தமிழக மக்கள் விடுதலையும் , விவாதிக்கப்பட வேண்டிய முரண்களும் - பாலன்
- Details
- Published on Sunday, 20 November 2011 03:33
- Written by Super User
தமிழக அரசியல் களம் ஓரிரு மாதங்களாக பல்வேறு மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட பல போராட்டங்களையும், அரசியல் செயல்பாடுகளையும் ஒரு சேர எதிர்கொண்டு வருகிறது.
இலங்கை அரசின் மீதான போர்குற்ற விசாரணை, சமச்சீர்கல்வி, மூவர் உயிர்காப்பு, செங்கொடியின் தியாகம், பரமக்குடி சாதியப்படுகொலை, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் மீதான இந்துத்துவ சக்திகளின் தாக்குதல், என தமிழ் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டிய அரசியல் கோரிக்கைகளாகவோ, மக்களின் வாழ்வியல் கோரிக்கைகளாகவோ ஒவ்வொரு மக்கள் பிரிவினரையும் அது நிர்பந்தித்துள்ளது.
2009 ஈழ இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள், மக்களையும் அரசியல் சக்திகளையும் நடைமுறை ரீதியில் பயிற்றுவித்தது. ஆனால் அதிலிருந்து கூட நாம் அரசியல் ரீதியான படிப்பினையை பெற்றோமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஈழ இனப்படுகொலையை தடுக்கமுடியாத குற்ற உணர்ச்சி, கையறு நிலை, துரோகம், வீரியமிக்க பேராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்ட முடியாத இயக்கங்களின் பலவீனநிலை, ஆளும் வர்க்க ஓட்டுக் கட்சிகளை, அவர்களின் துரோகத்திற்கு பின்னும் அவர்களை பின்தொடர்ந்து அரசியல் நடத்திய நிலைமை என கண்ணுக்கு புலப்படக்கூடிய படிப்பினைகளை நாம் பெற்றபோதும் அதிலிருந்து மீண்டு நாம் மாற்று முயற்சிகளில் இறங்கினோமா என்றால் இல்லை. மாறாக அதே சறுக்கலில்தான் நம் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் புதிதாக பழைய திராவிட ஓட்டுக்கட்சிகளின் மொந்தையில் புதிய கள்ளு என்ற பாணியில் ஈழப்போருக்குபின்னர் தோன்றிய நாம் தமிழர் போன்ற இயக்கங்களின் பின்னால் கொடிபிடித்தோ அல்லது இந்திய ஆளும் வர்க்கம் அடுத்தடுத்து நம் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கமுறைக்கு, எதிராக திட்டமிடப்பட்ட நீண்ட அரசியல் அமைப்பு தேவையை மறுத்து, திடீர் ஒன்றுகூடலில், போஸ்டர் புரட்சியில், அலங்கார தொடர் உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே பாணியிலோ அல்லது, ஆதிக்க சாதி வெறியோடு மக்களை அணிதிரட்டும் சாதிக்கட்சிகளை இன அடிப்படையில் ஒன்றிணைத்து, இலவச இணைப்பாக இந்து பயங்கரவாதிகளையும் சேர்த்து கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழர்களின் தேசியச்சிக்கலை ஏதாவது ஒருவகையில் தீர்த்து விடலா மென்று கருதிக்கொண்டிருக்கிற வேளையில்தான், கடந்த ஓரிரு மாதங்களாக நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டங்கள், கோரிக்கைகள் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட நம்முடைய அரசியல் மற்றும் நடைமுறை குறைபாடுகளையெல்லாம் தாண்டி, ஒரு தேசிய சமூகமாக நம்மை கடந்து சென்ற இப்போராட்டங்களை, அரசியல் சிக்கல்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம், எவ்வாறு பார்த்து பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் இங்கு முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.
ஒவ்வொரு போராட்டத்தையும், ஒவ்வொரு கோரிக்கை களையும் துண்டு துண்டாக பார்ப்பதும், ஒரு தேசிய சனநாயக கோரிக்கையினுடைய முழுமையின் பகுதியாக பார்க்காமல், ஒவ்வொரு சிக்கலையும், தன்னளவில் முழுமையானதாகவும், பிற கோரிக்கைகளோடு முரணானதாகவும், ஒரு கோரிக்கையோடு, பிற கோரிக்கையை எதிர்நிறுத்துவதாகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சனநாயக கோரிக்கைகளை, தேசிய கோரிக்கைக்கு எதிராக பார்ப்பதும், தேசிய கோரிக்கையையும் சனநாயக கோரிக்கையே என பாராமல் அதை எதிர்நிறுத்தி பார்ப்பதுமான அரசியல் புரிதலே நிலவி வருகிறது.
ஒவ்வொரு கோரிக்கைகளிலும் உள்ள தேசிய விடுதலைக்கான அம்சங்களையும், சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிற்போக்குத்தனத்திற்கெதிரான, வேர்க் கால்மட்ட சிக்கலான சமூகத்தை சனநாயகமயப்படுத்துவதற்கான அம்சங்களையும், கண்டறிந்து அதை நமது அரசியல் முன்னெடுப்பிற்கான வழியாக கொள்ளாமல், எங்ஙனம் நமது தமிழ்த் தேசிய விடுதலையும், விரிவான தேசிய உருவாக்கமும் சாத்தியம் என்பது கேள்விக்குரியதாகும்.
மேலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கெதிரான சீன மக்களின் தேசிய விடுதலை யுத்தத்தில், மக்கள், அவர்களுடைய சனநாயக கோரிக்கைகளுக்காக, (உள்ளூர் கொடூர யுத்தப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான உணர்வு) அணிதிரட்டப்படாமல், மக்களை ஒருபோதும் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட வைக்க முடியாது என மாவோ கூறுவார். அதைப்போல் நமது சொந்த சமூகத்தின் வரலாற்றுரீதியான பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நேர்மையான ஒரு அரசியல் போராட்டத்தைக் கட்டியமைக்காமல், அன்றாட வாழ்க்கையை எதிர்கொண்டு போராடி கிராமப்புறத்தின் இறுகிய சமூக அமைப்பிற்குள் மூச்சுத்திணறும் ஒருவரை, விரிவான, தேசிய அடிமைப்பாட்டிற்கெதிரான கோரிக்கையில் அணி திரட்டும் சாத்தியமில்லை என்பதும், தேசிய விடுதலை கோரிக்கையில் உள்ளடக்கரீதியான சனநாயக கோரிக்கையை ஒன்றிணைப்பதுமே மக்கள் திரளின் விரிவான பங்கேற்பிற்கு முன்நிபந்தனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஒவ்வொரு கோரிக்கையிலும், அரசியல் சிக்கலிலும், அடங்கியுள்ள தேசிய ஒடுக்குமுறை தன்மையை அரசியல் ரீதியாக வெளிக்கொணர்ந்து அதை தேசிய விடுதலை கோரிக்கையாக வளர்த்தெடுக்காமல் அப்பிரச்சனையை இந்திய அரசிற்கு எதிரான சட்டரீதியான பிரச்சனையாகவோ அல்லது அக்குறிப்பிட்ட பிரச்சனையில் தீர்வு கண்டால் போதுமென்றோ பார்க்கின்ற அரசியல் சூன்யவாத பார்வையே போராட்டங்களைத் தொடர்ந்து திசைதிருப்பி வந்திருக்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், ஈழவிடுதலை பற்றி உணர்வு பொங்க பேசும் பலருக்கு, தமிழ்நாட்டு விடுதலை குறித்து எள்ளளவும் நம்பிக்கையோ, அதற்காக போராட வேண்டும் என்ற முனைப்போ கிடையாது என்பதோடு, ஈழம் உள்ளிட்டு தெற்காசியாவில் நிலவுகின்ற பல்வேறு தேசிய ஒடுக்குமுறைக்கும், இந்திய அரசின் ஏகபோக விரிவாதிக்க நலன்களும் அதன் சர்வதேச கூட்டாளிகளின் நலன் களுமே முதன்மை காரணம் என்பதும், அதை எதிர்ப்பதற் கான அரசியல் திசைவழிப்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு தனிப்பட்ட தேசிய அரசியல் சிக்கலையும் அணுக வேண்டும் என்பதையும் புறக்கணிப்பதோடு, மேடையில் வாள்வீசும் சனரஞ்சக இனவாத உணர்ச்சி விளையாட்டு களில் தங்களுக்கு இவ்வரசியல் பயன்படாது என்பதையும் புரிந்து, விடுதலைக்கு விரோதமான வீண் அரசியல் பேச்சுகள் என அதை மலினப்படுத்துவதுதான் வெட்க கேடானதாகும்.
இவ்வாறான பின்னணியில்தான் மக்களின் அரசியல் கோரிக்கைகளும் போராட்டங்களும் தனி ஒரு சிக்கலாக பார்க்கப்பட்டும் எதிர் நிறுத்தப்பட்டும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
மூவர் உயிர்காப்பு போராட்டத்தையும் செங்கொடியின் தியாகத்தையும் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதை சற்று சிந்தித்தாலே தெளிவாக விளங்கும். மூவருக்கான மரண தண்டனை ஏதோ சாதாரண வழக்கில் நடைபெறுவதுபோல நாம் சட்டப் போராட்டத்தையும் அடையாள போராட்டங்களையும் நடத்த வலியுறுத்தி கொண்டிருக்கையில், இந்திய அரசோ ராஜிவ் பிணத்தை தோண்டி ஒரு தேசிய ஒடுக்குமுறையையும் குற்ற உணர்ச்சியையும் ஏவிவிட்டது. இனப்படுகொலை இலங்கை அரசோடு கூட்டுமட்டுமல்ல நானே நேர்முகத்தில் செய்வேன் என்று இந்தியாவின் பேயுருவம் முன்நின்றபோது நாம் என்ன செய்தோம்? புனிதமான மரண தண்டனை ஒழிப்பு என்ற பதாகைக்குள் நின்று, அம்மாவின் கருணை பார்வைக்கு காத்திருந்துவிட்டு, மக்களும் மாணவர்களும் தெருக்களில் இறங்கியபோது, அதை மட்டுப்படுத்த கோரினோம். தூக்கு நெருக்கியது வெகுண்டாள் செங்கொடி. வழக்கு மன்றத்தில் நடத்த வேண்டிய தலைவர்களின் சட்டவாதங்களும் கண்ணீர் மல்கல்களும் மக்கள் மன்றத்தில் நடப்பதை பார்த்து, என்ன செய்வாள் அந்த மக்கள் மன்றத்தின் மாவீரம்? இந்திய ஒடுக்குமுறைக்கு எதிராக துணிவுகாட்டாமல், அட்டைக்கத்தி வீசுபவர்களையும், கண்ணீர் புயல்களையும் கண்டு என்ன செய்வாள் செங்கொடி? இதோ இந்தியாவே என்னை எடுத்துக்கொள், தமிழக அரசே என்னைப்பார் என தீப்பிழம்பாய் கர்ஜித்தாள். ஆனால் ஒரு மாவீரன் நன்றி புரட்சி செய்கிறாராம் யாருக்கு? செங்கொடிக்கா? அவள் உயிர் பேசிய அரசியல் என்ன? எந்த ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல்? நாம் பேசுகிறோமா? மூவர் தூக்கிற்கும், இந்திய அரசின் விரிவாதிக்க தேசிய ஒடுக்குமுறைக்கும் உள்ள உறவு பற்றி நாம் பேசினோமா? மக்கள் மத்தியில் அதை எடுத்து சென்று தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட அறை கூவினோமா? பழங்குடி மக்கள் மீதான ஆதிக்கசாதி கொத்தடிமைத்தனத்திற்கும், போலீஸ் ஒடுக்குமுறைக்கும் எதிராக சனநாயகத்திற்கு போராடிய அந்த சிவப்புக்கொடி, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராய் களம் கண்டாளே, அவளுக்கு என்ன சொல்லப் போகிறோம், அவளை மண் இட்ட குழியிலே மக்களின் தேசிய வேட்கைக்கும் மண் இடப் போகிறோமா? இல்லை, இவைகளை ஒருமுகப் படுத்தி, ஒற்றை கோரிக்கையாய் தேச மீட்சிக்கு வழிசெய்ய போகிறோமா என்பதுதான் நமது கேள்வி.
அடுத்து, பரமக்குடியில் எழுவர் படுகொலையான போதும், கூடங்குளத்தில், மக்கள் திரண்டபோதும் நாம் என்ன சிந்தித்தோம்.
பரமக்குடி படுகொலையின்போது, மவுனம் காத்தோம். போலீசின் வன்முறை என பேசினோம். நம் போராட்டங்களை திசை திருப்ப சதி என்றோம். ஆதிக்க சக்தி வெறியின் துர்நாற்றம் நாசியை துளைத்தபோதும் கூச்சமேயில்லாமல் பலவாறு பேசினோம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களின் சனநாயக விடுதலை வேட்கையை அரசியல் திரட்சியாக ஒருங்கு திரட்டிக்கொள்ளும் சனநாயக உணர்வை ஆதரித்து, சாதிய, இனக்குழு மனப்பான்மையைக் கடந்த நவீன தேசிய உருவாக்கத்தின் ஒரு படியாக அதைப் பார்க்காமல் பார்ப்பனிய அரசோடும் ஆதிக்க சாதியின் மனப்பான்மையோடு நம் சிந்தனை ஒத்துப் போகிறதென்றால், இமானுவேல் சேகரனுக்கும், ஆதிக்க சாதி வெறிகொண்ட முத்துராமலிங்கத்திற்கும் மாலை போடுவதில் சமத்துவம் பேசுவோமென்றால் எங்கே தமிழ்தேசிய விடுதலையும், நவீன சமூகத்திற்கான தேசிய சிந்தனையும் உருவாகும் என்பதை நம்மை நாமே மீள் பரிசீலனை செய்யவேண்டிய கேள்வியாகும்.
அடுத்து, கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக மக்கள் திரண்டபோது, மக்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புறசூழல் கோரிக்கையாகவும், அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் மட்டுமே நம்மால் பார்க்கப்படுகின்ற அபாயம் நிலவி வருகிறது. அது இந்தியா மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் வர்த்தக நலனும், ஒரு இனத்தின் தேசிய வளத்தை சூறையாடும் ஏகாதிபத் தியத்தின் கொடூரம் அடங்கியிருக்கிறது என்பதோடு, மேலும் அது மக்களின் வாழ்வுரிமையோடு இணைந்த ஒரு தேசத்தின் அரசியல் பொருளாதார இறைமைக்கும், ஏகாதிபத்திய நலனுக்கும் இடையிலான முரண்பாடாக மக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு விசியங்களின் மீதும் உள்ள நம் பார்வையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மேலும் இதுபோன்ற பல விசியங்களில் அரசோடு சமரசமும், சமூக கோரிக்கைகளில் சனநாயகமற்ற போக்கும் நிலவிவருவதோடு கூடங்குளம் என்றால் சுற்றுப்புற சூழல்வாதிகள், சாதி விசயம் என்றால் தலித் அமைப்புகள், மரண தண்டனை என்றால் மனித உரிமையாளர்கள் என பல கோரிக்கையின் தன்மையை தனித்து சுருக்கிவிடும் பார்வையும், மையப்படுத்தப்பட்ட தேசிய சனநாயக கோரிக்கை உரு வாகுவதற்கான அரசியல் தடையாகவும் கூட மாறிவருகிறது. இது அமைப்பு மறுப்பியல் அராஜக சிந்தனையாளர்களின் சிந்தனையோடு ஒத்துபோவதோடு, கருத்தியல் தளத்தில், தனிச்சிறப்பானத்திற்கும் பொதுவானத்திற்கும் உள்ள உறவு மற்றும் முரணை மறுக்கும் இயக்க மறுப் பியல் பார்வையே ஆகும்.
எனவே, தமிழ்தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் பொது இலக்கில் நாம் வெல்வதற்காக, நம்முடைய முரண்களை, குழப்பங்களை களைய ஓர் ஆரோக்கியமான போராட்டத்தை நடத்துவோம்.






