Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

அணு உலைகள் ஆபத்தற்றவையா? - ஒரு புரிதலை நோக்கி.. - ஏ.சண்முகானந்தம்



(உலக நாடுகளால் நிராகரிக்கபட்ட, இந்திய மாநிலங்களால் துரத்தியடிக்கப்பட்ட அணு உலைகள் - ஏமாளி தமிழன் தலையிலா?)    

அணு உலைக்கெதிராக இடிந்தகரை மக்கள் தொடங்கிய போராட்டம் ,இந்தியா மற்றும் உலகு தழுவிய கவனத்தை இடிந்தகரை நோக்கி ஈர்த்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சற்றேக்குறைய 70 கி.மீ., தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளது கூடங்குளம் கிராமம். அதையொட்டி அமைந்துள்ள கிராமம் தான் இடிந்தகரை.

அணு உலைக்கெதிரான போராட்டத்திற்கு மூலமாக உள்ள 'அணு' வை பற்றி காண்போம்... 'அணு' என்ற அறிவியல் சக்தியின் தோற்றத்தை முதலில் சுருக்கமாக பார்ப்போம்...

*அணுவில் நியூட்ரான் என்னும் சிறு துகள் இருப்பதை 1932-ல் பிரிட்டிஷ் அறிவியலறிஞர் ஜேம்ஸ் சாட்விக் கண்டுபிடித்தார்.

*1939-ல் அணுவை இரண்டாக பிளக்க முடியும் என்பதை ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் லைஸ் மெய்டனர் தனது அபிப்பிராயமாக தெரிவித்தார். இதையே 'அணுப்பிளவு' (Fussion)  என்றழைத்தார்.

*இரண்டாம் உலகப் போரில் செர்மானிய இட்லரை எதிர்க்க, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்சு போன்ற நாடுகள் 1941-ல் 'மன்ஹாட்டன் திட்டம்' என்ற பெயரில் இத்தாலிய அறிவியலறிஞர் என்ரிகோ ஃபெர்மி தலைமையில் அணுகுண்டு தயாரிப்பிற்கான வேலையில் ழூழ்கியிருந்தன.

*1942 டிசம்பரில் சிகாகோ நகரின் விளையாட்டு மைதானத்தின் அடியில் யுரேனிய அணு உலை சோதனை ரீதியில் வெற்றி பெற்றது. உலகத்திறகான பிரகாசமான 'அணுயுகம்' பிறந்தது.

*1945 சூலையில் முதல் அணுவெடிச் சோதனை நியுமெக்சிகோவில் வெற்றி பெற்றது. அதில் இருந்து வெளியான ஆற்றல் அறிவியலாளர்களால் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது.

*மனித குல வரலாற்றின் 'கருப்பு தினம்' என்றழைக்கப்படுகின்ற 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6, மற்றும் 9,-ம் நாள் சப்பானின் 'ஹிரோஷிமா', 'நாகசாகி' நகரங்கள் மீது தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளை  'குட்டிப்பையன்', 'பருத்தபையன்' என்று பெயரிட்டு சோதனை செய்ய, அமெரிக்கா வீசியதில், அந்நகரங்கள் சுடுகாடானதுடன், இரண்டு லட்சத்திற்கும் மேறபட்டவர்கள் உடனடியாக கருகி சாம்பல் ஆனார்கள. கதிரியக்க விளைவுகளால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர். 60 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் இன்றும் அந்நகரங்களில் மக்கள் வாழவோ,  உயிரினங்கள், காட்டுயிர், செடி, கொடிகள்,தாவரங்கள் வாழவோ தகுதியற்றதாக உள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் கூட பல்வேறு கதிரியக்க நோயின் தாக்கத்தில் தான் பிறக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

*1974-ல் பொக்ரானில் இந்தியா கல்பாக்கத்தில் திருடிய புளூட்டோனியத்தின் உதவியுடன் 'அகிம்சை அணுகுண்டு' என்ற பெயரில் வெடித்தது. தனது அமைதி முகத்தை தானே கிழித்துக்கொண்டது.

அணுகுண்டின் ஆபத்தை உணர்ந்த பணக்கார நாடுகள், அதற்கு மாற்றாக 'அமைதிக்கான அணுஉலை'களை நிறுவ ஆரம்பித்தது. அதன் வரலாற்றை சுருக்கமாக காண்போம.

*முதல் அணுஉலையை நிறுவிய நாடு கனடா. முதல் அணு விபத்து நடந்த நாடும் கனடா தான் மனித உயிர் பலி இல்லாததால் வெளியில் தெரியாமல் போனது.

*1954-ல் அமெரிக்கா, சோவியத் யூனியனிலும்  பல அணுஉலைகள் வந்தாலும், பொது பயன்பாட்டிற்கான அணுஉலைகள் முதலில் பிரான்சிலும், பிரிட்டனிலும் அமைந்தன.

*மேற்கு செர்மனி, இத்தாலி, சப்பான், சுவீடன் போன்ற நாடுகளும் அணுஉலைகளை ஆரம்பிக்கத் தொடங்கின. அணுஉலைக்கான சந்தை உலகம் தழுவியதாக இருந்தது. அறிவியலறிஞர்கள், இராணுவத்தினர், தொழிலதிபர்கள் என முத்தரப்புக்கிடையே மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது. மக்கள் எப்பொழுதும் போல் ஏமாளிகளாக இருந்தனர்.

*1960-களில் இந்தியா தனது பங்கிற்கு அணுஉலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. 1970-களில் மக்கள் அணுஉலைக்கு எதிராக போராட துவங்கினர்.

அணு, அணுஉலை தொடர்பான இந்த வரலாற்று பின்னணியில் கூடங்குளம் அணுஉலையை அணுகுவது சரியாக இருக்கும். அணுமின்னாற்றல் எனபது என்ன?

அணுப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறும் போது தோன்றும் வெப்பத்தால் நீர் சூடாக்கப்பட்டு, நீராவியாக மாற்றப்படுகிறது. அந்த நீராவியை கொண்டு மாபெரும் சுழலிகள் சுழலச்செய்யப்படுகின்றன. அச்சுழலிகளின் சுழற்சியால் மின்இயற்றி மூலம் மின்ஆற்றல் உருவாகிறது. சுழலியைச் சுழலச் செய்த பிறகு அந்நீராவி கடல் அல்லது நதி நீரால் இயங்கும் குளிர்விப்பானால் மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. அந்நீர் மீண்டும் உலைக்களத்திறகுள் செலுத்தப்படுகிறது. இந்த சக்கரம் இவ்வாறு தொடர்கிறது. குளிர்விப்பானில் இருந்து வெளிவரும் நீரின் வெப்பம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.  அந்நீர் கடல் அல்லது நதியில் கலக்கவிடப்படுகிறது.

மீண்டும் இடிந்தகரைக்கே வருவோம். கடந்த மார்ச் மாதம் சப்பான்-பூகுஷிமாவில் நடந்த அணுஉலை விபத்து, உலகெங்கும் மக்களை அணு உலைக்கெதிராக தன்னெழுச்சியான போராட்டத்தை துவங்க வைத்துள்ளது. அந்த வகையில் கூடங்குளம் மக்கள் தங்கள வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ள அணு உலையை எதிர்த்து தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர். மக்களுக்கு பின்னால் தான் கிருத்தவ சபை, மற்றவர்கள் உள்ளனர் எனபதை அனைவரும் உணர வேண்டும்.

1986-ம் ஆண்டு ரஷ்யாவில் செர்னோபிலில் ஏற்பட்ட கடுமையான அணுஉலை விபத்திற்கு, இரண்டாண்டுகள் கழித்து, 1988-ம் ஆண்டு இந்தியாவுடன் ரஷ்யா அணுஉலை ஒப்பந்தம் செய்ததை நினைவு கூர்தல் அவசியம். செர்னோபில் விபத்திற்கு பிறகு இன்று வரை புது அணு உலைகள் எதையும் ரஷ்யா துவக்கவில்லை என்பது, அணு உலையை ஆதரிக்கும் எவரும் சிந்திக்க வேண்டியது காலத்தின் அவசியம். இன்று அணுஉலைகளை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் யார்? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

ஆதரிப்பவர்கள்,

* இந்திய அரசின் அணுசக்தி கழகத்தின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள்.
* இந்திய அரசு அதிகாரிகள்.
* மத்திய மந்திரிகள்.
* அணுஉலை குறித்த அறிவியல் ரீதியான புரிதல் இன்றி இருக்கின்ற சராசரி மக்கள்.
* இந்திய தேசியத்திற்கு அடிமை சேவகம் புரிகின்ற காங்கிரஸ், பா.ச.க., போன்ற தேசிய கட்சிகள்.
* தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகள்.
* இடதுசாரி பாதையை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்ட, இந்திய தேசியத்திற்குள், ஆளும் வர்க்கத்திற்குள் மூழ்கிவிட்ட இந்திய இடதுசாரிகள் (CPI, CPI-M).
*இந்துத்துவ சக்திகள்.

எதிர்ப்பவர்கள்,

* சமூகவியலாளர்கள்.
* சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
* மனித நேயர்கள்.
* மார்க்சிய குழுக்கள்
* தன்னெழுச்சியான போராட்டத்தை துவக்கியுள்ள ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள்.
* பெரியார், அம்பேத்கர் அமைப்புகள்.
* தலித் அமைப்புகள், .
* தமிழ்த் தேசிய அமைப்புகள்.

இதில், விழிப்புணர்வற்ற சராசரி மக்களும் ஆளும் வர்க்க ஏமாற்ற வலையில் சிக்கியுள்ளனர் என்பது வேதனை கலந்த உண்மை.

மைய அரசும், அணுஉலையை ஆதரிக்கும் மற்றவர்கள் எழுப்பும் கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் காண்போம்.

1. அணு உலையை ஆரம்பிக்கும் போது போராடாமல், 13,000 கோடிக்கும் மேல் செலவு செய்த பிறகு, முடியும் தருவாயில் எதிர்ப்பது சரியா?

கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தம் போடபட்ட 1988-ம் ஆண்டில் இருந்தே போராட்டம் தொடங்கி விட்டது. மா.லெ., வின் மக்கள் யுத்தக் குழுவினரின் சைக்கிள் பரப்புரை கூடங்குளம் சென்ற போது, இதே மக்கள் (தற்போது தன்னெழுச்சியான போராட்டத்தை துவக்கியுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்) அணு உலை எதிர்ப்பாளர்களை செருப்பால் அடித்த நிகழ்வும் நடந்துள்ளது. புரட்சிகர இளைஞர் பேரவை என்ற  அமைப்பினர் அணுஉலையை எதிர்த்து சென்னையில் இருந்து கூடங்குளம் வரை சைக்கிள் பரப்புரை மூலம் அணுஉலை எதிர்ப்பு பிரச்சாரம் செய்தனர். தோழர்.அ.மார்கஸ், தோழர். இன்குலாப் உள்ளிட்ட தமிழகத்தின் இடதுசாரி சிந்தனையாளர்கள், சூழலியலாளர்கள் என சமூக மாற்றத்தை விரும்பிய அனைவரும் அணுஉலைக்கெதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தோழர்.அஸவகோஷ், பேரா.செயராமன் போன்றோர் அணுஉலைக்கு எதிரான விரிவான நூலை எழுதி வெளியிட்டனர். இங்கு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று, மக்களுக்கு அனைத்தையும் செய்வோம், மக்களுக்கான அரசாக இருப்போம் என்று ஒட்டு வாங்கி, ஆடசிக்கு வந்த திராவிட கட்சிகள் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுக்கிறார்கள் என்பது உழைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டிய செய்தி.   இருபெரும் திராவிட கட்சிகளும் மக்களுக்கு துரோகமிழைத்தன, துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன என்பது வரலாறு.

2G ஊழலில் மக்கள் கற்பனை செய்திராத 1.75லட்சம் கோடி முறைகேடு நடந்துளளதை மறைக்கும், சேது சமுத்திர திட்டத்தில் பல கோடிகள் செலவு செய்த பிறகு, வடஇந்திய பார்ப்பனர்களின் இராமர் பாலம் என்ற பொய் புரட்டிற்கு அடிபணிந்து நிறுத்திய ஆட்சியாளர்களின் செயல் தமிழர்களுக்கு எதிரானதே! அடிமைத் தமிழனின் உயிர் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்  என்ற அலடசியத்தால் தான், அங்கு தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் துவங்கியது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஆபத்து என்பது அனைத்திலும் உள்ளது. அறிவியல் எனபதே ஆபத்து நிறைந்தது அல்லவா?  அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த படி அணு ஆற்றல் அதை பயன்படுத்தாமல்  இருப்பது சரியாகுமா?

ஒருவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்தால், அவரும், அவரது குடும்பமும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு ஒரு காலம் வரை இருந்து மறுபடியும் சராசரி வாழ்வில் இணைய முடியும். ஆனால், அணுஉலை ஆபத்து  என்பது,  விபத்து நடந்த உடன் என்ன நடக்கிறது என்பதை மக்கள் யோசிக்கும் முன்னர் சில லட்சம் பேர் இறந்திருப்பார்கள். விபத்து நடந்த சில நாட்களில் அணுக்கதிர் பாதிப்பால் பல்லாயிரக்கான மக்கள் அழிய நேரிடும். விபத்து நடந்த பகுதியை சுற்றி 20 கி.மீ., தூரத்திற்கு எந்த உயிரினமும் வசிக்க இயலாத சூழல் ஏற்படும். விபத்து நடந்த பிறகு பிறக்கும் குழந்தைகள் கை, கால் விரல்கள் அதிகமாக இருப்பது, முக அமைப்பு மாறுபடுவது, புற்றுநோயின் தாக்கம் என்று பல வித பாதிப்புகள் வரும். இதுவும் பல தலைமுறைக்கு தொடரும். (உ.ம்) ருஷ்யாவில் 1986-ல் நடந்த செர்னோபில் விபத்திற்கு பிறகு இந்த நாள் வரை சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு தொடர்கிறது என்பது கொடூரமான உண்மை. அந்த பகுதியில் இந்த நிமிடம் வரை புல், பூண்டு உள்பட எந்த உயிரினமும் (மனிதன் உட்பட)  வசிக்க முடியாத நிலை சுடுகாடாகத்தான உள்ளது. இந்த அவலங்களை மறைத்து நம்மிடம் பம்மாத்து காட்டும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளை கேடபது, நமக்கு நாமே தற்கொலை செயவது போலாகி விடும்.

அறிவியல் முன்னேற்றம் என்பது, மக்களை மையப்படுத்தி, ஆபத்தற்றதாக இருக்க வேண்டும். அழிவற்ற, ஆபத்தற்ற அறிவியலே நாம் வேண்டுவது. ஒட்டு மொத்த மக்களை அழித்து, அம்மக்களின் சுடுகாட்டிற்கு மின்சாரம் கொடுக்கும் அறிவியல் நமக்கு எக்காலத்திலும் தேவையில்லை. அதை எவ்வடிவில் வந்தாலும் எதிரத்து நிற்போம்.

3. நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட, அணுசக்தியில் இருந்து பெறப்படும் மின்சாரம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் அணுஉலையும், அதில் இருந்து பெறப்படும் மின்சாரமும் அவசியம்தானே?

மக்கள் தொகை பெருக்கத்திற்கும், மின் பற்றாக்குறைக்கும் முடிச்சு போடுவது வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள் தான்.  தமிழகத்தின் மின்வெட்டை, அணுஉலையுடன் இணைக்கக் கூடாது. அதற்கான காரணங்களை ஆராயவதுதான் சிறந்தது. அந்த வகையில் தமிழகத்தின் மொத்த மின் தேவை 10,500 மெகாவாட்டிலிருந்து 11,500 மெகாவாட் வரை உள்ளது. தற்போது தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி சராசரியாக 8,000 மெகாவாட் வரை உள்ளது. மின் பற்றாக்குறை 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை உள்ளது. இதற்கான தீர்வாகத்தான் கூடங்குளத்தை கை நீட்டுகிறார்கள். மின் பற்றாக்குறையை எப்படி தீர்ப்பது?  இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவை மின்பற்றாக்குறையில் தான் உள்ளன. 1990-க்கு பிறகான உலகமயமாக்கல் சூழலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்ளுர் பெருமுதலாளிகளுக்கும் மானிய விலையில் தங்குதடையின்றி மின்சாரம் தருவதே மின்பற்றாக்குறைக்கு மூல காரணம். வீட்டு பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும், சிறு, குறு தொழிலுக்கும் திட்டமிட்டே மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி, மக்கள் மனதில் அணுஉலை தேவை என்ற பார்வையை ஏற்படுத்த   அரசு முயலுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்ளுர் பெருமுதலாளிகளுக்கும் அரசு அளிக்கும் மின்சாரத்தை நிறுத்தினாலே நமக்கு மின் தட்டுப்பாடு இருக்காது. அதை செய்ய  அரசுகள்  முன்வருமா? தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் அடுத்த இரண்டாண்டுகளில் நமது மின் தேவையை நிறைவு செய்ய இயலும்.  மாற்று வழிகளான காற்றாலை, சூரிய சக்தி, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்புக்கான ஆய்வுகளை முன்னெக்க உரிய நிதி ஒதுக்குவதும் அவசியம்.  மாற்று வழிகளும், திட்டங்களும் இருக்க பிடிவாதமாக அணுஉலை வேண்டும் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் குரலாகவே கேட்கிறது. தமிழ்நாட்டையும்,  மக்களையும் மயானமாக்கும் கூடங்குளம் தேவையா?

4. இன்று உலகின் பல நாடுகளில் அணுஉலைகள் செயல்பாட்டில் உள்ளதே?

இந்த கூற்று மிகவும் தவறு. மார்ச் 11 சப்பான் நாட்டின் பூகுஷிமாவில் ஏற்பட்ட அணுஉலை விபத்திற்கு பிறகு, உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. ஆபத்தற்ற அணுஉலை இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டன. அமெரிக்காவும், இரஷ்யாவும் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட அணுஉலை விபத்திற்கு பிறகு புதிதாக அணுஉலைகளை திறப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன. சப்பான் அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து அணுஉலைகளையும் மூட முடிவெடுத்து விட்டது. செர்மனியும் அடுத்த 25 ஆண்டுகளில் படிப்படியாக மூட ஒத்துக் கொண்டுள்ளது. சோனியாவின் இத்தாலியில் கருத்துக் கணிப்பில் 90 சதவீதம் மக்கள் அணுஉலைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆஸ்திரேலியா ஒரு அணுஉலை கூட வேண்டாம் என முடிவெடுத்து விட்டது. பணக்கார நாடுகள் எல்லாம் மூடிய கழிசடையை (அணுஉலை) இந்தியாவின் தலையில், குறிப்பாக மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ஒதுக்கியதை நம் தலையில் சுமத்தி இருக்கிறார்கள். அதையும் ஆனந்த சிரிப்புடன் ஏற்றுக் கொள்கிறவர்களும் இருக்கிறார்களே? அணுஉலையை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கும் சேர்த்து அமைக்கப்படும் சமாதியில் மின்சார இணைப்பு கொடுக்கட்டும். அதை துவக்கி வைக்க ஒரு அரசியல்வாதி வருவான், அவனுக்கும் வாழ்க! ஒழிக! கோஷம் போட ஒரு அடிமைத் தமிழன் கிடைக்க மாட்டானா?

5. சப்பான்-பூகுஷிமாவிற்கும், நமது கூடங்குளத்திற்கும் நில அமைப்பில் நிறைய வித்தியாசம் உள்ளது. அங்கு ஆழிப் பேரலை, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளது. கூடங்குளத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனும் போது ஏன் அச்சப்பட வேண்டும்?

'அணுமின் நிலையங்களை பொறுத்தமட்டில் பூகம்பம் என்பது கவலை அளிக்கக் கூடிய ஒரு பிரச்னை ஆகும். அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாப்ப்பு முற்றிலுமாக இல்லை என்று கூற முடியாது. ஆனால் பூகம்பம் ஏற்பட்டால் கூட பாதிப்பு ஏறபடாத வகையில் தான் நம் நாட்டில் உள்ள அணுஉலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன' என்கிறார் தேசிய பேரிடர் மேலான்மை ஆணையத்தின் துணைத்தலைவராக உள்ள திரு.சீறிதர் ரெட்டி. ( இதன் தலைவர் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங்)(காண்க; தினத்தந்தி - 14.11.2011 - சென்னை பதிப்பு - பக்கம்.3.)

நிலநடுக்கம் வராத பகுதி என்று அறுதியிட்டு கூற முடியாத போது பாதுகாப்பாக இருக்கிறது என்று அரசு தரப்பில் சொல்வதை மக்கள் எப்படி நம்புவது?

6. இந்திய அணுஉலைகளின் பாதுகாப்பு மிகவும் சிறப்பாக, அறிவியல் ரீதியாக பலப்படுத்தப்பட்டுள்ளது?

நம்மை விட விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் பல மடங்கு முன்னேறிய சப்பானிலேயே விபத்தை தடுக்க முடியவில்லை.

வளர்ந்த நாடுகளான சுவிட்சர்லாந்து, இத்தாலி, செர்மனி, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் அணுஉலை ஆபத்தை தடுக்க இயலாது எனபதை புரிந்து கொண்டு மூடும் போது, இந்தியா தனது அணுஉலை மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினால், இவர்களை (வளர்ந்த நாடுகளை) விட மேம்பட்ட தொழில்நுட்பம் என்ன என்று மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அறிவியல் ரீதியான பாதுகாப்பு இருக்குமானால், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அணுஉலை திட்டத்தை தங்கள் மாநிலங்களுக்கு வேண்டாம் என்று விரட்டி அடித்தது ஏன்?

பாதுகாப்பு பற்றி வாய கிழிய பேசும் எவரும் அணுஉலை அமைந்துள்ள கூடங்குளம் பகுதியில் சில ஆண்டுகள் வாழ தயாரா? அல்லது அணுஉலை திட்டத்தை பாராளுமன்றம் பக்கத்தில், பிரதமர், சோனியா இல்லம் அருகில் அமைக்க ஒத்துக் கொள்வார்களா?

போபால் பேரழிவின் கொடூரங்களும், ஈழத்தில் 1.50 லட்சம் தமிழர்களின் இனப்படுகொலையும் (இரணம் ஆறாத நிலையில்), தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையும், சொந்த மக்கள் (ஒரிசா) மீதே இராணுவத்தை ஏவி கொல்வதும், மணீப்பூரின் இளமங்கை ஐரோன் ஷர்மிளாவின் 11 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டமும்..... இன்னும் பலப்பல சம்பவங்கள், மக்கள் பாதுகாப்பு குறித்தான அரசுகளின் அக்கறை நம் முன்னே வரலாற்றுச் சாட்சியங்களாக உள்ளன.

7. அணுஉலை திட்டத்தால் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கின்ற நேரத்தில், இதை தடுக்கலாமா?

சில நூறு பேர் வேலைக்காக பல லட்சம் உயிரை பலியிடுவது சரியா?  கூடங்குளத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பாதி தமிழகம் சுடுகாடாவது நிச்சயம்.  லட்சக்கணக்கான சொந்தங்களை இழந்து, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஒரு திட்டம் நமக்கு தேவையா?

அரசியல்வாதிகளின் ஊழலுக்காக ஒன்றும் அறியாத மக்களை பலிகடாவாக ஆக்குவதா?  தமிழகம் முழுக்க ஒரே குரலில் 'அணுஉலையை எதிர்ப்போம்', நம் ஒற்றுமையை காட்டுவோம்.

8. 2004-சுனாமியின் போது கல்பாக்கம் அணுஉலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உண்மைதானே?

சுனாமிக்கு பிறகு, அது பற்றி அறிக்கை கேட்டதற்கு நிர்வாகம் எந்த பதிலும் தரவில்லை என மரு.புகழேந்தி, மரு.இரமேஷ் ஆகியோர் சொல்வதற்கு அணுஉலை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

சுனாமியின் போது நடந்தைவைகளை வெள்ளை அறிக்கையாக மக்களிடம் தருவதற்கு அணுஉலை நிர்வாகத்திற்கு என்ன தயக்கம். மக்களுக்காகத்தான் துவக்குவதாக கூறும் போது மக்களிடம மறைப்பது ஏன்?

சுனாமி நிகழ்வின் போது பல உயிர்கள் பலியானதாக தகவல்கள் உள்ளன. அது பற்றி நிர்வாகம் வாய் திறப்பதில்லையே ஏன்?

9. அணுஉலைகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற கருத்து சரியா?

அணுஉலையில் இருந்து வெளியேறும் கனநீர் கடலில் கலக்கும் போது, கடல் நீரின் சராசரி வெப்ப நிலை அதிகரிக்கும் அதனால் கடல் வாழ் உயிரினங்கள் மிகப் பெரும் அழிவுக்குள்ளாகும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.  மேலும், அணுக்கதிர் வீச்சால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் யாவும் அழிவுக்குள்ளாகும். கூடங்குளம் அணுஉலையில் இருந்து சற்றேறக்குறைய 70 கி.மீ., தூரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற 'கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. அங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏறபட்டுள்ளதா எனபதையும் ஆய்வு செய்தல் அவசியம். அணுஉலையால் சுற்றுச்சூழலுக்கு 100 சதவீதம் ஆபத்து உள்ளது.

10. அணுஉலை எதிர்ப்பில் வெளிநாட்டு பணம், சதி உள்ளது என்று கூறப்படுகிறதே?

முழுக்க, முழுக்க வடிகட்டிய பொய். தன்னெழுச்சியான போராட்டத்தை துவங்கியுள்ள மக்கள், தங்கள் வருவாயில் இருந்து ஒரு பகுதியையும், மீன் பிடித்தலில் வரும் பணத்திலும் தான் போராடுகிறார்கள். அம்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் தான் இப்படிப்பட்ட புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன. ஊழலிலும், கோடிகளிலும் திளைப்பது வெடகம் கெட்ட நமது மாண்புமிகு! அரசியல்வாதிகள் தான்

11. தமிழகத்திற்கு  925 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போவதுடன், பொருளாதார பாதிப்பும் ஏற்படும் அல்லவா?

மீண்டும், மீண்டும் ஒன்றை நினைவு படுத்துவோம். மக்களை அழித்து அதன் மூலம்  வரும் பலன்களை யார் அனுபவிப்பார்கள். சற்று சிந்தித்து பாருங்கள். இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் தான். மக்கள் தான் என்றும் பலிகடாவாகிறார்கள். இனி.....ஒருபோதும் ....அதற்கு அனுமதிக்க கூடாது.

இத்திட்டத்தை எதிர்க்காமல் விட்டால்........

முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, ஈழம், கல்பாக்கம் அணுஉலை, கூடங்குளம் அணுஉலை.........நாளை.... நாளை மறுநாள்......

கடந்த 800 ஆண்டுகளாக அடிமை வாழ்வில் பழக்கப்பட்டு விட்டதால், அடிமையாக இருப்பதையே பெருமையாக எண்ணிக் கொண்டிருக்கும் இவன், இன்னும் என்ன, என்ன பாரங்கள் சுமக்கப் போகின்றானோ......


கூடங்குளம் அணுஉலையால் பாதி தமிழகமும்.....
முல்லைபெரியாறால் பாதி தமிழகமும்......
கடைசியில் ஒட்டு மொத்த தமிழகமும் பாலையாகும்.....

உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்த இனம்....
நீரை ஒழுங்குபடுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்திய இனம்.....
உலக மொழிகளில் மூத்த மொழி தமிழ்.....
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண, இலக்கியங்களை பெற்ற மொழி......
வீரத்திற்கு பெயர் பெற்ற இனம்.....
இன்னும் பலப்பல பராம்பரிய பெருமைகள் எல்லாம்......
அழிந்த இனத்தின் வரலாறாகி விடும்....

சாதி, மதம் கடந்த ஒரினமாக திரண்டு எழுவோம்.
நம்மை அழிக்க வந்த பகையை அழித்தொழிப்போம்.




துணை நின்ற நூல்கள்;

1.கூடங்குளம் தமிழ் மக்களின் கொலைக்களம் - மு.தனராசு - தமிழ்ச் சமூக ஆய்வுக்களம் -ஆகஸ்ட் 2009

2.தேவையா இந்த அணு உலைகள்? -அ.மார்க்ஸ் - பயணி -மே 2011

3. அணுவாற்றல் ஒர் அறிமுகம் -பூவுலகின் நண்பர்கள் -டிசம்பர் 2001

4.கூடங்குளம் அணு உலை தமிழினப் பேரழிவுத் திட்டம் -முனைவர்.த.செயராமன் -தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - அக்டோபர் 15-31 இதழ்.

5. பூவுலகு - முதுவேனிற் கால இதழ் -சூலை- ஆகஸ்ட் 2011



ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்..


 

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS