நிகழ்வுப்பதிவு : பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 55 ஆவது நினைவு நாள் - அமைதி ஊர்வலம்
- Details
- Published on Thursday, 15 December 2011 12:35
- Written by Super User
டிசம்பர் 06ஆம் நாளன்று, செய்யாறு நகரில் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்ட நினைவு அமைதி ஊர்வலமும்,
அதையொட்டி பேரா.பெரியார்தாசன் அவர்கள் பங்கேற்று “டாக்டர் அபேத்கர் சிந்தனைகள்” குறித்த ஆற்றிய பேருரையும், நிகழ்த்தப்பட்டது.
செய்யாறில், சமீபத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் சமூகம் மற்றும் கலை இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு “பிரக்ஞை”. இவ்வமைப்பு தன் முதல் நிகழ்வாக எழுத்தாளர் பாமா எழுதி - ஸ்ரீஜித் சுந்தரம் நெறியாள்கை செய்திருக்கும் மொளகாப்பொடி என்னும் நவீன மேடை நாடகத்தினை, சென்ற மாதம் 09ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நிகழ்த்தி முடித்த சூட்டோடு, தனது இரண்டாவது நிகழ்வாக பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, மறைந்த சட்டமாமேதை டாக்டர் அம்பேதகர் அவர்களின் நினைவு அமைதி ஊர்வலத்தினையும், டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த பேருரையினையும் சென்ற
06-11-2011 அன்று நிகழ்த்தியிருக்கிறது.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனிப்பட்ட ஒரு இனத்தின் தலைவராக புரிந்துகொள்ளப்பட்ட இன்றைய சூழலில், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அடிப்படைக் கருத்தியல்களை கேட்க செவிசாய்க்காத பொதுமக்கள் மத்தியில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஒட்டுமொத்த சமூகவியல் சிந்தனைகள் குறித்த அழிக்கமுடியாத, யாவர்க்கும் பயந்தரக்கூடிய கருத்துக்களை எடுத்துக்கூறி - வெகுசன மக்கள் மத்தியில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் குறித்த விழிப்புணர்வை தூண்டும் வகையில் - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு மாலை 4.00 மணி அளவில் செய்யாறு, வந்தவாசி சாலையிலிருக்கும் தந்தை பெரியாரின் சிலையில், அம்பேத்கர் சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு கருப்பு வண்ணக் கொடியினை வழங்கி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டாக்டர் அம்பேதகர் நினைவு அமைதி ஊர்வலமாகத் தொடங்கியது. இவ்வூர்வலம் செய்யாறு ஆரணி கூட்டுச்சாலையிலிருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலை வரையிலும் (சுமார் இரண்டு கிலோமீட்டர்) நடத்தப்பட்டது. இவ்வூர்வல - நிகழ்வில் செய்யாறு நகரைச் சார்ந்த அம்பேத்கர் சிந்தனையாளர்கள் மற்றும் பிரக்ஞை அமைப்பின் உறுப்பினர்கள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆரணி கூட்டுச் சாலையில் நிறுவப்பட்டிருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அமைதி ஊர்வலம் முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பேரா.பெரியார்தாசன் அவர்கள் பங்கேற்றுப் பேசிய, டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த பேருரை செய்யாறு ஆர்.சி.எம்.பள்ளி, உள்வாளாகத்தில் நிகழ்ந்தது.
பேரா.பெரியார்தாசன் வழங்கிய டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த பேருரை நிகழ்வில், ஊர் பொதுமக்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கர் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும், அவர் இன்றைய சமூக கட்டமைப்பிற்கு ஆற்றிய அறிய பல பணிகளையும், திட்டங்களையும் கேட்டு வியந்தனர்.
பேரா.பெரியார்தாசன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் தனக்கான அடையாளங்களை என்றும் மறைத்துக் கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் போராடினார். ஆனால் இன்னும் அவர் வழிவந்த சில உயர் அதிகாரிகள் கூட தன் சமூகத்தையும் தனக்கான பழக்கவழக்கங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியவர்களாகவும், மறைப்பவர்களாகவும் இருக்கும் நிலை மாறவேண்டும் என்று வலிறுத்திப்பேசினார். நமக்கான அடையாளங்களும், நாம் முன்வைக்கும் நம்மைப் பற்றிய கருத்தியல்களும் தான் வலிமையானவைகள் என்று அவர் பேசினார். மேலும் அவர், தலித்துக்கள் இன்னும் தங்களுக்கான சுந்திரத்தை மேல்மட்டங்களிடம் எதிர்பார்க்கும் தன்மையிலேயே இருக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அவர்கள் பின்பற்றும் இந்துத்துவக் கொள்கைகள் என்பதை விளக்கமாகப் பேசினார். முதலில் தலித்துக்கள் இந்து மதக் கொள்கைகளை முற்றிலுமாக விட்டுவிட துணிந்தால்தான் முழுமையான விடுதலையை அடையமுடியும் என்று பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதை கோடிட்டுக் காட்டினார். அதனால்தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தான் இறக்கும் பொழுது ஒரு இந்துவாக இருக்கமாட்டேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார் என்பதை குறிப்பிட்டார். இன்னும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனக்கான வாழ்வியல் இடையூருகளை தனக்கிருந்த அறிவாற்றலால் வென்றார். எனவே முதலில் தலித்துக்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் அனைவரும் ஓரளவேனும் கல்வியறிவு பெற வேண்டும் என்றும்; அதேபோல், படித்த கீழ்வகுப்பைச் சார்ந்த தோழர்கள் சரியான வழிக்காட்டுதலை தன்னைச் சார்ந்த சமூக மக்களுக்கு காட்ட தவறக்கூடாது என்றும் கூறினார்.
நிகழ்வின் முடிவில் பேரா.பெரியார்தாசன் அவர்களுக்கு பிரக்ஞை அமைப்பின் மூலம் நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிறைவாக பிரக்ஞை அமைப்பின் தலைவர் நன்றி கூற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தின-நிகழ்வு இனிதே முடிந்தது.
________________________________________________
பதிவு,
_ மைத்திரி அன்பு.,செய்யாறு.






