Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

[ அத்தியாயம் 4 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: பூமா ஈஸ்வரமூர்த்தி - ஆத்மார்த்தி

பூமா ஈஸ்வரமூர்த்தி


காதலைக் காதலென்று சொல்லியவன்

ஒரு வட்டக் கவிதையுடன் ஆரம்பிக்கலாம் இந்த அத்தியாயத்தை.அதென்னதது வட்டக்கவிதை என்றால் துவங்கிய இடத்துக்கே வட்டமடித்து வந்து நின்றுகொள்ளும் சர்க்குலர் பொயட்ரி.

1.வீட்டின் கதவுகளை

வீட்டின் கதவுகளைத் திறந்தேன்
வீதியில் நுழைந்தேன்
வீதியின் கதவுகளைத் திறந்தேன்
அலுவலகம் நுழைந்தேன்
அலுவலகத்தின் கதவுகளை
மறுபடியும் திறந்தேன்
வீதியில் நுழைந்தேன்
வீதியின் கதவுகளைத் திறந்தேன்
வீட்டினுள் நுழைந்தேன்.

மேலோட்டமாகப் பார்த்தால் 12344321 என்று சாதாரணமாய்த் தோன்றக்கூடிய இந்த பாணியிலான கவிதைகள் வாசிக்கிறவனுக்குள் இடம்பெயர்ப்பது இந்த நேரடி நிகழ்தல்களுக்குள் ஒளிந்திருக்கிற சொல்லப்படாத அனுபவங்களைத் தான்.அந்த வகையில் இது போன்ற கவிதைகளில் ஆத்மாநாமுடைய காகிதத்தில் ஒரு கோடு தொகுப்பிலிடம் பெற்ற

"இந்தக் கவிதை
எங்கு எப்படி முடியும்
என்றெனக்குத் தெரியாது.
முடியும் போது
இருக்கும் (இருந்தால்)நான்
ஆரம்பத்தில்
இருந்தவன் தானா


என்ற கவிதை புகழ்வாய்ந்தது.ஆத்மாநாமுடைய கவிதை முன்வைக்கிற கேள்வி மேற்சொன்ன கவிதையிலும் கையாளப்படுவது தான் இவ்வகைக் கவிதைகளின் அனாயாசம்.காலையில் அலுவலகத்திற்குக் கிளம்புதலில் இருந்து மாலை வீடு மீள்தல் வரையிலான நிகழ்தல்களை பொதுமையாய மேலடையாளங்களின் மூலமாகவே நகர்த்திச் செல்லும் இக்கவிதை தரும் அனுபவம் மறைபொருள் சார்ந்தது.

2.மனதை

மனதை மிதி
மிதிக்கக் கொடு
மிதிக்க விடு
கவிதையும் வெளிவரலாம்


அகமனத்துக்கு வாய்க்கும் அனுபவமே கவிதையாகிறது.இது சிக்கலில்லாத ஆனால் ஆழ்ந்த பொருளுடைய கவிதை.மிதிபடுகிறது என்பது மென்மையற்று எந்தச்சார்புமற்று வலிபெறலை முன்வைத்து அதன் பின் நிற்கிறது.

3.சிப்பிகளும்


சிப்பிகளும்
அதன் குகைகளில்
உணரப்பெறும்
மனம் நெருடும் வரிகளிலும்.


பூமா ஈஸ்வரமூர்த்தி கடுமையான மொழியை ஒருபோதும் நம்புகிறவராயில்லை.மாறாக அவர் கவிசொல்லுகிற தொனி கடும் நேர்மையானதாக இருக்கிறது.இவ்விரண்டு இடங்களுக்குமான இடைவெளியை புரிந்துகொண்ட எதையும் சாராது அலைந்துகொண்டே இருக்கிற மொழி சமரசம் இன்றி முன்னெடுத்துப்போகையில் வந்து விடுகிறது கவிதை.சிப்பிகள் மனம் நெருடும் வரிகளில் உணரப்படுதலை கித்தாய்ப்பேதுமின்றி அக ஆழத்தில் ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது இக்கவிதை.


பூமா ஈஸ்வர மூர்த்தி கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எழுதிவருகிறார்.தனது நடுக்கமற்ற கவிதைகளை அவர் எந்த விதமான ஆராதிக்கிற மனோபாவத்துடனும் அணுகாமல் தன்னை மட்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குப் பெயர்த்துக்கொள்ளும் சூசகத்தை இயல்பாகச்செய்தபடி கவிதைகளினூடாக இடம்பெயர்ந்தபடி இருக்கிறார்.

4.ஒற்றை

ஒற்றை
சப்த அதிர்ச்சியில்
அந்த பெரிய மரத்துப்
பறவைகள்
மொத்தமாய்
வெளிப்போந்ததை
பதிவு செய்யும் முன்னமேயே
காலடி
கண்ணிவெடியில்
புகைப்படக் கலைஞனின்
கண்களை மிருதுவாய்
வருடி மூடியிருந்தது
காடு.


micro second என்பார்களல்லவா...அதனினும் நுட்பமான நேரத்தினுள் நேர்ந்து முடிந்துவிடும் நிகழ்வே இங்கே கவிதையாகிறது.இதன் ஆரம்ப வரிகளில் வருகிற ஒற்றைச் சப்தத்துடனேயே வெடித்துச் சிதறிவிடுகிறான் புகைப்படக் கலைஞன்.கண்ணிவெடியில் கால்சிக்கி.ஆனால் அந்த நிகழ்வு இங்கே அற்புதமான மொழியின் லாவகத்துணையுடன் பூமா ஈஸ்வரமூர்த்தி முன்வைப்பது அலாதியானது.வாசகனுக்கு இந்தக் கவிதை முற்றாகப் பெயர்க்க வேண்டிய உயிரிழப்பின் பரிதாபத்தை வேரறுத்து மாறாக அப்படியொரு புகைப்படத்தை அவன் எடுத்திருக்கலாம் என்ற அனுதாபம் நேர்வதென்பது அபூர்வமான முரண்சுவை தான்.

5.அம்மா

அம்மா
வீடு
தொடாத
நாட்களில்
சின்னப்
பெண்குழந்தை
தம்ளரில்
விரல்பொத்தி
வாசல் தெளிக்கும்
ஒரு மிருது அருவியில்
பூமிகுளிரும்
அன்றைக்கென்றே
அழகாய் உதிக்கும் சூரியன்.


மத்யமர் வாழ்க்கையின் 70'80'களின் பால்யத்தை ஆவணப்படுத்துகிற இக்கவிதையின் அழகியலின் உச்சமாய் அப்பெண் குழந்தை தம்ளரில் வாய்பொத்தி வாசல் தெளிப்பதைச் சொல்லமுடிகிறது.அந்தப் பெண் குழந்தையின் கைபொத்தி தரை வீழ்ந்த நீர் குளிர்வித்ததில் மொத்த பூமியும்குளிர்கிற இடம் அலாதியானது.ஒரு காலை நேரத்தின் அ-வழக்கமான அனுபவபூர்வமான காட்சியின்பம் வழிகிறது இக்கவிதையின் இறுதியில் உதிக்கிற சூரியன் போன்றே இக்கவிதையும் அழகு.


6.என் அன்பை.

என் அன்பை
பொய்
என்று சொல்லுங்கள்

அப்போதுதான்
இன்னும்
ப்ரியமாய்
தொட முயல்வேன்


வெகு நாட்களாய் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவுமொன்று.முதல்முதலில் வாசிக்கையில் இறுதிவரியை தொட என்பதற்குப் பதிலாய்த் தொடர என்று வாசித்த ஞாபகம் இன்றைக்கும் வந்து வந்து போகிறது.காதல் அன்பு இவற்றுக்கெல்லாம் அறிவித்துக்கொள்ளாத ஆவண நாயகனாய்த் திகழ்கிறவன் கவிஞன் ஒருவனே.மேலும் அவன் அன்பின் வெளி நின்று பார்க்கையில் அவனோடு பரிணமித்து எழுகிறது பேரன்பு.இக்கவிதையும் அது போன்றது.

7.கரைகள்...

கரைகள்
அகன்ற பின்பே
கடல்ப் பிரயாணம்
ஒரு
பச்சைக் கனகாம்பரம்.


இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற சொல்லாடல் இக்கவிதைக்குள் உழல்கிறது பூடகமாய் வாசிக்கிறவனுக்குள் மர்மப்புன்னகையைப் பெயர்க்கிறது.கவிதை வெற்றிபெறும் இடம் இது.கனகாம்பரக் கடல் யாரையும் வசீகரிக்கிறது.

8.மனசுக்கு

மனசுக்கு
இணக்கமாய்
சிரித்த
முதல்ப் பெண்ணெல்லாம்
முள்/குத்தவென்றே
பூப்பறித்த கதைதான்


பூமா ஈஸ்வரமூர்த்தி தனக்கு முன்னால் நிகழ்கிறவற்றிலிருந்து மீள்பார்வைக்குள் வந்து சலனமற்றுத் தங்கிவிடுகிற காட்சிகளை மட்டும் கவனத்தில் கொள்கிறார்.அமானுஷ்யங்களையும் அதீதங்களையும் நம்புவதற்குத் தயாராயில்லாத கவிஞர் அபூர்வங்களைக் கண்டெடுக்கிறதில் சமனம் செய்கிறார்.தனித்த மொழி அவருடையது என்கிறதைக் காட்டிலும் சொல்ல வந்த பொருள் கனம் நம்மை கட்டி நிறுத்துகிறது.


மனசுக்கு இணக்கமாய்ச்சிரித்த முதல்பெண்ணெல்லாம் என்ற வரியிலிருக்கிற பன்மை பொதுமைவெளியில் ஒன்றுபடுத்தி ஒற்றை அபிப்ராயத்தை ஏற்படுத்த விழைகிறது.அவரவர்க்கு அவரவர் தனித்த நினைவுகள் வந்து வந்து செல்லும் விதமாக.



9.பேனாவின்
அழகான நிழல்
எழுதவிடாமல்
கவனம் சிதைக்கும்


அழகியல் கவிதைகளில் தனியிடம் பூமா பெறுவது அவரது சொற்சிக்கனக் கவிதைகளால் தான் என்பது என் கருத்து.அங்கனம் அழகியலைக் கைக்கொள்கையிலெல்லாமும் தனித்த அடையாளங்கள் ஏதேனும் அவற்றின் இருள் மூலையில் ஒளிந்துகொண்டு அசாதாரணமான அனுபவங்களை வாசகனின் எண்ணத்தில் பெயர்க்கிற தனிவித்தை பூமா ஈஸ்வரமூர்த்தியின் தேர்ந்தவித்தை.

10.கோடுக/ள்

கோடுகளாக இருக்கட்டும்
ஓவியங்களில்
முகமென்று ஏதாவது தட்டுப்பட்டு
யாருக்கும்
அவரவர் சாயல் சொல்லக்கூடும்


அபிப்ராயங்கள் திணிப்பதற்கென்றே உருவாக்கப்படுகிற கசப்பின் வெளிப்பாடு இக்கவிதையில் தெறிக்கிறது.முகமென்று ஏதாவது தட்டுப்பட்டு என்று சொல்கையில் அது உறுதிபெற்று அத்தோடு அவரவர் சாயலைச்சொல்லக்கூடும் என்ற இடத்தில் மீண்டெழுகிறது.



11.மரணம் என்று சொல்

மரணம் என்று சொல்
வேதனைஎன்று சொல்
கொடூரம்என்று சொல்
தண்ணீர்என்று சொல்
விவேகம்என்று சொல்
உற்சாகம்என்று சொல்
ரத்தருசிஎன்று சொல்
திருடும்கைஎன்று சொல்
சித்ரவதைஎன்று சொல்
பிணந்தின்னிஎன்று சொல்

காலையில் எழும்போதே
காத்துக்கிடக்கும் நாய்என்று சொல்
விளக்கு இல்லா ராத்ரியில்
கொட்டிய தேள்என்று சொல்
ரயில் ஏறி செத்துப்போன அவளின்
கழுத்தில் கிடந்த சேதமில்லா மல்லிகை என்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில்
காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதலென்றும் சொல்லலாம்.

இக்கவிதையின் ஈற்றுவரி பூமா ஈஸ்வரமூர்த்தியின் ஒரு தொகுப்பின் தலைப்பானது.இக்கவிதை பூமா ஈஸ்வரமூர்த்திக்கு பெரும்புகழை ஈட்டித்தந்த ஒரு கவிதை.நேரடியாக இக்கவிதை நம் மனங்களில் ஆணிபோல் அறைகிறது.என்றென்றைக்கும் ஜீவிதக்கவிதையாக நிலைபெறுகிறது


காதல் எத்தனை எத்தனை வாதையை,வதங்கலை,தனிமையை,கண்ணீரை,சுய இரக்கத்தை,நடுக்கத்தை,வேதனையை,நோய்மையை இன்னபிறவற்றையெல்லாம் தருகிறதோ,தருமோ அவையெல்லாம் காதலின் பேர்கள் தான்.அவையெல்லாம் காதல் தான்.அந்த வரிசையில் காதலைக் கூறுபோட்டு எவ்வெவற்றையோ அடையாளப்படுத்தி நகர்கிற எவரும் காதலைக் காதலென்றும் சொல்லலாம் என்ற பதத்தில் ஓடுதளத்தில் வந்தமைகிற விமானம்போல் தம்மை உணர்வர்.அவ்வளவு காத்திரமான கிளர்தலை ஏற்படுத்துகிறது இக்கவிதை.

12.உனக்காக

உனக்காக
இல்லையென்றாலும்
அடர்ந்த ரோஜாவர்ணங்களில்
என்முத்தங்களை தெருவெங்கும்
வாரியிறைத்துவிட்டுத் தான் போவேன்

13.ஒவ்வொரு தடவை

ஒவ்வொரு
தடவை குளிக்கும் போதும்
நீ அறியும் முதல்த் தண்ணீர் நான்

உன்னை முழுதாய்
தொட நினைத்து முடியாமற்போவதால்

14 யாருக்கும்

யாருக்கும்
அனேக முட்கள்
எடுத்தெறிய மாட்டாமல்

காதல் ஒரு கொண்டாட்டம்.காதல் என்பது உயிர்ப்பூர்வமான செயல்.காதலென்பது அரைகுறையாய்ப் பெயர்த்தல் கூட பூரணமாகிக்கொள்ளும் மந்திரம்.காதல் என்பது உலகளாவிய தனிமை.தனித்த பொதுமை.காதல் யாரிடமெல்லாம் நிரம்பித்ததும்புகிறதோ அவர்கள் மூலமெல்லாம் தனக்கான கவிதைகளை எழுதிக்கொள்கிறது.மனிதர்கள் காதலின் எழுதுகோலாகின்றனர்.வந்து விழுகின்றன கவிதைகள்.அவை காதலின் வார்த்தைகள்.ஒருபோதும் நீர்த்துப்போவதில்லை.பூமா ஈஸ்வரமூர்த்தி காதலைக் கண்ணியமாகவும் கம்பீரமாகவும் அணுகுகிறார்.காதல் அவர் கவிதைகளில் அசைக்கவியலாப் பொருளாகிறது.இந்த நேரத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே தொடர்ந்தோடுகிற கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி ஏதாவதொரு காதலின் தனித்த உணர்தலை அறிதலை வார்த்தைகளில் பெயர்த்துக்கொண்டிருக்கக் கூடும் தன் கவிதையொன்றில்.பூமா ஈஸ்வரமூர்த்தி....காதலைக் காதலென்று சொல்லியவன்.

மேலும் படிக்க ...

[ அத்தியாயம் 1 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - கலாப்ரியா மற்றும் அழகிய பெரியவன் -ஆத்மார்த்தி

[ அத்தியாயம் 2 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - சுந்தரராமசாமி என்கிற பசுவய்யா - ஆத்மார்த்தி

[ அத்தியாயம் 3 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: இளையபாரதி - ஆத்மார்த்தி

 

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS