நூல் அறிமுகம்  -  நீவாநதி

நூல் அறிமுகம் - நீவாநதி

எதன் பெயரால் எதையழித்து யாருக்கான வளர்ச்சிகளை நிகழ்த்துகிறீர்கள், எம் முகவர்களே?

நீவாநதி என்கிற பொன்னையாற்றில் வருகிற வெள்ளம் பாலாற்றில் கலந்து, பின் வீணாகக் கடலில் கலந்துகொண்டிருந்த காலத்தில், வெள்ளைக்காரன் அதற்கு அணை கட்டி, கால்வாய் வெட்டி, நம் மன்னர்கள் போல், நீரை நிர்வாகம் செய்திருக்கிறான். அதனால், கொண்டகுப்பம், குமணன்தாங்கல், அல்லிக்குளம், அம்மூர், ஏகாம்பரநல்லூர், லாலாபேட்டை, வாணாப்பாடி, செட்டித்தாங்கல், பெருங்காஞ்சி, சோளிங்கர் என நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளால் நிறைந்து வேலூர் மாவட்டமே நன்னீர் நிறைந்த பகுதியாக இருந்திருக்கிறது.

கவிப்பித்தனின் நீவாநதி என்ற நாவலின் நாயகன், விவசாய வாழ்க்கை வாழும் சின்னசாமி ரெட்டியார், மின்சார விளக்கு இல்லாத, ஒரு பைசா, ரெண்டு பைசா, அஞ்சு பைசா புழங்கிய காலத்தின் கிராமத்தில் வாழ்ந்தவர். ஊரின் நாட்டாமையான அவர் ஒரு விளைச்சலுக்கு முப்பது மூட்டை நெல் மகசூல் பார்த்தவர். ஒ மரக்கால் குத்தினால், இரண்டு சேர் அரிசி தேறுகிற, ரைஸ் மில் இல்லாத காலத்தில் வாழ்வைத் துவங்கியவர். நெல் தவிர, கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலை எனப் பலவிதப் பயிர்களைப் பயிரிடுகிறவர். வேர்க்கடலை போடும்போது ஊடுபயிராக சோளம், மொச்சை, காராமணி போடுபவர். இப்படி மண்சார்ந்த செம்மாந்த விவசாய வாழ்வை வாழும் விவசாயிக்கு நீர்தானே தெய்வம். அதனால், ஆற்றில் வெள்ளம் வருகிற ஒவ்வொரு முறையும் சின்னச்சாமி ரெட்டியாருக்கு இருப்புக் கொள்ளாது. கன்றை ஈனத் தவிக்கிற சினைப் பசுவினைப் போலத் தவியாய்த் தவிக்கிறார்.

தண்ணீர் சுழித்து ஓடி வரும்போது, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, வள்ளிமலையை நோக்கிக் கைகளை உயர்த்தி, முருகா முருகாவெனக் கும்பிட்டு, ஏரியெல்லாம் நிரம்பி வெள்ளாமைக்குத் துணை நிற்க வேண்டுமெனக் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார். ஆற்றுத் தண்ணீர் தளும்ப ஓடி ஏரிகள் எல்லாம் நிறைந்து வழிகின்றன. நிறைந்த ஏரிகள் குறித்து இப்படி ஒரு அழகான வருணனை வருகிறது நாவலில்.

“ஏரி தண்ணீரால் தளதளத்துக் கொண்டிருந்தது. கீழ் மதகு, மேல் மதகு, கோடியூர் ட்ரான்ஸ்பாரம், சேரி, புளியமரக்கரை எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு விரிந்திருந்த தண்ணீர் காற்றின் விளையாட்டுக்கு ஏற்ப, வரி வரியாய் ஓடி ஓடி கரையில் சலக் சலக்கென மென்மையாய் முட்டிக் கொண்டும் போன வேகத்தில் திரும்பிக் கொண்டும் இருந்தது. மாலையின் மிதமான சூரிய ஒளியில் தண்ணீரின் மேற்பரப்பில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள். தண்ணீர் அலை அலையாய்க் கரையை நோக்கி வருவதும் கரையோரம் அடுக்கிக் கட்டப்பட்டுள்ள கட்டுக் கற்களில் மோதி ஒரு சாண் உயரத்துக்கு எகிறி விழுவதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை."

"ஏரியின் பரப்பினுள் வரி வரியாய் எழுந்த நீரலைகள், அவன் பாட்டி தெரு வாசலில் அவித்த நெல்லை உணர்த்திய பின், கால்களால் கிளறி விடும்போது தோன்றும் ஒரே சீரான மேடு பள்ளங்களைப் போல, அத்தனை அழகாக இருந்தது."

ஏரி மதகிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரை விவசாயிகள், ரெட்டியார்கள், வண்ணார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எனப் பல சாதி மக்களும் ஒன்று சேர்ந்து, அதை மடை அடைத்து, முறை வைத்து, தத்தம் வயலுக்குத் திருப்பிவிடுகிறார்கள். பரபரப்பும் ஆவலுமாய் அவர்கள் பாடாய்ப்படுவதை வாசிக்கையில், எனக்குக் குறுந்தொகையின் நூற்று முப்பத்தோராம் பாடல் நினைவுக்கு வந்தது. அது ஓரேருழவனாரின் பாடல். அகப்பாடல்தான் ஆனாலும், அதில் நீருக்காய்ப் பரபரக்கும் ஒரு விவசாயியின் உவமையைப் பயன்படுத்துகிறார் ஓரேருழவனார். இந்தப் பாடல்தான் அவருக்கு அந்தப் பெயரையும் தந்திருக்கிறது.

“ஆடுஅமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர்ஏர் உழவன் போல
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே".

தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவன், தன் பணியை முடித்து மீண்டும் முல்லை நிலம் வழியாக ஊர் திரும்புகிறான். பெய்த மழையின் ஈரம் காயும் முன், வயலை உழுதுவிட விரைந்து செல்லும் ஒரே ஒரு ஏரை உடைய உழவனைப் போல, தலைவியைக் காண, அந்தத் தலைவனின் உள்ளமும் விரைந்து சென்றது என்று சங்கப்புலவர் அப்பாடலில் சொல் வது போல, இந்தக் கிராமத்து மக்கள் பகலிரவு பாராது, தங்கள் நெடு வயல்களுக்கு விரைந்து நீர் பாய்ச்சுகிறார்கள்.

நீர் நிறைந்த பின், மண் குழைந்து வயலெல்லாம் சேறாகி, விவசாயியின் கால்களை அது ‘பொதுக்’, ‘பொதுக்'கென உள்வாங்குகிறது. என் தந்தையாரோடு எங்கள் வயலுக்குச் செல்லும்போது, என் இளம் பிராயத்தில் அனுபவித்த வாழ்விது.

வேலஞ்செடியை ஒடித்துப் பல் துலக்குவது, வெற்றிலை போடுவது, வீட்டு வாசலில் சாணி கரைத்துத் தெளித்துக் கோலம் போடுவதென, இயற்கையோடு இயைந்து வாழும் அம் மக்களுக்கு சாராயமும், புகையிலையும்கூடத் தள்ளுபடி இல்லை. வீட்டு வாசலில் கிழக்கு பார்த்து நிற்க வைத்து, வலதும் இடதுமாய் மிளகாயையும் உப்பையும் உள்ளங்கையில் வைத்து மூடி, திருஷ்டி சுற்றப்படும் ஆளின் ஆகிருதி முழுக்க, கைகளை ஒரு கை மாற்றி ஒரு கை சுழற்றி, திருஷ்டி கழித்து, உப்பும் மிளகாயுமுள்ள கைநோக்கி தூ தூவெனத் துப்ப வைத்து, அதை அடுப்பில் போட, அது படபடவென வெடிக்கையில், திருஷ்டி கழிந்தது என நம்பும் வெள்ளந்தி மனிதர்கள். கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புழங்கும் அவர்களிடம், சில விதிவிலக்கு மனிதர்கள் இருக்கிறார்கள். வண்ணார்வீட்டு அம்சாவைக் கெடுத்த ரெட்டி, ஆட்டைப் புணரும் ஆறுமுகம் என இவர்களைப் போன்றவர்களும் நாவலில் வருகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், நாவலில் வரும் பெரும்பாலோர் நீரின் மீதும் மண்ணின் மீதும் மட்டுமல்ல, ஆடு, மாடு, கோழி, பறவையெனப் பிற உயிர்கள் மீதெல்லாம் நேசம்கொண்டு திரிகிறார்கள்.

மாடு அசைபோடுவதை இப்படி விவரிக்கிறார் கவிப்பித்தன். "திருட்டுத்தனமாக விளைநிலங்களில் இறங்குகிற மாடுகள், அவசர அவசரமாகக் கண்டமேனிக்குப் பயிர்களைக் கடித்து வயிற்றுக்குள் தள்ளும். எந்த நேரத்தில் எவன் வந்து அடித்து விரட்டுவானோ என்ற பயத்தோடு, கதிர்களையும் பயிர்களையும் புற்களையும் நாக்கை நீட்டித் துழாவி இழுத்து, சுழற்றிச் சுழற்றி விழுங்கும். நினைத்தது போலவே யாரேனும் ஓடி முதுகில் நான்கு விளாசு விளாசி விரட்டியடித்த பின்னர், மர நிழலிலோ தொழுவத்திலோ வந்து படுத்து வாயில் நுரை தள்ள, வயிற்றுக்குள் திணித்து வைத்ததை, மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து, நிதானமாக அசை போடும். வாயோரங்களில் உமிழ் நீர் நூல் நூலாய் வழிய, கண்களில் நீர் திரையிட்டு மின்ன, மிக நிதானமாக அசை போடும்.”

அதற்குப் பின் மாடுகள் தொட்டியில் இருக்கும் நீரை, ‘புஸ் புஸ்' என மூச்சை விட்டு உறிஞ்சுகின்றன. தொட்டி நிறைந்த நீர் நிமிடத்தில் காலியாக அடியில் இருந்த பழஞ்சோறு, களி, கூழ் ஆகியவற்றை நாக்கால் துழாவி இழுத்துப் பின் அசைபோடுகின்றன. மாடுகள் பற்றிய ஒரு அழகிய சித்திரம் இது.

அம்சா என்கிற ஒரு பாத்திரம் வரப்பு ஓரங்களில் அடர் பச்சையும், வெளிர் பச்சையுமாய் இருந்த புற்கள் மேல் ஆசைகொண்டு, கீழே குனிந்து அப்படியே, மாட்டைப் போல வாயால் புற்களைக் கரகரவென மென்று தின்று விடலாமா என்று ஆசை கொள்கிறாள். இதுபோன்று இந்தத் தலைமுறை கண்டிராத பலப்பல நுணுக்கக் காட்சிப் பதிவுகள் இந்நாவலில்.

பிரச்சினையே இல்லையா இந்த நாவலில் என்று கேட்டால், இவ்வளவு செழிப்புடனும் இயல்பான எளிமையுடனும் மனிதர்கள் இருந்த பரப்பில், பெரும் தொழிற்சாலை கட்ட வரும் வியாபாரிகளால் நிலங்கள் மெல்லப் பறிபோகின்றன. பெல் நிறுவனம், இரும்பு நிறுவனங்கள், சிப்காட், தோல் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு நிலமெடுக்க வருபவர்கள், இனி உங்கள் வாழ்க்கை வானளவு உயரும் என வார்த்தைகளால் கோட்டைகட்டி, மக்களை மயக்கப் பார்க்கிறார்கள். அதில் மயங்கி பலரும் தங்கள் வாழ்வைப் பறிகொடுக்கிறார்கள். ஆனால், சிலர் எதிர்வாதம் செய்து பார்க்கிறார்கள். மனிதர்களில் உரிமைக்குரல் ஒலிக்கும் அந்த இடங்களிலெல்லாம் கவிப்பித்தனின் வசனங்கள் பட்டுத் தெறிக்கின்றன.

"தங்கத்தையே கட்டிக் கட்டியா எடுத்தாந்து குடத்தா கூட, ஒரு பொட்டு நிலத்த குடுக்க முடியாது போங்கடா” என்று நிலங்களை அளக்க வரும் அதிகாரிகளிடம் சண்டைக்குப் போகிறார்கள் லாலாப்பேட்டை ஊர்க்காரர்கள்.

"நாம் துன்ற சோத்துல நம்ம சர்க்காரே மண்ணப் போட்டா சம்சாரி இன்னாதாண்டா பண்றது” என்று முருக ரெட்டியாரிடம் கோபமாகச் சின்னசாமி ரெட்டியார் கேட்கிறார். அதற்கு முருக ரெட்டியார் நக்கலாக "யோவ் துன்ற சோறோ, துன்னாத சோறோ, சர்க்காரு கேட்டா கோவணத்தக்கூட அவுத்துக்குடுத்துட்டுப் பேசாம வரணும் புரியுதா”. இது முருகா ரெட்டியார் குரலா அவரது தொண்டைக்குள்ளிருந்து வரும் தேவராஜின் குரலா தெரியவில்லை.

இன்னொருவர் சொல்கிறார். "பாவம் ஜனங்க வயிறாரச் சோத்த ஆக்கிப்போட்டு, மனசார கூடப்படுத்து, புள்ளிங்களப் பெத்துக்குடுக்குற பொண்டாட்டிய, திடுக்குனு எவனோ வந்து தூக்கினு பூட்டா எப்படி இருக்கும், அப்படித்தான்டா இருக்கும் நெலத்த வுட்ட சம்சாரிங்க கதி.”

வேப்பமரம், புங்கை மரம், நுணாமரம், புளிய மரம் எட்டி மரம், கொன்றை, அவுஞ்சி என்றும் ஆவாரஞ் செடி, பூந்துடைப்பப் புதர்கள், கற்றாழைச் செடியென்றும் இயற்கையாய்ப் பச்சைப் பசேலெனச் சூழப்பட்ட பிரதேசத்தை எடுக்க வருகிறவர்கள் ஒரு சென்ட் ஐந்நூறு ரூபாய்க்கு விற்கும் போது, அதை வெறும் ஐம்பது ரூபாய்க்கு எடுக்க வருகிறார்கள்.

"சக்காருக்கு கண்ணு தெரியலயா, அம்பது ரூபான்னு போட்டா என்னங்க நியாயம் இது. இன்னா நஸ்ட்ட ஈடா குடுக்குறிங்க, ஒரு செண்டுக்கு அம்பது ரூவான்னா, ஒரு ஏக்கராவுக்கு மிஞ்சுறது வெறும் அஞ்சாயிரம்தான. அதவச்சி எத்தனை நாளைக்குத் துன்ன முடியும். உக்காந்து துன்னா ஆறுமாசத்துக்கு வருமா. அதுக்குப் பிறகு புவாவுக்கு யார் வூட்டு வாசல்ல போயி நிக்கிறது” என்று கேட்கிறார்கள்.

அரசு அதிகாரி சொல்கிறார். "நியாயமான கேள்விதான். சர்க்கார் சட்டப்படி இந்த ஏரியாவில் மூனு வருஷத்துல எந்தெந்த சர்வே நம்பர் என்னென்ன வெலைக்கு விற்கப்பட்டதுன்னு புள்ளி விவரத்தை எடுத்து, அதுப்படிதான் தொகையை நிர்ணயம் செஞ்சிருக்கோம், அது கம்மியா இருக்குன்னா அது எங்க தப்பா. செண்ட் ஐந்நூறு ரூபான்னு இருக்கப்ப அதப் பத்திரத்துல அம்பதுன்னு பதிஞ்சது யாரு”.

"சட்டப்படி உள்ள கணக்குலதான் எடுத்துக்க முடியும் சரி, பின்னாடி இப்படில்லாம் வருமுன்னு எங்களுக்கு இது தெரியுமா. அது இருக்கட்டும், என்ன சார் உங்க சட்டம்? இல்லாதவங்க நிலத்தைப் புடிங்கி பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளுக்குக் கொடுக்கிறதுதான் உங்க சட்டமா..."

"கம்பெனிக்கு நிலம் குடுத்தா அவங்கவங்க படிப்புக்கு ஏத்த மாதிரி எல்லாருக்கும் வேல குடுப்பாங்க. படிக்காதவங்களுக்கு வாட்ச்மேன் வேல கூட இருக்கு."

"ஐயா தலையை வெட்டிப்புட்டு இடுப்புக்கு ஒட்டியாணம் தங்கத்துல போட்டா என்ன, தகரத்துல போட்டா என்ன. போங்க, போய் எங்க மண்ணயே பேத்து எடுத்துட்டு போங்க. பரம்பரை பரம்பரையா இந்த மண்ணிலயே பொறந்து வளர்ந்த எங்கள இந்த மண்ணிலேயே புதைச்சுட்டுப் போயிடுங்க."

ஒரு பக்கம் நிலம் இப்படிப் பறி போகையில், சமூக மாற்றங்களால், வீட்டுக்குள்ளும் பிரச்சினைகள். தவமாய்த் தவமிருந்து சின்னசாமி ரெட்டியார் பெற்ற ஆண் மகன் முருகவேலு படிக்க மறுக்கிறான். வயது வந்த பிறகு அவனது அக்காள் மகள் வள்ளிக்கு, முருகவேல் மேல் ஆசையிருக்க அவனோ வண்ணார்வீட்டுப் பெண் அமுதாவைக் காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அந்த ஆசையின் இலயிப்பிலேயே தொழிற்சாலையில் வேலை செய்யும்போது, கவனம் பிசகி, ஒரு விபத்தில் மிக இள வயதில் மாண்டும் போகிறான். உடைந்து நொறுங்குகிறார் சின்னசாமி. வீடே தலைகீழாகிறது.

நாவல், இவற்றை தவிர, வெவ்வேறு அறியப்படாத சேதிகளையும் சொல்லிப்போகிறது. ஒரு சாண் நீளத்துக்கு இருக்கும் வெளிச்சி மீன்கள், ஜிலேபி மீன்கள், முட்டைக் குரவை, விரால், உலுவை மீன்கள், ஜப்பான் கெண்டைகள், குள்ளாக் கெண்டைகள் - இப்படி இதில் வரும் மீன்களை எல்லாம் இப்போது பார்க்கக்கூட முடியுமாவென்று தெரியவில்லை.

அது போல உணவு, மாநகரத்து மனிதர்கள் அறிந்திரா உணவு வகைளின் தாளிதம் நாவல் நெடுக மணக்கின்றன. சில இடங்கள் நாவூற வைக்கின்றன. பதமான வேகாட்டில் வெந்த, கையில் பிட்டு எடுத்தால் விரல்களில் ஒட்டாமல் வரும் களியை ஒரு நாள் கத்தரி, வெண்டை போட்ட கருவாட்டுக் குழம்போடும், மறுநாள் முருங்கைக்காய், மொச்சைக் கொட்டை போட்டு வைத்த கருவாட்டுக் குழம்போடும், இன்னொரு நாள் காராமணி மொச்சைப் பயறு சேர்த்த குழம்போடும் புரட்டி, அம்மனிதர்கள் வாயில் போடும்போது நம் வாயிலும் வெண்ணெய் போல் அது வழுக்கிக் கொண்டு போகிறது. பழையதும் கருவாட்டுக் குழம்புமாய் அவர்கள் சாப்பிடும் இடங்கள் வரும்போது, பேசாமல் இவை கிடைக்கும் இடங்களுக்குப் புறப்பட்டுப் போங்களெனத் தன் எழுத்தால் துரத்துகிறார் கவிப்பித்தன். பத்தாததற்கு சிறுவர்கள் புறா முட்டையைத் திருடி எடுத்து வந்து, சாணத்துக்குள் வைத்து, உருண்டையாய் உருட்டி, நெருப்பில் இட்டுச் சுட்டு, சாணி வெந்து விரிசல் விட, அதிலிருந்து முட்டையை ஆவி பறக்க எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வெச்ச மீன் கொழம்பு, என்ன இழுக்குதய்யா, நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா” என்ற முள்ளும் மலரும் படப்பாடல் வரிகள் நினைக்கு வந்தன. இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் கடவுள் நம்பிக்கைக்கும் குறைவில்லை. தெருக்கூத்தில், விநாயகர் பாடல் பாடப்படுகிறது. மாசி மாதப் பஜனை நடக்கிறது. வெல்லம் போட்டுக் கிளறிய பச்சரிசி 'தளுவு' பொங்கல், வேகவைத்த துவரை, காராமணி, மொச்சை சுண்டல் செய்து, பூசணி இலைகளில் பிரசாதம் விநியோகம் நடக்கிறது. கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன. வள்ளிமலைத் தேருக்குக் கொடியேற்றியதும், கர்ண மோட்சம், பாஞ்சாலி துகிலுரியும் பாரதக் கூத்து என வண்ண வண்ண விழாக்கோலங்களைத் தம் எழுத்தால், நம் கண்முன் நிறுத்துகிறார் கவிப்பித்தன். 

ஒரு கலாச்சார ஆவணமாக மாறி நிற்கும் இந்நாவல் இயற்கை எழிலால் சூழப்பட்ட கிராமம், எப்படி மனிதர்களின் பேராசையால், கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கத் துடிக்கிற அறிவிலிகளால், நலிந்து போகிறது என்பதை மருகிக் கலங்கும் வண்ணம் சக்ரவாகராகத்தில் தன் நாவலெனும் வாத்தியம் வழி இசைத்துக் காட்டுகிறார் கவிப்பித்தன்.

பொய்த்துப் போன மழையால், அண்டை மாநிலமான ஆந்திரா செய்த துரோகத்தால், பணவெறியால், அதிகாரத்தால், மண்ணை, நீரை, மக்களை, ஏன் அவர்களின் எதிர்காலச் சந்ததிகளையும் மறந்து, கேவலமாக வாலாட்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளால், நிலம் நீச்சோடு ஆடு மாடுகளோடு, கம்பீரமாக நாட்டாமையாய் வாழ்ந்த மனிதர், தொழிற்சாலைகளுக்காக அதே ஊரில் நிலத்தைத் தந்துவிட்டு, அங்கேயே செக்யூரிட்டி வேலை தேடி அலைகிறார். பாலாற்றிலிருந்தும் பொன்னையாற்றிலிருந்தும் உறிஞ்சி எடுத்து வரும் நல்ல தண்ணீரை எல்லாம் உபயோகித்தபின், அதை அமில நீராய் வெளித்தள்ளி, மண்ணை நஞ்சாக்கும் ஒரு தொழிற்சாலையில் கடைசியில் அவருக்குத் தோட்டவேலை கிடைக்கிறது. நாட்டாமைக் கிரீடத்தையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, அறுபது வயசுக்கு மேல் தோட்ட வேலை மட்டும் இல்லாமல், ஓடும் பிள்ளை ஓடியாரும் பிள்ளையாக, யார் என்ன வேலை சொன்னாலும் செய்கிறார் சின்னசாமி ரெட்டியார். அவர் மனைவியோ ஊதுபத்தி இழுக்கிறாள்.

நாவலின் கடைசியில் இரும்பு, பித்தளை பழைய சாமானுக்குப் பட்டாணி வெங்காயமென, மிதிவண்டியில் கூவியபடி வரும் ஒரு வியாபாரியிடம், விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரைத் திருப்பப் பயன்பட்ட மணல் செராவை இனி இது உதவாத பழைய சாமான் என எடைக்குப் போடுகிறார் சின்னச்சாமி ரெட்டியார். பின் பசிக்காக உள்ளே போய்க் கூழைக் குடிக்கையில், எடைக்குப் போடப்பட்ட மணல் செராவால் கிடைத்த வெங்காயத்தை உறித்து நீட்டுகிறாள் அவர் மனைவி பூங்காவனம். அப்போது கண்ணீர் வழிவது, அவர் கண்களிலிருந்து மட்டுமன்று.

ஏதேதோ பொதுப் பிரச்சினைகள் எல்லாம் பேசப்படுகையில் தம் மாவட்டத்து மண்ணும் நீரும் நஞ்சாகி, மனிதர்கள் வியாதி வெக்கையில் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருக்கிற அவலம்தான் கவிப்பித்தனை இந்நாவலை எழுத வைத்திருக்கிறது. ஒரு கலைஞனின் மிக மேன்மையான வேலை இதுதான்.

எளிய மனிதர்கள்தாம் எப்போதும் சகல வன்முறைக்கும் இலக்காகிறார்கள். கொடுமையென்னவெனில், யாருமற்ற அனாதைகள் படும் அவதியைக் கண்டும் கேட்க நாதியேதுமில்லை. எல்லார் வாயும் கையும் கண்ணுக்குத் தெரியாக் கயிறுகளால் கட்டப்பட்டுகிடக்கின்றன. அவர்கள் அறியாதவாறு அவர்களை அவர்களாகவே வதைத்துக்கொள்ள வைக்கிற தந்திரக் கலையில் வென்ற கலைஞர்களும் இதே மண்ணில் தானே இருக்கிறார்கள் என்பதை ஒரு மௌனக் கூக்குரல் மூலம் கரிசனமாய் நம்முன் வைத்திருக்கும் கவிப்பித்தனுக்கு ஒரு லால் சலாம்.

தடாகம் வெளியீடு ரூ.580/-

நூலினை பெற : https://thadagam.com/products/neevanathi என்ற லிங்கை ( Link ) கிளிக் செய்யுங்கள்.

நன்றி : ரவிசுப்பிரமணியன்
பேசும் புதிய சக்தி (அக்டோபர் 2025)

Back to blog