வருடிச் செல்லும் வழித்தடங்கள்
ஆசிரியர்: டெஸர் ஓஸ்லூ
தமிழாக்கம்: அனி மாலினிராஜ்
மனச்சிக்கல்களை எதிர்கொண்ட நூலாசிரியர் டெஸர் ஓஸ்லூ
மார்பகப் புற்று நோயியால் பாதிக்கப்பட்டவர். Old Garden, Cold Nights of
Childhood போன்ற இவரது படைப்புகள் இவரின் சொந்த வாழ்க்கை
அனுபவங்களின் அடியொட்டியே திகழ்கின்றன.
“வருடிச் செல்லும் வழித்தடங்கள்” என்ற இந்தத் தமிழாக்க நூலின்
முக்கியக் களம் மரணமும், மனிதச் சாவின் ஆழமும் அகலமும்,
அவை ஒருவரின் வாழ்க்கையில், குறிப்பாக நூலாசிரியரின்
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்களை, மன
உணர்வுகளின் பாதிப்புகளை படம் பிடித்துக்காட்டுகின்றன.
பல மண முறிவுகளை எதிர்கொண்ட ஆசிரியரின் காதல், திருமணம்,
மனித உறவுகள் குறித்த வித்தியாசமான பார்வை நூலெங்கும்
ஆங்காங்கே சிறு தூவல்களாக வீசப்பட்டிருக்கின்றன.
“வாழ்க்கை சாவினால் விவரிக்கப்படுவது போல் சாவும்
வாழ்க்கையினால் விவரிக்கப்படுகிறது” என்று ஆசிரியர்
எழுதியிருக்கும் வாக்கியம் அவரின் “வருடிச் செல்லும்
வழித்தடங்கள்” என்ற இந்த நூலுக்கே மிகச் சரியாகப்
பொருந்துகிறது.
“நகரத்தில் யாருமே மகிழ்ச்சியாகவும் இல்லை. மகிழ்ச்சி
இல்லாமலும் இல்லை. யாருக்கும் மகிழ்ச்சியில் நம்பிக்கை
இல்லை. அப்படிப்பட்ட நகரத்தில்தான் இப்போது இருக்கிறேன். நீ
விட்டுச் சென்ற குளிர்காலப் பாடலுடன்.” – தனிமையின்
விளிம்புகளைத் தழுவும் வரிகளை வாசகனுக்குத் தரும் இந் நாவல்,
அதே வாசகனுக்கு கருத்தாழமிக்க புதிய துணையாக அமைவது ஒரு
இலக்கிய முரண் – இந்த நூலைப் போலவே.
“என் வாழ்க்கை பயணங்களினாலானது” என்று நமக்கும் சொல்லும்
இந்தப் புனைவு – அபுனைவு நூல், டெஸர் ஓஸ்லூவின்
பயணங்களினாலான ஒரு படைப்பே.
“என்னுடைய எல்லா அனுபவங்களும் மனிதத்தைப்
பொதுப்படையாக நேசிக்கும் தன்மையாக என்னை மாற்றிவிட்டன”
என்று கூறும் இப்புத்தகம், நம்மையும் அந்த அனுபவத்திற்குள்
இழுத்துச் செல்கிறது.
“இதோ இங்கே அதே உணார்ச்சிகளோடு நின்றுகொண்டிருக்கிறேன்.
தொட முடியாத பொதுப்படையான உணர்வுப்பூர்வமான காதலைப்
போல, மண்ணில் விழும் கோடை மழையைப் போல
நின்றுகொண்டிருக்கிறேன்.” என்று உணர்ச்சிவசப்படுகிற ஆசிரியர்
அதே மன உணர்வுகளை வாசகர்களிடமும் கடத்துகிறார்.
கடந்துபோக முடியாத எண்ணற்ற வரிகளின் அளவற்ற ஆழத்தால்
கனத்துக் கிடக்கிறது இந்த “வருடிச் செல்லும் வழித்தடங்கள்.”
“ஒரு சிறிய நடைப்பயணம் ஒட்டுமொத்த நாளையுமே
மகிழ்ச்சியாக்கிவிடுகிறது. ஆனால் இரவுகள் என்னைக்
கொல்லுகின்றன.” என ஆச்சரியம் தரும் முரண்கள் நூலெங்கும்
விரவிக் கிடக்கின்றன.
“நான் எங்கே போக விரும்புகிறேன்? என்னால் எங்கே போக
முடியும்? எல்லா இடத்துக்கும் போய்க்கொண்டே இருக்க வேண்டும்
என்றே விருப்பம்.” எனச் சொல்லும் ஆசிரியர் அதை நிகழ்த்தவும்
செய்திருக்கும் அழுத்தமான பதிவு, “வருடிச் செல்லும்
வழித்தடங்கள்.”
வெற்றி என்ற உங்களுடைய கோட்பாட்டை நான் எதிர்க்கிறேன்.
ஆனால், அதற்கு நான் ஒரு வெற்றியாளனாக இருக்க வேண்டும்.
எனக்கு அந்தக் கோட்பாட்டில் இருந்து வெளியே நின்று எதிர்ப்பதில்
ஆர்வமில்லை என்னும் வரிகள் யதார்த்தத்தின் இயல்பையும்
இசைவையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
“எந்தச் சாலையைத் தேர்ந்தெடுத்தாலும் அது ஒரு புதிய சாலையாக
இருக்க வேண்டும்” என புதுமையை விரும்புகிறது இந்தப் பயண
நூல். ஒரு வகையில் ஆசிரியரின் பயண நாட்குறிப்பு. வலி மிகுந்த
ஆனால், வலிமையை வலியுறுத்துகிற அற்புத படைப்பு.
புத்தகத்தில் இடப்பிடித்திருக்கும்,
- “எங்கே இருந்து வருகிறீர்கள்?”, அந்தச் சிப்பந்தி கேட்டார்.
“எந்த இடத்திலிருந்தும் அல்ல”, என்றேன்.” -
என்ற எளிமையான உரையாடல், ஆசிரியரின் தனித்தன்மையையும்
மனமுதிர்ச்சியையும் வாசகனுக்கு சுலபமாக எடுத்துச்சொல்கிறது.
“ஒருவர் சரியான மனநிலையோடு வாழ்கிறார் என்றால் அவர்
வாழ்க்கையை வாழவில்லை என்று அர்த்தம். அதற்கு எதிர் மாறாக
இந்த வானத்திற்குக் கீழே மனப்பிறழ்சி அடைந்தவர்களின் உலகம்தான்
எத்தனை அழகானது.” - மனப்பிறழ்வை எதிர்கொண்டவர்களாலேயே
வலியில்கூட வழியைக் காணும் புதுமையை எழுத முடியும்
என்பதற்கு டெஸர் ஓஸ்லூவின் இந்த வரிகளே சாட்சி.
மரணமும், துயரங்களும் நிறைந்த வருடிச் செல்லும்
வழித்தடங்களில் “நான் ரேடியோவில் பாடல்களைக்
கேட்டுக்கொண்டிருந்தேன். அவை மிக அழகாக ஒலித்தன.
ஏனென்றால், அதில் உள்ள வார்த்தைகள் ஒன்றும் எனக்குப்
புரியவில்லை” என்ற மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது.
தன்னிடமிருந்தே எதிர்ப்புக்கான எல்லாச் சக்தியையும்
எடுத்துக்கொள்ளும் அந்தப் பெண்மணியையும், வாழ்க்கையில்
இருந்து இன்னும் வெளியே எறியப்படாத அந்தப் பெண்மணியையும்
கண்ணாடியின் முன் நின்று நினைத்துக்கொண்டேன் எனத்
தன்னையே தனக்கு விளக்கிக்கொள்கிறாள் இந்த வரிகளை எழுதியப்
பெண்மணி.
உலகத்துப் பெண்கள் அனைவருக்கும் வலிமையும் உறுதியையும்
வாரி வழங்குகிறது “உன்னைச் சற்று எக்கித் தள்ள முடிந்தவள் நீ
ஒருத்திதான். நீ வாழ்வின் இறுதியைத் தொடக்கமாக்கிக்
கொண்டாய்” என்று அவளை உயர்த்திப் பிடிக்கிறது டெஸர்
ஓஸ்லூவின் “வருடிச் செல்லும் வழித்தடங்கள்.”
டெஸர் ஓஸ்லு –பல்வேறு சர்வதேச விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட புனைவுப் படைப்புகளின்
ஆசிரியர். ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரான இவர், கவிதை, நாவல்
என பல வடிவங்களில் எழுதியுள்ளார். புனைவு, அபுனைவு என்ற
பிரிவுகளின் எல்லைகளைஉடைக்கின்றன என்பது கண்கூடு.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த, வகைமைக்குள் பிடிபடாத உயரிய நூலே
இவரது “வருடிச் செல்லும் வழித்தடங்கள்”. டெஸர் ஓஸ்லூ எழுதிய
துருக்கி நூலை மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
அனுபவமும் திறமையும் வாய்ந்த அனி மாலினிராஜ்.
---------- (கட்டுரை நிறைவு) -------------
தடாகம் வெளியீடு ரூ.200/-
நூலினை பெற : Buy Now என்ற லிங்கை ( Link ) கிளிக் செய்யுங்கள்.