நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி

நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி

 நிவேதிதா லூயிஸ்

    வடமாவட்டங்களுக்கே உரிய கூத்துக்கலையும், ஆட்டக்கலையும் அழிந்து வருவதால் கைவிடப்பட்ட ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்பதையும், அவனது மரணத்திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்களையும் சொல்கிறது கவிப்பித்தன் எழுதிய ஜிகிட்டி நாவல்.

     ஊதுபத்தி உருட்டும் தொழிலாளர்களின் மன வலியையும், உடல் வலியையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்திலும் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.

      ஊதுபத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் எண்பது விழுக்காட்டினர் பெண்களாகவே இருக்கிறார்கள் எனச் சொல்கிறது அனைத்திந்திய அகர்பத்தி உற்பத்தியாளர்கள் சங்கம். ஒரு நாளைக்கு 2000 ஊதுபத்திகள் உருட்டும் ஒரு பெண் நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். அந்தப் பெண்கள் காலத்துக்கும் கடனிலும் ஏழ்மையிலும் நோய்மையிலும் வாடுவதை பல ஆய்வுகள் பதிவு செய்துள்ளன.

      மூச்சுப் பிரச்னைகள் தொடங்கி இதய நோய்கள், சிறுநீர் பாதை நோய்த் தொற்று, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என பல இன்னல்களை அந்தப் பெண்கள் சந்திக்கின்றனர். சிகரெட் பயன்பாட்டுக்குச் சற்றும் குறைந்தது இல்லை ஊதுபத்திக்கான மாவை தயார் செய்வதும், அதை உருட்டுவதும்.

     வடாற்காடு மாவட்டத்திலுள்ள பெண்கள் இப்படி ஊதுபத்தி உருட்டுவதும் அந்த இன்னல்களை அனுபவிப்பதும் இதுவரை பெரிய அளவில் தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை. அதை கவிப்பித்தன் அவர்களின் இந்த நாவல் மிகத் தெளிவாக முன்வைக்கிறது.

     இந்த நாவலில் வருகிற மூன்று பெண்களுமே ஊதுபத்தி உருட்டுகின்றனர். இரவில் ஊரே உறங்கினாலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் வத்தி மனைகளில் உட்கார்ந்து இவர்கள் ஊதுபத்தி உருட்டுகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தினால், வேறெந்த அன்றாட அவசியங்களையும் அவர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்கிறது. அதனால் மற்றவர்களின் நிலங்களில் கிடைக்கும் கேட்பாரற்ற கீரைகளைப் பறித்து வந்து, அவற்றைக் கடைந்து, தாளிக்காமலேயே தின்கின்றனர்.

      கீரைகளைப் பறிக்கும்போது கூட கத்தரிக்காய், மிளகாய் தக்காளி என எதையும் பறித்துக் கொள்ளாமல் அதிலும் ‘அறம்’ காக்கிறாள் ராணி. ஏழ்மையிலும் இத்தனை அறம் காக்க முனையும் எளிய மனிதர்களை “அறம் படுத்தும் பாடு” சொல்லில் வடிக்க முடியாதது.

      ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் கங்காதரன், கடிகாசலம் என்பவரின் இரண்டாவது மனைவியான பூச்சியம்மாவின் மகன். பூச்சியம்மாள், தன் வாழ்க்கை முழுவதும் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கைவிடாத வலிமையான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆட்டக் கலைஞனான தன் ஒரே மகனையும் இழந்த பிறகு பேரன் நிமிர்ந்துவிட்டால் தானும் நிமிரலாம் என்கிற நம்பிக்கையில் பத்தி உருட்டுகிறாள்; அந்தக் கனவும் கானல் நீராகிவிட, உழைப்பை மட்டுமே ஊன்றுகோலாகக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறாள் கூன் விழுந்த அந்தக் கிழவி.

      கங்காதரனின் மனைவி ராணி தனக்கு ஏதோ ஒரு பெரிய நோய் வந்துவிட்டதை அறிந்து தவிக்கும் போதும், தன்னைவிட தன் மாமியாரான பூச்சியம்மாவை நினைத்தே கவலை கொள்கிறாள். கிழவிக்கு ஏதாவது ஒரு வழியைக் காட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்றுதான் துடிக்கிறாள்.

      எளிய மக்களின் மனதிற்குள் எவ்வளவு ஆழமான பாசம் இருந்தாலும், அதை உடல் ரீதியாக வெளிப்படுத்த... ஒரு சிறு அணைப்போ, ஒரு வருடலோ தரக் கூட... பெரும் மனத்தடையாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை காட்டுகிறார் கவிப்பித்தன்.

      தற்கொலை செய்து கொள்ள முடிவவெடுக்கிற ராணி, கடைசியாகத் தன் மகள் ஆதிலட்சுமியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் செல்கிறாள். தனது நோய் பேத்திக்கும் ஒட்டிக்கொண்டு விடுமோ என்கிற அச்சத்தில் தள்ளி நின்றே குழந்தையைக் கொஞ்சுகிறாள். ஆனாலும் தன் மகளை விட்டுப் பிரிகிற அந்தக் கடைசி நொடியில்... ஆவேசத்தோடு மகளைக் கட்டி அணைத்துக் கொள்கிறாள். பெண்களுக்குள்ளான ஒரே ஒரு தொடுகையாக நாவலில் வருகிற அந்த அணைப்பு நிகழ்கிற போது நாமும் உடைந்துபோகிறோம்.

      அதே சமயம் ராணி தனது மெல்லிய காமத்தை மிக நுட்பமாக தன் கணவனுக்குக் கடத்தும் காட்சியில், ஒடுக்கப்பட்ட பெண்களின் யதார்த்தமான காதலும், சொற்களும் மிக வலிமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண் படைப்பாளர் ஒருவர் இத்தனை நுட்பமாக இதை உணர்ந்து எழுதியிருப்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.

      ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிட மாட்டோமா என ஏங்கும் பல லட்சம் இந்திய கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, சமூக இளந்தாரிப் பெண்களின் கதை ஆதிலட்சுமியினுடையது. திருமணம் ஆகி இரண்டாந்தாரமாகவேனும் அந்த ஏழ்மையை விட்டு அவள் வெளியேறுகிறபோது நாமும் சிறு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம்.

      ‘குளிர் காலத்தில் பாட்டிலில் கட்டிக் கொள்கிற தேங்காய் எண்ணெயைப் போன்றவர்கள் பெண்கள்... சிறிய சூடு பட்டாலும் உருகிவிடுவார்கள்...’ என ஆடு மேய்க்கும் அல்லிமுத்து சொல்கிறார். ஆனால் அதே பெண்கள் தான் பெரும் மன வலிமை கொண்டவர்களாகவும் இந்த நாவல் முழுவதும் வலம் வருகிறார்கள்.

      இந்த நாவலின் பெரும் பலம் அதன் வட்டார வழக்கு. அது கதை மாந்தர்களுடன் நம்மை மேலும் அணுக்கமாக்குகிறது.

     களி, கூழ், தோட்டக் கீரைகள், முருங்கைக் கீரை, ரேஷன் அரிசி, அரிசி நொய் என நம் ஒவ்வொருவரின் கடந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்துவிடுகிறது நாவலின் பேசுகளம். மொத்தத்தில் மூன்று தலைமுறைப் பெண்களின் வலியை நமக்குள் கடத்தும் நேர்மையான படைப்பு ஜிகிட்டி.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

நன்றி

இந்து தமிழ் திசை

 

 

 தொடர்புடைய மற்ற நிகழ்வுகள்

  

கவிப்பித்தன்- 'ஜிகிட்டி' & 'நீவாநதி' | இரு நூல்கள் வெளியீட்டு விழா |கவிப்பித்தன்

 Mankuthirai speech | கவிப்பித்தன்- 'ஜிகிட்டி' & 'நீவாநதி' | இரு நூல்கள் வெளியீட்டு விழா | மண்குதிரை

Back to blog