வாழ்வின் விளிம்பில் நின்று மகிழ்ச்சியைத் தேடும் ஒரு பயணம்!

வாழ்வின் விளிம்பில் நின்று மகிழ்ச்சியைத் தேடும் ஒரு பயணம்!

வி. நடராஜ்

மகிழ்ச்சியான மரணம் என்னும் ஆல்பெர் காம்யுவின் இந்த நாவலை வாசிக்கும்போது இது எப்படி ஒரு நூலாக வெளியானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நாவல் படைப்பாக உருவானதிலிருந்து நூலாக வெளியிடப்பட்டது வரை வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையை கடந்து வந்திருக்கிறது. அதாவது காம்யு இறந்து பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு 1971 ல் கலிமார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 1930 களின் பிற்பகுதியில் காம்யு தனது இருபதுகளில் இருந்தபோது எழுதப்பட்ட இது அவருடைய முதல் நாவல் என்று கருதத்தக்கது. வெளியிடப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட இது 1960ல் கார் விபத்தில் அவர் இறந்துபோனதற்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய உலகில் மாபெரும் செல்வாக்கு செலுத்தியவரான  காம்யு அல்ஜீரியாவில் பிறந்த பிரெஞ்சுக்காரராவார். காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் முதன்முதலாக ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சு ஆல்ப்ஸ்க்கு  அனுப்பப்பட்டார். அதுவரை அல்ஜியர்ஸில் இருந்த அவர் தத்துவம்  பயின்றார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

மகிழ்ச்சியான  மரணம் நாவலின் கதை அதன் முதன்மைக் கதாபாத்திரமான பத்ரிஸ் மெர்சோ விபத்தில் தனது கால்களை இழந்த ரோலன் ஜாக்ரெஸை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதிலிருந்து தொடங்குகிறது. தன்னைச் சுட்டுக்கொல்வதற்காக மெர்சோவுக்குப் பணம் கிடைப்பதற்கு ஜாக்ரெஸ் ஏற்பாடு செய்திருந்தான். ஏனெனில் தனக்கு சாத்தியப்படாத வாழ்க்கையின் நிறைவு அவனுக்கு சாத்தியப்படும் என்று அவன்  நினைத்தான். அந்தக் கொலை தீவிர உணர்ச்சியால் செய்யப்பட்டது அல்ல. இருப்பினும் மெர்சோ தீவிர உணர்ச்சிகள் பொங்கித் ததும்புபவனாக இருந்தான். அந்த உணர்ச்சிகளை அவன் பற்றிக்கொள்கிறான், நீட்டிக்கிறான் அல்லது தன்னுள் எரியும் வாழ்வின் தழலை தனது சுயகட்டுப்பாட்டின் திறத்தால் அமைதியாக மூடிமறைக்கிறான். ஜாக்ரெஸைச் சுட்டபிறகு மெர்சோ எதிர்கொள்ளும் கேள்வி அவனுக்குக் கிடைக்கும் பணம் தரும் சுதந்திரத்தைக் கொண்டு தன்னால் மகிழ்ச்சியை முயன்று பெறமுடியுமா என்பதாகும்.

இந்த நூல் இயற்கை மரணம், உணர்வு மரணம் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மார்த்தாவுடனான மெர்சோவின்  வாழ்க்கை, கப்பல்துறையில் எழுத்தாராக அவனுடைய பணி, பிற பாத்திரங்களுடன் அவனுடைய ஊடாட்டங்கள் , ஜாக்ரெஸின் கொலை ஆகியவற்றைப் பின்பற்றிச் செல்கிறது.

இரண்டாவது பகுதி உணர்வு மரணம். இங்குதான் நாம் சிக்கலை எதிர்கொள்கிறோம். இந்தச் சிக்கல் வடிவம் சார்ந்தது அல்ல. வார்த்தைக் கட்டுமானம் அல்லது தத்துவப்பார்வை சார்ந்ததுமல்ல. மாறாக நாவலின் தொனிப் பொருளையும்  நிகழ்முறையையும் சார்ந்தது. ஜாக்ரெஸைச் சுட்டபிறகு மெர்சோ பிராக்குக்குச் செல்கிறான். ஐரோப்பாவில் தனது சகிப்புத்தன்மையின் எல்லையில், தனக்குள்ளேயே சுமந்துகொண்டிருந்த காய்ச்சலும், வேதனையும் தன்னை முழுமையாக வெளிக்கொண்டு வந்ததாக உணர்கிறான். நோய்வாய்ப்பட்டு, தன்னையே தன் இருத்தலின் மையத்தில் அந்நியமானவனாக உணர்ந்த அவன் அல்ஜீரியாவுக்குத் திரும்புகிறான். முன்பே தனக்கு அறிமுகமாகியிருந்த மூன்று இளம்பெண்களுடன் வசிக்கிறான். அவன் வசித்த வீடு மலையுச்சியில் இருந்தது. அங்கிருந்து விரிகுடாவைப் பார்க்க முடியும். கட்டற்ற இந்தச் சூழலில், தன் சொந்த வாழ்க்கையில் தான் ஒரு பார்வையாளனாக அல்லாமல் பங்கேற்பவனாக அவன் இருந்தான். மகிழ்ச்சியைத் தேடும் விதத்தில், கடலிலிருந்து உயரமான இடத்தில் அமைந்திருந்த அந்த வீட்டின் தனிச்சிறப்பு விரைவிலேயே தெவிட்டிப்போகிறது.

தனக்குத் தனிமை வேண்டும் என்று மெர்சோ முடிவு செய்கிறான். தான் நேசிக்காத ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டுக்குக் குடிபெயர்கிறான். நகரத்தில் இருந்ததற்கு மாறாக அங்கு அவன் ஒதுங்கி வாழ்கிறான். இங்குதான் அவன் சுயமறுப்பு நிலையில், விவரிக்க முடியாத விதத்திலான அன்னியத் தன்மையில் அமைதி காண்கிறான். தன்னைப் பொருட்படுத்தாத இந்த உலகத்தை வேண்டாவெறுப்போடு ஏற்றுக் கொள்கிறான். இந்த நாவலின் உள்ளடக்கம் இருத்தலியல் நிச்சயமின்மையும், நீட்சேயின் இன்மைவாதமும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. அதிகாரத்துக்கான விருப்பம் என்னும் நீட்சேயின் கருத்து இங்கு மகிழ்ச்சிக்கான விருப்பம் என்று மாற்றியமைக்கப்படுகிறது.

ஆல்பெர் காம்யுவின் இலக்கிய சாதனையாகக் கருதப்படும் உலகப் புகழ்பெற்ற அந்நியன் நாவலுக்கும் இந்த நாவலுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு நாவல்களிலும் ஒரு கொலை நடக்கிறது. இரண்டு நாவல்களும் கொலைக்கு முந்தைய வாழ்க்கை, பிந்தைய வாழ்க்கை என இரு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

மகிழ்ச்சியான மரணம் நாவலில் நடக்கும் கொலைக்கு ஒரு காரணம் இருக்கிறது. பலியாகிறவரே அந்தக் கொலைக்கு உடந்தையாகவும் இருக்கிறார். ஆனால் அந்நியன் நாவலில் கொலைக்கான காரணம் வெய்யிலும், கத்தியின் மேல் பிரதிபலித்த ஒளிக்கற்றையும்தான் என்று சொல்லப்படுகிறது. கொலை செய்யப்படுபவர் ஓர் அராபியர். இது காம்யுவை காலனியவாதிகளின் பக்கம் நெருங்கச் செய்கிறது. மகிழ்ச்சியான மரணம் நாவலில் அராபியர்கள் என்னும் இருண்மை இடம்பெறுவதில்லை.

எண்பதுகளின் தொடக்கத்திலேயே காம்யுவும் அவர் சார்ந்த தத்துவமான இருத்தலியலும் தமிழில் அறிமுகமாகிவிட்டன. தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இலக்கியவாதியாக காம்யு விளங்குகிறார். அவருடைய அந்நியன், கொள்ளை நோய், வீழ்ச்சி, முதல் மனிதன் ஆகிய நாவல்களும், புரட்சியாளன் என்னும் கட்டுரை நூலும் தமிழில் வெளிவந்துள்ளன. விருந்தாளி என்னும் கதை க.நா.சுப்ரமண்யத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மகிழ்ச்சியான மரணம் என்னும் இந்த நூலே காம்யுவின் படைப்பியக்கத்தின், தத்துவப்பார்வையின் தொடக்கப்புள்ளியாகவும், மூலஊற்றாகவும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

புத்தகத்தைப் வாங்க  -  https://thadagam.com/products/magizhchiyaana-maranam

Back to blog