திருவொற்றியூரில் மக்கள் பேரணி
- Details
- Published on Thursday, 10 November 2011 15:49
- Written by Super User
சென்னையின் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் . அப்பகுதியில் சமூக நலனில் அக்கறை கொண்டு இயங்கும் முற்போக்கு அமைப்புகள் இயக்கங்கள் இணைந்து உருவானது தான் “தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம்”. ஒருங்கிணைப்பாளாராக தோழர் சேகர் ( தொ.சீ.இ.)-ம், ஒருங்கிணைப்பு குழுவில் தோழர். தமிழ் நாகவேந்தன், ப.த.மு.க., தோழர். தென்கனல் பு.இ.மு., தோழர். ஆனந்தன் அ.சி.இ., தோழர். பொருமாள் நா.த., தோழர் இயேசு ( பெரியார் திராவிடர் கழகம் ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று தமிழர்களையும் தமிழகத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் பிரச்னைகள், “மூவர் தூக்கு தண்டனை,” தமிழகத்தை சுடுகாடாக்கும் கூடங்குளம் அணுமின் உலை,” தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பரமக்குடி படுகொலைகள்,” என இம்மூன்று பிரச்னைகள் தொடர்பாக திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது, மக்களை அணி திரட்டுவது என்ற அடிப்படையில் நவம்பர் 5-ம் தேதி மாலை சுங்கச்சாவடி புரட்சியாளர் அம்பேத்கர் சிலையில் ஆரம்பித்து, உட்புறச் சாலை வழியாக 5கி.மீ., தூரத்தைக் கடந்து பெரியார் நகர், தந்தை பெரியார் சிலை அருகே பேரணியை முடிப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அக். 23-ம் தேதி முதல் மாலை நேரங்களில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் தோழர்கள் பங்கேற்ப்புடன் மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசுரம் மூலம் செய்திகளை மக்களிடம் சேர்ப்பதுடன், நிதியும் மக்களிடம் திரட்டினர்.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், சுவரொட்டி ஒட்டுவது என அனைத்து அமைப்புகளின் தோழர்கள் கடுமையாக களமாற்றினார்கள். நவ.5 காலை முதல் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழை மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் இடைவிடாமல் கொட்டியது. நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? என பதட்டத்தில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாலை 4 மணியளவில் மழை நின்றதில் சிறிது மகிழ்ச்சி. உணர்ச்சி பாடல்களுக்கு இடையில் தமிழ் ஆர்வலர்கள், உணர்வாளர்கள், சூழலியலாளர்கள் என திரன ஆரம்பித்தனர்.
மாலை சரியாக 5 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் மூத்த தோழர். தெய்வமணி மாலை அணிவிக்க, ம.தி.மு.க. வின் தோழர். மல்லை சத்யா அவர்கள் பேரணியை துவக்கி வைக்க, ஆரவார கோஷத்துடன் பெண்கள், குழந்தைகள் பங்கேற்ப்புடன் துவங்கியது.
பேரணி துவக்கத்தில் மூன்று தூக்கு கயிற்றை இரு தோழர்கள் சுமந்து செல்ல, ஈகச்சுடர் செங்கொடியின் உருவம் பொதித்த பதாகையை தோழர்கள் ஏந்தி செல்ல ஊர்வலம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. மோசமான குண்டும் குழயுமான சாலைகளிலும், முழங்கால் அளவு தண்ணீரையும் மக்கள் பொருட்படுத்தாமல் அணிவகுத்து சென்றனர்.
“தமிழகத்தை சுடுகாடாக்கும் கூடங்குளம் வேண்டாம். மூடு மூடு கூடங்குளத்தை மூடு,” “ நிரபராதி தமிழர்களை தூக்கிலிடாதே, போர்க் குற்றம் புரிந்த இராசபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து”, “போர்க் குற்றம் புரிந்த இராசீவுக்கு என்ன தண்டனை?” “கைது செய், கைது செய் பரமக்குடி படுகொலைகளுக்கு காரணமான போலீலை கைது செய்” ,“பரமக்குடி படுகொலைகளுக்கு சி.பி.ஜ., விசாரணை நடத்து”, “தமிழக அரசே ஆதீக்க சாதி வெறிக்கு துணை போகாதே”, போன்ற கோஷங்கள் விண்ணதிர, தோழர்களின் துண்டு பிரசுரம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கடுமையான மழையிலும் பெண்கள் குழந்தைகள் வந்தது பேரணியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. பேரணி சென்ற பாதையின் இருமருங்கிலும், வீடுகள், கடைகளில் இருந்து மக்கள் சாலைக்கு வந்து கோஷங்களை செவிமடுத்து கேட்டதும் அந்த மக்களிடம் பொதுபுத்தியில் படிந்திருக்கும் எதிர் மறை கருத்துக்களை போக்க உதவும் வகையில் இருந்தது. அந்த வகையில் பேரணியின் நோக்கத்திற்க்கு கிடைத்த வெற்றியே.
பேரணி முடிவுற்ற தந்தை பெரியார் சிலை அருகே பேசிய பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் தங்களது பேச்சில்இ “கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த பேரணி- “திருவொற்றியூரின் வரலாற்று நிகழ்வு” என்று குறிப்பிட்டனர். தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர். கீதா மாலை அணிவிக்க, பேரணி முடிவில் கொட்டும் மழையிலும் பெ.தி.க., வின் தோழர். டார்வின் தாசன், அ.சி.இ., -ன் தோழர். சிவபெருமான், பு.தொ.மு.-ன் தோழர்.தாமரை, சி.பி.ஜ.(எம்.எல்)- ன் தோழர். ஏ.எஸ்.குமார், த.தே.வி.இ.-ன் தோழர்.பாரதி த.ஒ, வி, இ.-ன் வழக்கறிஞர் தோழர்.வடிவாம்பாள், பெரியார் படிப்பகத்தின் தோழர்.நாராயணமூர்த்தி, ப.த.மு.க.-ன் தோழர். ஆதித்தமிழன், நா.த.கட்சியின் ஏழுமலை, தொ.சீ.இ.-ன் தோழர்.சிவபிரகாசம் ஆகியோர் உரையாற்றினர்.
சற்றேக்குறைய 500-க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்ப்புடன் நடைபெற்ற இந்த பேரணியின் வெற்றிக்கு பின்னணியில் அணைத்து அமைப்பு தோழர்களின் கடுமையான உழைப்பு அடங்கியுள்ளது. திருவெற்றியூர் பகுதி மக்களுடைய மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்க்கான ஒரு புள்ளியாக இந்நிகழ்வு அமைந்தது.
தனித்தனியாக பிரிந்து இயங்காமல் ஒத்த கருத்துகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நோக்கி செல்ல முடியும். நமக்கான எதிரியை வீழ்த்த முடியும் என்பதை “ தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம்” நவம்பர் 5 மாலை கொட்டும் மழையில் நடத்தி காட்டியுள்ளது. தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கத்தின் அடுத்தடுத்த போராட்டங்கள் மூலம் திருவொற்றியூர் மக்களை நமக்கான அரசியல் சக்தியாக வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.






