தடாகம் வெளியீடு
ஜிகிட்டி:கவிப்பித்தன்
ஜிகிட்டி:கவிப்பித்தன்
எங்கள் மண் எல்லா காலத்திலுமே வறட்சிக்கும் வறுமைக்கும் வாழ்க்கைப்பட்டிருந்தாலும், இங்கும் சில நேரங்களில் செழுமையான வாழ்க்கை வாய்த்திருக்கிறது. சில கலைகளும், சில கலைஞர்களும் வாழ்ந்த வரலாறுகள் எங்கள் மண்ணிலும் நிகழ்ந்திருக்கின்றன. வட தமிழக மண்தான் தெருக்கூத்து என்கிற கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. இன்றும்கூட பல தெருக்கூத்துக் குழுக்களும், கூத்துக் கலை வளர்ச்சி மன்றங்களும், பயிற்சி மையங்களும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன.
எங்கள் கிராமத்திலும், எங்கள் வட்டாரத்தில் உள்ள பிற கிராமங்களிலும் வாழ்ந்த பல கூத்துக் கலைஞர்களும், மேடை நாடகக் கலைஞர்களும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகும், அவர்களின் ஆட்டங்களும், அவர்களின் நினைவுகளும் எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களில் மிக முக்கியமான இரண்டு ஆட்டக்காரர்களின் வாழ்வை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
பத்திருபது ஆண்டுகளுக்கு முன்புவரை நீவாநதிப் பாய்ச்சலில் இரண்டு மூன்று போகம் விளைந்த எங்கள் மண், இன்று கட்டாந்தரையாக, வானம் பார்த்த பூமியாகக் கிடக்கிறது. பொன்னை ஆறு எங்களைக் கைவிட்டபோது, விவசாயத்தைக் கைவிட்ட எங்களின் மக்களுக்கு மீண்டும் சேற்றில் இறங்குகிற துணிச்சலை இந்த மண்ணும், இந்த சமூகமும் தரவே இல்லை. இப்போது ஏரி நிறைய நீர் இருந்தாலும், பாலாற்றிலும், நீவாநதியிலும் அவ்வப்போது வெள்ளம் ஓடினாலும், எங்களின் நிலங்கள் தீராத தாகத்துடனேயே படுத்துக் கிடக்கின்றன.
இந்த வானமும், பூமியும், அரசுகளும் எங்களைக் கைவிட்ட போது, ஊது வத்தித் தொழில்தான் எங்களின் வயிறுகளைக் கழுவ உதவியது. அந்த ஊதுவத்திக்கான கரி மாவினால் எங்களின் உடல்கள் அழுக்கானாலும், ஆரோக்கியம் சீர் கெட்டாலும் அதுதான் எங்களின் உயிரை இழுத்துப் பிடித்து நிறுத்த உதவியது. உலகமெல்லாம் பக்தியில் மணக்கிற ஊதுவத்திப் புகைகளுக்குள் கரைந்துபோன எங்களின் வாழ்வையும், வலிகளையும் சேர்த்தே இந்த நாவல் பேசுகிறது.