வாச்சாத்தி தீர்ப்பு - அ.மார்க்ஸ்
- Details
- Published on Sunday, 02 October 2011 15:08
- Written by Super User
வன மற்றும் காவல்த்துறைகளைச் சேர்ந்த 215 பேர்களுக்குத் தண்டனை வழங்கி அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரிய அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. குற்றம் நடைபெற்று 19 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப் பட்டுள்ள இத்தீர்ப்பு இத்தனை தாமதமாக வந்துள்ளது குறித்த விமர்சனங்கள் இணையாக வைக்கப்பட்ட போதும், கால தாமதமானாலும் பழங்குடி மக்களுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதே என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
1992 ஜூன் 20 என்கிற அந்தக் கருப்பு தினத்தின் கொடிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள அம்மக்கள் கண்களில் நீர் வழிய அவற்றை நினைவுகூர்ந்ததை ஊடகங்கள் பெரிய அளவில் காட்சிப்படுத்தின; ஆவணப்படுத்தின.
இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் இது போன்ற மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளதை உணர முடிகிறது. புலனாய்வு இதழியத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதும் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய அம்சம். சமீபத்தில் நடைபெற்ற பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை அமைப்புகள் களத்திற்குச் செல்லு முன்பாகவே காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் உண்மைகளை வெளிக் கொணர்வதில் மிகப் பெரிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்தக் கொடுமை வெளி உலகத்திற்குத் தெரிய வரவே 15 நாட்கள் எடுத்துக் கொண்டன. சிறுமிகளும் இளம் பெண்களுமாய் சுமார் 18 பேர் சொல்லொணா அவமானங்களுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், வன்புணர்ச்சிகளுக்கும் உள்ளாக்கப் பட்டு, ஒரு கிராமமே சூறையாடப் பட்ட அக் கொடுமையைக் காவல் நிலையம் பதிவு செய்ய மறுத்தது. வனத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை மூன்றும் சேர்ந்து நடத்திய கொடுமை அல்லவா இது. இது குறித்த விவரங்களை எல்லாம் வாசிக்கும்போது மனித மனத்திற்குள் இத்தனை வக்கிரங்களும், வன்முறைகளும் எப்படி ஒளிந்து கிடந்தன என்கிற கேள்விதான் திரும்பத் திரும்ப எழுகிறது. அந்த எளிய மக்களின் சிறிய சேமிப்புகளை அள்ளிச் சென்று கடைகளில் விற்றதையும், கிணற்றுக்குள் வீசிப் பயன்படுத்த முடியாமற் செய்ததையும் எப்படிப் புரிந்து கொள்வது. இவர்களில் ஐ.எஃப்.எஸ் படித்த வனத்துறை உயர் அதிகாரிகளிலிருந்து காவல்துறை ஆய்வாளர்களும் அடக்கம். நமது கல்வி முறையில் அறம் சார்ந்த அடிப்படைகள் முற்றிலுமாய் அற்றுப் பொய்விட்டனவா?
நீதி மன்றத்தை அணுகி ஆணை பெற்ற பின்புதான் அரூர் காவல் நிலையம் மக்களின் புகார்களை ஏற்றுக் கொண்டது. அதற்குள் மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் பழங்குடி அமைப்பும் தொடர்ந்து போராடியிருக்காவிட்டால் அதுவும் நடந்திருக்காது மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் நல்லசிவம் சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகி, வழக்கைச் சி.பி.ஐக்கு மாற்றிய பின்னரே உரிய முறையில் புலனாய்வு தொடங்கியது. அதுவரை அன்றைய அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரை அப்படியான சம்பவமே நடக்கவில்லை. சித்தேரி மலைப் பகுதியில் வளர்ந்து செழித்திருக்கும் உயர் வகை சந்தன மரங்களைக் கடத்தி விற்கத் துணை போகிறவர்கள் எனவும், அன்றைய நிகழ்வைப் பொருத்தமட்டில் வாச்சாத்தி மக்கள்தான் வன மற்றும் காவல் துறையினரை அடித்துத் துரத்தினர் என்றும் சட்டமன்றத்தில் கூசாமல் பொய்யுரைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
சி.பி.ஐயின் புலனாய்வை இன்று எல்லோரும் பாராட்டுகின்றனர். மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தேவையற்ற கைதுகள் இல்லாமல் வழக்கைக் கொண்டு சென்றதன் விளைவே இன்று சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட 269 பேர்களுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப் படுவதற்குக் காரணமாகியுள்ளது எனப் பலர் கருத்துக் கூறியுள்ளனர்.
இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கியுள்ளார் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு குமரகுரு அவர்கள். இவர்கள் அனைவருக்கும் அபராதத் தொகைகளும் விதிக்கப் பட்டுள்ளன. இந்த அபராதத் தொகையிலிருந்து வன்புணர்ச்சி செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ15,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
தண்டிக்கப்பட்டுள்ள 215 பேர்களில் 126 பேர்கள் வனத்துறையினர். 84 பேர்கள் காவல்துறையினர். மீதமுள்ள ஐவர் வருவாய்த் துறையினர். இவர்களில் நால்வர் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள். இருவர் தாசில்தார்கள், இருவர் காவல் துறை ஆய்வாளர்கள், அறுவர் உதவி ஆய்வாளர்கள். வன்புணர்ச்சிக் குற்றம் உறுதி செய்யப்பட்ட 17 பேர்களுக்கு இ.த.ச பிரிவு 376ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்தப் பதினேழு பேர்களில் 12 பேர்களுக்கு எஸ்சி. எஸ்டி சட்டப் பிரிவு 3(2)(v)ன் கீழ் மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பன்னிருவரும் இவ்விரு தண்டனைகளையும் ஒரு சேர அனுபவித்தால் போதுமானது. ஆக 12 பேர்களுக்குப் 10 ஆண்டுகள், 7 பேர்களுக்கு 7 ஆண்டுகள், மீதமுள்ள 198 பேர்களுக்கு ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரையும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற 17 பேர்களும் இன்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு மேல் முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒட்டு மொத்தமாய் காவல் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓரு நிகழ்வு. கேட்பதற்கு ஆளில்லாத பழங்குடி மக்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுத் தப்பித்து விடலாம் என்கிற இறுமாப்பு இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. இனி இப்படியான ஒரு ‘ரெய்ட்’ நடத்துவதற்கு காவல் மற்றும் வனத் துறைகளும், இத்தகைய அநீதிகட்குச் சாட்சியாய் இருப்பதற்கு வருவாய்த் துறையும் தயங்கும் என எதிர்பார்க்கலாம்.
ஊடகக் கண்காணிப்பு பெருகியுள்ளது, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது, மக்கள் மத்தியில் ஜனநாயக வேட்கை அதிகரித்துள்ளது என்பனவற்றை இனி காவல் மற்றும் அரசுத் துறையினர் மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.
எனினும் நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தக் கால தாமதம் விவாதத்திற்குரிய ஒன்று, தாமதமான நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமம் என்கிற ஆங்கிலச் சொலவடையை நாம் அறிவோம். நீதிக்கான இந்தப் 19 ஆண்டு காலக் காத்திருப்பு ஒரு ஆயுள் தண்டனையைக் காட்டிலும் அதிகமானது. இந்த வழக்கு ஊடகக் கவனம், இயக்கப் பின்னணி கொண்ட வழக்காகிவிட்டதால் இன்று நீதி கிடைத்துள்ளது. ஆனால் பொதுவில் இத்தகைய காலதாமதம் சாட்சிகளைப் பலவீனப் படுத்தும். நீண்ட கால இடைவெளி ஏற்படுத்தும் மறதி சம்பவத்தைக் கோவையாய்ச் சொல்வதற்கு இடையூறு விளைவிக்கலாம்.
தேர்தல் தொடர்பான மனுக்களை விசாரித்து முடிக்க ஓராண்டு கால கெடு நிர்ணயித்துள்ளது போல ஏன் இத்தகைய வழக்குகளுக்கும் கால கெடு நிர்ணயிக்கக் கூடாது என்கிறார் நீதியரசர் மோகன். வேக விசாரணை நீதிமன்றங்களை அமைத்து சில வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவதில்லையா? ஏன் எல்லா வழக்குகளுக்கும் இப்படி ஒரு கால எல்லையை வகுக்கக்கூடாது? ஆனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அரசியல் சட்ட உரிமைகள் உண்டு. இவ்வழக்கைப் பொருத்தமட்டில்1996ல் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுகிறது. 2006ல் வழக்கு கிருஷ்ணகிரி நீதி மன்றத்திற்கும், 2008ல் தர்மபுரி நீதி மன்றத்திற்கும் மாற்றப்பட்டது.
அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மறுப்பது வேறு பல மனித உரிமை மீறல்களுக்கு இட்டுச் செல்லும். காவல் துறைக்கும் அரசுக்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்குவதாக அமைந்துவிடக் கூடும். அரசியல் இயக்கங்களுக்கு எதிராகவும், கருத்துரிமையைப் பறிக்கும் நோக்கிலும், போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் அரசும் காவல் துறையும் போடுகிற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்து, விரைவாக வழக்கை முடித்துத் தண்டனை வழங்கிவிடும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகிவிடும். காவல் மற்றும் வனத் துறையினர் மீது சி.பி.அய் தொடர்ந்த வழக்கு மட்டுமல்ல, வாச்சாத்தி மக்கள் மீது காவல்துறை தொடுத்துள்ள பொய் வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது சிந்திக்கத் தக்கது. எனவே உணர்ச்சிவயப்பட்டும், அவசரப்பட்டும் நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் மற்றும் அரசுத்துறையினரே அதை மீறுகிற வழக்குகள், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வருகிற வழக்குகள் ஆகியவற்றை விரைவில் விசாரித்து முடிப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் சாத்தியமா என்றே சிந்திக்க வேண்டும்.
அடுத்து, இப்படி ஒட்டுமொத்தமாய் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிப்பதையும் நாம் எந்த அளவிற்குச் சரி என யோசிக்க வேண்டும். கீழ் நீதிமன்றங்கள் இப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மாமங்கலம் வங்கிக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு 10 ஆண்டுகள் வழங்கப்பட்டன. இப்படி நிறையச் சொல்லலாம். வாச்சாத்தி வழக்கைப் பொருத்தமட்டில் அன்றைய ‘ரெய்டில்’ கலந்து கொள்ள வந்தவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு வந்தவர்கள் எனச் சொல்ல முடியாது. மேலதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க வந்தவர்களே அதிகமாக இருக்கக் கூடும். எல்லாப் போலீஸ்காரர்களும் ஒரே மாதிரி மனநிலை உள்ளவர்களாகவே பயிற்சியளிக்கப் பட்டிருந்த போதிலும் அன்று வந்திருந்த எல்லோருமே வன்முறையிலும் அத்துமீறல்களிலும் ஈடுபட்டிருப்பார்கள் எனச் சொல்லிவிட முடியுமா என்பதும் யோசிக்கப்பட வேண்டும்.
வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கும்பல் வன்புணர்ச்சி, காவல் நிலைய வன்புணர்ச்சி (gang rape/ custodial rape) ஆகியவற்றிற்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். பேரா. கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகியோர் முன்னின்று நடத்திய அத்தியூர் விஜயா வழக்கில் விசரணை நீதிமன்றம் இப்படி ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத் தக்கது. வாச்சாத்தி வழக்கில் அடையாளம் காணப்பட்ட வன்புணர்ச்சியாளர்களுக்கு ஏன் அதிக பட்சத் தண்டனை வழங்கப்படவில்லை எனப் புரியவில்லை. ஒருவேளை எல்லோருக்கும் தண்டனை வழங்கி விட்டதில் நீதிமன்றம் திருப்தி அடைந்திருக்குமோ தெரியவில்லை.
வாச்சாத்தி அத்துமீறல், வழக்கு, தீர்ப்பு ஆகியவற்றினூடாக மேலெழும்பியுள்ள சிந்தனைக்குரிய புள்ளிகள் இவை. இந்த வழக்கு மட்டுமின்றி அத்தியூர் விஜயா, சிதம்பரம் பத்மினி முதலான வழக்குகள் இறுதி வரை கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில் பின்னாலிருந்து செயல்பட்ட இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் பங்கு முக்கியமானது.
வாச்சாத்தி தீர்ப்பை ஒட்டி நாம் இரண்டு அம்சங்களைக் கவனப்படுத்த வேண்டியுள்ளது. ஒன்று: 1992 ஜூன் 30 அன்று வாச்சாத்தி மக்கள் மீது எந்த அத்துமீற்லும் நடக்கவில்லை, மக்கள்தான் ‘ரெய்ட்’ வந்த்வர்களைத் தாக்கினார்கள் என்று பொய் சொன்ன அன்றைய வனத்துறை அமைச்சர் செங்கொட்டையன் இன்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளார். அவர் பதவி விலக வேண்டும். இரண்டு: வாச்சாத்தி மக்கள் மீது காவல் துறை தொடுத்துள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும்.
அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறித்து அறிய ...






