உடைந்த மனத்திலிருந்து - யாழன் ஆதி
- Details
- Published on Monday, 07 November 2011 15:16
- Written by Super User
அந்தச் செய்தி குறுஞ்செய்தியாய் வந்து என் கைப்பேசியில் சேரும்வரர் நான் நன்றாகத்தான் இருந்தேன். வழக்கமாக நான் குறுஞ்செய்திகளை உடனே பார்ப்பதில்லை. அதன்மேல் அவ்வளவு நாட்டமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சில நேரங்களில் திரையில் குறுஞ்செய்திக்கான அந்த அஞ்சல் உறை சின்னம் நீண்டநாட்கள் இருக்குபோது அதை நான் பார்ப்பேன்.
நேற்று மிக எதேச்சையாக அந்தச் செய்தி வந்தவுடனேயே என் கைப்பேசியில் அதைப் படித்தேன். என் உணர்வுகளைச் சொல்லமுடியவில்லை. கொஞ்ச நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. தனிமையின் கொடுந்துயரமும் வாழ்வின் இருட்செறிவும் நம்மை இப்படி செய்கிறதோ என நினைத்தேன். எண்ணுவதற்கு ஏதும் இல்லா அறிவற்ற ஒரு கைம்மை நிலை என் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. அது மட்டுமல்ல நாம் யார் எதற்கு இப்படி வாழ்கிறோம் என்றே தெரியாத அந்தகாரச்சூழலில் அச்செய்தி என்னை உறைய வைத்திருந்தது. நண்பர்கள் வந்து கேட்டபோதுதான் சமநிலைக்கு வர முடிந்தது.
கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது என முதல்வர் அறிவிப்பு என்று சென்னையில் இருக்கும் என் ஊடக நண்பர் ஒருவர் அனுப்பிய செய்திதான் என்னை மேற்சொன்ன நிலைக்குத் தள்ளியது.
இதென்ன அலங்கோலம்? ஓர் ஆட்சி முடிந்து மற்றொரு ஆட்சி அமைகின்றபோது முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை அப்படியே தொடர்வதோ அல்லது அதை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கு வழி வகை செய்வதோ தான் ஆரோக்கியமான அரசுக்கும் ஜனநாயகத்திற்கு கடமையாக இருக்க முடியும். தலைமைச் செயலகம் என்னும் அந்தக் கட்டிடத்தை தற்போதைய முதல்வர் அப்படியே விட்டுவிட்டார். அதையும் மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான எந்த வேலையும் இதுவரை அங்கு தொடங்கப்படவில்லை. கருணாநிதியால் கட்டப்பட்டிருந்தாலும் அது மக்களின் பணத்தில் கட்டப்பட்டது. அது அடுத்துவருகிற ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை என்னும் தனி மனித விருப்பு வெறுப்புகளை தாண்டி மக்கள் உழைப்பை வீணடிக்கக் கூடாது என்னும் பெரிய நினைப்பு எதுவும் இல்லாமல் அது மூடப்பட்டிருக்கிறது. அதில் இப்போது ஒரு விளக்குக்கூட எரிவதில்லை. கட்டிடம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கும் என்றால் அதை விசாரித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு மிக்க உரிமைகள் உண்டு என்பதை நாம் உணர்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்து அபாரமான வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. அய்ந்து லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமி வெற்றிபெற்றிருக்கிறார். அவருடைய வீச்சு என்பது அப்படிப்பட்டதாக இருக்கிறது. அவர் நடத்தும் இலவச வகுப்புகளில் படித்தவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெற்று பல உயர்பதவிகளை வகிக்கிறார்கள். அப்படி அறிவுபுலம் சார்ந்த ஒரு மாநகரத்தை அவரால் கட்டியெழுப்ப முடியும் என்னும் நம்பிகையில் சென்னை மக்கள் இப்படிப் பட்ட மாபெரிய வெற்றியைத் தந்தார்கள். அந்த வெற்றியைத் தந்த மக்களை இப்படி இழிவுப்படுத்த முதல்வர் அவர்களுக்கு எப்படி மனம் வந்தது. இந்த மாபெரும் வெற்றிகள் அவருக்கு மீண்டும் இறுகிய மனநிலையைத் தந்திருக்கிறதா? கூடங்குளம் பிரச்சினைப் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தத் தீர்வைத் தராமல் தேவையில்லாமல் மக்களின் வெறுப்பை ஏன் சம்பாதிக்கிறார் என்று தெரியவில்லை.
ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக எட்டு ஏக்கர் நிலத்தில் ஒன்பது மாடி கட்டிடம். முழுவதும் குளிர்சாதன வசதி. டிஜிட்டல் தொழில்நுட்பம். 5.2 மில்லியன் புத்தகங்கள் வைக்கத் தேவையான இடவசதி.172 கோடி ரூபாய் செலவு.கூட்ட அரங்குகள், கருத்தரங்கு அறைகள் கண்காட்சி அரங்குகள், திரையரங்கு என அனைத்து அறிவு வளர்ச்சிக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தேவையான ஒரு இடமாக அந்த நூலகம் இருக்கிறது. தற்போது அந்த நூலகத்தில் பனிரெண்டு லட்சம் நூல்கள் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் அந்த நூலகத்தின் எந்த இடத்திற்கும் சென்று நூலகத்தைப் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. விழியிழந்தோரும் அந்நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தான் மாற்றுவதற்கு தற்போதைய அரசு முடிவெடுத்து இருக்கிறது. அதை உயர்சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவது என்னும் திட்டத்தையும் அரசு முன்வைத்திருக்கிறது.
தலைமைச்செயலகத்திற்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தையும் மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். ஒவ்வொரு கட்டிடம் அதன் பயன்பாட்டிற்கு ஏற்றவாறுதான் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கும் ஆனால் அதை வேறு ஒன்றுக்குப் பயன்படுத்தப் படும் போது தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்கு தேவையற்ற பணச்செலவுதான் அதிகரிக்கும். இப்படி மக்களின் பணத்தை வீணடிப்பதற்கு ஓர் அரசு எப்படி செயல்பட முடியும்?
கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டிருக்கும் நூலகம் நூலகப்பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அதையும் மருத்துவமனையாக மாற்றி ஆணையிடப்பட்டுள்ளது. அக்கட்டிடத்தை அவ்வளவு எளிமையாக மாற்றமுடியாமா எனத் தெரியவில்லை. இருக்கும் கட்டிடத்தை மருத்துவமனையாகக் கண்டிப்பாகப் பயன்படுத்த முடியாது. எனவே இதை நாம் கருணாநிதியை பழிவாங்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் மருத்துவமனை கொண்டுவருவதை நாம் எப்போதும் வரவேற்கிறோம். எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவ மனையை ஒருமுறை முதல்வர் சென்று பார்க்கட்டும். அங்கிருக்கும் அசுத்தங்கள், வசதியின்மை, இடம் போதாமை, பராமரிப்பு அற்ற தன்மை ஆகியவற்றைக் களைந்து அங்கு இத்தகைய மருத்துவமனையை அவர் உருவாக்குவாரேயானால் அனைவரும் பாராட்டலாம். அங்கு குழந்தைகளை படுக்க வைக்க இடம் இல்லை. அவர்களுகுப் போதுமான சத்துணவு தரப்படுவதில்லை. அப்படித் தரப்பட்டாலும் அதை சுகாதாரமாக சாப்பிடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை. இந்த நிலையில் உயர்சிறப்பு மருத்துவமனையாக அது உருவாக்கப்படும் என்னும் அறிவிப்பு ஏமாற்றுவதற்காகத்தான். இந்த உயர், சிறப்பு என்னும் சொற்களே அவ்விடங்களில் ஏழைகளை விளிம்புநிலை மக்களை அருகே அண்டக் கூட செய்யாது. ஏழைக்குழந்தைகள் அங்கே சேரவே முடியாது என்னும் நிலைதான் ஏற்படும்.என்ன செய்வது? வழித் தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல ஒரு அறிவுத் தளத்தை எப்படி காலிசெய்ய முடியும்
லலிதானந்த் என்பவரின் உள்ளக்கிடக்கையை தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அதை அப்படியே தருகிறேன்
முகநூல் நண்பர்களே.. நான் கடந்த பதினோரு வருடங்களாக கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு வரை இந்தப் பகுதியில் வசிப்பதற்கு பெரிதாய் காரணம் கிடையாது. ஆனால் பெருமிதப்படத்தக்க காரணமாய் அமைந்தது அண்ணா நூற்றாண்டு நூலகம். இது வெறும் கட்டிடமல்ல. காலத்தின் சாட்சி. அஸ்திவாரம் எழுப்பப்பட்ட காலம் முதல் இதை அங்குலம் அங்குலமாய் பார்த்திருக்கிறேன். தினமும் இந்த வழியாகத்தான் என் மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வருவேன். நூலகத்தை அடுத்துள்ள பள்ளியில்தான் அவள் படிக்கிறாள். ஒவ்வொரு வார இறுதியிலும் என் குழந்தைகளை இந்த நூலகத்திற்கு அழைத்துப் போவேன். அவர்களுக்கும் இது மிகப் பிடித்திருந்தது. சின்னஞ்சிறு வாடகைக் கூட்டுக்குள் வசிக்கும் கிளிகளுக்கு வாசித்தறிய வானமே கிடைத்தால் மகிழ்ச்சி தானே? அந்த மகிழ்ச்சி இவ்வளவு சீக்கிரமே சிதைந்து போகும் என எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் அல்ல. என்னைப்போல் எத்தனையோ அப்பாக்கள். அம்மாக்கள். எல்லோருமே என்னைப் போலவே நம்பி வாக்களித்த சாமான்ய மக்கள். இந்தப் பகுதியில் யாருமே இந்த அதிரடி மாற்றத்தை விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே இதே மனநிலையில்தான் இருப்பார்கள் என நம்புகிறேன். ஏனெனில் இன்று நேர்ந்ததை எல்லா ஊர்களிலுமே வெவ்வேறு விதத்தில் சந்திக்கத்தானே போகிறார்கள். எனக்காவது என் குழந்தைகளிடம் சொல்ல ஒரு உண்மையிருக்கிறது இதுதான் ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்று. என் குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளிடம் சொல்ல ஒரு உண்மையிருக்கிறது. ஒரு காலத்தில் இது மருத்துவமனை இல்லை என்று. என் வாழ்வில் மிகப்பெரிய துக்க நாளாய் இன்றைய தினத்தை உணர்கிறேன். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். இனி கோட்டூர்புரத்தில் குடியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை.
இதுதான் மக்களின் உணர்வு. தங்கள் குழந்தைகள் உடல்நலத்தோடு இருந்தால் மட்டும் போதும் என்னும் எண்ணம் மட்டும் பெற்றோர்களுக்கு இல்லை. அவர்கள் அறிவுநலத்தோடும் உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். அதற்கு நூலகங்கள் மிகவும் அவசியம். நூலத்தை இப்படி துவம்சம் செய்வது எப்படி நியாயமாக இருக்கும். யாழ்ப்பாண் நூலகத்து எரித்து தமிழர்களின் அறிவிதிரட்சியை அழித்தது சிங்கள அரசு. அண்ணா நூலகத்தைக் காலி செய்து இப்போது ஜெயலலிதா அரசும் அதையேதான் செய்கிறது.
தமிழர்கள் எல்லா இடங்களிலிம் தங்கள் பண்பாட்டுக் கூறுகளை பலிகொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.






