ஆத்மார்த்தி கவிதைகள்
- Details
- Published on Monday, 21 November 2011 09:40
- Written by Super User
1.ராட்ஷஸ்
அன்பின் மீது
எஞ்சிய நம்பிக்கையை
எங்கேனும் புதைத்துவிட விழைந்தேன்.
புத்தகங்களுக்கு இடையில்
துணிகளின் அடுக்கின் கீழ்
கேசட்டுக்களின் அலமாரியினுள்
பழையகடிதங்களை
இட்டுவைத்திருக்கிற அட்டைப்பெட்டியில்
பரண்பொருட்களுக்கு நடுவில்
எங்கு விசிறினாலும்
அறையெங்கிலும் வியாபித்து மீள்கிறது அன்பு.
அறைவாயிலைப் பூட்டிச்
சாவியைத் தொலைத்துவிட்டு
வாசற்படிகளில் உட்கார்கையில்
அருகாமையில்
கன்னங்களில் கைதாங்கி
அமர்ந்திருக்கிறது என்னன்பு..
எழுந்து நடக்கையில் பின் தொடர்ந்தது
நிற்கையில் நிதானித்தது
எள்ளல் வெளித்தெரியா முகத்தோடு.
கெஞ்சினாலதற்குப் புரிவதாயில்லை.
அழுதால் சேர்ந்தழுகிறது.
உறங்குகையில் காவலிருக்கிறது.
உணவுக்கென
மரநிழலில் அமர்ந்திருக்கையில்
என் மடியில் தலைசாய்த்து உறங்கிவிட்டிருக்கிறது அவ்வன்பு.
தலையைத் தள்ளிவைத்துவிட்டு
வழிமீள்வதென்பது ஷணநேரக் காரியம்.
என்றபோதும்
அது கண்விழிக்கும் வரைக்கும்
மடிகொடுத்தபடி காத்திருக்கிறேன்.
சமரசங்களுக்கு உடன்படாத மௌனத்தை வியந்தபடி.
2.வேண்டாது
உன் தேகத்தைப் போர்த்தினபடி
கண்திறவாத குஞ்சுப்பறவையாய்
உறங்கிக்கிடக்கிற
எத்தனை இரவுகளிலும்
எனக்குக் கனவுகள்
வேண்டாம்.
3.சன்னமாய்
யாருடைய
இரவிலோ
கனவாகிக்கொண்டிருக்கிறது
வாழ்தல்.
இரவென்பது எதுவுமில்லை.
பகலென்பது வாராநதி.
இறுகக் கட்டிக்கொண்டிருக்கும்
உன் கரங்கள்
மட்டும்
நிஜம்
4.துளிர்
வண்ணங்களாய்
பின்னணி இசைக்குறிப்புக்களாய்
உரையாடல் காகிதங்களாய்
நிகழ்விடங்களாய்
பாத்திரங்களாய்
என்
ஒவ்வொரு கனவையும்
பத்திரப்படுத்திக்கொள்கிறாய்.
துளிர்த்து நிற்கிற
கண்ணீர்த்துளிகளில்
நான் மிஞ்சிவிடுவதறியாமல்
5.இதுவும்
கடைசிவிக்கலாய்
என் காதல்
நீ
தண்ணீரா
தாமதமா






