நத்தையின் அழுகை - நூல் மதிப்புரை
- Details
- Published on Friday, 17 February 2012 16:11
- Written by Super User
தம்மால் நேரடியாக அறிப்பட்ட விடயங்களை மட்டும் பாடு பொருளாகக் கொண்ட த.ரெ.தமிழ்மணியின் 'நத்தையின் அழுகை' நூலின் ஒரிரு கவிதை வரிகளை மாணவன் - சிற்றிதழ் வழியே பார்தததும் உடனே அதை படிக்க வேண்டும் என்று ஆவல் உண்டானது.
காடழித்த வீட்டு கண்ணாடியைக்
கொத்தும் குருவிகள் -
வாழ்விட மீட்புப் போராட்டம்.,
இரவிலும் தாகமா
இளநீர் அருந்த?
மரநாய்.,
தேன்சிட்டா? வண்ணத்தியா?
வலிக்காம தேனெடுப்பது யார்?
பூக்களின் பட்டி மன்றம்.,
காட்டிக் கொடுத்ததில்லை
தன் இனத்தை
ஆட்காட்டிப் பறவை.,
தூண்டிலில் ஆமை
கலுக்கென்று சிரித்தது
மீன்கொத்தி
என எந்த இடத்திலும் இயற்கையியல் பாடங்கள் சிதைவுறா இலக்கியமாக, பகுத்தறிவு முரண்படாது, எழுத்தின் வடிவில் காட்சிப் படிமங்களை உருவாக்கும் இச்சிறுநூல் பல்வேறு உயிரினங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், பண்பாட்டுச் சுவடுகள் குறித்து மூவரிச் சொற்றொடர்களாக அர்த்த புஷ்டியுடன் திகழ்கிறது.
மேலே இரட்டைவால் குருவி
கீழே ஓணான்
கம்பீரமாய் பறக்கும் ஈசல்
என இயற்கை வரலாற்றை எவ்வளவு பொருத்தப்பாடாகத் தருகிறார் ஆசிரியர்,
தட்டான் பிடிச்சா
கண்வலி வரும்
சிற்றுயிர் காக்கும் தாய்மணம்
என கிராம்ப்புற சில நம்பிக்கைகளையும் அதனால் விளையும் உண்மை குறித்தும் நயம்பட விளக்குவது மிக நன்று.
தேர் எதற்கு?
சிரித்தது முல்லை
கிளுவையில் சாய்ந்தபடி...
என பொருள் நுகர்வுப் பண்பாட்டையும் பழங்கால உயர்வு நவிற்சியையும் பொருத்தமாகச் சாடுவது போற்றக் தக்கது, மேலும் எத்தனையோ அர்த்தங்களைத் தரும்
விவசாயக்கடன்
கைரேகை
ஆங்கிலப் படிவம்
அரபு நாட்டுக்கும் திருப்பூருக்கும்
பட்டினியோடு அனுப்பி வைத்தது
சோறுடைத்த சோழநாடு...?
இப்போது வந்த நாரை
குளத்தில் மீன் தேடவில்லை
குளத்தையே தேடுகிறது
போன்ற நூற்றுக்கணக்கான சமூகக் சிந்தனைகளையும் உள்ளடக்கி 32 பக்கங்களுக்குள் கொடுத்த தமிழமணி குறித்து அதன் பின்னுரையில் பாவலர் காசி ஆனந்தன் குறிப்பிடுவது மிகச் சரியே;
தமிழ் மணியின் இலக்கியம்
தமிழ்மண்ணில் விடுதலை இலக்கியமே.,
விடுதலை என்பது இயற்கை விதி
எப்படிப் பார்த்தாலும் தமிழ்மணி தமிழ்தனி
கூர்மையாக இயற்கையைப் இந்நூல் புரிந்து கொண்டிருந்தாலும் குறிப்பாக சில பெயர் பிழைகள், ஒரிரு கருத்துப் பிழைகள், சில பழைமை வாத நம்பிக்கைகள் ஆகியவை தவிர்த்துப் பார்த்தால் பன்னாட்டு அய்க்கூ கவிதைப் போட்டிக்கு தெரிவு செய்யத் தகுதியுடையவை இக்கவிதைகள் என்பதை வழக்கப்படி காலம் கடந்தாவது தமிழநாடு ஒப்புக் கொள்ளும். நத்தையின் அழுகை - நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க; 9842011344.
குறிப்பு; எமது பாராட்டுக்களின் அடையாளமாக எமது வெளியீடுகளில் ஒன்றான இயற்கை;செய்திகள், சிந்தனைகள் - பிரதி ஒன்று த.ரெ.தமிழ்மணிக்கு பரிசாகத் தரப்படுகிறது.
ச.முகமது அலி






