கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் ) - கார்த்திகா வாசுதேவன்
- Details
- Published on Monday, 12 September 2011 12:58
- Written by Super User
கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் )
பிரிவு -குழந்தை இலக்கியம்
ஆசிரியர் -என்.துபோவ்
மொழிபெயர்ப்பு - தமிழில்- யூமா வாசுகி
பதிப்பகம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
விலை ரூ - 60
கேரக்டர்ஸ் :
சசூக் -மீனவச் சிறுவன்
பீம் -சசூக்கின் நாய்க்குட்டி
ஷோர்க்கா -சசூக்கின் நட்பை விரும்பும் இளம் மீனவன்
(தன் அதிகாரியை அடித்த வழக்குக்காக ஒரு முறை சிறை சென்று மீண்டவன்),
நாஸ்தியா -சசூக்கின் அம்மா (ஷோர்க்காவின்
நட்பு தன் மகனுக்கு தேவை இல்லை என வெறுப்பவள்,பலவீனமான நோயாளி)
சிமியோன் மாமா -லாரி டிரைவர் ,
ஆன்யா -சசூக்கின் சிநேகிதி அழகுச்சிறுமி
ஆன்யாவின் அப்பா -(சக மனிதர்களிடத்தில் இரக்கமுள்ள வானியல் விஞ்ஞானி) ,
இக்நாத் - சிறுவனிடம் கூட இரக்கமே
அற்ற மீனவன் இக்நாத்,
இவான் தனீலொவிச் - மீனவர்களின் குழுத் தலைவர்
சசூக்கை கண்டாலே அருவருப்படையும் ஆன்யாவின் கடுகடு அம்மா. இவர்களோடு
இந்தக் கதை நகர்கிறது.
சசூக் மிக இயல்பான குழந்தைமையின் குணம் கெடாத ஒரு மீனவச்சிறுவன்
,அவனுக்கு இந்த உலகில் காணும் காட்சிகள் தோறும் கேட்பதற்கும் அறிந்து
கொள்வதற்கும் பல கேள்விகள் இருந்தன ,அவற்றுக்கு எல்லாம் பதில்களைச்
சொல்லத் தான் அவனுக்கு சரியான தோழமை இல்லை அவ்விடத்தில்,ஷோர்க்கா கொஞ்சம்
முயற்சிக்கிறான், ஆனால் ஷோர்க்காவின் நட்பை சசூக்கின் அம்மா
வெறுக்கிறாள், அநியாயம் செய்யும் தன் மேலதிகாரியை அடித்ததால் ஷோர்க்கா
சிறை செல்ல நேர்கிறது.ஜெயிலில் இருந்து திரும்பி வந்து தான் இவான்
தனீலொவிச் குழுவின் மீனவனாக அவன் இங்கே வந்திருக்கிறான் .ஆனால் நாஸ்தியா
அவனை என்னவோ கடல் கொள்ளையன் என்பதாகப் பாவிக்கிறாள்,அப்படித் தான் தன்
மகன் சசூக்கையும் அவள் எச்சரிக்கிறாள்.
ஆனால் சசூக் எப்படியோ ஷோர்க்காவைப் புரிந்து கொண்டு அவனது நட்பை
விரும்புபவனாக இருக்கிறான்,இது தான் குழந்தைமையின் அற்புதம் ,அவன் தன்
தாய் சொன்னால் என்பதற்காக ஷோர்க்காவை வெறுத்து விடவில்லை,அவனுடன்
நட்பாவதில் முதலில் இருந்த தயக்கம் அவனது நேர்மையான அணுகுமுறைகளைக் கண்டு
மறைகிறது. ஷோர்க்காவை சசூகிற்கு பிடித்துப் போகிறது.
சசூக்கின் அப்பா இருந்த மீனவர் குழு மீன் பிடிக்க வந்த கடலோர
கிராமத்திற்கு விடுமுறையை கழிக்க வருகிறாள் ஆன்யா தன் வானியல் விஞ்ஞானி
அப்பாவோடும் வெகு சுத்தக்காரி கடு கடு அம்மாவோடும் ,முதலில் சசூக்கின்
தோல் உரிந்த மூக்கையும் உப்பு வாசம் வீசும் நாற்றத்தையும் கண்டு
அருவெறுக்கும் ஆன்யா தன் தந்தையின் அறிவுரையால் அவனோடு நட்பாகிறாள்,
ஆன்யாவின் அப்பா வைத்திருக்கும் சிவப்பு நிறக் காரை சசூக் மிகவும்
இரும்புகிறான்,அவனுக்கு தான் ஒரு கடலோரக் காவல்படை வீரனாக ஆக வேண்டும்
என்பதில் பேரு விருப்பம் .போர் விளையாட்டு விளையாடுவதிலும் அவனுக்கு அதிக
இஷ்டம். கதையில் சில இடங்களில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே
நிகழ்ந்த போர் பற்றி குறிப்பிடப் படுகிறது,நாஜிக்களைப் பற்றிப்
பேசுகிறார்கள் இவான் தனீலொவிச்சும் சிமியோனும் .இப்படியாக சசூக் போர்
வீரனாக ஆசைப் படுகிறான். கடலைப் பற்றிய பிரமாண்டம் அவனை வியக்க வைக்கிறது
//அடியாளம் இல்லாத பாதாளம் // தான் கடல் என்பதாக சிமியோன் சொல்லும் போது
சசூக் கடலைக் கண்டு பயந்து போகிறான்,ஆனால் ஷோர்க்கா அவனை கடலில் நீந்த
அழைத்துக் கொண்டு போய் கடலின் ஒரு புறத்து அடியாழத்தை காட்டவும் அவனது
அர்த்தமற்ற பயம் தெளிகிறது. கடலுக்கும் அடிப்பகுதி உண்டு உள்ளே செல்லச்
செல்ல அதன் ஆழம் அதிகமே தவிர அது ஒன்றும் மாயப் பாதாளம் அல்ல என்கிறான்
ஷோர்க்கா .ஷோர்க்கா சசூக்கின் நாய்க்கு பீம் என்று பெயர் சூட்டுகிறான்
,கூடவே சசூக்கிடம் மிகுதியான தோழமையோடு நடந்து கொள்கிறான்.
நாஸ்தியா அந்தக் குழுவில் ஒரே ஒரு பெண்ணாக இருப்பதால் அவளே முழு நேரமும்
சமையலைக் கவனித்துக் கொள்ள நேர்கிறது .பலவீனமான அவள் மீண்டும்
நோய்வாய்ப்படுகிறாள் ,சசூக் தன் அம்மாவுக்காக வருந்துகிறான்,அக்கம்
பக்கத்தில் அவளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க காரோ லாரியோ அல்லது
குதிரை வண்டியோ கிடைக்காமல் துக்கப் படும் அவனது தந்தை இப்படியே
வைத்தியம் இன்றி நாட்கள் கடந்தால் நாஸ்தியா இறந்து போக நேரிடும் என்று
கூறி வேதனைப் படுகிறார்.. ஆனாலும் அம்மா என்ன வயதானவளா இத்தனை சீக்கிரம்
இறந்து போக ...இல்லவே இல்லை அவள் இன்னும் உயிரோடு இருப்பாள் என்று
தனக்குத் தானே நம்பிக்கை கொள்கிறான் சிறுவன் சசூக்.
பெரியவர்களின் அவநம்பிக்கைகள் சிறுவர்களை அத்தனை சீக்கிரம் விழுங்கி
விடுவதில்லை என்றே நாம் கதையின் இவ்விடத்தில் நம்ப வேண்டி இருக்கிறது.
போலவே தனது அம்மா நாஸ்தியாவை சற்றுத் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு
கொண்டு செல்ல வானியல் விஞ்ஞானியின் சிவப்பு நிறக் காரை கேட்டுப்
பார்க்கலாம் என்று சசூக் தன் தந்தையிடத்து நம்பிக்கையூட்டுகையில்
சிறுவனுக்கு கார் மீது இருக்கும் அபிரிமிதமான ஆர்வத்தைப் புரிந்து கொள்ள
முடிகிறது ,தன் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதாவது தான்
திருப்தியாக அந்தக் காரில் அமர்ந்து பயணிக்க முடியுமா என அவன்
ஏங்குகிறான். ஆன்யாவின் அம்மா அழுக்கான மீனவரான சசூக்கின் அப்பாவைப்
பார்த்து அருவருத்து காரில் அவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என
தன் கணவனிடத்தில் மிகக் கடுமையாக கோபித்துக் கொண்ட போதும் கூட
மனிதாபிமானம் மிக்க அந்த வானியல் விஞ்ஞானி இந்த எளிய மீனவத் தந்தையின்
உணர்வுகளை மதித்து அவன் மனைவியை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பிக்க
உதவுகிறார்.
இந்த கதையில் ஷோர்க்கா மற்றும் இந்த வானியல் விஞ்ஞானி ,குழுத் தலைவர்
இவான் தனீலொவிச் ,கடற்கரை பாதுகாப்பு பணியில் இருக்கும் படை வீரர்கள்
ஹாகிம் போன்றோர் ஓரளவுக்கு சிருவர்களிடத்து பரிவுள்ளவர்கலாக அவர்களை
அவர்கள் போக்கில் அனுசரித்து புரிந்து கொண்டு பதில் அளிப்பவர்களாக வந்து
போகின்றனர்..
இவான் தனீலொவிச் நாஸ்தியாவை மருத்துவமனையில் சேர்த்த பின் சிறுவன் சசூக்
மனம் வாடக் கூடாது என்பதற்காக அவனை தாங்கள் இருந்த வீட்டுக்கு
காவல்வீரனாக விளையாட்டாய் நியமிக்கிறார். வெறுமே ஒரு சிறுவனை
அரவணைக்கும் முயற்சி தான் இது ,ஆனாலும் சிறுவன் சசூக் அதையே தனக்கிட்ட
பொறுப்பான கட்டளையாக ஏற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று
திரும்பி வரும் வரை தான் எங்கேயும் விளையாடக் கூட போகாமல் தன் பொறுப்பை
உணர்ந்து அதை கச்சிதமாக நிறைவேற்றுகிறான்,திரும்பி வரும் மீனவர்கள் அவனது
பொறுப்பான தன்மையைக் கண்டு பாராட்டுகிறார்கள், இந்தப் பாராட்டுதலை சசூக்
மிக விரும்புகிறான். தாங்கள் மிகப் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள
வேண்டும் என்பதில் சிறுவர்களுக்கு எப்போதும் விருப்பமே .
ஆன்யாவின் அம்மா தன் மகள் சிறுவன் சசூக்குடன் நட்பாவதில் மிகவும்
அருவருப்படைகிறாள்,அவளுக்கு எங்கே இந்தச் அழுக்கான மீனவச் சிறுவனிடத்தில்
இருந்து தேவையற்று தன் மகளுக்கு ஏதாவது நோய் தொற்றிக் கொள்ளுமோ என்ற
பயம் ,அதனால் அவள் சசூக்கை வெறுக்கிறாள்,ஆன்யாவையும் அவனோடு சேராதே என்று
கண்டிக்கிறாள். முடிவாக சிறுவன் சசூக்கின் அம்மாவை தங்களது காரில்
ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் போனதில் அந்தப் பெண்மணி மிகுந்த
கோபமடைந்து தன் கணவரோடு சண்டையிட்டு அந்தக் கிராமத்தில் தங்களது
விடுமுறையை உடனே முடித்துக் கொண்டு வீட்டைக் காலி செய்து கொண்டு
நகரத்துக்கு கிளம்பச் செய்து விடுகிறாள்.
குழந்தைகளுக்கு பெரியவர்களிடத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் எப்போதும்
புரிவதே இல்லை
சசூக் ஆன்யாவின் அழகான அம்மாவின் மனதில் தன் போன்ற சிறுவர்களிடத்தில் என்
இத்தனை வெறுப்பு என்று மிக்க வேதனை அடைகிறான்,அந்தப் பெண்மணி ஒவ்வொரு
முறையும் தன்னை ஏளனமாக வெறுப்பாக அவமதித்துப் பேசும் போதும் அவனுக்கு
காதுகள் சூடாக்கி சிவக்கின்றன. மிகுதியான கோபத்தில் அந்த அழகான முகத்தில்
சேற்றை,சேற்றுக் கட்டிகளை வீசி எறிந்தால் என்ன எனும் அளவுக்கு கோபம்
கொள்கிறான் அவன் .ஆனாலும் அப்படி எல்லாம் செய்து விடவில்லை அவன்.
நாஸ்தியா மருத்துவமனைக்குப் போனதும் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்
மீனவன் இக்நாத் ,இந்த இக்நாத் ஒரு முறை கடல் பாலத்தில் மதிய உணவுக்கு
மீன் எடுக்கச் செல்கையில் சக மீனவர்கள் அவனை ஏதோ கிண்டல் செய்ய கோபத்தில்
சசூக்கின் நாய் பீம் ஐ காலால் ஓங்கி உதைக்க அது கடலுக்குள் விழுந்து
இறந்து விடுகிறது ,இந்தச் செயல் அங்கிருந்த எல்லோராலும் வெறுக்கப்
படுகிறது .மேலும் அவன் உணவுப் பொருட்களை திருடும் தன் முறையற்ற
செய்கையால் குழுவில் இருந்து நீக்கப் படுகிறான்,
இக்நாத் மட்டும் அல்ல ,ஆன்யாவின் அம்மா போன்ற வயதில் பெரிய மனிதர்கள் ஏன்
இப்படி இருக்கிறார்கள் என்று சசூக் குழம்பிப் போகிறான்.
//இத்தனை சிறிய வயதில் இந்தச் சிறுவனுக்கு நீதியிடத்தில் நம்பிக்கை
இழக்கும் நிலை வர வேண்டாம் //
என கதையில் ஓரிடத்தில் ஆன்யாவின் அப்பா கூறுகிறார் தன் சிடு
சிடுமனைவியிடம். சசூக் அவர்களது சிவப்பு நிறக் காரில் பயணிக்க
விரும்புகிறான்,ஆனால் அந்தப் பெண்மணி அதை கடுமையாக
ஆட்சேபிக்கிறாள்,ஆனாலும் ஒரு எளிய சிறுவனின் எளிய இந்த ஏக்கத்தை
நிறைவேற்றுவதில் நமக்கு ஒரு கெடுதலும் இல்லை என்பதாக அந்த மனிதர் இவ்வாறு
கூறுகிறார். நிஜம் தான் சிறுவர்களிடத்து நீதியின் மேலான நம்பிக்கையை
ஏற்படுத்த சிற்சில நல்ல மனிதர்களாவது இருந்தே ஆக வேண்டும் ,இல்லா
விட்டால் சிறுவர்களிடத்து துஷ்டத்தனம் தான் வளர்த்தெடுக்க படும்.
ஆன்யா அந்தக் கிராமத்தை விட்டு கிளம்புகையில் அவளுக்கு தனது பரிசாக
ஷோர்க்கா மிக்க அன்புடன் தனக்கு அளித்த கடலில் மிதக்க உதவும் வலை பதித்த
கண்ணாடிக் கோளத்தை சசூக் அவளுக்கு அளிக்கிறான். ஆனால் ஆன்யாவின் பொல்லாத
அம்மா அதை அவளிடம் இருந்து பிடுங்கி வீசி எறிகிறாள் .உடைந்து
சில்லுகளாகிப் போன அந்தக் கண்ணாடிக் கோளத்தைப் போலவே சிறுவன் சசூக்கின்
மனமும் உடைந்து சிதறுகிறது அப்போது .
முடிவாக அவன் சீக்கிரம் தான் பெரியவன் ஆக வேண்டும் என விரும்புகிறான்
,அப்போது தான் இந்த உலகை இதன் பெரிய மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியும்
என அவன் நம்புகிறான்.
//இந்த உலகில் சிறுவர்கள் எதையும் தெரிந்து கொள்ள வேண்டாம் என
பெரியவர்கள் விரும்புகிறார்கள்,பெரியவர்களான தங்களுக்குத் தான் இந்த
உலகின் அனேக விசயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதாக அவர்கள்
நினைக்கிறார்கள் //
என்பதே சிறுவனான சசூக்கின் நம்பிக்கை.
கதையின் முடிவில் நாம் நமது குழந்தைப் பருவத்தை மீண்டும் தரிசித்த
நிறைவு கிடைக்கிறது .
குழந்தைமையின் எளிமையை ,அழகை விவரிக்கும் மிகச் சிறிய நாவல் இது .
யூமாவின் மொழிபெயர்ப்பும் எளிமையான நடை,வாசிக்க சரளமாயிருக்கிறது.
விருப்பமிருப்போர் வாசியுங்கள்.






