பத்துப் பாட்டில் நீர்ப்பறவைகள்
- Details
- Published on Sunday, 20 November 2011 14:26
- Written by Super User
கிடைத்தற்க்கு அரிய பல செய்திகள் பத்துப்பாட்டில் புதைந்து கிடக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது பறவைகள் பற்றிய செய்திகள்.
புலவர்கள், இயல்பாகவே பறவை இனங்களைக் கண்டு பதிவு செய்திருப்பது, இன்றைய பறவையியல் அறிஞர்களின் ஆய்வுப் போக்கோடு ஒத்திருப்பது வியப்புக்குரியதாகும். அவர்கள் குறிப்பிடும் பறவைகளுள் நீர்ப்பறவைகளான கொக்கு, நாரை, குருகு, கம்புட் கோழி ஆகியவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
கொக்கு மற்றும் செவ்வரி நாரை
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெல்வாயுங் கவரக்
கயலறல் எதிரக்க... (நெடு. 15-18)
அதாவது பசுமையான கால்களையும் மென்மையான சிறகுகளையும் உடைய கொக்கின் கூட்டங்களும் செவ்வரி நாரைகளும் கரிய வண்டல் மண்ணோடு கூடிய சேறுபடிந்த ஈர நிலத்தின் மேற்பரப்பில், வெண்மணலில் எங்கும் நின்று கொண்டிருந்தன. மழையால் வருத்தமுற்ற அவை, மழை சிறிது விட்டவுடன் இரைதேட எழுந்தன. வெள்ளநீர் வேகமாக ஓடும்போது, அதனுடன் அடித்துச் செல்லப்பட்டு, அந்நீர் அற்று ஒழுகும்போது, அதில் எதிர்த்து வரும் கயல் மீனகளைக் கொக்குகளும், செவ்வரி நாரைகளும் உணவாகக் கவர்ந்த தின்றதாகக் கூறப்படுகிறது.
கொக்கினங்களில் ஒரு வகையான சின்னக்கொக்கின் (Little Egret) கால்கள், குறிப்பாக அதன் விரல் பகுதி (Phalienges) பச்சை நிறத்தில் இருக்கும் என்றும் கொக்கினத்தின் இனப்பெருக்க காலங்களில் (Breeding Season) இனப்பெருக்கத் தொகை (Breeding Plumage) காணப்படுவதும் அத்தோகை மென்மையானதாக இருக்கும் எனவும் பறவையியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், கொக்கினத்தோடு நின்று கொண்டிருப்பதாகப் புலவர்கள் சுட்டிக்காட்டியுள்ள செவ்வரி நாரைகளின் (Painted Stork) இறகு பகுதியில் செவ்விய வரிகள் இருப்பதனால் இவற்றை செவ்வரி நாரை எனப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்காலத் தமிழகத்தில் இப்பெயர்கள் வழக்கத்தில் இல்லை. இந்நாரையினை வடதமிழ்நாட்டில் வர்ணநாரை எனவும், தென் தமிழ்நாட்டில் செங்கால் நாரை மற்றும் மஞ்சள் மூக்கு நாரை என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
மேற்கூறிய கொக்கு மற்றும் நாரை இனங்கள் பெருமழை முடியும் வரை காத்திருந்து மழை முடிந்தபின் பாய்ந்து வரும் நீருக்கு எதிராக நின்று அதில் வரும் மீன்களைப் பிடித்து உண்ணும்.
நாரை
பொருநராற்றுப்படையில் நாரையின் செயல்கள் குறித்துக் குறிப்பிடப்படுகின்றது.
அறைக் கரும்பி நரிநெல்லின்
----------------------------------------------------
திறவருந்திய இளநாரை (பொரு. 193-204)
மருத நிலத்தில் அறுத்தல் தொழிலுக்குரிய கரும்பு விளைந்த கழனிகளிடத்தும் அறுத்தலும் அரிதல் தொழிலுக்குரிய நெல் விளைந்த கழனிகளிடத்தும் அறுத்தலும், அரிதலும் ஆகிய உழவருடைய ஆரவார ஒசை மிகுதலால், நாரைகள் தாம் உறையும் அம்மருத நிலத்தைவிட்டு அகன்று நெய்தல், முல்லை ஆகிய நிலங்களுக்குச் செல்லும்.
சுறாமீன் திரியும் கடலின் கண் மேயும் இறாலைத் தின்று, அந்நிலத்துக் கடற்கரையில் உள்ள பூக்களையுடைய புன்னை மரத்தின கிளையில் தங்கும். அங்கு ஓங்கி எழுந்து வீசும் அலையின் ஆரவாரம் கண்டு அஞ்சி எழுந்து குறிஞ்சி நிலத்து இனிய பனையின் மடலிலே சென்று தங்கும்.
இங்குப் பறவைகள் உணவு தேடலின் போது சந்திக்கும் பாதிப்பினைப் புலவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாக நாரை இனங்கள் இறாலை உண்பதில்லை. மீன், தவளை மற்றும் சிறிய பாம்புகளே அவற்றின் உணவு, எனினும் அறுவடையின் பாதிப்பினால் வேறு உணவின்றி இறாலை மாற்று உணவாக (Un Usual Feedings) உண்டிருக்கலாம்.
குருகு மற்றும் யானையங்குருகு
குருகு தம் இனத்தை அழைக்கும் மனையிடத்து மரங்கள் தோறும் பாணர்கள் மீனைத் திருத்துவதாக,
குருகுநரல மனைமரத்தான்
மீன்சீவும் பாண்சேரிய்யாடு (மது. 267,268)
என்று மதுரைக் காஞ்சிக் குறிப்பிடுகிறது, மேலும்,
யானையங் குருகின் சேவலோடு காமர்
(மது. 674)
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது மதுரையின் விடியறகாலைப் பொழுதில் வண்டாழங்குருகின் சேவல்களோடு அன்னத்தின் சேவல்களும் தத்தம் பெண்ணினத்தை அழைக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய தமிழகத்தில் செங்குருகு (), கருங்குருகு (Black Bittern), மற்றும் மஞ்சள் குருகு (Yellow Bittern) ஆகிய மூவகை குருகுகளே உள்ளன. மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள யானையங்குருகு அல்லது அதற்கு உரையாசிரியர்கள் குறிப்பிடும் வண்டாழுங்குருகு என்ற பெயர் வழக்கத்தில் இல்லை. இவை அழிந்து விட்டதா அல்லது பெயர் மாற்றுத்துடன் வாழ்கிறதா என்பது ஆய்விற்குரியது.
கம்புட் கோழி
கம்புட் கோழியின் இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிய மீன்களை முகந்து கொண்டு விலை கூறி விற்பதாக மதுரைக்காஞ்சி
கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
(மது. 254-256)
என்ற அடிகளில் கூறுகின்றது. உரையாசிரியர்கள் சம்பங்கோழி எனக் குறிப்பிடுகின்றனர். கம்பு என்றால் நீர்நிலைப் பகுதி, நீர்நிலைப்பகுதியில் இவ்வகை கோழிகள் வாழ்வதால் இவற்றிற்கு கம்புட் கோழி எனப் பெயர் வந்தது. இக்கோழி இனங்கள் சம்பஞ்செடியை (நீர்ப்புல்) சார்ந்து வாழ்வதால் சம்பங்கோழி எனப் பெயர் பெற்றன. இப்பறவைகள் உணவு தேடுவது, முட்டையிடுவது, தன் குஞ்சுகளைக் காப்பது எனத் தன் வாழ்வின் பெரும் பகுதியை இங்கு தான் கழிக்கின்றன.
கொக்கு மற்றும் நாரையினங்களின் இயல்புகளையும் உணவு முறைகளையும் உற்று நோக்கிப் பதிவு செய்திருப்பது புலவர்களின் நுட்பத்தை உணர்த்துகிறது. புலவர்கள் மற்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடும் யானையங்குருகு (வண்டாழுங் குருகு) பற்றிய ஆய்வு விரிவு செய்யப்பட வேண்டும். நீர்ப்பறவையான கம்புட் கோழியினையும் பத்துப்பாட்டில் பதிவு செய்திருப்பது அவர்களின் பறவையியல் அறிவை வெளிப்படுத்துகிறது.
சா.செயக்குமார்
விரிவுரையாளர்






