சிறுகதை நூல் விமர்சனம் [மரணத்தின் வாசனை : த.அகிலன்] வாசிப்பு அனுபவம். -நடராஜன் கிருஷ்ணன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 10:09
- Written by editor
இந்தச் சிறுகதை நூலின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்” என்ற கதை ஏழு வயது பையனின் அப்பா பாம்பு கடித்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய இராணுவம் தடுத்ததால் அவர் இறந்த கொடுமையை சொல்கிறது.
“அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்துகொண்டேயிருந்தது” என்ற இதன் கதையின் மையம் அப்பனில்லா பிள்ளையாக வளர்ந்து தொலைந்த எனது பிள்ளைபருவத்தை பெருமூச்சுடன் நினைவில் வந்து நெருடி சென்றது. இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் சென்றபொழுது அதற்கு எதிராக தமிழ்நாடு எங்கும் மாணவர்கள் போராடிய பொழுது அதில் களபணி ஆற்றி, போராடிய கடந்துப்போன எனது நினைவுகளைக் கிளறியதால் ஒரே மூச்சில் இந்நூலை படித்தேன்.
ஆனால் முடியவில்லை. பன்னிரெண்டு கதைகளில் சில கதைகளை படித்து முடிப்பதற்குள் போரின் இழப்புகள் மனசுக்குள் ஆழமான பாதிப்புகளை பதித்தது. விட்டு விட்டுத்தான் படிக்க முடிந்தது.
போரில் ஈடுபாடு காட்டாத, போரில் போரிடும் இரு தரப்புகளுக்கும் அப்பால் உள்ள மக்களின் துயரங்களை இக்கதைகள் சொல்லுகின்றன. த.அகிலன் அவர்கள் ஈழப் போரின் போது பிறந்து வளர்ந்ததால், அவர் சொல்லும் நெருங்கிய உறவுகள், ஊர்க்காரர்கள், பள்ளி நண்பர்கள், இன்ன பிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், சித்ரவதைகள், ஊர்ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் ... நம்மை அதிரவைக்கிறது. இந்த மரணங்களின் வாசனை போர் நின்ற சனங்களின் கதை போரின் கொடூரத்தை நமக்கு உணர்ந்துகிறது.
“குமார் அண்ணவும் மிளகாய் கண்டுகளும்” கதையில் கிளிநொச்சி சிறு விவசாயி தன் நிலத்தைப் பிரிந்து அலைந்த சோகத்தை சொல்கிறது. அவர்கள் எல்லாச் சுகங்களையும், அதிகாரத்தையும், இழந்த இராஜக்களைப்போல் அலைந்த வண்ணம் இருந்தார்கள் என்கிறார். அந்த மிளகாய் தோட்டத்தை பார்க்க சென்ற அவரை சிங்கள இராணுவம் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று சித்ரவதை முகாமில் சிதைத்து குற்றுயிராக்கி அனுப்பினர். அரை நேரத்திக்குள் 300 பாத்தி கட்டக் கூடிய குமார் அண்ணனின் கைகள் தனக்கான சாப்பாட்டை அள்ளி சாப்பிட முடியாமல் போய் இறந்த கதை. இப்படி போரில் காணாமல் போனவர்கள், காணாமல்போய் மீண்டு வந்தவர்களின் துயரம் நம்மை ஒயாமல் அலைக்கழிக்கிறது.
“நீ போய் விட்ட பிறகு ...” கதை பள்ளிப் பருவத்தில் அரும்பும் முதல் காதலை கவித்துவத்துடன் சொல்லும் கதை. போர் சூழ்லில் காதல் தரும் நம்பிக்கை. போரிலிருந்து தப்பித்து வெளி நாட்டில் வசதியாக காயத்ரி வாழ்வாள் என்று பிரிவது, பின்பு அவள் இறப்பதை இக்கதைச் சொல்கிறது. “மரணம் நாசமாய்ப் போக அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை” எனும்போது நாமும் அதை ஆமோதிக்க வேண்டியுள்ளது.
“கரைகளிற்கிடையே” கதை தமிழக கடற்கரையில் முடிகிறது. போரிலிருந்து தப்பித்து அம்மா வாழ்ந்த 55 ஆண்டுகளையும், அவன் வாழ்ந்த 25 ஆண்டுகளையும் ஒரு கறுத்தப் பையிற்குள் அடக்கி தமிழகத்தை அடைய கடலில் பயணம் செய்த குடும்பம் கரையை அடையாமல் மணல் திட்டில் மாட்டி கொண்டனர். அவர்களை காப்பற்ற கடலை நீந்தி கரையை அடைய முயன்ற தினேஷை கடல் சுருட்டி வாரி விழுங்கியது. அந்த குடும்பமே மணற்திட்டில் அலறிய அலறல் உப்பு காற்றில் இன்னும் ஒலமாய் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. நமது மனசாட்சிகளை உலுக்கும் கதை இது.
கோயிலாச்சி, முயல்காதன், சித்தி, கேசவன், ரூபன் ... என்று சொல்லப்படுகின்ற போர் தின்ற மனிதர்களின் கதைகள் நமது நெஞ்சை பற்றி எரியச் செய்கின்றது. நமக்கு மரணம் என்றால், வயது முதிர்ந்தோ- நோய்வாய்பட்டோ இறப்பவர்களும், எப்பொழுதாவது விபத்தில் நிகழும் சிலமரணங்களும் தான் நினைவில் நிழலாடும். இங்கே எல்லாமே அகலாமரணங்கள் . . . ஒரு மரணத்துக்காக அழுது கொண்டிருக்கையில் அடுத்தது அறிவிக்கப்பட்டது, அதற்கும் சேர்த்து அழத்தொடங்குகையில், அடுத்த மரணம் அறிவிக்கப்பட்டது. மரணம் கிரிக்கெட் ஸ்கோரைப்போல் அறிவிக்கப்பட்டது. ஆம். இப்படி மரணத்தின் கொடுநிழல்கள் படித்த வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது ஊடுருவி தலையாயானதாக நின்றதை விவரிக்கின்ற இக்கதைகள்.
ஈழத்தின் மரணங்களை நமது தமிழ்நாடு தினசரிகளில் செய்திகளாக நாம் படித்து வருத்தப்பட்டுள்ளோம். தொலைக்காட்சிகளில் வரிசை வரிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களைக் காண்கின்றோம். நமது பொதுப் புத்தியில் இவைகள் “மரணச் செய்திகள்” என்பதற்கு மேல் ஒன்றும் பதிவாவதில்லை. நமது அம்மா, அப்பா, நண்பன், அண்ணன் அந்த பிணக்குவியலில் இருந்திருந்தால் நமக்கு அப்படி தோன்றாது. இதைத்தான் அகிலன் இந்த கதைகள் செய்திருக்கின்றன.
30ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழப் போர் தமிழக மக்களிடமும், அரசியல் கட்சிகளிடம் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணின. இருப்பினும் அரசியல் கட்சிகள் தங்களின் சந்தர்ப்பவாத ஒட்டு அரசியலில் பலமுறை ஈழப்பிரச்சனைக்கு துரோகம் விளைவித்தன. தமிழக மக்களின் உணர்வுகளை படிப்படியாக காயடித்தன. இந்த சூழலில் இத்தகைய படைப்புகளின் பணி மிகவும் முக்கியமானது. மீண்டும் ஈழப்போரின் துயரத்தை தமிழக மக்கள் உணர்ந்து வீறுகொண்டு எழ இந்த நூல் உதவும்.
அகிலனின் மொழி நடை, கதை விவரிக்கும் யுத்தி, வாழ்வின் துயரங்களை பிரதிபலிக்கும் சித்திரம், வர்ணனை அனைத்தும் போரின் அவலங்களை, மனிதரின் துயரத்தை, பிணம்நாறும் ஊர்களை மரணவாசனையாக சிறந்த போரிலக்கியமாக நம்முன் ஆசிரியர் நிறுத்துகிறார்.
எனக்குள்ள மகிழ்ச்சி இந்த போர் பெருந்துயருக்கு எதிராக போராடிய நியாயங்களை எனக்கு இந்த படைப்பிலக்கியம் தருகிறது. எனக்குள்ள பயம் இப்பொழுது இது தான்! இந்த கதைகளே நம்முள் பீறிடும் எழும் அழுகையை அடக்க முடியாமல் செய்யும் பொழுது, முள்ளைவாய்காலில் அலைந்த, பிணவாடையை சுவாசித்தச் சிறுவனோ, சிறுமியோ நாளைக்கு அவைகளை இலக்கியமாக படைக்கும் பொழுது நம் நெஞ்சு வெடித்து சிதறாமல் இருக்க நமக்கு நெஞ்சுரத்தை அளிக்க வேண்டும் என்பதே!
வடலி வெளியீடு, 6/15, சுந்தர் தெரு, எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078. விலை 125 ருபாய்
கி.நடராசன்.






