குன்றாத வாசிப்புப் பரவசம்!

குன்றாத வாசிப்புப் பரவசம்!

 

நாஞ்சில் நாடன்

 

ஆங்கிலத்திலும் சிறந்த நூல்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தது வேலை தேடி பம்பாய்க்கு ஓடிய பிறகுதான். ரே ரோடு ரயில் நிலையத்தை அடுத்தே இருந்தது பணிபுரிந்த தொழிற்கூடம் என்றாலும், முதற்கட்ட தங்கள் கொலாபா தேவி நகரில், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் வரை BEST பேருந்து. பிறகு லோக்கல் ரயில். போகும்போதும் வரும்போதும் நடைபாதைகளில் பரத்தப்பட்டிருக்கும் பழைய புத்தகக்கடைகளைப் பார்வையிடுவது வழக்கம்.

அங்கு என்று இல்லை ஃப்ளோரா ஃபவுண்டன், சர்க்கேட் ரயில் நிலைய வாசல், மகாத்மா புலே மார்க்கெட், பிரபாதேவி கணேஷ் மந்திர் மற்றும் மக்கள் கூடும் எந்தச் சந்தி என்றாலும் பம்பாய் நகர் முழுக்கப் பழைய புத்தகக்கடைகள் விரிக்கப்பட்டிருக்கும்.

ஃபுளோரா ஃபவுண்டன் பகுதியில் பேங்க் ஆஃப் அமெரிக்கா சுற்றுச் சுவரோரம் இருந்த நடைபாதைப் பழைய புத்தகக் கடையில் வாங்கிய நாவல் Old Man and The Sea. இரண்டாம் கை விலை அன்று ஒரு ரூபாய். 'அம்புட்டுத்தானா?" என்று வியக்காதீர்! அன்று மாதுங்காவில் தென்னிந்திய பிராமணர்கள் நடத்திய கன்சர்ன்ஸ், சொசைட்டி போன்ற உணவுக்கூடங்களில், சுவையான உணவு முழுச்சாப்பாடு ஒன்றே கால் பணம்தான். அன்றெனக்கு மாதச் சம்பளம் 210 பணம். முழுச் சாப்பாடே ஆடம்பரம். ஜேம்ஸ் ஜாய்ஸ், வில்லியம் ஃபாக்னர், ஜான் அப்டைக், ஜேக் கெரவுக், டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, துர்கேளின், கார்க்கி எல்லாம் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரைக்கும் கிடைத்தன எனக்கு.

1973இல்தான் முதன் முதலில் எர்வஸ்ட் மில்லர் ஹேமிங்வே எழுதிய Old Man and The Sea வாசித்தேன். பிறகு தொடர்ந்து For Whom the Bell Tolls, Snows of Klimanjaro, A Farewell to Arms எல்லாம் வாசிக்க வாய்ப்புக் கிட்டிற்று. அன்றும் இன்றும் என் பேராச்சரியம் எப்படி விலை கொடுத்து வாங்கிய இந்தப் புத்தகங்களை, அவற்றை வாசித்தபிறகு, பழைய பேப்பர்காரனுக்கு எடைபோட்டு விற்க மனம் வந்தது என்பது.

அந்த நாட்களில் பழைய விலைக்கு வாங்கிய பல புத்தகங்கள் இன்றும் என் நூலகத்தில் உண்டு, அவற்றுள் வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுத்தொகுப்பு, நான்கு பாகங்களில், சீர் குலையாமல்.

பம்பாய் மாநகருக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தமிழ் சினிமா இயக்குநர் ஒருவரைச் சந்திக்க, எனது நண்பர் அசதுல்லா கான் ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அவர் எனக்கு கான் சாகிப், தமிழ் இதழியல் உலகுக்கு ஞானபாநு, எழுத்தாளர் பத்திரிகையாளர். பாவை சந்திரனுக்கும், கவிஞர் இந்திரனுக்கும், திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரனுக்கும் நெருங்கிய நண்பர். ஒரு காலகட்டத்தில் தாங்கள் எல்லோருமே பம்பாயில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். பாவை சந்திரன் நீங்கலாக.

சென்ணையில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநரைக் காண வெறுங்கையோடு எப்படிப் போவது என்று எனது புத்தகம் ஒன்றைக் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். பத்து நாட்கள் பொறுத்து, மாதுங்கா கிங் சர்கிள் பகுதியில் ஆனந்தபவன் ஓட்டல் வாசலோடும் கடை பரத்தப்பட்டிருந்த பழைய தமிழ்ப் புத்தகங்களின் நடுவே, எனதொரு புத்தகமும் கிடந்தது. சற்றே வருத்தமான அதிர்ச்சியுடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தால்

மாதுங்கா கிங் சர்கிள் பகுதியில் ஆனந்தபவன் ஓட்டல் வாசலோடும் கடை பரத்தப்பட்டிருந்த பழைய தமிழ்ப் புத்தகங்களின் நடுவே, எனதொரு புத்தகமும் கிடந்தது

முன்பக்கத்தில் எனது அன்பளிப்புக் கையெழுத்து இருந்தது. வேண்டாம் என்று விட்டுவிட்டுப் போயிருப்பார் ஓட்டலில், அது பழைய தாள்களுடன் எடைக்குப் போயிருக்கும் என சமாதானமானேன். அனிச்சையாகப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் எட்டுப் பத்துப் பக்கங்கள் கிழித்தெடுக்கப்பட்டிருந்தன.

பத்து ரூபாய் கொடுத்துப் புத்தகத்தை BEST நகரப் பேருந்து பிடித்து, சயான் சர்கிளில் இறங்கி, அங்கே மாத வாடகைக்கு அசதுல்லா கான் தங்கியிருந்த ஹோட்டல் கட்ஃபார்ட்க்குப் போய் அவருடன் சண்டை பிடித்தேன்.

"அரே! சோடோ யார்! பஹுத்படா இதிஹாஸ் லிக்லியா!" என்றவர் கிண்டல் செய்தார். கடைசியில் இரண்டு குப்பி பியரில் சமாதானமானேன். ஆனால் அதுவல்ல காரியம்! ஆறேழு மாதங்கள் பொறுத்து வெளியான அந்த இயக்குநரின் படத்தில் கிழிக்கப்பட்ட பக்கங்கள் காட்சியாக வந்தது. எனது பொருமல் தாங்காமல் கான் சாகிப் அதைப் பாவைச் சந்திரனிடம் சொல்ல, அவர் கேட்டார் செய்தியாகப் போட்டுவிடவா என்று. அப்போது அவர் 'குங்குமம்' வார இதழில் இருந்தார். மாதச் சம்பளத்தில் 'தொட்டுக்கோ துடைச்சுக்கோ' என்று வண்டி ஓட்டுபவனுக்கு கோர்ட், வழக்கு, வக்கீல் என்று நடத்தல் கூடுமா? இயக்குநர் யாரென்றும் திரைப்படம் எதுவென்றும் இப்போது பேசி என்ன பயன்? இது நம் அறம்! அவர்களும் காலவாணியின் அருள்பெற்ற

அருட்செல்வர்கள்தானே! 'மாப்பிள்ளை புடிச்ச காசு பிள்ளை அழிக்கதுக்கு ஆச்சு!' என்பதுதானே எழுத்தாளன் நிலைமை?

கதையானாலும் கட்டுரையானாலும் இப்படித் தடம் மாறி நடப்பதே நம் தனித்துவம் என்றாயிற்று.

Old Man and The Sea ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, நான் உறுப்பினனாக பலத்த சிபாரிசு கொண்டு சேர்ந்த பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் எனக்கு அதன் தமிழ் மொழியாக்கம் கிடைத்தது. தேடி எடுத்துத் தந்தவர் 'வேனா' என நாங்கள் அழைக்கும் வே.நாகராஜன். அவர் தி.ஜானகிராமனின் தெருவாசி, நண்பர். பத்திருபது சிறுகதைகள் எழுதி இருப்பார். ஆனால் தொகுப்பு ஆகவில்லை. எனது குருக்கன்மாரில் ஒருவர்.

Old Man and The Sea நாவலை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்தவர் புகழ்பெற்ற நாட்டு விடுதலைப் போராளி, நூல்கள் பல எழுதியவர், பாக்கள் பல யாத்தவர் ச.து.சு. யோகியார் (19.04.1963) ஆவார். அவர் மொழிபெயர்த்த சில சிறப்பான நூல்கள் ரூபையாத் வால்ட் விட்மன் கவிதைகள் ‘மனிதனைப் பாடுவேன்' முதலானவை.

என்னதான் தோய்ந்து மூல மொழியில் வாசித்தாலும், அதையே தாய்மொழியில் வாசிக்கும் அனுபவம் தனித்துவமானது. அதை நான் ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த 'கடலும் கிழவனும்’ வாசிக்கும்போது உணர்ந்தேன்.

ஆங்கிலத்தில் Old Man and The Sea மிக முக்கியமான நாவல், 1952ல் வெளியாகி, 1953ல் புலிட்சர் விருது பெற்று, 1954ல் நோபல் பரிசு பெற்ற நாவல். இங்கே நாம் மிகச்சிறந்த நாவலொன்றை எழுதிவிட்டாலும் சாகித்ய அகாடமி கண்டு கொள்ள முப்பதாண்டு ஆகும். சிலகாலம் இன, வர்க்க வேறுபாடுகளுக்காக கண்டு கொள்ளாமலேயே போய்விடும்.

ஹாலிவுட் இந்த நாவலைத் திரைப்படமாக எடுத்தபோது, கிழவன் சாண்டியாகோ பாத்திரத்தில் நடித்தவர் ஸ்பென்சர் டிரேசி. நடிப்புக்காக அவர் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் சிறந்த இலக்கிய வாசகர். நமது அரசியல் அதிமேதாவிகளை  மாதிரி தக்காளி ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம், கொட்டு ரசம், செலவு ரசம், அன்னாசிப்பழ போலக் கம்பரசம் ரசம் வைப்பவர் அல்ல. ஃபிடல் காஸ்ட்ரோ எப்போதும் தமது காரில் வைத்திருக்கும் நூல்களில் ஒன்று Old Man and The Sea. நமது அரசியல் மேதைகளோ திருக்குறனை எழுதியது வான்மீகி என சொல்வார்கள்.

இந்த நாவலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் எத்தனை பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும். எத்தனை கோடிப் பிரதிகள் விற்றிருக்கும்? உலகெங்கும் பன்னிரண்டு கோடித் தமிழர்கள் வாழ்வதாகப் பீற்றிக்கொள்கிறோம். தற்போது தமிழில் வெளியாகும் தரமான புத்தகம் PODயில் ஐம்பத்திரண்டு படிகள் அடிக்கிறார்களாம். நமக்கு புரட்சி நடிகர் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் என்று பெயர் வைத்தால் புளகாங்கிதம் ஏற்படும்.

மருத்துவப் படிப்புக்கு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுத பொ.ஆ. 2000ல் என் மகளைக் கூட்டிக் கொண்டு பாண்டிச்சேரி போனேன். தேர்வு எழுதியபின் கரிசல் இலக்கிய மேதை கிரா. விட்டுக்குப் போனோம். இரண்டிரண்டு துண்டு பொரித்த மீன் வைத்து சாப்பாடு போட்டார் கணவதி அம்மா. பிறகு நாவலாசிரியை பா. விசாலம் அவர்களைப் பார்க்கப் போனோம். அவர் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்',  ‘உண்மை ஒளிர்க என்று பாடவோ?' அக்கா பா.விசாலம் என் மகளுக்கு 'Old Man and The Sea கையெழுத்திட்டுப் பரிசளித்தார்.

மகள் படித்து முடித்தபின் அந்த நாவலை மீண்டும் வாசித்தேன். ஆங்கிலத்தில் எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பது கவனத்தில் இல்லை. அப்போது தோன்றியது ச.து.சு. யோகியாரின் மொழிபெயர்ப்பு துல்லியமானதல்ல என்று.

பல ஆண்டுகள் சென்றபின்பே, எம். சிவசுப்பிரமணியம் என்ற நாமம் தாங்கிய, நாங்கள் எம்.எஸ். என்று செல்லமாக விளிக்கும் அண்ணாச்சியின் இரண்டாவது மொழிபெயர்ப்பு வாசிக்கக் கிடைத்தது. அதன் தலைப்பு 'கிழவனும் கடலும்', காலச்சுவடு வெளியீடு, பொ.ஆ.2003.

எம்.எஸ். அண்ணாச்சியின் சொந்த ஊர் திருப்பதிசாரம். பழைய பெயர் திருவண்பரிசாரம். நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்று. நம்மாழ்வாரின் அம்மா பிறந்த ஊர். பழையாறு மேற்கிலும் தேரேகால் கிழக்கிலும் தழுவியோடும் ஊர். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டா வடக்கில் நான் பிறந்த வீர நாராயணமங்கலம். எம்.எஸ். அண்ணாச்சியின் வீடு, திருப்பதிசாரம். தெற்கு ரத வீதியில், தெற்குப் பார்த்தது. அவரது உடன்பிறந்த தம்பி நாவல், சிறுகதை, கட்டுரை ஆசிரியர் 'முன்றில்' இலக்கிய இதழ் நடத்திய ம.அரங்கநாதன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் அவருடைய மகன் ஆவார்.

பன்னிரண்டு வயது முதலே, எங்கள் ஊருக்குத் தென்புறம் இருந்த திருப்பதிசாரத்தின் திருவாழிமார்பனை வழிபட, எல்லா சனிக்கிழமைகளிலும் நடந்தே போய் வருவது என்றாலும், எம்.எஸ். அண்ணாச்சியை முதன்முதலில் சந்தித்தது சுந்தர ராமசாமி வீட்டில், 'காகங்கள்' கூட்டத்தில் எனது முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் வெளியானபிறகு, 1978ம் ஆண்டாக இருக்கலாம். அதுமுதல் அவரது மரணம் வரை நெருங்கிய நட்பு. பம்பாயிலும் கோவையிலும் எம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கிறார்.

அற்புதமான ரசனையுடைய வாசகர் அவர். மொழிபெயர்ப்பாளர், மூலப்பிரதி மேம்படுத்துகிறவர், கர்நாடக இசை ரசிகர், கிருஷ்ணன் நம்பி, க.நா.சு., நகுலன், சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், ஆ.மாதவன். நீல. பதமநாபன், பேராசிரியர் ஜேசுதாசன்  எப்சிபா ஜேசுதாசன், ராஜமார்த்தாண்டன், வேத சகாயகுமார். அ.கா பெருமாள், ஜெயமோகன் என மிகப்பெரிய நண்பர் வட்டம் உண்டு அவருக்கு.

எம்.எஸ். மொழிபெயர்த்து, காலச்சுவடு வெளியிட்ட 'கிழவனும் கடலும்' மிகத் துல்லியமான, நேர்த்தியான மொழிபெயர்ப்பு. மூலப்பிரதிக்கு நெருக்கமாக இருப்பது. செறிவான தமிழில் பெயர்க்கப்பட்டது.

திரு. குறிஞ்சிவேலன் பொறுப்பேற்று வழங்கும் 'திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது, எம்.எஸ். அண்ணாச்சியின் 'கிழவனும் கடலும்' நூலுக்கு வழங்கப்பெற்ற போது அவர் உயிருடன் இல்லை. கோவையில் நடந்த விருது வழங்கும் விழாவில், கண்ணீர் மல்க அவர் சார்பாக நான்தான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டேன்.

அண்மையில் மகப்பேறு மருத்துவர் சசித்திரா தாமோதரன் அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. சந்தியா பதிப்பகம் திரு.நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன், குங்குமம் வார இதழ் பொறுப்பாசிரியர் கே.என். சிவராமன் முதலானோர் கலந்துகொண்ட விழா அது. விழா தொடங்குமுன், Old Man and The Sca நாவலின் மூன்றாவது தமிழ் மொழிபெயர்ப்பான 'கடலும் ஒரு கிழவனும்' என்ற நூலை எனக்கு வழங்கினார். மொழிபெயர்ப்பாளர் ஆயிரம். நடராஜன் அவர்கள்.

நாவலின் தலைப்பைக் கவனியுங்கள்:

Eamest Hemingway வைத்த தலைப்பு Old Man and The Sca... யோகியாரின் தலைப்பு. கடலும் கிழவனும்

எம்.எஸ். வைத்த தலைப்பு - கிழவனும் கடலும்

ஆயிரம். நடராஜன் வைத்த தலைப்பு - கடலும் ஒரு கிழவனும்

எங்கோ வாசித்த நினைவு. எர்னஸ்ட் ஹெமிங்வே இந்த நூலுக்கு நூற்று இருபது தலைப்புகள் யோசித்தார்

மூலநூலைப் பலமுறையும். ச.து.சு. யோகியார் மொழிபெயர்ப்பைச் சிலமுறையும், எம்.எஸ். மொழிபெயர்ப்பில் இருமுறையும் வாசித்தவன் என்ற தோரணையில் ஆயிரம். நடராஜன் மொழிபெயர்ப்பும் வாசிக்க ஆரம்பித்தேன்

எனவும் இறுதியில் இந்தத் தலைப்பையே தேர்வு செய்தார் எனவும், அவர் அங்ஙனம் தேர்ந்தெடுத்து வைத்த தலைப்பே, மொழிமாற்றம் பெறும்போது எத்தனை பேதங்கள் பெறுகின்றன!

ஆயிரம். நடராஜன் அவர்களை அதற்குமுன் எனக்கு அறிமுகம் இல்லை. அவர் என்னிலும் ஓராண்டு மூத்தவர் என்று பிறகு தெரிந்து கொண்டேன். எனது பாட்டனார் பு.சுப்பிரமணிய பிள்ளை (அவர் பெயர்தான் எனக்கும், எனது இனிஷியல் க என்பது ஒன்றே வேறுபாடு) பிறந்த முனைஞ்சிப்பட்டி கிராமத்தில்தான் இவரும் பள்ளிக்கல்வி பயின்றிருக்கிறார். பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்துள்ளார். அவர் மகள் மருத்துவா கிருஷ்ணப்பிரியாவும் என் மகள் மருத்துவர் சங்கீதாவும் ஏற்கனவே அறிமுகம் உடையவர்கள்.

மூலநூலைப் பலமுறையும், ச.து.க. யோகியார் மொழிபெயர்ப்பைச் சிலமுறையும், எம்.எஸ். மொழிபெயர்ப்பில் இருமுறையும் வாசித்தவன் என்ற தோரணையில் ஆயிரம். நடராஜன் மொழிபெயர்ப்பும் வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக மூலமும் மொழிபெயர்ப்புகளுமாக வாசித்துக் கொண்டிருந்தாலும், நாவலின் இறுதிப்பகுதியில் கிழவன் சாண்டியாகோ சொல்லும் வாசகம் - "இந்த மீன் என் சகோதரன்; அதை நான் கொன்றுவிட்டேன்" - கண்ணீர் வரவைப்பது.

அதுபோலவே இன்னொரு வாசகம் "ஒரு மனிதனை அழிக்க முடியுமே தவிர, அவனைத் தோற்கடிக்க முடியாது”  - என்பது.  நான் பல பள்ளிகளின் கல்லூரிகளின் தமிழ்மன்ற அரங்குகளில், மிகப் பெருமிதத்துடன் மூலமொழியின் அந்தச் சொற்றொடரை மாணவருக்குச் சொல்லி இருக்கிறேன்.

'தடாகம்' மிக நேர்த்தியாக வடிவமைத்து, முகப்போவியம் வரைந்து, சிறப்பாக அச்சிட்டு வழங்கியிருக்கிறது "Old Man and The Sea நாவலின் மூன்றாவது தமிழ் மொழிபெயர்ப்பை.

ஏற்கனவே தமிழில் இரு மொழியாக்கம் வந்திருந்தபோதிலும் அவற்றைவிடவும் சிறப்பாக, கூர்மையாக, நெருக்கமாகச் செய்யலாம் எனும் ஆர்வம் காரணமாக இந்த மொழிபெயர்ப்பைத் தர முனைந்த ஆயிரம். நடராஜன் அவர்களின் ஊக்கத்தைப் பாராட்டலாம்.

உலக மொழிகளில் சில நாவல்களை All time Classic என்பார்கள். அவற்றுள் ஒன்று Old Man and The Sea. "வளைகுடா நீரோட்டத்தில், ஒரு படகில், வயது முதிர்ந்த ஒருவன் தனியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தான்" என்ற முதல் வாக்கியத்தில் தொடங்கி, "முதியவன் சிங்கங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தான்" எனும் இறுதிச் சொற்றொடர் வரைக்கும் மொழிபெயர்ப்பில் 105 பக்கங்களே கொண்ட சிறிய நாவல் இது. குன்றாத வாசிப்புப் பரவசம் தருவது. இயல்பான மொழி அமைப்பு இந்த ஆக்கத்தின் சிறப்பு. மாணவரும் பெற்றோரும் மூத்தோரும் வாசித்துப் பெறும் அனுபவம் தனித்த சேமிப்பாக இருக்கும்.

 

ஆவநாழி – இதழ் 4 – அக்டோபர் – நவம்பர் 2022

பக்கம் 51 - 75

Back to blog