தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்கள்
- Details
- Published on Friday, 27 January 2012 02:02
- Written by Super User
இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. நமது காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், ஒநாய், குள்ளநரி போன்ற விலங்கினஙளும், இருவாச்சி, பிணம் தின்னிக் கழுகு, மரகதப் புறா (தமிழகத்தின் மாநில பறவை), பூஞ்சிட்டு, பலவித குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள், சிரிப்பான்கள், வானம்பாடிகள் உள்ளிட்ட பறவைகளும், பலவித பூச்சிகள், நீர்நிலைகள், ஏரி, ஆறு,குளம் என பல்வேறு சூழலமைப்புகள் நம்மிடம் உள்ளன.
சிவிங்கி புலி, மூங்கணத்தான், கானமயில் போன்ற பல காட்டுயிர்களை நமது காடழிப்பால் இழந்துள்ளோம். இருப்பதை காக்க காட்டுயிர் சார்ந்த அறிவியல்பூர்வமான விழிப்புணர்வை மேம்படுத்துவது மிகமிக அவசியம். நமது தமிழகத்தில் 60 குடும்பங்களில் 360 வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. நமது நீர்நிலைகளில் பறவைகளை பாதுகாக்க 13 பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக அரசு அறிவித்து பாதுகாத்து வருகிறது.
கண்ணுக்கும், மனதுக்கும் இதமாக உள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கு அடுத்து, மனித மனதை கவர்வது பறவைகளே. அதிகாலையில் ரீங்கார இசைக்கு சொந்தமான வானம்பாடிகள், அழகிய வண்ணத்துடன் மரங்களுக்கு இலவச வைத்தியராக திகழும் மரங்கொத்திகள், காடுகளை சுத்தப்படுத்திவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பிணம் தின்னிக் கழுகுகள், தமிழக வனங்களுக்கு அழகு சேர்க்கும் இருவாசிகள், பூச்சியுண்ணிகளாக விளங்கும் குக்குறுவான்கள், கதிர்க் குருவிகள், கொண்டைக் குருவிகள், பலவேறு நீர்ப்பறவைகள் என இயந்திரத்தனமான மனித வாழ்க்கைக்கு நடுவில் நம் மனம் கவர்வது பறவைகள் தான்.
ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நம் நீர்நிலைகளை நாடி லடசக்கணக்கான பறவைகள் வந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி செல்கின்றன. நாம் சாதாரணமாக காணும் வெள்ளைக் கொக்கு, நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் நமக்கே உரித்தான பறவைகள் ஆகும். இதில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடியதும், நீண்ட தூரமான சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், மியன்மர், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பலவித வாத்துக்கள், உள்ளான்கள், ஆலாக்கள் என அனைத்தும் அடங்கும்.
அந்த வகையில், நம் தமிழகத்தில் உள்ள சரணாலயங்கள், அதில் விருந்தாளிகளாக வரும் பறவைகள் குறித்து காண்போம்.
1. பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
2. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
4. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
5. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
6. வடூவூர் பறவைகள் சரணாலயம்
7. சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
8. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
9. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
10. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
11. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
13. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
மேற்கண்ட பறவைகள் சரணாலயங்கள் தவிர, ஏரி, குளங்கள், ஆறுகள், நீர்நிலைகளிலும் பலவித நீர்ப்பறவைகள் தங்களது வாழிடமாக கொண்டு வாழ்கின்றன. நம் பகுதியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது நிலத்தடி நீருக்கு எப்படி இன்றியமையாத்தோ, அது போலவே பறவைகளுக்கு அதி முக்கியத்துவம் வாயந்தது ஆகும்.
பறவைகளை பாதுகாக்க தொடங்கினால், அதற்கு ஆதாரமாக உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியமாகிறது. நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டால் நிலத்தடி நீர் அதிகரிக்க துவங்கும், ஒரு அழகிய இயற்கையான சூழலமைவு கிடைக்கும், செடி, கொடி, தாவரங்கள் செழித்து வளரும், குடிநீர் பிரச்னை என்பது அறவே இருக்காது என்பதுடன் அப்பகுதி, நீங்கள் பல ஆயிரம் செலவு செய்து சுற்றுலா செல்லும் பகுதி போல மாறும் என்பது உறுதி.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
தமிழக, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 ச.கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள பழவேற்காடு சரணாலயத்தில், 153 ச.கி.மீ., பரப்பளவு தமிழக எல்லைக்குட்பட்டதாகும். 800 முதல் 2000 மி.மீ., வரை ஆண்டுதோறும் மழை வளம் பெறும் பழவேற்காட்டின் சூழலமைப்பு பூநாரைகளுக்கு ஏற்ற புகலிடமாக உள்ளது. ஒரிசாவில் அமைந்துள்ள சில்கா ஏரி, குசராத்திலுள்ள ரன-கடச் பகுதிக்கு அடுத்து நமது பழவேற்காட்டில் ஆண்டுதோறும் பூநாரைகள் அதிகளவில் வருகை புரிகின்றன.
பூநாரைகளோடு, உள்ளான்கள், பட்டைத் தலை வாத்து தவிர பலவித வாத்து வகைகள், பவழக்காலிகள், ஆலாக்கள், நெட்டைக் காலிகள் என ஆயிரக்கணக்கில் வலசை வந்து செல்கின்றன. இவை தவிர, கொக்குகள், நாரைகள், கரண்டிவாயன்கள் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகை புரிகின்றன. வாழிட பறவைகளான ஆந்தைகள், பச்சை பஞ்சுருட்டான்கள், மீன் கொத்திகள், பருந்துகள், வல்லூறுகள், கதிர்க்குருவிகள், குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள் என நாம் காணும் இடம் எங்கும் பறவைகளாக இருந்து நம் மனதையும், கவனத்தையும் கவர்கின்றன.
160 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருவது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ., தொலைவிலும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிபரவரி வரையிலான மாதங்கள் சரணாலயத்தை காண ஏற்ற நாடகளாகும்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
77.85 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள வெள்ளோட்டில், உள்ளூர் வலசை பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகளை ஆண்டின் கடைசி நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் பெருந்திரளாக காணலாம்.
கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
சென்னையில் இருந்து 86 கி.மீ., தொலைவில் மதுராந்தகம், செங்கல்பட்டிற்கு அருகில் 61.21 ஏக்கர் பரப்பளவில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் கரிக்கிலியை நாடி வரும் பறவைகளை மார்ச், ஏப்ரல் வரை கண்டு ரசிக்கலாம்.
நீண்ட தூரம் பயணம் செய்யும் பலவித வாத்துக்கள், உப்புக் கொத்திகளுக்கு ஏற்ற இடமாக கரிக்கிலியின் ஏரியும், அதனுள் மரங்களும் அமைந்துள்ளன. ஊசிவால் வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து போன்ற வாத்தினங்களும், மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, சின்னக் கொக்கு போன்ற கொக்கினங்களையும் காணலாம்.
வாழிட பறவைகளான தேன் சிட்டு, ஆந்தைகள், குக்குறுவான்கள், மீன்கொத்திகள், பஞ்சுருட்டான்கள், கருங்கரிச்சான்கள் போன்றவற்றை காணலாம்.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பளவில் பல வண்ண பறவைகளுடன் மனதை கவரும் வண்ணம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 50.கி.மீட்டரும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளது. 321 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சரணாலயத்திற்கு அருகாமை நகராக அரியலூர் 35 கி.மீ., தொலைவில் உள்ளது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரத் தொடங்கும் பறவைகள், இங்கு வெப்பம் அதிகமாக வரத் தொடங்கும் மே மாதத்தில் திரும்பத் தொடங்குகின்றன. ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ., வரை மழை பொழியும் இடமாக கரைவெட்டி அமைந்துள்ளது.
நீர்ப் பறவைகள் 90-ம், வாழிடப் பறவைகள் சற்றேறக் குறைய 100-ம், ஒட்டு மொத்தமாக 190-ம் பறவைகள் வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 வகையான வாத்தினங்களும் அடங்கும். பட்டை தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பான், பொரி வல்லூறு, ஆளிப் பருந்து, சேற்றுப் பருந்து, பூனைப் பருந்து போன்ற பறவைகளை இங்கு காணலாம்.
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஒராண்டில் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. பறவை பார்போருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் டிசம்பர், சனவரி ஏற்ற மாதங்கள் ஆகும்.
உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
திருவாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1999-ம் ஆண்டு சரணாலயமாக் அறிவிக்கப்பட்டது திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ., தொலைவிலும் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீரே, உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆதாரமாக உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவைகளின் குரலொலியும், வண்ணங்களும் கலந்து ரம்மியமாக காட்சி தரும். கோடையின் துவக்கமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படும்.
சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வக்கா (அ) இராக் கொக்கு போன்ற பறவைகள் அதிகளவில் கூடுகின்றன. நத்தை குத்தி நாரை அதிகளவில் வந்து செல்கின்றன. ஒராண்டில் அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ஏற்ற காலமாகும்.
வடுவூர் பறவைகள் சரணாலயம்
1999-ம் ஆண்டு சூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்த வடுவூர், 40 விதமான நீர்ப் பறவைகளின் வரவால் காண்போரை கவர்ந்திழுக்கிறது, நவம்பர் மாத வாக்கில் 20,000 பறவைகள் இங்கு வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் துவங்கி டிசம்பர், சனவரி வரையிலான காலத்தில் பறவைகள் இங்கு வந்து செல்லும்.
பறவைகளை காண நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஏற்ற காலமாகும். வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், நாரை என உள்ளூர் பறவைகள் ஆண்டு தோறும் இங்கு இனப் பெருக்கம் செய்கின்றன. கிளுவைகள், ஊசிவால் வாத்து உள்ளிட்ட பல்வேறு வாத்தினங்கள் இங்கு வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுக்காவில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம், 1989-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, குருட்டுக் கொக்கு உள்ளிட்ட கொக்கினங்களையும், பல்வேறு நாரை இனங்களையும் இங்கு காணலாம்.
பறவைகளை காண சனவரி மாதம் ஏற்ற காலமாகும். சித்திரன்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் சாயல்குடியும், 45 கி.மீ., தொலைவில் இராமநாதபுரமும் அமைந்துள்ளது.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளம், 1994-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அழகு சேர்க்கிறது. கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில், பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைந்து முட்டையிட்டு, குஞ்சுகளை பாதுகாப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. குசராத்தில் உள்ள ரன்-கடச் பகுதியில் லட்சக்கணக்கில் இனப் பெருக்கம் செய்யும் பூ நாரைகளை கண்ட பறவையியல் அறிஞர் சாலிம் அலி அவ்விடத்தை ஆசியாவின் மிகப் பெரிய பூ நாரைகள் பகுதியாக அறிவித்தார். நம் பருவநிலையை விரும்பி ஆண்டுதோறும் டிசம்பர், சனவரி மாதங்களில் தமிழத்தை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் கூந்தன் குளம் தவிர, பழவேற்காடு, கோடியக்கரை பறவைகள் சரணாலயங்களுக்கும் வருகை தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டை தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிவது கணக்கிடப்பட்டுள்ளது.
கூந்தன் குளம் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயத்தை சார்ந்து இருப்பது, பறவைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பறவைகளுக்கு தேவையான உணவு விவசாய நிலங்களில் இருந்து கிடைப்பது போல, விவசாய நிலங்களுக்கு தேவையான இயறகை உரம் பறவைகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கிறது.
ஒராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத் 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அக்டோபர் இறுதியில் கூந்தன் குளம் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல், மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன. பறவைகளை காண சனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும்.
மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்-கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம், தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாலயமாகும். 593.06 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998-ம் ஆண்டு முறைப்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
கொக்குகள், கூழைக்கடா, நத்தை குத்தி நாரைகள், வெள்ளை அரிவாள் மூக்கன்கள் உட்பட வாழிட பறவைகளும் இங்கு கூடுகிறது. சாயல்குடியில் இருந்து 12 கி.மீட்டரும், கடலாடியில் இருந்து 15 கி.மீட்டரும், இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ., தொலைவிலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
கஞ்சிரன் குளம் பறவைகள் சரணாலயம்
170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன் குளம், 1989-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 66.66 ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இச்சரணாலயத்தில் மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, பெரிய கொக்கு என பலவித பறவை இனங்கள் ஆண்டு தோறும் குளிர் காலங்களில் இங்கு வந்து செல்கின்றன.
முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ., தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ., தொலைவிலும் கஞ்சிரன் குளம் அமைந்துள்ளது.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பளவில் பச்சை பட்டு போர்த்தியபடி இயற்கை எழிலுடன் காணப்படும் வேட்டங்குடி, 1977-ம் ஆண்டு சூன் மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. காரைகுடியில் இருந்து 32 கி.மீ., தொலைவில் வேட்டங்குடி அமைந்துள்ளது.
திருப்பத்தூர் தாலூக்காவில் உள்ள வேட்டங்குடியில், நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, பாம்புத் தாரா, கரண்டி வாயன் போன்ற பறவைகள் உள்ளூர் வலசை பறவைகளாக இங்கு வந்து செல்கின்றன. ஆந்தை, மீன் கொத்திகள், கதிர்க் குருவிகள், கொண்டைக் குருவிகள், சிலம்பன்கள் போன்ற பல்வேறு வாழிட பறவைகளும் வேட்டங்குடிக்கு அழகு சேர்க்கின்றன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களின் அரவணைப்பில், பாதுகாப்பில் 250 ஆண்டு காலமாக பறவைகள் வாழிடமாக இருந்து வருகிறது. தற்போது அதற்கும் ஆபத்து மனிதர் வடிவில் உருவெடுத்துள்ளது. வேடந்தாங்கலை சுற்றிலும் மனை வணிகம் (Real Estate) காரணமாக விவசாய நிலங்கள் குடியிருப்புகளாகவும், சொகுசு மாளிகைகளாகவும், வணிக நிறுவனங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் வேடந்தாங்கல என்பது பழங்கதையாகி விடும்.
சென்னையில் இருந்து 75 கி.மீ., தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேடந்தாங்கலில் இருந்து கிழக்கு பக்கமாக சற்றேறக் குறைய 7 கி.மீ., தொலைவில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
அக்டோபர் மாத மத்திய வாக்கில் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் மாத இறுதியில் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன. ஆண்டின் அதிகபட்ச அளவாக 40,000 முதல் 50,000 வரையிலான பறவைகளை சனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காண முடியும்.
115 விதமான பறவைகள் வருகை புரியும் இங்கு, தமிழ்ச் சங்க இலக்கியங்களில் அதிகளவில் பாடப் பெற்ற 'அன்றில்' என்ற அழகிய பறவை இனம், இன்று 'அரிவாள் மூக்கன்' என்று பறவையியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. வேடந்தாங்கலில் மூன்று விதமான அரிவாள் மூக்கன்களை காணலாம். 1.வெள்ளை அரிவாள் மூக்கன், 2.மிளிர் உடல் அரிவாள் மூக்கன், 3.கருப்பு அரிவாள் மூக்கன் என்ற அழகிய பறவைகளை வேடந்தாங்கல் ஏரியில் காணலாம். நீண்டு முன் வளைந்த அலகே காரணப் பெயராக அரிவாள் மூக்கனாக அறியப்படுகிறது.
இவை தவிர, கொக்குகள், நாரைகள், ஊசிவால் வாத்து, நீர்க் கோழி, புள்ளி மூக்கு வாத்து போன்ற வாத்தினங்களையும் மற்ற வாழிட பறவைகளையும் வேடந்தாங்கலில் காணலாம். மீன் கொத்திகள், கொண்டலாத்தி (அ) மண் கொத்தி, மரங்கொத்திகள், இரவாடிகளான ஆந்தைகள், ஆள்காட்டிகள்,கருஞ் சிட்டு, கருப்பு வெள்ளை சிட்டு, கதிர் குருவிகள், வால் காக்கை, சின்னான்கள், குயில், குக்குறுவான்கள் போன்ற பல்வேறு இனங்கள் வாழிட பறவைகளாக வேடந்தாங்கலில் காணலாம்.
1960-களில் உள்ளான்கள், ஆற்று ஆலாக்கள், பருந்து வகைகள் அதிகளவில் காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் சிலவற்றையே கண்டதாக சூழலியலாளரும், ஒளிப்படக் கலைஞருமான மா.கிருஷ்ணன் தனது 'பறவைகளும், வேடந்தாங்கலும்' நூலில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக உள்ளான்கள், ஆலாக்கள், பருந்துகளை கண்டதாக எந்த பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேடந்தாங்கலில் கூழைகடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன.
சூழலமைவில் சில பறவைகளின் வரத்து நின்று விடுவதும், சில பறவைகளின் வரவு அதிகரிப்பதற்குண்டான ஆய்வுகள் காலத்தின் அவசியம்.
ஆண்டுதோறும் 1200 மி.மீ., மழை பெறும் வேடந்தாங்கல், நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பறவைகளை காண ஏற்ற காலங்களாகும். தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
Point Colimer என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயம் தமிழகத்தின் கடைகோடியில் இயற்கையான முறையில் அமைந்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ., தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவிலும் கோடியக்கரை அமைந்துள்ளது.
சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டை தலை வாத்து, குசராத் பகுதியில் இருந்து வரும் அழகிய எழிலுடன் காட்சி தரும் பூ நாரைகள் தவிர செண்டு வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன் உள்ளிட்ட வாத்து வகைகளும், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை உள்ளிட்ட நாரை வகைகளும், சின்ன கொக்கு, பெரிய கொக்கு போன்ற கொக்கினங்களும், கூழைகடாக்கள் போன்ற பல்வேறு பறவை இனங்களும் இங்கு வருகை புரிகின்றன.
இறுதியாக ..
தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் தவிர, ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்கள் என நீர் நிரம்பிய பகுதிகளில் நீர்ப்பறவைகளான தாழை இலை கோழி, தண்ணீர்க் கோழி, நீளவால் கோழி போன்ற பல்வேறு நீர்ப்பறவைகளுடன், கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள் பல் வண்ணங்களில் பறவைகள் நம்முடன் இணைந்தே வாழ்கின்றன.
நமது வாழ்வாதாரத்திற்கு நீர் எவ்வாறு அவசியமோ? அது போலவே பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம்!! பறவைகளை காப்போம்!!!
துணை நின்ற நூல்கள்
தமிழ்நாடு வனத்துறையின் இணையத்தளம்.
பறவைகளும், வேடந்தாங்லும் - மா.கிருஷ்ணன் - பதிப்பாசிரியர் - பெருமாள் முருகன் - காலச்சுவடு வெளியீடு.
தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர்.சு.ரத்னம் - மெய்யப்பன் தமிழாய்வகம்.
சா.செயக்குமார்,
விரிவுரையாளர்,
அ.வ.அ.கல்லூரி, (தன்னாட்சி)
மயிலாடுதுறை.
ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.






