Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

புலம்பெயர்ந்த எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் நேர்காணல்...

சந்திப்பு : யாழினி முனுசாமி-சொர்ணபாரதி

தமிழ்க்கலாச்சாரம் ஈழத்தைவிட லண்டனில்தான் காப்பாற்றப்படும்


1. உங்களது இளமைக் காலம் பற்றியும் முதல் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லுங்களேன்...


என் சொந்த ஊர் வவுனியா. பெற்றோர் திரு சின்னதம்பி  ஸ்ரீஇராமகிருஷ்ணா - திருமதி கமலநாயகி. தந்தை புகையிரத நிலைய அதிபராகப் பணியாற்றினார். நான் தொடக்கக் கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் பயின்றேன். தொடர்ந்து உயர் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலத்தில் படித்தேன். அதன்பின் கணக்கியல் துறையில் பட்டம் பெற்றேன்.

கல்லூரியில் படிக்கும போதே எழுத்துத் துறையில் ஈடுபட்டேன். எனது முதலாவது சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு இதழில்  1979ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த இரண்டு பைத்தியங்கள் என்ற அந்தக் கதையைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினேன். 1985 ஆம் ஆண்டு எனது முதலாவது நாவல் ஒரு அத்தியாயம் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்தது.


2. லண்டனுக்குப் புலம்பெயர்ந்தபோது அங்கு உங்களது இலக்கியப் பணி எவ்வாறு அமைந்தது?

லண்டனில் இருந்தபோதிலும் எழுத்துப் பணியில் ஆர்வம் தொடர்ந்தது. பத்திரிகையாளர் ஈ.கே. இராஜகோபால் தொடங்கிய தமிழன் பத்திரிகையில் எனது நாவல்களும்
சிறுகதைகளும் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. பின்னர் அவர் புதினம் என்ற மாதம் இருமுறை இதழைத் தொடங்கி நடத்தி வருகின்றார்.இலங்கையில் வீரகேசரி நாளிதழிலும் என்னுடைய சிறுகதைகள் பிரசுரமாகி உள்ளன. நூல் வடிவம் பெற்ற எனது முதலாவது நாவல், சுருதி பேதமடைகிறது. இதன் வெளியீட்டு விழா நான் படித்த வவுனியா தமிழ் மகா வித்யாலயத்தில் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. அதே ஆண்டு, விதி வரைந்த பாதையிலே என்னும் மற்றொரு நாவலை எழுதினேன். அது இலங்கை அரசின் சாகித்திய விருதைப் பெற்றது. 

2009 ஆம் ஆண்டு, நூல் அறுந்த பட்டங்கள் என்ற நாவலையும், மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டேன்.
நூல் அறுந்த பட்டங்கள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றது.2010 ஆம் ஆண்டு பனிநிலவு என்ற நாவலும், உயிர்க்காற்று என்ற நாவலும் வெளிவந்தன.பனிநிலவு நாவலுக்கு கொழும்பு கொடகே ககோதரர்கள் நிறுவனத்தின் சாகித்திய விருதும், தமிழகத்தின் நாமக்கல்லில் உள்ள கு.சினனப்ப பாரதி அறக்கட்டளையின் முதன்மை விருதும் கிடைத்தன.சசிபாரதி சபாரத்தனம், தம்பு சிவா,  காலஞ்சென்ற கலாசூரி ஆர். சிவகுருநாதன், புதினம் பத்திரிகையின் இராஜகோபால் ஆகியோர் என் எழுத்து வளர்ச்சியின் உந்துசக்தியாக உள்ளனர். நான் லண்டனில் இருந்த காலத்தில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் இலக்கியத் துறையை விட்டு விலகி இருந்தபோது மீண்டும் என்னை எழுதத் தூண்டியவர் திரு.அருணா செல்லதுரை அவர்கள். கொழும்பிலுள்ள அருணா வெளியீட்டகத்தின் பதிப்பு ஆசிரியரும் அவரே.

3. உங்கள் எழுத்தின் மய்யமாக எதைக் கைக்கொண்டுள்ளீர்கள்?

கடைசியாக என்னால் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னதான தமிழர் வாழ்க்கையின் அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. பிற்காலச் சந்ததியினருக்கு அவை ஆவணமாகத் திகழும். அதேபோன்று தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கின்ற  சகலருக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
தொடர்ந்தும் அத்தகைய பங்களிப்கை அவர்கள் சகலரிடமிருந்தும் எதிர்பார்த்து நிற்கிறேன். இலங்கையின் போர்க்கால நிகழ்வுகள் ஆவணமாக்கப்பட வேண்டுமானால் புலம்பெயர்ந்த தமிழர்கள்  மத்தியிலுள்ள எழுத்தாளர்களின் கனதியான ஈடுபாடு அத்தியாவசியமானது என்று நான் நம்புகிறேன். அந்த வகையில் எனது பணி இடையறாது தொடரும்.

4. லண்டனில் தற்போது தமிழ்க் கலாச்சாரம் எப்படி இருக்கிறது?

பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தால் இங்குள்ளவர்களில் ஒரு வர்க்கத்தினர் தமிழ் கற்பதையே வெட்கமானதாகக் கருதினார்கள். தங்கள் பிள்ளைகள் தமிழில் கதைப்பதை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.ஆங்கிலத்தில்தான் கதைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். தற்போது அந்த நிலை மாறி தமிழ்ப்பாட சாலைகள் வந்துவிட்ட பிறகு தமிழில் படிக்கிறார்கள். கலைத்துறையிலும் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறார்கள்.  கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையிலே பத்தாம் வகுப்பில் தமிழில் பரீட்சை எழுதலாம். இப்போது தமிழ் முக்கியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். தமிழை ஒரு பாடமாக எடுத்தும் படிக்கிறார்கள். பல்கலைக் கழகமும் கலையைப் பொறுத்தவரையில் அனுமதித்தும் ஏற்றுக் கொள்கிறது. வீணை, வயலின், மிருதங்கம், பரதம் போன்ற கலையைப் பயில்கின்றனர்.

இந்தியா, இலங்கையில் இந்தக் கலையைப் பழகுவதைவிட இங்கே அதிகமாகப் பழகுகிறார்கள். புலம் பெயர்ந்தவர்களிலே கலையைப் பயிற்றுவிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து வந்தும் கலையை விடுமுறை நாட்களில் பழக்குகிறார்கள். கலையில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் , தங்கள் பிள்ளைகள் கலைகளில் கவனம் செலுத்தினால் பிற விசயங்களில் கவனம் திரும்பாது என்பதுதான் அது. இது நம் பண்பாட்டைக் காக்கும் நடவடிக்கையாகவும் இருக்கிறது.

இந்தியாவிலேயோ கொழும்புவிலேயோ பெண்பிள்ளைகள் அணிகின்ற ஆடைகளைவிட லண்டனில் பெண்பிள்ளைகள் வடிவாகத்தான் உடுத்துகின்றனர்.
இலங்கையைவிட லண்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில்தான் நம் பண்பாடு காப்பாற்றப்படுபோலத் தெரிகிறது.பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்கள் வெளிநாடுகளில் தங்கி நிறைய நூல்களை எழுதியுள்ளனர். ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் எழுதித்தான் கர்நாடக சங்கீதத்தைப் படிப்பார்கள். இன்று தமிழிலேயே எழுதிக் கற்கிறார்கள்.
தமிழ்ப் பாட சாலைகள் வந்திருப்பது ஒரு காரணமாகச் சொல்லலாம். பிள்ளைகள் பாடசாலையில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் .அவர்களுக்கு அங்கு வேறு சூழல் உள்ளது. பிற சமூகத்கவருடனும் அவர்கள் பழக வேண்டியிருக்கு. அதற்கேற்றமாதிரி அவர்கள் தங்களை  தயார் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

5. இலக்கிய நிகழ்வுகள் லண்டனில் எப்படி உள்ளன?

அங்கும் சிறுசிறு குழுக்கள் உள்ளன. வேறுபட்ட கருத்துள்ள குழுக்கள் செயல்படுகின்றன. அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளுக்கு நிறையப் பேர் வருவார்கள்.தங்களின் பிள்ளைகளைப் பார்க்க வருவார்கள். இலக்கியக் கூட்டம், நூல் வெளியீட்டு விழா என்றால் ஒரு  இருபத்தைந்திலிருந்து ஐம்பது பேர்வரை வருவார்கள். அதற்கே இரண்டு மூன்றுமுறை அழைக்க வேண்டும். மதியம் சாப்பாடு தருகிறோம்...இரவு சாப்பாடு தருகிறோம் என்று அழைக்க வேண்டியிருக்கிறது.

6. எதன் அடிப்படையில் அங்குக் குழுக்களாகச் செயல்படுகின்றனர்?

ஈழத்திலிருந்த குழுக்களைச் சார்ந்த குழுக்கள்தாம் லண்டனிலும் இருக்கின்றன. போராளிகளுக்கு ஆதரவாக இருந்த குழு, போராளிகளைப் பற்றி எழுதினால் ,
எழுதுகிறவர்களை எதிராளியாகப் பார்க்கிற நிலைமை இருக்கிறது. இவன் அரசாங்கத்து ஆளா என்று சந்தேகத்துடன் பார்க்கிற போக்கும் இருக்கிறது.
வெளியில் சொல்லாவிட்டாலும் கதைத்துக் கொள்வார்கள். இப்படிச் சொல்பவர்கள் நாட்டிற்கு (இலங்கை) செல்பவர்கள் இல்லை. நாட்டிற்குள் போகாமலேயே கற்பனையாக எழுதுவார்கள். எனக்குத் தெரிந்த இரண்டு மூன்றுபேர்  இருபத்தைந்து முப்பது ஆண்டுகளாக நாட்டிற்குப் போகாமலிருக்கிறார்கள். அவர்கள் பழையபடியே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருமுறை நாட்டிற்குப் போய் வந்தால்தானே அங்கு என்ன நடக்கிறது என்று தெரியும்? அப்படியான சூழ்நிலையில் இருக்கிறாவர்கள் தங்களுக்கென்று ஒரு குழுக்களாக அமைத்துக்  கொண்டு செயல்படுகிறார்கள்.

7. புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்களில் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாவதற்கான சூழல் எப்படி இருக்கிறது?

அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பெற்றோரின் வற்புறுத்துதலால் தமிழ்படித்து பாஸ் பண்ணுகிறவர்கள் 60 சதவீதத்தினர் இருக்கின்றனர். அவர்களுக்கும்கூட ஆங்கிலம் வாசிப்பது சுலபமாக இருக்கிறது. ஆனபடியால் எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகள் ஆங்கில இலக்கியம் படைக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்குப் பிறகு தமிழ் இலக்கியம் அழிந்து போகக்கூடிய சூழல்தான் அங்கு நிலவுகிறது. ஆங்கில இலக்கியம் அங்கு ஒரு பாடமாக இருக்கிறது. ஷேக்ஸ்பியர் போன்றவர்களைப் படித்துப் படித்து அவர்கள் அதற்கு அடாப்ட் ஆகிறார்கள். ஆங்கில அறிவும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அப்போதுதான் பல்கலைக் கழகத்தில் பிற மாணவர்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டு படிக்க முடியும். என்னவென்றால் அதன் காரணமாகத்  தமிழ் வாசிப்பு ஆர்வம் குறைந்துபோகிறது.அதனால் தமிழ் எழுதுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்  தமிழ் படித்து பாஸ் பண்ணிவிடுகிறார்கள். இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஒரு 20 வருடங்களில் மங்கிப்போய்விடுகிற ஒரு கட்டமிருக்கிறது. தமிழ்க்கலாச்சாரத்துடன் வாழ்வதால் தமிழ்க்கலாச்சாரத்தை ஆங்கிலத்தில் வேண்டுமானால் எழுதுவார்கள். ஆனால் தமிழ்க்கலாச்சாரத்தை தமிழிலேயே எழுதும் வாய்ப்பு குறைந்து கொண்டேதான் வருகிறது.

8. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுவொரு நல்ல விடயம். இந்திய எழுத்தாளர்கள் ஈழ எழுத்தாளர்களையும் பிற நாட்டு புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களையும் அங்கீகரிப்பது ஒரு மகிழ்ச்சியான விசயம். பத்து வருடங்களுக்கு முன்பு இப்படியான தன்மை இருக்கவில்லை. போர்க்காலத்தில் ஈழ எழுத்தாளர்கள் அடிமையாகத்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் இந்தியாவில் இலக்கியம் வளர்ந்துகொண்டுதான் இருந்தது. இந்த நிலையில் ஈழ எழுத்தாளர்களை ஆதரித்திருப்பது மகிழ்ச்சியான விடயமாகும்.

9. ஈழ எழுத்தாளர்களை அங்கீகரிப்பதற்கான ஒரு கட்டாயம் உருவாகியிருப்பதாக நினைக்கிறீர்களா? ஈழத்து எழுத்தைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

ஈழத்து எழுத்தைத் தவிர்க்க முடியாது என்றில்லை. ஈழத்து எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். அதற்கு ஒரு காரணம் ... ஈழத்தில் நடந்த இனப்பிரச்சினை.

10. புலம்பெயர்ந்து வாழ்பவர்களின்  அடுத்த சந்ததியினராவது மீண்டும் இலங்கையில் குடியேற வாய்ப்பிருக்கிறதா?

சூழல் நன்றாக இருந்தால் வாய்ப்பிருக்கலாம். விரும்பினால் இலங்கையில் குடியேறலாம். அல்லது தாங்கள் பிறந்த நாட்டிலேயே எங்கள் சந்ததியினர் குடியிருக்கலாம். அது அவர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒரு விசயம்.


நன்றி...  வணக்கம்!

 

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS