இந்தியாவில் காடுகள்
- Details
- Published on Wednesday, 21 December 2011 11:40
- Written by Super User
காடுகள்
2011-யை சர்வதே காடுகள் ஆண்டாக இங்கிலாந்தில் உள்ள தன்னார்வ அமைப்பு அறிவித்து, கடந்த ஒராண்டாக, காடுகளின் தன்மை குறித்தும், காடுகளின் நன்மை குறித்தும், காடுகள் அழிவதால் மனித சமூகம் அடையும் பாதிப்புகள்
குறித்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு முகாம்கள், காடுகள் குறித்த திரைப்படங்கள் திரையிடல், ஒளிப்படக் கண்காட்சி, நூல் வெளியிடல், கருத்தரங்கம், பயிற்சி முகாம்கள் என பல வடிவங்களில் நடத்தப்பட்டன. இவ்வளவு முயற்சிகள் எதற்கு? கடந்த இருநூறு வருடங்களில் மனித சமூகம் தன் பேராசைக்காகவும், மனித சமூகம் கட்டுப்பாடின்றி பெருகுவதாலும் காடுகள் கணக்கு வழக்கின்றி அழிக்கப்பட்டதில் 50% மான காடுகளை நாம் இழந்து விட்டோம். மிச்சம் இருப்பதையாவது காப்பாற்றினால் தான் மனித சமூகம் இந்ந புவியில் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நிலையில் தான் இயற்கையியலாளர்களாலும், சமூக ஆர்வர்களாலும் இந்த முயற்சி முன்னெக்கப்பட்டது.
காடுகள் என்றால் என்ன?
காடுகள் என்பது, வெறும் மரம் சூழ்ந்த பகுதியோ, வெட்டுமரத்திற்க்கு பயன்படுவதோ, வணிக நோக்கத்திற்கோ, நம்முடைய திரைப்படங்களும், இலக்கிய கர்த்தகாக்கள் சொல்வது போல் பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ, நம்மூர் அரசியல்வாதிகள் கூறுவது போல் நாடு காடாக மாறியது என்ற வசனம் போல் அல்ல. பின்னர் எது தான் காடு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
காடு என்பது - பல நூறு வருடங்களாக செழித்து, நெடிதுயர்ந்து, விண்ணைத் தொட்டு வளர்ந்து நிற்கும் மரங்களும், செடி, கொடி, பூக்கும் தாவரங்கள் உள்ளிட்டவைகளும், புலி, யானை, சிறுத்தை, உள்ளிட்ட பெரிய காட்டுயிர்களும், நரி, ஒநாய், புனுகுப் பூனை, தேவாங்கு போன்ற இரவாடிகள், கொறி விலங்களும், இருவாச்சிகள், இரவாடிகளான ஆந்தைகள், கழுகுகள், போன்ற இறைச்சியுண்ணிகளும், மிகச்சிறிய பறவையான பூஞ்சிட்டுகள், புறாக்கள், தேன்சிட்டுகள் உள்ளிட்ட பறவைகளும், நண்டு, ஆமை, தேரை, அட்டை, தவளை போன்ற பூச்சிகள், பறக்கும் வண்டுகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள், நீர்நிலைகள, மலைகள் என அனைத்தும் இணைந்த அற்புத கட்டமைப்பே 'காடு' என்றழைக்கப்படுகிறது.
இந்தியாவில் காடுகள் எத்தனை வகைகளில் காணப்படுகின்றன?
பசுமை மாறா மழைக் காடுகள், வெப்ப மண்டல மழைக்காடுகள், புதர்க் காடுகள், புல்வெளிக் காடுகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள் என பல வகைகளில் காணப்படுகிறது. பூமத்திய ரேகையின் நேர்க் கோட்டில் அமைந்திருக்கும் இந்திய காடுகள் பல்வேறு சிறப்பு உயிரினங்களின் வாழிடமாக அமைந்துள்ளன. உலகின் மூன்று உயிர்க் கோளங்களுள் ஒன்றான நமது மேற்கு தொடர்ச்சி மலைகள் பல சிறப்புகளை பெற்றுள்ளது. உலகின் மொத்த நிலப்பரப்பில் 14% - மாக இருந்து தற்போது 6% மட்டுமே உள்ள மழைக்காடுகளில், உலகின் மொத்த உயிரினங்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் இங்குதான் வாழ்கின்றன என்பது யதார்த்தமான உண்மை.
திறந்தவெளி காடுகளையே விரும்பும் ஆசிய சிங்கங்கள், மரத்தின் உச்சியிலேயே வாழ்வை கழிக்கும் இருவாச்சிகள், 5000 அடி மலை உச்சியில் மகிழவாக வாழ்வை கழிக்கும் சில வண்ணத்துப்பூச்சிகள், தரையிலேயே வாழ்வை முடிக்கும் சில வகை பறவைகள் இப்படி எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு நமது காடுகளே வாழ்வாதாராமாக உள்ளது.
இந்தியாவும், காடுகளும்
ஒரு நாட்டின் வளத்திற்கு 33% நிலப்பரப்பு காடுகள் தேவை. ஆனால், இந்தியாவில் 22% மட்டுமே காடுகள் வளம் உள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6,78,333 ச.கி.மீ., மட்டுமே காடுகள் உள்ளது. இதில் திறந்தவெளிக் காடுகள் - 2,87,769 ச.கி.மீ., பரப்பளவும், அடரத்திக் குறைந்த காடுகள் - 3,39,279 ச.கி.மீ., பரப்பளவும், அடர்த்தி மிகுந்த வனங்கள் என்று - 51,285 ச.கி.மீ., பரப்பளவு மட்டுமே உள்ளது.
சுதந்திரம் வாங்கிய காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை சற்றேறக்குறைய 30 கோடி அளவிலே இருந்தது. இன்று மக்கள் தொகை 120 கோடியை நெருங்கி விட்டது. இந்திய மாநிலங்களில் வனப்பரப்பை அதிகளவில் பெற்றுள்ள மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பில் 76,429 ச.கி.மீ., பரப்பளவை காடுகளாக பெற்றுள்ளது. அதற்கடுத்த இடத்தில் அருணாச்சலம் உள்ளது. அது 68,019 ச.கி.மீ., பரப்பளவை காடுகளாக பெற்றுள்ளது. வனப்பரப்பு மிகவும் குறைந்த மாநிலமாக கடைசி இடத்தில் நமது தலைநகரான தில்லி உள்ளது. தில்லி தன் நிலப்பரப்பில் வெறும் 170 ச.கி.மீ., பரப்பளவை மட்டுமே பெற்றுள்ளது.
இதில் அடர்த்தியான வனப்பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ள வனப்பரப்பும் முழு விவரத்துடன் பின்னிணைப்பு-1ல் தரப்பட்டுள்ளது.)
இதில் தமிழகம் தன் பங்காக எல்லை பிரிவினையின் போது இடுக்கி, திருப்பதி போன்ற வனப்பகுதிகளை இழந்து 17% மட்டுமே பெற்றுள்ளது. இது தன் மொத்த நிலப்பரப்பான 1,30,058 ச.கி.மீட்டரில், 23,643 ச.கி.மீ., சுற்றளவு வனப்பகுதியை மட்டுமே பெற்றுள்ளது. இதில் திறந்த வெளிக் காடுகள் 10,636 ச.கி.மீ., பரப்பளவும், அடர்த்தி குறைந்த காடகள் 9,567 ச.கி.மீ., பரப்பளவும், அடர்த்தியான காடுகள் என வெறும் 2,440 ச.கி.மீ., பரப்பளவு மட்டுமே பெற்று இந்திய அளவில் தமிழகம் 14 வது இடத்தில் உள்ளது. இந்த பாதுகாக்கபட்ட காடுகளில் தான் பல முக்கிய உயிரினங்கள் சற்று நிம்மதியுடன் வாழ்கின்றன.
காடுகளும், பயன்களும்
மனித இனத்திற்கு ஆதாரமாக உள்ள ஆறுகள், ஏரி யாவும் அடர்ந்த வனப்பகுதிகளிலே உற்பத்தியாகி மனித தேவையை நிறைவு செய்கின்றன. இன்று நம் வீட்டில் பயன்படுத்தும் அழகு பொருட்கள், மேசை, நாற்காலி, வாசற்கதவு என நாம் காணும் அனைத்தும் மரங்களில் உருவானவையே. இதெல்லாம் காடுகள் நமக்களிக்கும் செல்வங்கள். செய்திதாள்கள், புத்தகங்கள், பென்சில், காகிதங்கள் இல்லாத உலகை கற்பனை செய்ய இயலாது. இவையெல்லாம் காடுகள் நமக்களிக்கும் கொடைகள். இவற்றை பல தலைமுறைகளுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமே ஒழிய, 'பொன் முட்டையிட்ட வாத்தை, ஒரே அடியாக அறுத்த கதை' ஆக மாறிவிடக் கூடாது. இதை தவிர காடு சார்ந்து கிடைக்கும் தேன், பிசின், இறந்து போன யானைகளின் தந்தங்கள், போன்ற எண்ணிலடங்கா பொருட்கள் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிறகும் மேலாக நமக்கு தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உளவாங்கி கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிசனை நமக்களிக்கிறது. இதை மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. காடுகளை பாதுகாப்பதால் நாம் பல தலைமுறைகளுக்கு பொருளாதார ரீதியாகவும், உயிர் வாழ தேவையானவற்றையும் மனித சமூகம் பெறுகிறது. காடுகளை அழிப்பதால் அப்போது மட்டுமே பலன்கள் கிடைக்கும். நீண்ட கால பலன்கள் கிடைக்காது. அதனால் அடுத்த தலைமுறையினர் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாவர்கள் என்பது உறுதி.
காடுகளும், அதன் அழிவுகளும்
காடுகளின் அழிவு மூன்று விதங்களில் நடைபெறுகிறது. 1.நகரமயமாக்கல், 2. விவசாயம், 3. நீர்நிலைகள் அமைக்க...
1952 ல் இருந்து 1975வரையிலான கால கட்டத்தில் காடுகள் எந்தளவிற்கு அழிக்கப்பட்டது என்பதற்கு கீழ்க்கண்டவைகளே சில உதாரணங்கள்.
மக்கள் தொகை கணக்கு வழக்கற்ற முறையில் பெருகும் நமது இந்திய நாட்டில், விவசாயத்திற்காக மட்டும் 24,33,000 எக்டேர் நிலப்பரப்பு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான உண்மை. மிகப்பெரிய அணைகள், ஏரிகள், நீர்நிலைகள் அமைக்க 4,01,000 எக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் அமைக்க 1,25,000 எக்டேர் காடுகளும், சாலை, மின் ஊர்தி தடம் அமைக்க 55,000 எக்டேர் காடுகளும், இதர பயன்பாட்டிற்காக 3,88,000 எக்டேர் காடுகளும அழிக்கப்பட்டுள்ளன. உலகளவில் ஒரு நாளைக்கு 350 ச.கி.மீ., பரப்பளவு காடுகள் ஏதோவொரு காரணத்திற்காக அழிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. விவசாயம் தொடங்கிய காலத்திற்கு பிறகே 40% மான காடுகள் அழிக்கப்பட்டன. அதிலும் கடந்த 200 ஆண்டுகளில் 75% காடுகள் விவசாயத்திற்காக அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் காணும் காடுகள் அனைத்தும் சிறு, சிறு தீவு போல காட்சியளிக்கின்றன. காடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்விடத்திற்காக ஆக்ரமிப்பது, விளைநிலங்களாக மாற்றுவது, கால்நடைகளை மேய்ப்பது என காடுகள் அழிவு பல விதங்களில் தொடர்கிறது.
இதே வேகத்தில் காடுகள் அழிவது தொடர்ந்தால் அடுத்த 40 - 50 ஆண்டுகளில் காடுகள் என்பதே இல்லாத சூழல் ஏற்படும்.
தமிழகத்தின் காடுகள்
தமிழகம் தன் ஏமாளித்தனத்தினாலும், சரியான அரசியல் தலைமை இல்லாத்தாலும், தமிழன் என்ற உணர்வு இல்லாத்தால் பல வனப்பகுதிகளையும், நகரங்களையும் எல்லை பிரிவினையின் போது இழந்துள்ளோம். இன்று நம்மிடம் எஞ்சியிருக்கின்ற 17% வனப்பகுதியில் தான் 60 குடும்பங்களை சேர்ந்த 360 க்கும் மேற்பட்ட பறவைகளும், புலி, சிறுத்தை, யானை, காட்டெருது, கரடி, கடமான், கேளையாடு, வரையாடு (தமிழகத்தின் மாநில விலங்கு) சருகுமான், வெளிமான், கழுதைப்புலி, மரநாய், நீர்நாய், சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), செந்நாய், மலை அணில், மலைப்பாம்பு பல சிறப்பினங்கள் வாழ்கின்றன.
நமது தமிழகத்தில் 2 உயிர்க் கோளக் காப்பகங்களும், 5 தேசிய பூங்காக்களும் நமது சுற்றுச்சூழலைக் காக்க அமைக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள காட்டுயிர்களை காக்க 8 காட்டுயிர் சரணாலயங்களும், 13 பறவைகள் சரணாலயங்களும், 4 யானை, 3 புலி காப்பிடங்களும் உள்ளன. (முழு விவரம் பின்னிணைப்பு -2 மற்றும் 3, 4 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.)
மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் சிறப்புகளும்
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் 1,60,000 ச.கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளே நமக்கான ஆதாரங்களாகும். தரை மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பலவேறு வகை காடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த உயிர் கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.
1.முட்புதர், வறண்டக் காடுகள் (Tropical Dry Thorn Forest)
2.இலையுதிர்க் காடுகள் (Deciduous Forest)
3.பசுமையான இலையுதிர்க் காடுகள் (Moist Deciduous Forest)
4.அடுக்கு காடுகள் (Gallery or Riverine Forest)
5.சோலை (அல்லது) புல்வெளிக காடுகள் (Shold Grass Land)
போன்ற பல்வேறு வகை காடுகளை கொண்டுள்ளது.
இங்கு 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 179 வகை தவளைகளும், 102 மீன் வகைகளும், 6000 பூச்சியினங்களும், சற்றேறக் குறைய 258 வகையான மெல்லுடலிகளும் இங்கு வாழ்கின்றன. உலகில் எங்கும் காண இயலாத, பெரும் அழிவுக்குள்ளான உயிரினங்கள் 325 வகைகள் நமது மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்கின்றன.
இவை தவிர, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சித்தாறு, மணிமுத்தாறு, குண்டலி, பஞ்சையாறு, பெண்ணாறு, பெரியாறு உள்ளிட்ட ஆறுகள் நமது மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்தே உற்பத்தியாகின்றன. முல்லை பெரியாறு, பரம்பிக் குளம், பிளங்காமடச்சி, சிவாஜி-சாகர் அணை போன்ற 50 முக்கிய அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள் நம் வாழ்வின் ஆதார புள்ளியாக அமைந்துள்ளன.
விவசாயம், மக்கள் குடியேற்றம், தொழிற்சாலைகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மரம் வெட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களால் நமது இயற்கை வளங்கள் அழிவதை நாம் தான் காக்க வேண்டும். 'பசுமை பாலைவனம்' என்றழைக்கப்படுகின்ற தேயிலைத் தோட்டங்களால், நமது மேற்கு தொடர்ச்சி மலை பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளது, இதே நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலை என்ற ஒன்று இல்லாமலே போகும், அந்த நிலையை தவிர்த்திட காடுகளை புதிதாக உருவாக்குவது காலத்தின் அவசியம். சுற்றுச் சூழலுக்கும், பறவைகள், விலங்குகளுக்கும் எந்த பயனும் இன்றி சூழலுக்கு எதிராக இருக்கும் தேயிலைத் தோட்டங்களை தவிர்த்து, காடுகளை வளர்ப்போம்.
இனி....
காடு என்றவுடன்.....
பூமியில் உள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளில் வாழ்கின்றன.
காடுகள் தான் பறவைகள், விலங்குகள், பூச்சிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளன.
காடுகள் பூவுலகின் நுரையீரல்கள் என்றழைக்கப்படுகின்றன.
தென்னிந்தியாவில் பாயும் அனைத்து ந்திகளும் ஏதாவது ஓரு காட்டில் தான் உருவெடுக்கின்றன.
நகரமும், நகர மக்களும் நலமாக வாழ காடுகளே ஆதார புள்ளியாக உள்ளன.
இந்த விஷயங்களே நம் கண் முன்னால் வந்து நிற்க வேண்டும்.
(நன்றி; பூவுலகின் நண்பர்கள்)
பின்னிணைப்பு - 1
இந்திய மாநிலங்களின் வனப்பரப்பு (சதுர கிலோ மீட்டரில்)
ஆந்திரப் பிரதேசம் - 44,419 ச.கி.மீ.,
அருணாச்சலம் - 68,019 ச.க.மீ.,
அசாம் - 27,826 ச.கி.மீ.,
பீகார் - 5,558 ச.கி.மீ.,
சத்தீஸ்கர் - 55,998 ச.கி.மீ.,
தில்லி - 170 ச.கி.மீ.,
கோவா - 2,156 ச.கி.மீ.,
குசராத் - 14,946 ச.கி.மீ.,
அரியானா - 1,517 ச.கி.மீ.,
இமாச்சலப்பிரதேசம் - 14,353 ச.கி.மீ.,
சம்மு - காசுமீர் - 21,267 ச.கி.மீ.,
சார்கண்ட் - 22,716 ச.கி.மீ.,
கர்நாடகம் - 36,449 ச.கி.மீ.,
கேரளா - 15,577 ச.கி.மீ.,
மத்தியபிரதேசம் - 76,429 ச.கி.மீ.,
மகாராட்டிரம் - 46,865 ச.கி.மீ.,
மணிப்பூர் - 17,219 ச.கி.மீ.,
மேகாலயா - 16,839 ச.கி.மீ.,
மிசோராம் - 18,430 ச.கி.மீ.,
நாகலாந்து - 13,669 ச.கி.மீ.,
ஒரிசா - 48,366 ச.கி.மீ.,
பஞ்சாப் - 1,580 ச.கி.மீ.,
இராஜஸ்தான் - 15,826 ச.கி.மீ.,
சிக்கிம் - 3,262 ச.கி.மீ.,
தமிழ்நாடு - 22,643 ச.கி.மீ.,
திரிபுரா - 8,093 ச.கி.மீ.,
உத்திரப்பிரதேசம் - 24,465 ச.கி.மீ.,
மேற்கு வங்காளம் - 12,343 ச.கி.மீ.,
அந்தமான்-நிகோபார் - 6,964 ச.கி.மீ.,
சண்டிகர் - 15 ச.கி.மீ.,
யூனியன் பிரதேசங்கள்
டாரா & நகர் காவாகி - 225 ச.கி.மீ.,
டாமன்-டையூ - 8 ச.கி.மீ.,
லட்சத்தீவு - 22 ச.கி.மீ.,
பாண்டிச்சேரி - 40 ச.கி.மீ.,
பின்னிணைப்பு - 2
தமிழகத்தின் தேசிய பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்கள்
இந்திரா காந்தி தேசிய பூங்கா
முதுமலை தேசிய பூங்கா
முக்குருத்தி தேசிய பூங்கா
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா
கிண்டி தேசிய பூங்கா
சிறீவில்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம்
இந்திரா காந்தி சரணாலயம்
களக்காடு சரணாலயம்
முண்டந்துறை சரணாலயம்
கன்னியாகுமரி புலி சரணாலயம்
முதுமலை சரணாலயம்
சத்தியமங்கலம் சரணாலயம்
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
பின்னிணைப்பு 3
யானை, புலி காப்பிடங்கள்
நீலகிரி, கோயம்புத்தூர்,ஆனைமலை, சிறீவில்லிபுத்தூர் - யானை காப்பிடங்கள்
களக்காடு முண்டன்துறை, முதுமலை, ஆனைமலை பரம்பிக்குளம் - புலி காப்பிடங்கள்
பின்னிணைப்பு - 4
தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்கள்
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம்
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்
மேல் செல்வனூர்-கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்
கோடிக்கரை பறவைகள் சரணாலயம்
பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
உதயமார்த்தாண்புரம் பறவைகள் சரணாலயம்
வடுவூர் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
துணை நின்ற நூல்கள்;
1.மழைக்காடுகளின் மரணம்;அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம் - நக்கீரன் -பூவுலகின் நண்பர்கள்
2.இயற்கை; செய்திகள், சிந்தனைகள் - ச.முகமது அலி - இயற்கை வரலாறு அறக்கட்டளை - டிசம்பர் 2007.
3.பூவுலகு சுற்றுச்சூழல் இதழ் - அக்டோபர்-நவம்பர் 2009
4.சுற்றுச்சூழல் குறித்த அரசு இணைய தளங்கள்
5.Concept in Wildlife Management (2nd Edition) - B.B.Hosetti - Publishing House - 2005
6.wikipedia - இணையதளம்
ஆசிரியர்கள்
சா.செயக்குமார்,
அ.வ.அ. கல்லூரி, (தன்னாட்சி)
மயிலாடுதுறை.
ஏ.சண்முகானந்தம்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்






