போபால் : தொடரும் மக்கள் மீதான வன்முறைகள் - பால்நிலவன்
- Details
- Published on Thursday, 18 August 2011 14:44
- Written by Super User
மிதமான பருவநிலையும், சில்லென்ற அலைத்தெறிப்பும் குறிர்ந்த காற்றும் தேடி எலியர்ட்ஸ் கடற்கரைக்கு வந்தவர்கள், அனறு (18.6.2010) அதிகாரத்திற்கெதிராகப் பெருகிவந்த சமூக அக்கறையென்னும் உணர்வலைகளின் தெறிப்பையும் பெற்றே வீடு திரும்பியிருக்கக் கூடும்.
ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவின் தப்பாட்டமும் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் புரிதல் குறித்து பேசிப்பேசி தமுஎகச தோழர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நிகழ்ச்சியின் மைய நிகழ்வான, போபால் விஷவாயுக்கசிவின் பேராபத்து விளைவுகள் குறித்து எடுக்கப்பட்ட போபால் எக்ஸ்பிரஸ் திரையிடலும் ஆகிய முக்கிய நிகழ்வுகளே இதற்குக் காரணம் எனலாம்.
இத்திரையிடல் நிகழ்விற்கு தடைவிதிக்கப்பட்ட சூழ்நிலையில், சூரியன் மேற்கு உச்சியில் இருக்கும் நேரத்திலிருந்தே போலீஸ்காரர்கள் எலியர்ட்ஸ் கடற்கரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். ஒருவழியாக மீன் சந்தைக்குப் போகும் திசைவெளியில் மணல்வெளியில் வெண்திரை கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த போலீஸ் அங்கு வந்தனர். அனுமதிக்கடிதம் இருக்கிறதா? அனுமதியின்றி திரையிடக்கூடாது என்று எச்சரித்தனர்.
உரிய காவல் அதிகாரிகளுக்கு, மற்றும் மாநகராட்சிஅலுவலர்களிடம் விண்ணப்பித்தாயிற்று. இனி யாரையும் கேட்க வேண்டியதில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூற, இல்லை காவல்துறை ஆய்வாளர் இங்கு இன்னும் சற்று நேரத்தில் வருவார். அவர் அனுமதித்த பிறகு நீங்கள் திரையிடலாம் என்று போலீஸ்காரர்கள் தடுத்தனர். இதற்குள்ளாக பொதுமக்களும் திரண்டுவந்து திரைக்கு எதிரே மாலையில் படததைப் பார்க்க அமர்ந்துவிட்டனர். ஆய்வாளர் வரும்வரைகாத்திருக்க முடியாது. நாங்கள் திரையிடுவோம் என்று இவர்கள் கூற விவாதம் ஒரு பக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்க திரையிடல் நிகழ்வு தொடங்கியது.
நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து சி.எம்.குமார் பேசினார். 1952ல்இன்றைய முதல்வர் வசனம் எழுதிய பராசக்திப் படம் திரையிடுவதற்கு மிகப்பெரிய அளவில் தடை ஏற்பட்டது. அன்றைய போலீஸ் கமிஷனராக இருந்த புல்லா ரெட்டி, கலை என்பது மக்கள் உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு சாதனம்தான். அதை தடை செய்யக் கூடாது. அத்தகைய கலைவடிவத்தை வெளிப்படுத்த நாம்தான் துணைநிற்க வேண்டும் என்று கூறி அத்திரைப்படத்தை வெளியிட இருந்த தடைகளை நீக்கிய அந்நாளைய ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தென் சென்னை மாவட்ட தமுஎகச செயலாளர் அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளோடு தோள்நின்று அவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தரவே இத்திரையிடல் என்று விளக்கினார்.
இனி.... திரைப்படம்...
வேகமாக வந்துகொண்டிருக்கும் ரயில்ஒன்றின் பாதையில் ஒரு இளைஞன் தண்டவாளத்தில் வெகுதூரத்திலிருந்து கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி ஓடிவருவதுதான் இத்திரைப்படத்தின் முதல்காட்சி. என்றாலும், இதுவே இத்திரைப்படத்தில் வரப்போகும் கடைசிக்காட்சிகளுக்கான லீட் ஆகவும் இருக்கிறது. அப்படிஅவன் தன் உயிரைதுச்சமாக எண்ணி ரயிலை நிறுத்திய அடுத்த கணமே பக்கத்துத் தண்டவாளத்தில் வேறு ஒரு ரயில் இவனைக் கடந்து செல்கிறது. உண்மையில்அவன் நிறுத்த விரும்பிய போபால் எக்ஸ்பிரஸ் வண்டிஅதுதான். ஆனால் அவ்வண்டியும் அதோ போயேபோய்விட்டது. இப்போது அவன் கண்களில் உருவான பதட்டம் நம் கண்களுக்கு வருவதற்குள்ளாகவே இப்படத்திற்கான துவக்கக் கதைக்கு நாம் செல்கிறோம். அவன் ஏன் அந்த தண்டவாளத்தில் அப்படிஓடிவருகிறான் எதற்கான அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வண்டியை நிறுத்தினான் என்று நமக்குள் எழும் கேள்விக்குப் பதிலாக காட்சிகள் விரிகின்றன. அல்லது பின்னோக்கிஒருபுள்ளியிலிருந்து ஒரு சிறுகதையாக திரைப்படம் துவங்குகிறது.
யூனியன் கார்பைட் நிறுவனத்தின் சூபர்வைசர்களில் ஒருவன் பிரபுல்வர்மா. புதிதாக திருமணம் ஆனவன். தன் புதுமனைவியுடனான அவனது வாழ்க்கை, வேலைக்குப் போவது வருவது, தொழிற்சாலையில் பணியாற்றுவது, கடைவீதி வழியாக வருகையில் ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்களுடன் முக்கியமாக பஷீரை மியான் சந்தித்து தன் தொழிற்சாலைப் பணிகள், உலக அரசியல் இந்திய அரசியல்என்று ஏதாவது மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு வீடுதிரும்புதல், அப்படி வீடு திரும்பும்போது மனைவிக்கு ஏதாவது வாங்கிவந்து அவளை மகிழ்வித்தல், குறிப்பிட்ட ஒருகாட்சியில் அன்று அவன் மனைவிக்கு வெல்வெட் போன்ற வழவழ ஓவர்கோட்டை ஒன்றை வாங்கிவந்து மகிழ்விக்கிறான். இப்படியாக போகும் அவன் வாழ்க்கையில் அந்த 1984 டிசம்பர்2 இரவு குறுக்கிடுக்கிறது.
அன்றைய தினம் அவன் மனைவி தற்செயலாக வெளியூருக்கு மறுநாள் வருவதாகக் கூறி புறப்படுகிறாள். அவன் மனைவியாக வரும் நேத்ரா ரகுராமனின் நடிப்பு ஒரு சராசரி இந்தியப் பெண்ணுக்கான அவ்வளவு லட்சணங்களும் பொருந்திய எளிய அழகுடன் மிளிர்கிறது. ஆட்டோ ஓட்டும் மூதிய நண்பருடன் அவர் விருப்பத்துக்கிணங்க பாருக்குச் சென்று தண்ணியடிக்க உகந்தநாள் என்று எண்ணம் வளையமிட அன்று மாலை வேலையைவிட்டுத் திரும்பியதும் அவரை அழைத்துக்கொண்டு பார் இணைக்கப்பட்ட பொழுதுபோக்கு மனமகிழ் மன்றத்திற்குப் போகிறான். அங்கு அவர்கள் குடிக்கிறார்கள். கசல் பாடகியின் (நடிப்பு சீனத் அமன்?) பாடலில் மூழ்கித் திளைக்கிறார்கள். அவ்வப்போது பேக்டரி விஷயங்களைப் பேசுகிறார்கள்.
இதற்கிடையில் தொழிற்சாலையில் ரெட் அலர்ட் சிவப்பாக ஒளிக்க என்ன ஆச்சு ஏன் சிவப்பு லைட் எரியுது என்று இரவு ஷிப்ட் சூபர்வைசர் கத்த... தொழிற்சாலையிலிருந்து வாயு கசிந்து ஒரு ரயில்வண்டியின் வெகு நீண்ட புகைபோல வெளியேறிச் செல்வதாக நமக்குக் காட்டப்படுகிறது. க்வாசி கேம்ப் எனப்படும் தொழிற்சாலை அருகான குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் சாலையின் ஓரம் ஒரு பூனைநச்சுவாயை முதன்முதலாக சுவாசித்த அதிர்ச்சியடைந்து ஓடும் முதல் உயிர் என்று நாம் உணர்கிறோம். தொழிற்சாலைவிஷவாயுக் கசிவு தொடர்பான காட்சிகளும் பொழுதுபோக்கு பார் தொடர்பான பாடல் காட்சிகளும் தகுந்த நீளத்தோடு மாற்றி மாற்றி தொடர்ந்து காட்டப்படுகிறது. அதன்பிறகு தூளியில் காட்டப்பட்ட ஒரு குழந்தை இருமுகிறது. தொடர்ந்து இருமுகிறது. பிறகு அங்கங்கே படுத்துக்கொண்டிருக்கும் பிளாட்பாரவாசிகளும் குடியிருப்புவாசிகளும் தொடர்ந்து இருமுகிறார்கள். தூக்கம் கலைந்து என்ன ஏது என்று தவிக்கிறார்கள். சிலசில காட்சிகளியே அவதிக்குள்ளாகிறார்கள். நச்சுவாயுவின் ஊடுருவலை மக்கள் முழுமையாக உணர்ந்த காட்சிகள் அடுத்தடுத்து வருகிறது. திபுதிபுவென்று மக்கள் தெருத்தெருவாக திரண்டு ஓடுகிறார்கள். பாரில் குடித்துவிட்டு திரும்பிய கதாநாயகனும் அவனது நண்பரான முதிய ஆட்டோ டிரைவரும் பீதியோடு பாய்ந்துவரும் மக்கள் திரளில்சிலரைநிறுத்தி என்னவென்று விசாரிக்க தொழிற்சாலையிலிருந்து பாய்சன் கேஸ் க்வாசி கேம்ப் முழுக்க நிறைஞ்சிடுச்சி. பலபேர் வீட்டுக்குள்ளவே மாட்டிகிட்டாங்க. நூத்துக்கணக்கானவங்க செத்துமடியறாங்க. தப்பிக்கமுடிஞ்சவங்க மட்டும் தப்பிச்சி வர்றோம். அவங்களைக் காப்பாத்த முடியலை என்று சொல்லி ஓடிவருகிறார்கள். ஆட்டோ டிரைவரான பஷீர் மியான் நீ முடியாதவங்களை ஏத்திக்கிட்டு ஆஸ்பிடல் போ நான் பின்னாலவர்றேன் என்று கூறி அனுப்பிவைக்கிறார்.
மருத்துவமனையில் தீவிரமாமக சிகிச்சை அளிக்கப்பட்டும் தொடர்ந்து பலர் இறந்துகொண்டே இருக்கிறார்கள். பிரபுல்வர்மா அவன் தன்னுடன் ஆட்டோவில்ஏற்றி வந்த சிலரையும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
போபால் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்அடுத்த ரயில் நிலையத்திற்கு போன் செய்து இங்கு விஷவாயு பரவிக்கொண்டிருக்கிறது. இங்கு பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள். போபால் நோக்கிவரும் ரயில்களை தடுத்து நிறுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஹலோ ஹலோ என்று மறுமுனையிலிருந்து கத்த இவர்கள் பேசுவது அவர்கள் காதில் சரியாக விழவில்லை என்று நமக்குப் புரிகிறது. திரும்பவும் போபால் தெருக்களில் மக்கள் அலைக்கழிந்து ஓடியபடியே இறந்துவிழும் காட்சிகளைக் காணுகிறோம். அடுத்து ஒரு காட்சியில் ஸ்டேஷன் மாஸ்டர் டேபிள் போன் ஒயருடன் ரீசிவர் கீழே தொங்கியவாறு ஆடியபடிஇருக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டர்இருக்கையில் தாறுமாறாக சாய்ந்தவண்ணம் கண்கள் மின்விசிறியை வெறித்த வண்ணம்....
இப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையையும் வரிக்குவரி சொல்வது நமது நோக்கமல்ல.
ஏனென்றால் இப்படத்தின் கதையென்று உள்ள லேயரை மட்டும் விட்டுவிட்டு, விஷவாயு கசிந்து பெருகி, ஊடுருவி நகரையே மூழ்கடித்து மக்கள் ஆரவாரித்து உயிர்விடும் காட்சிகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் இயக்குநரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளருமான மஹேஸ் மதாயின் பொறுப்பான அக்கறை எந்த அளவிற்கு கடும் உழைப்போடு கலந்தது என்பது தெரியவரும்.
க்வாசிக் கேம்பில் மாட்டிக்கொண்ட இன்னும் சிலரை காப்பாற்றவே அத்திசை நோக்கிஓடிய பஷீர்மியானாக வந்து அங்குக் கண்ணாடிக் கதவுக்குள் தவிக்கும் சிறுவனைக் காப்பாற்ற அக்கதவை உடைக்கும் முயற்சிக்குப் பிறகு வாயுக் கசிவில்அவரும் சிக்கிப் போராடி கடைசியில் மற்றவர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஹமீதியா மருத்துவமனையில் வந்து உயிருக்குப் போராடி இவ்வுலக வாழ்விலிருந்து விலகும் நஸ்ரூதீன் ஷாவின் நடிப்பு நம்முன் ஒருவாழ்வியலைக் கொண்டுவந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்தான் இப்படத்தின் உயிர்நாடி என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மனமகிழ் பாரில் அழகிப்பாடகியாக வரும் சீனத் அமனுடன் அவர்அடிக்கும் லூட்டிரொம்ப அநியாயம். இக்காட்சிகள் எல்லாம் படத்தின் தீவிரத்தையே குறைத்துவிடுகின்றன. நஸ்ரூதீன் ஷா ஆட்டோக்காரர் பஷீர்மியான் பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியுள்ளார் என்று சொல்லலாம். இயக்குநரின் திரைக்கதையாக்கத் தடுமாற்றத்தால் (அல்லது படத்திற்குத் தேவையான பொழுதுபோக்கு சதவீதமும், காட்சிவிறுவிறுத்தன்மையும் சரிவிகிதத்தில் தருவதற்கான கலைவடிவ முறைமைக்கு இதுதான் சரி என்று இயக்குநருக்கு தீர்மானித்திருக்கலாம்) ஒரு பெரிய நடிகரையே குறைத்து மதிப்பிட வேண்டியதாயுள்ளது. என்றாலும் ஆட்டோக்காரர் பஷீர்மியான் பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியுள்ளார் என்று சொல்லலாம்.
என்னை ஆட்டோ எடுத்துத் தப்பிச் செல்ல துணைபுரிந்து க்வாசிக் கேம்ப் சென்று இன்னும் சிலரைக் காப்பாற்ற மட்டுமல்ல ஆட்டோவில் எடுத்துத் தப்பிச்செல்ல நான் ஒருவனாவது பிழைததுக்கொள்ளட்டும் என்று அவர் எண்ணிய முடிவுதானா என்றெல்லாம் தனக்குத்தானே வெறிகொண்டபடி கூறியவாறு க்வாசிக் கேம்ப்புக்கு ஏன் சென்றாய் உன் காலை உடைத்துவிடுகிறேன் என்று இவன் உரிமையாக திரும்பத் திரும்ப கத்துகிறான். அதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்துவிடுகிறது. இதன்பிறகு மறுநாளையக் காட்சி. அதன்பிறகு எண்ணற்ற முஸ்லீம் உடல்கள் சடங்குமொழிகளோடு பெரிய இடுகாட்டுவெளியில் மண்ணில்புதைக்கப்படும் காட்சி. இவனும் பஷீர் மியானுக்கு ஒரு கை மண்ணள்ளி அவரின் புதைக்குழியில் போட்டுவிட்டு சாலை மேட்டுக்கு வந்து நிற்கிறான். மனைவி எழுதிவைத்துவிட்டுப் போன கடிதத்தை தன் பாக்கெட்டிலிருந்து இப்பொழுதுதான் எடுத்துப் படிக்கிறான். நாளை போபால் எக்ஸ்பிரஸில் வருவதாக எழுதப்பட்ட வாசகத்தைக்கண்டு அதிர்ச்சியடைகிறான். உடனே ஆட்டோ எடுத்துக்கொண்டு விரைகிறான். போபால் நகருக்குள் வருவதற்குள்ளாகவே பல மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றின் லெவல் கிராஸிங் பகுதியிலேயே ரயிலைத் தடுத்துநிறுத்திவிடவேண்டும் என்ற படுபாய்ச்சலாக ஆட்டோ ஓட்டிச் செல்கிறான். அவன் ரயிலை மறிக்க விரும்பிய ஒரு இடம் கண்டடைந்து லெவல் கிராஸிங் காவலரிடம் ரயிலை நிறுத்தும்படி கெஞ்சுகிறான். நான் பாயின்ட்ஸ் மேன் இல்லை. எனக்கு ரயிலை நிறத்துவது தொடர்பான அதிகாரம் ஏதும் இல்லை என்று முதிய காவலர் கூறுகிறார். ரயில் லெவல் கிராஸிங் பாயிண்ட் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்ததும் அவரை மீறி தண்டவாளத்தில் ஓடுகிறான். வெகுதூரத்தில் யாரோ தேவையில்லாமல் ஓடிவருகிறார்களே என்ற சலிப்போடு கடும் குழப்பத்தோடும் ரயில் எஞ்சின் முகப்புக் கண்ணாடி வழியாக போ போ என்று அவனை விரட்டியவாறு வெளியே அவரும் கையசைக்கிறார். அதேவேளையில் எதிராளியின் உயிர்துணிவு காரணமாக ரயிலையும் நிறுத்துகிறார். அவன் தன் முயற்சியில் போபாலுக்கு செல்லவேண்டிய ஒரு ரயிலை தடுத்துவிட்டதற்காக மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சி ஒரு கணமேனும் நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இவனைக் கடந்து பக்கத்துத் தண்டவாளத்திலேயே இன்னொரு ரயில் பாய்ந்துவந்து இவனைக் கடந்து செல்கிறது. இவன் அதிர்ச்சியோடு பார்க்கப் பார்க்க அதில் போபால் எக்ஸ்பிரஸ் என்று போட்டிருகிறது. பெரும் அதிர்ச்சியோடு அதில்தானே அருமை மனைவி வந்துகொண்டிருக்கிறாள் என்று மனம் பதட்டமடைய மீண்டும் ஆட்டோ எடுத்துக்கொண்டு இம்முறை போபால் ரயில்வே ஸ்டேஷனுக்கே செல்வதென தீர்மானித்து பயணிக்கிறான். இதற்கிடையில் ரயில்கள் வருகையின் கோணத்தையும் ரயில் செல்கையின் கோணத்தையும் ஒன்றைமாற்றி ஒன்று என்று வெவ்வேறு வகையான பல கோணங்களின் காட்சிகள் வருகின்றன. இயக்குநர் சொல்ல வந்த சப்டெக்ஸ்ட் நம் உள்ளுணர்வோடு பேரும் தருணங்களான ஒளிப்பதிவு காட்சியாடல்களின் வெகு நுட்பமான தருணங்களையும் நாம் காண முடிகிறது.
அதேபோல போபால் நகரத்திற்குள் ரயில் நுழைகையில் நகரெங்கும் தெருக்கள், சாலைகள் என்று மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளைக் காணும் ரயில் பயணிகள் காலையில் பனியின் பொருட்டு மூடியிருந்த சன்னல் கண்ணாடியை திறக்காமலேஇருந்ததால் அவர்களுக்குள் வாயு பரவாமல் இருப்பதை ரயில் பயணிகள்தம் வசனங்கள் வழி உணர்கிறோம்.கதாநாயகன் பிரபுல் வர்மாவின் மனையும் இந்த ரயிலில் சன்னலில் அதிர்ச்சியோடு சாலை வெளிகளில் பிணங்களை அதிர்ச்சியோடு வருகிறாள். போபால் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வண்டிவந்து நிற்க ரயில் எஞ்சின் டிரைவர் பிளாட்பாரத்தில் ஓடிவந்தபடியே இறக்கிறார். இக்காட்சியின் வழியே நமக்குப் புலப்படும் உண்மைச் சம்பவ செய்தியின் சாரம் என்னவென்றால் மறுநாள் மதியம் வரையிலுமே விஷவாயு ஊருக்குள் இருந்தது என்பதுதான். அதன்பிறகு வெளியேறிவிடுகிறது. ரயில் பயணிகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். அதையும் மீறி சிலர் வெளியே வந்து இறக்கிறார்கள். சிலர் வாயை நாசியை பொத்திக்கொண்டு மிகுந்த கலவரத்தோடு பிளாட்பாரத்திற்குள் இறங்குகிறார்கள்.
தன் மனைவியைக் காப்பாற்ற மீண்டும் ஆட்டோவில் ஏறி நகருக்குள் மனித, பிராணி சடலங்களின் இடையே வண்டி ஓட்டிவரும் காட்சி நம் நெஞ்சை பிழிகிறது. அவன் ரயில்வே ஸ்டேஷன் நெருங்கும்போதெல்லாம் நச்சுவாயு பரவல் அடங்கிய தருணங்கள் ஆகும். தன் மனைவியைத் தேடி ரயில் பிளாட்பாரத்தில் அலைகிறான். யாரோ ஒரு பெண் சடலத்தின் முகத்தைத் திருப்பிப் பார்க்கிறான். மேலும் அலைக்கழிந்த பார்வையோடு நடக்கிறான். இறுக்கிச் சாத்தப்பட்ட டெலிபோன் பூத் கேபினினின் கதவிடுக்கின் வெளியே கொஞ்சம் புடவை தெரிகிறது. அந்தப் புடவையைப் பார்த்துவிட்டு ஓடிவந்து கதவைத் திறந்து பார்க்கிறான். டெலிபோன் பூத் கண்ணாடிக் கதவின் உள்பக்கங்களில் பனி வடிந்துகொண்டிருக்கிறது. தன் மனைவியைச் சேர்த்தனைக்க இருவரும் கதறுகிறார்கள். எதிரே கண்கள் வெறித்தபடி ஒரு பெண் இறந்துகிடக்க அவள் மீது தன் தாயியிடம் பால் குடித்த பச்சிளம் குழந்தையொன்று முலையின் அருகாக இருந்துகொண்டு இந்த உலகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இருவருமாகச் சென்று எடுத்துக்கொண்டு அவ்விளந்தம்பதிகள் அக்குழந்தையை பஷீர் மியான் என பெயரிட்டு அழைத்தபடி நடக்கிறார்கள். இப்படத்தின் கதை நாயகனாக மிகச் சரியாக பொருந்திய கேகே எனும் புதிய முகத்தை பாராட்டியே ஆக வேண்டும். போபால் விஷவாயு விபத்தில் மக்கள் இறந்தது தற்செயல் அல்ல. தொழிற்சாலையின் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தொழிற்சாலை விதிமுறைகள் ஏதும் கடைபிடிக்காததுதான் என்பதை நஸ்ருதீன் ஷா வசனத்தின் வாயிலாக நமக்குத் தெரிவித்த இயக்குநரின் சாதுரியமான இயக்கத்திற்கு நமது சல்யூட்.
இத்திரைப்படம் ஓடும் நேரம் ஒன்றரை மணிநேரம்.
இத்திரைப்படம் ஓடத் துவங்கிய அரைமணி நேரத்திற்குள்ளாகவே அங்கு வந்த போலீஸ் நிலைய ஆய்வாளர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை தனியே அழைத்து கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். திரைப்பட மற்றும் வீதி நாடகக் கலைஞரான ராமு அந்தக் காவல் ஆய்வாளரிடம் சார் நாங்க கொள்ளையடிக்கல, கொலை பண்ணல, மக்கள்கிட்ட நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க முயற்சி பண்றோம் என்று கூற காவல் ஆய்வாளரோ அதெல்லாம் எனக்குத் தெரியாது சட்டம் ஒழுங்கு கெடறதப் பாத்துகிட்டு நாங்க சும்மா போகமுடியாது என்று மிரட்ட ராமுவோ சற்று உயர்த்திய குரலில் கலைக்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இங்க எந்த க்ரைமும் நடக்கல. எங்க நடக்குதோ அங்கப் போய் உங்க கடமையைச் செய்ங்க என்று கூற எங்க அனுமதி பெறாம எப்படி நீங்க திரையிடலாம் என்று வலுத்த விவாதம் படம் தொடர்ந்து ஓடுவதைக்கண்டு மக்கள் திரண்டு நிறைந்ததைக் கண்டபிறகு சற்றே அடங்கியது. என்றாலும் திரைப்படம் முடிந்த பிறகு பாரதி கிருஷ்ணகுமார் அதிகாரத்திற்கெதிரான போராட்டம் என்பது மக்கள் மறதிக்கு எதிரான போராட்டமே என்று இப்படத்தின் துவக்கத்தில் டைரக்டர் ஒரு கார்டு போடுவார். இக்கார்டு இறுதிக்காட்சியிலும் வரும். யூனியன் கார்பைடு நிறுவனத்தை எதிர்த்து மக்கள் போராடும் காட்சி வரும். இப்படத்தில் முக்கியமாக கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால் இவ்விபத்துக்கு முன்பே பதினைந்து ஆண்டுகளாக தொழிற்சாலைக் கழிவுக்கு தகுந்த ஏற்பாடு செய்யவில்லை என்பது சட்டமன்றத்திலும் பத்திரிகைகளிலும் பலமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விபத்துக்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொழிற்சாலை குளிர்சாதன இயந்திரங்கள் பழுத்டைந்துவிட்டன. இத்தொழிற்சாலையிலேயேமுடக்கப்பட்ட கழிவு ஒருநாள் வெளியேறுமானால் அது துர்நாற்றம் வீசும் வாயுவாக நுரையீரலை நிரப்பி மூளையைச் செயலிழக்கும் விஷவாயுவாகத்தான் வெளியே வரும். அப்போது பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்படும் என்று பலமுறை எச்சரித்தும் தொழிற்சாலையோ அரசாங்கமோ காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்படம் போபால் துயர நிகழ்வை முழுமையாக உணர்த்த முற்படவில்லையென்றாலும் போபால் துயரத்தைப் பேசுகின்ற வகையில் முக்கியமான படமே என்று பேசிமுடித்ததுமே அதெப்படி நீங்க மைக் பிடிச்சி அரசு அதிகாரம்னு பேசலாம் நடங்க ஸ்டேஷனுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சவங்க அத்தனை பேரும் ஸ்டேஷனுக்கு நடங்க.. அந்த ஸ்கிரீன், ப்ரொஜெக்டர் எல்லாத்தையும் பறிமுதல் செய்ங்க என்று தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார் அப்போலீஸ் அதிகாரி.
மேலும் விவாதம் தொடர்ந்தது. மேலிடத்திலிருந்து ஏதோஒரு தொலைபேசி அழைப்பு வந்து கைது, பறிமுதல் நிகழ்வை போலீஸார் கைவிட உத்தரவிட்டது.
போபால் விஷவாயுக் கசிவு விபத்து குறித்து மத்திய அரசு அமைச்சர் குழு அறிக்கையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் இது. அந்த அமைச்சர் குழு அறிக்கையிலும் பேராபத்தில் பாக்கப்பட்ட லட்சம் நோயாளிகளுக்கு சாதகமான அம்சங்களோ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்க உரிய இழப்பீடுத் தொகை விநியோகிப்பதிலோ நிச்சயம் நேர்மை இருக்கவோ போவிதில்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பவிட்ட அன்றைய மத்திய பிரதேச மாநில, மத்திய உயரதிகாரிகளையோ, அதற்கான உத்தரவு எங்கிருந்து வந்தது என்ற உண்மையை, நீதிமன்றத் தீர்ப்பினால் நிறுவன கருங்காலிகளுக்கு எதிரான புகார் நீர்த்துப் போகும்படி செய்ததை மறுத்து அப்புகார் எவ்வளவுநியாயமானது என்றோ எதுவுமே சொல்லப்போவதில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அப்படிசொல்வதற்கு அடிப்படை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வலுத்த பிறகும் ஊடகங்களில் இச்செய்தி தொடர்ந்து பரவலாக்கப்பட்ட பிறகும் கூட அரசியல் வட்டாரத்தில் கடந்த பத்து நாட்களாக நடந்துவரும் அக்கப்போர்கள் உலகறியும்.
வழக்கிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு குறித்து எவ்வித சிக்கல்களுக்குள்ளும் மாட்டாமல் வாரன் ஆண்டர்சன் லாவகமாகத் தப்பித்துச் செல்ல உதவியது யார்? அதற்கு உடந்தையானவர்கள் யார் யார்? வெறும் உயரதிகாரிகள் மட்டும்தானா? மத்திய பிரதேச அரசா? அல்லது அன்றைய இந்திய அரசின் தலைமையா? என்று பலவிதக் கேள்விகள் ஆளாளுக்குக் குடையக் குடைய நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜீன் சிங் மெல்ல வாய்திறந்தார். அன்றைய மத்திய அரசின் வழிகாட்டலில்தான் இது எல்லாம் நடந்தது. எனக்கென்று ஒருதனி நிலைப்பாடும் இல்லை என்று. இதுதான் ஒரு பெரிய மாநிலத்திற்கே மக்கள் காவலனாக இருந்த முதல்வர் கூறும் பொறுப்பான பதிலா? என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.
இந்தியாவை பெரும்பான்மையான ஆண்டுகள் ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுதானே இவ்வழக்கை தொடர்ந்து நீர்த்துப்போகச் செய்து வருகிறது.
இனிமேல் வாரன் ஆண்டர்சன் வழக்கிற்குள் சேர்த்துவிட்டால் மட்டும் உரிய நீதியை மக்களுக்கு கிடைக்கச் செய்துவிடுவார்களா?
பிரதமர் ராஜீவ் காந்திக்கு உதவிச் செயலாளராக இருந்த பி.சி.அலெக்சாண்டரிலிருந்து ஆண்டர்சனை போபாலிலிருந்து தில்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற கேப்டன் எஸ்.எச்.அலி உட்பட ஒவ்வொருவராக ஒவ்வொரு உண்மையை உதிர்க்கத் தொடங்கிய பிறகுதான் பிரதான உண்மையை நோக்கி மக்கள் புரிதல் கொள்ளத் துவங்கி வருகிறார்கள்.
நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, இன்றைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சூழ்நிலை கருதி இப்படியொரு முடிவை அர்ஜீன் சிங் எடுத்திருந்தால் அதுசரியானதுதான் என்று கூறுகிறார். அர்ஜீன்சிங்கோ மத்திய அரசுதான் காரணம் என்கிறார். ராம்விலாஸ் பாஸ்வான், கம்யூனிஸ்ட்கள், பிஜேபி எல்லாரும் அர்ஜீன் சிங்கே பொறுப்பு என்கிறார்கள்.
மன்மோகன் சிங் சோனியாவைச் சந்தித்தார். பாராளுமன்றம் விவாதித்தது. அமைச்சர் குழு அறிக்கை தயார் செய்துகொடுக்க வேண்டும் என்று கூறியது. முடிந்தது கதை.
இப்படிப்பட்ட சூழலில்தான் எலியர்ட்ஸ் கடற்கரையில் தமுஎகச தோழர்களின் போபால் எக்ஸ்பிரஸ் திரையிடல்.
இம்மாதிரியான சூழலில்தான் காவல் துறையினரின் அச்சுறுத்தல்கள்.
இம்மாதிரியான சூழ்நிலையில்தான் வரலாற்றின் ஈசான மூலையில் எங்கோ மக்களைப் புழுவாக மதிக்கும் அதிகாரத்திற்கெதிராக வீறுகொண்ட கோப மின்னல்கள் படபடாவென்று அடித்துத் தெறித்து மின்னின. மட்டுமின்றி மக்களுக்கான உரிமைகளை மிகச் சரியாக மீட்டெடுத்தும் தந்துள்ளன. ஆனால் இன்றைய இந்தியாவில்?
விபத்தைவிடக் கொடூரமானது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போபால் மக்களுக்கு என்று குறிப்பிட்டு பெரிய எழுத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே என மையமாக எழுதப்பட்ட தமுஎகசவின் தென்சென்னை மாவட்டப் பதாகை கடற்கரை நடைமேடையில் நடப்பவர்களின் கவனத்தை கவரும் விதமாக பெரியதாக இருந்தும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடல்நோக்கிச் சென்று வெறுமனே காற்றுவாங்கிய பிறகு உடலில் ஒட்டிய மணலைக்கூட அங்கேயே தட்டிவிட்டுச் சென்றவர்களும் அன்று நிறைய பேர் வரத்தான் செய்தார்கள். என்றாலும் அவர்களின் வேறான சிலர் இந்நிகழ்வுக்கு வந்திருந்து கடைசிவரை நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்தவர்களுக்காகவென்று அவர்கள் சரியாக பார்க்கவேண்டும் என்று காற்றில்திரை ஆடாமல் கடைசி வரை கடற்காற்றில் ஆடாமல் ஒன்றரை மணிநேரம் கைவலியைப் பொறுத்துக்கொண்டு ஸ்கிரீன் ஸ்டேண்டோடு இறுக்கிப்பிடித்து நின்றுகொண்டிருந்த பெயர் தெரியாத அந்த இரு மனிதர்களின் உழைப்பை நம்பித்தான் நவீன சமுதாயத்திற்கான முயற்சியைநோக்கி நம்பிக்கைக் கரத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

