பாம்பு என்றால்? நூல் மதிப்புரை-சண்முகானந்தம்.
- Details
- Published on Wednesday, 03 August 2011 06:52
- Written by editor
பாம்பு என்ற சொல் இந்திய சமூகத்தில் இரு வேறு கருத்து நிலைகளில் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, கடவுளாக கடவுகளின் அவதாரமாக, விசேட நாட்களில் பூசை செய்வது, பயபக்தியுடன் பாம்பை வணங்குவது, பாம்பின் இயல்பான உணவில் இல்லாத (முட்டை, பால்) பொருட்களை படைப்பது என பாம்பை இறை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
அடுத்தாக, அச்சத்தின் குறியீடாக, பார்க்கும் இடத்தில் கையில் கிடைக்கும் பொருளைக்(கம்பு, தடி) கொண்டு பல பேர் சூழ்ந்து அடித்துக் கொல்கின்றனர்.
இறைநிலையில் வைத்து வணங்ககப் பெறும் காட்டுயிர், நேரில் பார்க்கும் போது கொல்வது- என முரணான (அ) எதிர் நிலைப்பட்ட கருத்துக்கள் இந்திய சமூகத்தில் மக்களிடையே நிலவ எது காரணம்? பன்னெடுங்காலமாக மக்கள் மனதில் புரையோடி இருக்கும் மூட நம்பிக்கைகள் , பழமைவாத கருத்துகள் முன்பிறவி, மறுஜென்மம், பாவம், புண்ணியம் போன்ற அச்சமூட்டும், மக்களை பயத்தில் ஆழ்த்தும் கருத்துக்கள் போன்றவைகளால் மக்களின் உளவியல் சீர்கெட்டுள்ளது.
விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளோ, தேடல்களோ இல்லாதது, எதையும் ஏன்? என்ற கேள்வியுடன் விவாதமோ இல்லாதது மட்டுமல்லாது, மக்களை அறியாமையில் ஆழ்த்தியிருக்கும் அரசியல்வாதிகளும் மக்களின் உளவிய்ல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்களாகும்.
அந்த வகையில், தோழர், ச.முகமது அலி எழுத்தில் வெளி வந்துள்ளது பாம்பு என்றால்? நூல் முக்கிய இடத்தை பெறுகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்காகவும், காட்டுயிர்களுக்காகவும் தொடர்ந்து பணியற்றி வரும், இடதுசாரி சிந்தனையாளரும், பெரியாரியவாதியுமான தோழர்.ச.முகமது அலி, ஏற்கனவே " நெருப்புக் குழியில் குருவி", " அழியும் பேருயிர் யானைகள்", "இயற்கை செய்திகள், சிந்தனைகள்" போன்ற நூல்கள் வழியாக தமிழக வாசகர்களுக்கு அறிமுகமானவரே.
பாம்புகளை பற்றிய பழமைவாத கருத்துக்கள், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, அறிவியல்துறை கொண்டு, தரவுகளின் அடிப்படையில் கருத்துகளை நூலில் பதிவு செய்துள்ளார். பாம்புகளின் பரிணாமம், வாழ்வியல், நடத்தைகள் என தலைமுறைகளில் பறந்த தளங்களில் விரிகிறது.
13 கோடி வருடங்களுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் பாம்புகள் , உலகம் முழுக்க சுமார் 3000 வகைகளாக பரவியுள்ளன (பக்.9) என்று கூறும் ஆசிரியர், இ.ந்தியாவில் காணப்படும் 270 வகைப் பாம்புகளில் 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தது, (பக்.29) என கூறி பொது புத்தியில் பதிந்துள்ள கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சீரிக்கும், பாம்புக்கும் போராட்டம் நடக்கும் போது, பாம்பு , கீரியை கடித்து விட்டால் விஷம் பரவாமல் இருக்க ஒரு வகை வேரைத் தின்று, வேரில் புரளும் என்பதெல்லாம் புகழ்பெற்ற பொய்களே, கீரி, பாம்பை தன் உணவுக்காக பிடிக்க முற்படும் போது மிக விரைவாக, லாவகமாக செயல்பட்டு, அதன் கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன் இறையையும் வெற்றிகரமாகக் கொல்கிறது. (பக்.100 என்று பாம்புகள் மேலிருக்கும் பொய்களை தோலுரித்துக் காட்டுகிறார்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும், என்ற பழமொழி அதன் தோற்றத்திலும், விஷம் சார்ந்தும் வருவது, நமது சமூகத்தில் பாம்பு கடிக்கு இறப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பயத்திலும், சரியான சிகிச்சை இல்லாமையாலும் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.விலங்குகளிலேயே பாம்புகளின் மேல்தான் அதிகமான மூடநம்பிக்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். " பாம்பு பால் குடிக்கும் மாணிக்கம் கக்கும் "," அடிப்பட்ட பாம்பு பழிவாங்கும்" என பலப்பல (பக்.25) சொல்பாடல்கள், பழமொழிகள் உள்ளன. இவை அனைத்தும் தவறானவை.
மனித இனத்திற்கே சொந்தமான பழிவாங்கும் புத்தியை, சூழலில் முக்கிய பங்களிக்கும் பாம்புகள் மேல் சொல்வது தவறான சொல்லாடலே.
உலகிலேயே நீளமான பாம்பு -17 மீட்டர் நீளமுள்ள ஆசிய பாம்பு இவற்றிற்கு விஷம் இல்லை. உலகிலேயே மிக சிறிய பாம்பு-17செ.மீட்டர் நீளமுள்ள சிறு பாம்பு இவை நமது தமிழ்நாட்டிலும் காணப்படுகிறது. பாம்புகளின் ஆயுள் சராசரி 20 வருடம் வரை அரிதாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். சிறு பாம்பு- மண்புழவைப் போல் ஆணின் துணையின்றியே குட்டிகளை பெற முடியும். பாம்புகள் 100 முதல் 700 அதிர்வெண் வரை, ஒலியை உணரும் சக்தி படைத்தவை. (பக். 30) இவை போன்ற நாம் கேட்டறியதை பல தகவல்களை கூறி பாம்புகளின் மேல் ஒரு நேசத்தை. பிணைப்பை ஏற்படுத்துகிறார்.
சாதாரணமா இரண்டு பாம்புகள் பின்னி இருந்தால், இணை சேர்வதாக கருதும் மக்களுக்கு அது இரண்டு ஆண் பாம்புகள் உருண்டு, புறள்வது எல்லைச் சண்டையாகவே இருக்கிறது. காதல் களியாட்டம் அல்ல (பக்.31) என புரிய வைத்துள்ளார். மகுபு வாசிப்பிற்கு பாம்பு நடனமாடும் (?) காட்சிகளை தெருவொர்த்தில் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், நூலாசிரியர் அதில் இருக்கும் ரகசியத்தை பின்வருமாறு கூறுகிறார். " பார்ப்பதற்கு அப்படித் தோன்றினாலும், மகுபுலின் அசைவிற்கு ஏற்ப தனது படத்தை விரித்து எதிரியை எச்சரிக்கும் விதத்தில் அசைவதை" இசைக்கு ஏற்ப நடனம் எனக் கொள்வது (பக்.32) மடமை என்கிறார்.
பாம்புகளை பற்றிய எண்ணற்ற செய்திகளையும், தகவல்களையும் கூறி, பாம்புகளை பற்றிய நேர்மறை கருத்துக்களை மனதில் ஏற்படுத்திய நூலாசிரியர் தோழர்.ச.முகமது அலி பாராட்டு குறியவர்..
பாம்பு என்றால்? போன்ற நூல்கள் பள்ளிகளில் பாடமாக வைக்கும் போது மட்டுமே, எதிர்மறை கருத்துகள் மறைந்து நேர்மறை கருத்துக்கள் சமூகத்தில் மேலோங்கும். பாம்புகளின் வாழ்வு சிறக்கும். தமிழர் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்களில் தோழர். ச.முகமது அலி எழுதிய "பாம்பு என்றால்?" நூலும் ஒன்று என்றால் அது மிகையல்ல.
பாம்பு என்றால்?
ச.முகமது அலி
இயற்கை வரலாறு அறக்கட்டளை ,
மே/ப,ஆல்வா மருத்துவமனை வளாகம், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி- 642 103,
தொலைபேசி : 04259- 2535252, 253303
விலை : ரூபாய் 50/-






