இழந்ததை மீட்போம் அணையைக்காப்போம்! - அ.பெரியார்
- Details
- Published on Saturday, 24 December 2011 15:07
- Written by Super User
திரும்பும் திசையெங்கும் சிக்கலின் உருவம். புருவத்தை உயர்த்தவைக்கும் அளவிற்கு தமிழர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அன்மை காலமாக அனல் தகிக்கும் தமிழ்நாடு. தலைவர்களின் கட்டளைக்காக காத்திருக்காமல் கட்சியடையாளத்தோடு களமிறங்காமல், ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், ஆணும் பெண்ணுமாக அணிவகுத்து நிற்கிறார்கள் தமிழர்கள்.
நீறுபூத்த நெருப்பாக இருந்த தமிழகத்தை பற்றியெரியச் செய்துவிட்டன உயிரணைப் பிரச்சனைகள். காவிரியில் உரிமை இழந்தோம்; பாலாற்றில் உரிமை இழந்தோம்; கச்சத்தீவில் கால் வைக்கும் உரிமையை இழந்தோம்; மொத்தமாக ஈழத்தில் இனம் அழிய வேடிக்கை பார்த்திருந்தோம். இப்படி எல்லாமும் இழந்து நிற்கும் ஓர் இனமாக தமிழினம் திரிந்து வருகையில் தான் இந்த வியப்பு நிகழ்ந்துள்ளது.
தெற்கில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும், மேற்கில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பும் உணர்வுள்ள தமிழர்களை உயிர்பெறச்செய்துள்ளது.
பொதுமக்களின் இப்போராட்டங்களினால் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சிகளும், ஆளும் கட்சியும் நடுத்தெருவில் அம்பலப்பட்டு நிற்கின்றன. தமிழநாட்டின் மிக முக்கியமாக பிரச்சனைகளை மக்கள் தோள் மீது சுமந்து போராடுகின்றனர். அதனால் அதிகாரத்தை சுவைத்த அரசியில்க் கட்சிகளால் எதுவும் செய்ய முடியவி்ல்லை. அவர்களின் பொழுதொரு பேச்சும், நாளொரு அறிக்கையும் அதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டன.
1967 இல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கவில்லை, எனவே அதனை கண்டிக்கும் வகையில் ‘எழுச்சி நாள்’ பொதுக்கூட்டங்களை நடத்தியது. தமிழகத்தின் முதல்வர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசும்போது, “ஆட்சியில் இருப்பவர்கள் இப்படி போராட்டம் செய்யலாமா என்று கேட்கிறார்கள், எங்கள் உரிமைக்காக, தமிழகத்தின் நலனுக்காக போராடுவதில் என்ன தவறு இருக்கமுடியும், ஆட்சியில் இருந்தாலும் இல்லையன்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் உரிமைக்காகப் போராடும்” என்றார் . ( சிவகங்கையில் நடைபெற்ற எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் அண்ணாதுரை பேசியது. )
அண்ணாவின் படத்தையும் பெயரையும் பயன்படுத்தும் இன்றைய அரசியல் கட்சிகள் இதனை சிந்திக்கவேண்டும்.
தமிழகத்தின் நான்கு திசைகளிலும் சதிவலைபின்னப்படுகின்றது. எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றது. இந்த பின்னணியில் மறைந்திருக்கும் சதிவலையை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ளவேண்டும், தெரியாதவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். இது காலத்தின் தேவையாகும் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஒன்றான முல்லைப்பெரியாறு சிக்கலை இங்கு விரிவாக சிந்திப்போம்.
1886 ஆம் ஆண்டில் பொறியாளர் பென்னிகுக் அவர்களால் திட்டமிட்டுக்கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை 1896 இல் கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது அணையின் வயது 116 ஆண்டுகள். 999 ஆண்டுகள் உரிமைபெற்றுகட்டப்பட்ட அணை. அணையின் உறுதித்தன்மை பல நிலைகளில் வல்லுநர் குழுவால் சோதனை செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. 2006 இல் உச்சநீதிமன்றம் 136 அடியலிருந்து 142 அடி வரையலும் நீரை தேக்கிக் கொள்ளலாம் என்றும் மேலும் 152 அடிவரையில் வரும் காலங்களில் தண்ணீரை தேக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்பில் கூறியது. அதுவரையில் கள்ளமௌனம் சாதித்து வந்த கேரளா துடித்து எழுந்து, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
உச்சந்தி மன்றத்தின் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்ட கேரள அரசு இன்று தமிழகத்திற்கு தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு என்கிறது. முல்லைப் பெரியாறு பலவீனமாக இருப்பதால் அதனை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டப்போகிறோம். அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவோம் என்கிறார் கேரளாவின் முதல்வர் உம்மன்சாண்டி.
‘டேம் 999’ படத்தின் மூலம் (இயக்குநர் - சோகன் ராய்), அணையை உடைக்க ஆதரவு திரட்டுகிறது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. வேண்டாத அச்சத்தையும்; முல்லைப் பெரியாறு குறித்து பொய் பரப்புரை செய்யும் இப்படதை இந்தியாவில் எங்கும் திரையிடக்கூடாது, மத்திய அரசு படத்தை தடைசெய்யவேண்டும் என்ற தமிழ் நாட்டின் கோரி்க்கை வழக்கம்போலவே ‘டெல்லி சுல்தான்களின்’ காதில் விழவில்லை.
முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் 36 இலட்சம் மக்கள் நீரில் மூழ்கி இறந்துபோவார்கள் என்ற அச்சத்தை, கேரளாவின் அரசியல் கட்சிகள் அம் மக்களிடம் விதைத்துள்ளனர். அதன் விளைவு வைகோ பழ.நெடுமாறன் ஜெயலலிதா ஆகியோரின் உருவபொம்மைகள் எரிப்பு, கலவரம், தமிழர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்வுகள் என்று நடைபெற, அதன் உச்சமாக அணையை உடைக்க ஆயுதங்களோடு அணிவகுக்கின்றனர் மலையாளிகள்.
இதற்கு எதிராகவும், அணையைப் பாதுகாக்கவும் தமிழர்கள் அணியணியாகத் திரண்டதை உலகம் அறியும். தமிழகம் கொதித்தெழுந்துவிட்டது என்றதும் அதனை தணிப்பதற்காகன முயற்சியை கேரளா அரசு மேற்கொண்டது. தமிழ்நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, ‘நாங்கள் சாதுக்கள், தமிழர்கள் எங்கள், சகோதரர்கள் கேரளாவில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்’ என்று ‘கற்பை’ நிருபித்துக்காட்டியுள்ளது.
‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்றவகையில் முல்லைப்பெரியாறு சிக்கலின் அடிப்படை எது? என்று முளைத்தது சிக்கல், தீர்வு என்ன என்பது இன்றைய தேவைகளுள் ஒன்றாகும்.
முல்லைப்பெரியாறு என்றதும் நெஞ்சத்தில் நிழலாடுகிறது பென்னிகுக்கிக் மிடுக்கான தோற்றம். உள்ளம் உச்சரிக்கிறது அவரது திருப்பெயரை. அதே போல் தலைநகர் சென்னையும், திருத்தணியும், காணும் போது சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தையும், தமிழரசு கழகத் தியாகிகளையும் நினைவுபடுத்த வேண்டும்.
கன்னியாகுமரியை, நாஞ்சில் பகுதிகளை செங்கோட்டையைப் பார்க்கும் போது நேசமணியை நினைக்கவேண்டும். அவருக்குத் துணை நின்ற ம.பொ. சிவள்ளிப்பதவைவர்கள், உயிரை தியாகம் செய்த எல்லை மீட்பு வீரர்களை நினைக்கவேண்டும். ஆனால் அத்தகைய நினைவுகள் மறைந்து வருகின்றன என்பதை வேதனையோடு ஏற்கவேண்டியுள்ளது.
இன்றைய இளந்தலைமுறைருக்கு எடுத்துக்காட்டவேண்டியசெய்திகள் நிறைய உள்ளன. இனவரலாற்றை படிக்காமல், அறியாமல் வளரும் தலைமுறையால் இந்த மண்ணிற்கு யாதொரு நன்மையும் வரப்போவதில்லை என்பதை நாம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. எல்லைப் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ் இளைஞர்களை சந்திக்க நேர்கிறது. ‘1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாளை தமிழகப் பெருநாளாக வரும் தலைமுறை கொண்டாட வேண்டும்’ என்று தன்விருப்பத்தை வெளியிட்டு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தில் ஜீவா வை தெரியவி்ல்லை.
‘மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நம் கடமை’ என்ற வாசகம் நம்மை நம்பி்க்கைபெறச்செய்கிறது.
முல்லைப்பெரியாறு அணை சிக்கலில் முதல் பிழை, 1956 இல் நம் மண்ணை, நம் எல்லையை நாம் இழந்ததுதான். தமிழர்கள் எல்லையை இழந்த வரலாற்றை மிகச்சுருக்கமாக காண்போம்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை
தமிழ் கூடலும் நல்லுலகு”
-என்கிறது பனம்பாரனாரின் தொல்காப்பிய பாயிரம். அன்று விரிந்து பரந்திருந்த தமிழ் நிலத்தின் எல்லைகள். கால வெள்ளத்தில் கரைந்து, இருந்த, பெருமை அனைத்தும் இழந்து நிற்கின்றது நம் நிலம்.
தமிழ் வழங்கும் நாட்டிற்கு வடக்கு எல்லையையும் தெற்கு எல்லையையும் வரையறுத்துச்சொல்லிய பனம்பாரனார் கிழக்கு, மேற்கு திசைகளின் எல்லையை கடலாக சுட்டுகிறார் எனில் தமிழ் நிலத்தின் எல்லை விரிந்தது.
1947 இல் இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டநாளில் இது சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. பொட்டி சீரிராமுலுவின் உயிர் தியாகம் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் நாளில் ஆந்திர மாநிலம் மலர்விதற்கு வழிசெய்தது. சென்னையை தலை நகரமாக வைத்துக் கொள்ளவேண்டுமென்றுவிரும்பிய ஆந்திரர்களிடமிருந்து சென்னை மீட்கப்பட்டது.
‘மதராஸ் மனநே’ என்று முழக்கமிட்ட தெலுங்கர்களிடமிருந்து தலைநகரை மீட்கப் போராட்டம் நடைபெற்றது.
சிலம்புச்செல்வரின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தமிழர்களின் உறுதியை எழுத்துக்காட்டியது. முதலமைச்சர் ராஜாஜியின் கடிதம், தெலுங்கர்களுக்கு சாதகமாக செயல்பட்ட பிரதமர் நேருவின் மனதை மாற்றியது - சென்னை தப்பித்தது.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலம்களாக பிரிக்கப்பட்டது. சென்னை மாநிலம், கர்நாடகமாநிலம் கேரளமாநிலம், என்று புதிய மாநிலங்கள் மலர்ந்தன.
சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்களாக பிரிந்த பொழுதில், வடக்கில் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தின் பெரும் பகுதியையும், கர்நாடகத்தில் கோலார் தங்கவயில் பகுதிகளையும், மேற்கில் கோவை மாவட்டம் முதுமலையில் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வரையிலான 830 கிலோமீட்டர் தூரமுள்ள மேற்கு எல்லையில் பெரும் பகுதிகளையும் இழந்தோம்.
1974 இல் இந்தியாவின் ‘அன்பளிப்பாக’ தமிழன் கடல் நிலம் கச்சத்தீவு இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு ‘கச்சத்தீவை’ காவுகொடுத்த போது தமிழ்நாட்டை ஆட்சிசெய்தவர்களால் அதனை தடுக்க இயலவில்லை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதோடு கச்சத்தீவுக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டது.
சட்டமன்றங்களில் ஒருமனதாக இயற்றப்படும் சட்டங்களில் வலிமை எத்தகையது என்பதை தமிழர்கள் அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த இனமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நடுவன் அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை உருவாக்கலாம் அதன் எல்லையைமாற்றலாம் அல்லது ஒரு மாநிலத்தை இல்லாமல் கூட செய்யலாம். அத்தகையதொடு அதிகாரத்தைக் கொண்டவையே. முல்லைப்பெரியாறு அணை உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்று இன்னும் ஒரு மனதாக தீர்மானம் நிறவேற்றியுள்ளது தமிழக அரசு.
கேரள எல்லையில் சிறைபட்டுள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்கவேண்டும் என்று தமிழர்கள் போராடியபோது அன்றைய முதல்வர் காமராசர், குளமாவது, மேடாவது, எல்லாமும் இந்தியாவில்தானே உள்ளன என்றார்.
அன்டை மாநிலங்கள் எல்லையைவிட்டுத்தராமலும் தன் எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளவும், தமிழகத்தின் எல்லைகளை தமதாக்கிக்கொள்ளும் வெறியில் செயல்பட்ட போது, சென்னை மாநிலத்தின் முதல்வர் மேற்கண்டவாறு சொன்னது, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியினருக்கு ஏற்புடைய கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அதனை காங்கிரஸ் கட்சியினரே ஏற்கமாட்டார்கள். இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்று அவர்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இதனை மத்திய அரசின் காதில்விழும் அளவிற்கு உரத்துச்சொல்லவேண்டும். (டெல்லி எதிர்த்தால் வாபஸ் பெற்றுவிடுவார்கள்) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அத்தகைய வலிமை உண்டா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
முல்லைப்பெரியாறு உரிமைக்காகப்போராமும் அமைப்புகளும் கட்சிகளும், அணையை பாதுகாக்கப் போராடுவதைப்போல், தமிழர்கள் 1956 இல் இழந்த எல்லையையும் மீட்கப் போராடவேண்டிய காலச்சூழல் உருவாகிவிட்டது.
இழந்த எல்லைகளை மீண்டும் மீட்கமுடியுமா? என்ற கேள்விக்குவிடையாக இருப்பவை. வடக்கே திருத்தணி மாவட்டம் தெற்கே கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாட்டுப் பகுதிகள், செய்கோட்டை ஆகியனவாகும் யானைவாயில் போன கரும்பு திரும்பிவருமா? என்று அன்று கேட்டவர்களுக்கு பதிலாக யானைவாயில் போன கரும்பு திரும்பும் என்று நிகழ்த்திக் காட்டினார்கள் எல்லை மீட்புப் போராட்டவீரர்கள். இன்றைக்கும் அத்தகையதொரு பெருங்கடமை தமிழர்களின் முன் நிற்கிறது. நாம் இழந்த எல்லைகளை மீட்கும் போதுதான் காவிரியும் பாலாறும் மேற்கில் பாயும் சிற்றாறுகளும், வலம் பெறும், அப்போதுதான் வையையாறு தமிழகத்தின் தாகம் தணிக்கும்.
கச்சத்தீவும் மீட்கப்பட்டல்தான் கண்ணீரில் மிதக்கும் தமிழக மினவர்கள் கரையேறமுடியும்.
முல்லைப்பெரியாறு பிரச்சனை தென் தமிழகத்திலுள்ள ஜந்து மாவட்டங்களின் பிரச்சனை என்று சுருக்கிவிடாமல், தமிழர்கள் ஒன்றிணைந்து உரிமைக்காகப் போராடவேண்டும் அதற்கான தருணம் இதுவே.
1956 இல் தமிழகம் இழந்த எல்லைகளை மீட்கப்போராடியபோது, அவர்களுக்குத் துணை நிற்காமல் போன தலைவர்கள் கொடுமையை, இன்றைய தலைமுறையும் செய்துவிடக்கூடாது. கடந்த கால தவறுகளிலிருந்து தமிழர்கள் படிப்பினையைப் பெற்றாகவேண்டும். கடமை தவறினால் காலம் தமிழனை மன்னிக்காது.
அரசியில் எல்லைகள் கடந்து, தேர்தல் காலத்து வாக்குச் சண்டைகளை மறந்து, தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அடுத்த தேர்தலை மனதில் வைக்காமல், அடுத்த தலைமுறையை நினைந்து முல்லைப்பெரியாறுக்காகப் போராடவேண்டும். சேதாரமில்லாமல் நகைசெய்யமுடியாது.
சிலரேனும் சாகாமல் பகை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து போராடும் மக்கள் போராட்டத்துக்கு வலுசேர்ப்போம். இழந்த எல்லையைமீட்போம் அணையைக்காப்போம்.
ஆதாரம்
1.தமிழன் இழந்த மண் - பழ.நெடுமாறன்
(முன்றாம் பதிவு 2006) தமிழ்க்குலம் பதிப்பாலயம் மதுரை- 625001
2. தமிழ்நாடு எல்லைப்போராட்டமும்
பெயர்மாற்றமும் -அ.பெரியார்
(முதல்பதிப்பு 2010)
முரண்களரி படைப்பகம்
மணலி சென்னை - 600 068.
அ.பெரியார்
ஈ வெ.ரா.பெரியார் சாலை
செக்கடிலைக்குப்பம்
மேல்மலையனூர் - அஞ்சல்
செஞ்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் - 604 204






