சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மொழிபெயர்ப்பில்,
தஹர் பென் ஜெலுன்
அவர்களின் பிரஞ்சுப் படைப்பான "தண்டனை" குறித்த
கார்த்திக் பாலசுப்பிரமணியன்
அவர்களின் முக நூல் பதிவு:
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவைச் சேர்ந்த எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதிய தன் வரலாற்றுப் புதினம் 'தண்டனை'. பிரஞ்சிலிருந்து சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் மொழிபெயர்த்துள்ளார்.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், மொராக்காவில் மன்னர் ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிராக பேசியதால் அரசியல் கைதியாகக் கட்டாய ராணுவ சேவைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞனின் கதை. அரசுக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் போகிற போக்கில் கலந்துகொண்டதைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யாதவன்.
ராணுவப் பயிற்சி என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகள் புதினம் முழுவதும் சொல்லப்படுகின்றன. எந்த இடத்திலும் வாசிப்பவனின் குற்ற உணர்ச்சியைத் தூண்டும் மலினமான உணர்ச்சித் ததும்பல்கள் இல்லாமல் அதே நேரத்தில் தீவிரத்தைக் கைவிடாமல் கதைசொல்லும் உத்தி கையாளப்படுகிறது. அதுவே இப்புதினத்தின் மிகப்பெரிய பலம். அணிந்துகொண்டிருக்கும் கால்ச்சட்டைக்குள் இயல்பாகக் கைகளை நுழைத்துக்கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிற இடத்திலும் வெளியிலிருந்து வரும் ஒரு வாகனத்தின் டீசல் வாடையின் வழியாக புறவுலகை கதைசொல்லி உணர நேரும் இடத்திலும் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய செல்வம் சுதந்திரமாக வாழக் கிடப்பதே என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
தண்டனைக் காலத்தைவிட அது முடிந்து வெளியேறியும்கூட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் கதைசொல்லி தவிக்கும் இடங்களே தண்டனை காலக்கட்டத்தின் தீவிரத்தைச் சொல்லப் போதுமாயிருக்கிறது. அந்தப் பகுதி பிரமாதமாக எழுதப்பட்டிருக்கிறது.
நல்ல புதினம். நண்பர்கள் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். தடாகம் வெளியீடு.
நன்றி : கார்த்திக் பாலசுப்பிரமணியன்.
நூலினை பெற : https://thadagam.com/products/thandanai என்ற லிங்கை ( Link ) கிளிக் செய்யுங்கள்.