல்ல. மாபெரும் சமூகத்தின் சங்கமம் என்பதைத்தான் இந்த தீக்சா பூமியன் நான்கு புறமுள்ள ஸ்தூபிகள் வருகிறவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட தீக்சா பூமியை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஹியோ தன் மால் ( sheo Danmal ) அவர்கள். இந்த தீக்சா பூமி 1978-ல் கட்ட தொடங்கப்பட்டது என்றாலும் டிசம்பர் 2001-ல் தான் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தி பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. இதைத் திறந்துவைத்தவர் அன்றைய குடியரசுத் தலைவர். கே. ஆர். நாராயணனன் அவர்கள்.
இந்த ஸ்தூபி உலகப் புகழ் பெற்ற காஞ்சி ஸ்தூபிகளைப் போன்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது. உள்ளீடற்ற மிகப் பெரிய இந்த ஸ்தூபி உலகத்திலுள்ள புத்த ஸ்தூபிகளில் மிகப் பெரியது. தரைத்தளத்தில் நடுவில் புத்தர் சிலை வைக்கப் பட்டிருக்கிறது. முதல் மாடியில் பெரிய ஹாலுக்கு மேலே பெரிய மாடம் இருக்கிறது.
இது சிறந்த சுற்றுலாத்தளமாக இருந்தாலும் அதைவெறும் கட்டிடமாகப் பார்க்கிறவர்களுக்கு அது எந்த செய்தியையும் வழங்குவதில்லை. வள்ளுவர் கோட்டத்தைக் கட்டிடமாகப் பார்க்கிறவர்கள் பெருமையடைய மாட்டார்கள். வள்ளுவனின் குறளோடும் தமிழின் நீண்டகால பாரம்பரியத்தோடும் பார்ப்பவர்களுக்கு அது பெருமையளிக்கக் கூடிய செய்தி.
மதம் மாறியவர்கள் ஒவ்வாரு வருடமும் அக்டோபர் 14-ம் தேதி மற்றும் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாள் நினைவு நாட்களில் தீக்சா பூமிக்கு வருகிறார்கள். மதம் மாறியவர்கள் தன் மேல் வழிகிற எல்லாவித இழிவுகளையும் ஒரு ஆடையைப் போல கழற்றி எறிந்துவிடுவதில்லை. மாறாக மனதின் அடியாழத்திலிருக்கும் இழிவின் வேர்களையும் அதன் குறியீடுகளையும் பிம்பங்களையும் ஒரு மரத்தைப் பிடுங்கியெறிவதைப் போல எறிகிறார்கள்.
மதம் மாறிய சத்பீர் புத் சொல்கிறார் முன்பெல்லாம் நான் சாமார் (chammar) என்று இழிவாக அழைக்கப்பட்டேன். இப்பொழுது நான் பௌத்தன். என் கிராமத்துக் கோவிலுக்குள் நுழைய அமைதி கிடையாது. ஆனால் தீக்சா பூமிக்கு ஒவ்வொரு வருடமும் வருகிறேன் என்கிறார். எனக்கென்று எதுவுமில்லாமல் வாழ்க்கை என்னை வெளியே துரத்திக் கொண்டிருந்தது. இப்பொழுது வசப்பட்டிருக்கிறது. நான் இந்த நிகழ்காலத்தின் பிரதிநிதியாக இருக்கிறேன் என்கிறார். இந்த உத்வேகத்தைத் தரும் வேலையைத்தான் தீக்சா பூமி கச்சிதமாகச் செய்கிறது.
ஆனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவதும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும் ஒரு மதமாற்றத்தின் உடனடிப் பலனாக இருக்கிறது. ஆனால் அது பிற உயர்சாதியின் பார்வையை மாற்றி இருக்கிறதாவென்றால் ஆம் இல்லையென்று இருவிதமான பதில்களைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது .
ஒரு பேராசிரியர் சொல்கிறபோது மதம்மாறிய பின்னும் தன்னை தலித்தாக பார்க்கும் பார்வையில் எந்த மாற்றமும் இல்லையென்றும் ஆனால் தன் குழந்தைகள் பௌத்தர்களாகப் பார்க்கப்படுவதாகவும் மதமாற்றத்தின் பலனை தன் குழந்தைகள் அனுபவிப்பதாகவும் சொல்கிறார்.
சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்? வெறுமனே தலித் போராட்டமும் மதமாற்றமும் உயர் சாதி இந்துக்களின் பார்வையை மாற்றிவிடுமா? அதற்கு விடையளிக்கிறார் இந்திய அமைதி மையத்தின் பொறுப்பாளர் திரு.ஜான் செல்லதுரை அவர்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்துபோது தலித்துகள் யாரோவிலிருந்து நாமும்தான் என்கிற இருப்பை அடைய இந்த மதமாற்றம் உதவத்தான் செய்கிறது (from no body to some body ) என்கிறார்.
சமூக அரசியல் பொருளாதார வெளிகளுக்காகப் போராடுகிற தலித்துகள் எல்லாப் போராட்டங்களுக்கும் உக்கிரமானப் போராட்ட உத்திகளைக் கையாளுவதாகச் சொல்கிறார். ஏற்கனவே அரசியல் பொருளாதார வெளிகளை அடைந்துவிட்ட மத்தியதர தலித் மக்கள் மீண்டும் உக்கிரமான போராட்டத்தை முன்னெடுக்க்க் கூடாது என்கிறார். அவர்கள் கையாளுகிற உத்திகள் (privillaged to performance ) privillaged என்கிற தளத்திலிருந்து performance என்கிற தளத்தை அடைய வேண்டுமென்கிறார். பொதுச் சமூகத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்குமாறு அறிவுசார்ந்த தளங்களில் மற்றவர்களை விட முன்னுதாரணமாகத் திகழ்வதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். எல்லா துறைகளிலும் ஏற்கனவே பொருளாதார வெளியை அடைந்தவர்கள் வருங்கால சந்ததிகளை எல்லாத் துறைகளிலும் முதலிடத்திற்குக் கொண்டுவருலிதற்கான களங்களையும் அதற்கான உத்திகளையும் வகுக்கு வேண்டும் என்று சொல்கிறார்.
மேலும் எல்லா சாதியிலுமிருக்கிற சாதி மறுப்பு சிந்தனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களோடு இணைந்து சாதி இழிவை உளவியல் ரீதியாக மாற்றுவதற்கான உத்திகளை ஒரு intellectual forum ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.
தலித் மேம்பாட்டுக்காகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதாகச் சொல்லும் திரு ஜான் அவர்கள் தீக்சா பூமி வெவ்வேறு திசைகளிலிருந்து வருகிறவர்களை ஒன்றிணைக்கிறது என்கிறார். அப்படிப்பட்ட அந்த தீக்க்ஷா பூமிக்கு அம்பேத்கரின் பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் குறிப்பாக அவர் பௌத்தமதம் தழுவிய நாளிலும் வருகிற இலட்சக்கணக்கான மக்களுக்காக இலவசமாகக் குடிநீர் உணவுப் பொட்டலங்கள் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அனைத்துச் சமூகத்தினரும் செய்து கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக உயர்சாதி இந்துக்களும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகளும் தாமாக முன்வந்து இத்தகைய வசதிகளைச் செய்துகொடுக்கின்றனர்.
இத்தகைய பொது உபசரிப்பு வேறெந்த ஊர்வலத்திலும் பொதுக்கூட்டத்திலும் காணமுடியாதது. பிற பிரிவினரின் இந்த மனமாற்றமே அம்பேத்கரின் மதமாற்றத்திற்கும் தீக்க்ஷா பூமிக்கும் கிடைத்த வெற்றியாகும்.






