Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

ச.விசயலட்சுமியின் ‘பெருவெளி பெண்’ணும் வாசிப்பைத் தொடரந்த சில வாரத்தைகளும் - தமிழ்நதி

சிலசமயங்களில் யோசித்துப்பார்க்கும்போது விமர்சனம் என்பதில்கூட ஒரு மெல்லிய வன்முறை கலந்திருப்பதாகவே தோன்றுகிறது. நமது வாசிப்பினடிப்படையிலான அளவுகோல்கள், மதிப்பீடுகள், ஒப்பீடுகளை மற்றவரில் பொருத்திப் பார்க்கும் அதிகாரத்தை அது உள்ளடக்கியிருக்கிறது. படைப்புகளுள் தன்னுணர்வு அன்றேல் சுயவெளிப்பாடெனக் கொள்ளத்தக்க கவிதை கருக்கொள்ளும் தருணங்கள் அந்தரங்கமானவை. அந்த அந்தரங்க வெளியை ஒரு வாசகராக அனுபவித்துக் கடந்துவிடுதலே அப்படைப்பிற்குச் செலுத்தும் மரியாதையாகும். வாசகர் விமர்சகராகும்போது படைப்பாளியின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் காலடி எடுத்துவைக்கிறோமோ என்ற மனஉளைச்சல் உண்டாகிறது. மறுவளமாக, ‘விமர்சனங்கள் இன்றி தரமான படைப்புகள் உருவாவதெப்படி?’என்றொரு கேள்வியும் தயாராகவே இருக்கிறது. காலத்தைப் போன்ற விமர்சகன்(விமர்சகி என்னும் சொல்லும் துரதிர்ஷ்டவசமாகத் தமிழில் புழக்கத்திலில்லை) எவருமில்லை. அதன் அளவுகோல் பாரபட்சங்களற்றது. பசியும் பிணியும் பல்லிளித்துப் பரிகசிக்க, உயர்த்திப் பிடித்துப் பேசவும் ஆளில்லாமல் அனாதைகள்போல அரசாங்க வைத்தியசாலையின் துர்வாடையினிடையில் உறைந்துபோன சில படைப்பாளிகளை இன்னமும் நாங்கள் ஞாபகத்தில் கொண்டிருப்பது எதனால்?

தமிழில் பெண்ணெழுத்து முனைப்புற்றிருக்கும் இக்காலகட்டத்தில் விசயலட்சுமியின் ‘பெருவெளிப் பெண்’ணும் வெளிவந்திருக்கிறாள். பெண் என்பதை நாம் மறந்தாலும், முதுகினில் துருத்தும் கத்தியினைப்போல் சர்வசதா காலமும் ஞாபகமூட்டிக்கொண்டேயிருக்கும் பாரபட்சம் பொருந்திய இச்சமூகத்தின் மீது கவிஞர் வைத்திருக்கும் ஒட்டுமொத்தமான விமர்சனமே இத்தொகுப்பெனக் கூறலாம். சாதிகளாலாய சமூகம் மட்டுமல்ல இது; ஆண்-பெண் எனும் இரு பாலாருக்கும் முரண்பட்ட நீதிகளாலாய சமூகமும்கூட என்பதை கீழ்க்காணும் வரிகள் வழி உணர;த்துகிறார;.

“என்றேனும்
அருகாமையிலிருக்கும்
நெருங்கிய நட்பின்
இறுதி அஞ்சலியில்
பங்கேற்காமல் போனதுண்டா?”

(இருப்பு - பக்:22)

முதிர்கன்னி,மலடி,விதவை,ஓடுகாலி எனப் பல சிறப்பு அடைமொழிகளை பெண்களுக்கே தாரைவார்த்துவிட்டிருக்கும் மொழிச்சதியைக் குறித்து தன் கவிதையில் கீழ்க்கண்டவாறு ஆதங்கப்படுகிறார் விசயலட்சுமி.

“பெறாமலிருந்தேன்
பெற்றிழந்தேன்
ஒன்றைப் பெற்றேன்
பட்டப் பெயர் பலதிசைப் பாய்ச்சலாய்”

(உயிர்ப்பு - பக்:27)

‘அயர்ந்துபோய்க் கண்களை மூடிக்கொண்டுவிடாதீர்கள். இறந்துவிட்டதாய் சொல்லி எடுத்துப் போய் புதைத்துவிடுவார்கள்’என்று சொல்வதுண்டு. அதேபோன்று, பேதங்களாலாய சமூகத்தைக் கட்டமைத்தவர்கள், தாங்கள் விரும்பிய-விரும்பக்கூடிய பெண்களாய் எங்களை உருவாக்கிவைத்திருக்கிறார்கள் என்ற நினைப்பும் விழிப்பும் பெண்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும் என்பதை நெடுகிலும் அறிவுறுத்துகின்றது ‘பெருவெளிப் பெண்’. ‘வலி’, ‘நத்தையாய்’, ‘வெடிப்புகள்’ ஆகிய மூன்று கவிதைகளிலும் இடம்பெறும் கிராமியச் சொல்லாடலையும் சூழலையும் வாசித்தபோது, எளிமையும் இயல்புமாய் பாசாங்கற்ற மொழியில் எழுதும் கவிஞர் இளம்பிறை நினைவில் வந்தார். பால்யத்தின் பெட்டகத்திலிருந்து எடுத்துச் செலவழிக்கப்படும் நினைவுகளே பேசப்படும் படைப்புகளாயிருந்திருக்கின்றன என்பதை விசயலட்சுமியின் கவிதைகளும் வழிமொழிகின்றன.

“வேலமுள் காற்றாடிகள்
பனங்காய் வண்டி விட்டு
தைரியமாய் தும்பி பிடித்து
பாதம் தண்ணீர;ப் பாம்புகளில் வழுக்க
நத்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தமில்லாமல் உற்றுநோக்க
………………………………”

(நத்தையாய் - பக்:50)

இயற்கையோடியைந்த பரந்த வாழ்வினை இழந்து, ஓட்டுக்குள் நத்தையென ஒடுங்கிய தனக்குப் பிந்திய தலைமுறையை இவ்விதம் விபரிக்கிறார் விசயலட்சுமி.

“மகள்களுடையதோ
நெகிழி இயக்கியும், பாடப்புத்தகமும்
கரடிப்பொம்மையுமாய்”


இந்த ஆதங்கம் கிராமத்தில் கூடுகட்டி நகருக்கு வலசைபோந்த எல்லாத் தாய்ப்பறவைகளுக்கும் இருக்கும்போலும். கவிஞர் இளம்பிறை ‘தொட்டிச் செடி’என்ற தன் கவிதையில் இப்படிச் சொல்லியிருப்பார்.

“பட்டு வண்ண இறகுகள் பொறுக்கி
அதே நிறத்தில் பண்டிகைக்கு
உடை கேட்டழும் உன்னை
அதட்டியபடி பெருமிதங் கொள்ளும்
வாய்ப்பிழந்தேன்.”

கோபங்கலந்த அறிவிப்புகள், அறிவுரைகள், சங்கற்பங்களுடன் முடியும் கவிதைகள் வாசிக்கும் அக்கணத்தில் உணர;வெழுச்சியைத் துhண்டக்கூடியன. அதற்கு மேல் சென்று நிலைத்து தொண்டையினுள் தங்கிவிட்ட முள்ளென உறுத்திக்கொண்டேயிருக்கும் தன்மையை அவை அடைவதரிது. நிலம் சார்ந்த அரசியற் கவிதைகளுக்கே பெரிதும் பொருந்தும் அத்தொனியை பெண்கள் சார;ந்த பிரச்சனைகளில்  பயன்படுத்துவதன் பொருத்தப்பாடு பற்றி ஐயமுள்ளது. பெருவெளிப்பெண்ணிலும் அவ்வாறு முடியும் சில கவிதைகளைக் காணமுடிந்தது.

“குத்தகை விட்ட யோனி மீட்டு
மீண்டும் உயிர்த்தெழுவேன்”

“அதன் எச்சத்திலிருந்தும்
இடுக்குகளில் முளைப்பேன்”

வீடும் குடும்பம் என்னும் அமைப்பும் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் பெண்களைப் பிணைத்துவைத்திருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை ‘ஞாயிறு’என்ற கவிதையில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார; விசயலட்சுமி. பெண்ணுக்கு மட்டும் விலக்கப்பட்டிருக்கிறது ஞாயிறு என்னும் விடுமுறை நாள். அவ்வாறு நடைமுறை வாழ்வின் ஓட்டத்தில் பின்தங்கிவிட்ட சுயத்தை எங்ஙனம் மீட்டெடுப்பதெனத் தெரியாமல் திணறும் ஒரு மனோநிலையை ‘தனிமை’, ‘நிரவல்’, ‘இளைப்பாறல்’ போன்ற கவிதைகளில் பேசினாலும், ‘கேளிக்கை’என்ற கவிதையில் எடுத்தாளப்பட்டிருக்கும் உவமை நானறிந்தவரை இதுவரை யாராலும் சொல்லப்படாதது.

“அழகான வேலைப்பாடுடனான
தஞ்சாவூர் பொம்மை
……………………………………
……………………………………

ஒரு முறையேனும்
தன்னைத்தானே
அசைத்துக் கொண்டதுண்டா?”

(கேளிக்;கை - பக்:47)

ஆட்டி வைக்க ஆடும் தஞ்சாவூ பொம்மை இரவில் இருளில் தன்னைத்தான் அசைத்துக்கொள்ளக்கூடும்- யார; கண்டது…? ஆனால், சக்தியின் அட்சயபாத்திரமாக இதர மனிதர;களால் கருதப்படும் பெண்ணானவள் தன்னைத்தான் அசைத்துப்பார்க்கும் திராணியை நாளின் முடிவொன்றின் இழந்துவிடுகிறாள். அவள் தாயாய், மனைவியாய், மகளாய்,தாதியாய்… இன்னும் பலவாய் வீட்டை இயக்குகிற உயிர்க்கருவி. ஆனால், அவளளவில் சுயமழிந்தவள். வரையறுக்கப்பட்ட எல்லைகளுள், சுருக்கப்பட்ட தேவைகளுடன் உறவுகளுக்காக வாழ்வதே பெண்ணாய் பிறப்பெடுத்ததன் பிறவிப்பயன் என்பதாய் இன்னமும் பேசக்கேட்கிறோம். அதையேதான் ‘அம்மா’என்ற கவிதையில் வரும் தாயும் வாய்மொழிகிறாள்.

“புருசன் புள்ள வயித்துக் கஞ்சி
நல்ல சேலை தலைக்கு எண்ணெய்
பெண்ணுக்கு வேறெது வேண்டும் என்பாள்”

(அம்மா - பக்:67)

மேற்கண்டவாறு இருக்கும் பெண்தான் சமூகத்தால் வார்க்கப்பட்டிருக்கும் பெண் எனும் சட்டகத்துள் சரியாகப் பொருந்துகிறாள். சமூகத்தின் சட்டங்களுள், சட்டகங்களுள் அடைபடாததோடல்லாமல் ‘என்னைக் குறித்து நானே எழுதுவேன்’என எழு(து)பவர்களை மரபிலூறிய சமூகம் ஓடுகாலிகளாகவும் உதவாக்கரைகளாகவும் சந்தர்ப்பம் வாய்க்குமிடத்தில் வேசிகளாகவும் இழித்துரைக்கத் தயங்குவதில்லை. விசயலட்சுமியின் வார்த்தைகளில் சொன்னால் ‘வளைந்தே கிடப்பதுதான் வீச்சரிவாள் என்பார்கள்’.

பேசாப்பொருளென பலவற்றை மூடி மறைத்தே உள்ளுரப் புரையோடி நோய்க்கூறு கொண்டோம். குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செலுத்துவது குற்றமெனில், அதைக் குறித்துப் பேசாது கடந்து செல்வதும் குற்றந்தான். இல்லை… இல்லை என்று கொல்லைக்குள் குப்பையைக் குவித்து வைத்து நாற்றமெடுக்கவைக்கும் செயல்தான் அதுவும் என்பதைக் கவிஞர் இப்படிச் சாடுகிறார்.

“நொய்டா முதல் தொடங்கும்
இருட்டறை வன்முறைக்கு
சட்டமியற்றுவதா
சமாதானம் பேசுவதா”

(ஈட்டி - பக்:89)

‘பெருவெளிப் பெண்’ணில் பெண் வாழ்வு, அவளது துயரங்கள், இச்சமூகத்தின் பாரபட்சங்கள், காதல், என விரிந்த பாடுபொருட்களின் பரப்பளவிற்கு, நவீன கவிதையின் மொழிச் சாத்தியங்களை பரீட்சித்துப் பார்க்க கவிஞர் மேலும் முயன்றிருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

எனினும், விசயலட்சுமியின் வார்த்தைகளான

“அளவைகளுக்கு அளக்கத் தெரியாது”

என்பது மனங்களுக்கு மட்டுமல்ல; கவிதைகளுக்கும் பொருந்தும்.
ஆரம்பத்தில் கூறியதுபோல, வாசகன் படைப்பாளியின் அந்தரங்க உலகின் அந்தம்வரை சென்று உலவுதல் சாத்தியமில்லை. அது படைப்பாளிக்கேயுரிய வெளி. ஒரு கவிதையை வாசித்து முடித்ததும் ஒன்றும் செய்யத் தோன்றாமல் உறைந்துபோய் ஒரு நிமிடமேனும் இருக்கத் தோன்றினால் அதுவே அக்கவிதையின் வெற்றி. வெற்றுக்கூச்சல்கள் வெற்றிபெறுவதும் கவித்துவம் கண்மறைவாய் ஒதுங்கிக் கிடப்பதும் ஒன்றும் புதிதல்ல. காலத்தால் அறியப்படும் கவிதை என வாய்மூடியிருப்பதே நம் முன்னிருக்கும் வழியும் வலியும். ‘பெருவெளிப் பெண்’ பெண் எனும் ஞாபகத்தை ஒவ்வொரு கணமும் மனசிலிருத்தி எழுதப்பட்ட முக்கியமான தொகுப்பாகும்.  


-தமிழ்நதி

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS