Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

பதிற்றுப்பத்தில் நாரைகள்

சங்க்காலத்தில் மக்களோடு இயைந்த பறவையினங்களைத் தத்தம் பாடல்களில் பதிவு செய்திருப்பது சங்கப்புலவர்களின் பறவையின அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. முனைவர்.சாலிம் அலி உள்ளிட்ட பறவையியல் அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரு பறவையினை இனம் கண்டறிய வேண்டுமானால் அந்தப் பறவையின் பருமன், பொதுவான நிறம், குறிப்பிட்ட நிறங்கள்,  குறிப்பிட்ட இடங்கள், அலகின் வடிவம் மற்றும் நிறம், கால்களின் அமைப்பு மற்றும் நிறம், கழுத்தின் அமைப்பு மற்றும் நிறம், வாலின் அமைப்பு மற்றும் நிறம், பறவையின் இருப்பிடங்கள், நிலமா, மரக்கிளையா, புதரா, நீரா? மற்றும்  அப்பறவை என்ன செய்து கொண்டிருந்தது? போன்றத் தகவல்கள் இன்றியமையாதவை எனக் குறிப்பிடுகின்றார். சங்கப் புலவர்களும் மேற்கூறியவற்றை உற்று நோக்கியுள்ளனர் என்பதனை அவர்தம் பாடல்கள் வழி அறியலாம். அவ்வாறே பதிற்றுப்பத்திலும் பல்வேறு வகையானப் பறவைகளைப் பற்றியக் குறிப்புக் கிடைக்கின்றது. அவற்றுள் நீர்ப்பறவையான நாரையைப் பற்றி இக்கட்டுரையின் கண் காண்போம்.

தமிழ்நாட்டு  நாரைகள்

தற்காலத் தமிழ்நாட்டில்,
1. வெண்கழுத்து நாரை
2. நத்தைக் குத்தி நாரை
3. மஞ்சள் மூக்கு நாரை
4. சாம்பல் நாரை
5. செங்கால் நாரை
6. வயல் நாரை (அ) குருட்டுக் கொக்கு (அ) மடையான்
ஆகியன உள்ளன.

செய்யுளில் நாரைகள்

வயல்களில் கதிர்கனத்தின் மிகுதியினால் வளைந்த நெல்லின் தாள் நெருங்கியுள்ளது. அதில் பெரிய கால்களையுடைய நாரைகள் இரையைக் கவர்ந்துண்ணும். இதனை,

தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையாமல் கழனி        (பதி. 32   12-13)

எனக் குறிப்பிடுகிறார் காப்பியாற்றுக் காப்பியனார். அஃதாவது நாரைகள் இரையைப் படிந்துண்பதற்கு ஏதுவாக நெற்பயிர்கள் வளைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

பறவைகளை இனம் கண்டுகொள்ள உதவும் வகையில் 'தடந்தாள் நாரை' என இப்பாடலிலும் இன்னபிற பாடல்களிலும் (பதி.29;4, 51;4) குறிப்பிடுவது சிறப்பு. காலின் வடிவத்தினைக் கொண்டு இதனை அறியலாம். அஃதாவது பெரிய கால்களையுடைய நாரை என்பது பொருள். மேற்கூறிய நாரைகளுள் நத்தைக் கொத்தி நாரையை 'நந்து நாரை' என்றும், மஞ்சள் மூக்கு நாரையைச் 'செவ்வரி நாரை' என்றும் புலவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், வயல் நாரைக்குப் பெரிய கால்கள் கிடையாது. எனவே வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, செங்கால் நாரை ஆகியவையே பதிற்றுப் பத்துக் குறிப்பிடும் பெரிய கால்களையுடைய நாரையாக இருக்கலாம்.

தடந்தாள் நாரை என்பதற்கு வளைந்த கால்களையுடைய நாரை எனப பொருள் கொள்வாரும் உளர். அனைத்து நாரைகளின் காலும் வளைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக நாரைகள் மற்றும் கொக்கினங்கள் அதிகம் காணப்படுவது வயல்களில் என்றும் அவை அங்கு இரை தேடிச் செல்லும் என்ற பறவையியல் அறிஞர்களின் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இதே போன்று மற்றொரு செய்யுளில்,
துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரு புசரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழுந்த நடந்தா ணாரைக்
குவியிணர் ஞாழுன் மாச்சினைக் சேக்கும்     (பதி. 51    1-5)

என வருகிறது. இங்கு, நீர்நிரம்பிய அகன்ற கடற்பரப்புக் கலங்கும்படி காற்று வீசுகிறது. அதனால் பெரிய அலைகள் இடிபோல் மேலெழுகிறது. பள்ளங்களில் இரைதேடி துழாவிய பெரிய கால்களையுடய நாரை, குவிந்த பூங்கொத்துகளையுடைய ஞாழல் மரத்தினது பெரிய கிளையில் சென்று அமரும் என்பது பொருள். கூவல் என்றால் பள்ளம். பள்ளத்தில் சிறிதளவே மீன் இருப்பதனால் தேடித்தேடி உண்ட களைப்பின் மேலீட்டால் கிளையில் சென்று அமரும்.

பொதுவாக எல்லா இன நாரைகளும் தன் உணவுத் தேடலுக்குப் பின் அருகில் உள்ள மரங்களில் கூடி ஓய்வெடுப்பது வழக்கமென்ற பறவை நூலோரின் கருத்துப்படியே புலவர்களும் பதிவு செயதுள்ளனர். இதே போன்றே,

வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
நடந்தா ணாரை பிரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தோறுங்  குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்         (பதி. 29,   2-6)

என்றப் பாடலும் குறிப்பிடுகின்றது. அஃதாவது, வளையைக் கைகளிலே அணிந்த மகளிர் வள்ளைப் பூவினைப் பறிக்கும் போது, வளைந்த நெற்கதிர்களை உடைய வயலில் பரந்து மேயும் பெரிய கால்களையுடய நாரை அஞ்சி வயலிலிருந்து வெளியேறும், அயிரையாகிய கொழுவிய மீனை உண்பதற்காக வயலருகிலுள்ள மரங்கள் தோறும் கூடும் வெண்ணிறக் குருகை வளையலணியப் பெறாத வெறுங்கைகளையுடைய சிறுபெண்கள் ஒட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் வயலிலிருந்து வெளியேறுவது 'நாரை' என்றும் சிறுபெண்கள் விரட்டுவது 'வெணகுருகு' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறவை நூலறிஞர்களின் கருத்துப்படி குருகினத்தில் வெள்ளை நிறம் கிடையாது. நாரையிலும் நல்ல வெண்ணிறம் கிடையாது.
எனவே ஒளவை சு.துரைசாமிப்பிள்ளைத் தம் உரையில் குறிப்பிட்டது போன்று, இவ்விடத்தில், கொக்கை 'வெண் குருகு' என புலவர் குறிப்பிடுகிறார். மேலும் இவ்வரையாசிரியர, 'கொழுமீ னார்கைய மரந்தோறுங் குழாலின்' என்ற அடிக்கு 'அயிரை முதலிய மீன்களை உண்ணும் கொக்கும் புதாவும் உள்ளலும் பிறவும்..............' எனக் குறிப்பிடுகிறார்.

நாரைகளின் உணவு மீன் எனக் கூறியிருப்பது புலவர்களின் பறவையின அறிவை வெளிப்படுத்துகிறது. ஆனால், தற்போது ஆற்றுநீர் பாசனம் குறைந்து, இயந்திர நீர் பாசனம் அதிகரித்திருப்பதால் வயல்களில் மீன்களின் வரவும் இருப்பும் குறைந்துள்ளன. எனவே  நாரைகள் மீன்களை மட்டும் அல்லாமல் தவளை, நண்டு, புழுக்கள் மற்றும் பூச்சியினங்களை உண்ணும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மருதவளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய நன்செய் நிலங்களில் விளைகின்ற பயிரை மிதித்துச் சிதைக்கா வண்ணம் நாரைகளை மகளிர் விரட்டுவதனை,

மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
செய்யு ணாரை யொய்யு மகளிர்          (பதி. 73   4-5)


என்ற பாடல் வழி அறியலாம். உணவைத் தேடி அலையும் நாரைகள் பயிரை மிதித்து வீணாக்கும் என்ற செய்தியினை இதன் மூலம் அறியலாம்.

நந்து நாரை, செவ்வரி நாரை

மருத மரங்கள் தன்னிடத்தே பறவைகள் தங்கி ஒலிக்கும் வகையில் ஓங்கி வளர்ந்துள்ளன. செறிந்த பெரிய பரப்பினையுடைய மருதநில மணற் பெருந்துறைகளில் சிதைந்த காஞ்சி மரங்களுடன் இருக்கும் முள் முருங்க மரங்கள் பூக்களை உதிர்க்கும். அவ்வுதிர்ந்த சிவந்த பூக்களால் அடைகரை நெருப்புப் போன்றிருக்கும். அதில் நந்து நாரையும், செவ்விய வரிகளையுடைய நாரையினத்துப் பறவைகளும் உகலும் என்பதனை,

மருதிமிழ் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற் ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகலும்              (பதி. 23    18-21)

என்ற அடிகள் விளக்குகின்றன. இதில் வரும் 'நந்து நாரை' யினை நந்து-நாரை எனப் பிரித்து நாரையைத் தனியாகவும் 'நந்து' என்றால் 'சங்கு' என்றும் 'செவ்வரி' என்பதனைச் 'செவ்விய வரிகளையுடைய நாரையினத்துப் பறவை' என்றும் உரை செய்துள்ளனர். இதில் 'நந்து'  என்பது நத்தையினைக் குறிக்கவில்லை. பிங்கலந்தை 'நந்து' என்பதற்குப் பறவை. நத்தை, சங்கு எனக் குறிப்பிடுகிறது. ஆகவே, பி.எல். சாமி குறிப்பிடுவது போல் 'நந்து நாரை' என்பது தற்காலத்தில் காணப்படும் 'நத்தைக் குத்தி நாரை' யையே குறிக்கும்.

சிவந்த வரிகளையுடைய நாரையைச் 'செவ்வரி நாரை' எனப் புலவர் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தற்காலத்தில் 'மஞ்சள் மூக்கு நாரை', என்றழைக்கப்படுகின்றனர். இதனை விட தமிழ்நாட்டில் 'வர்ண நாரை' என்றும் தென்தமிழ்நாட்டில் 'செங்கால் நாரை'  என்றும் அழைக்கப்படுகின்றனர்.

நிறைவாக ...

தமிழ்ப் புலவர்கள் தம் பறவையினப் பதிவுகள் அனைத்தும் கற்பனைகளற்றது. இக்காலத்தில் பறவையின அறிஞர்கள் பல வகையான கருவிகளைக் கொண்டு பறவைகளைக் கணகாணிக்கின்றனர். ஆனால் நம் புலவர்கள் பல நூற்றான்டுகளுக்கு முன்பே பறவைகளின் செயல்பாடுகளைக் கண்டு பதிவு செய்திருப்பது வியப்பைத் தருகிறது.


ஆசிரியர்,

சா.செயக்குமார்,
விரிவுரையாளர்,
அ.வ.அ.கல்லூரி (தன்னாடசி),
மயிலாடுதுறை.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS