தடாகம் வெளியீடு
திராவிட மதம்
திராவிட மதம்
மேல்நாடுகளிலிருந்து வந்தோர் ஏற்கனவே இங்கு வந்து ஸிந்து நதிக்கரையில் வசித்த ஆரியர்களை ஸிந்து என அழைத்து அது அவர்களது ஒலிப்பில் “ஹிண்டு” என வழுவியதாகவும் அவர்களின் ஆட்சியில் ஆரியர்களையும் அவர்களைப் பின்பற்றிய மற்றவர்களையும் ஹிண்டு என்ற பதத்தினாலேயே குறிப்பிட்டபோது அப்பதம் இந்திய உச்சரிப்பில் “ஹிந்து”வாக மாறியதாகவும் சைவம், வைஷ்ணவம், த்வைதம், அத்வைதம் ஆகிய நான்கு மதங்களுக்கும் பிராமண நூல் வேதமேயாகையால் அவற்றிற்குப் பொதுப்பெயராக ஹிந்து என்பதற்குப் பதிலாய் வைதிக மதம் என்று பெயரிட்டு அழைப்பதே சாலப்பொறுத்தமென ஆரிய ஸநாதநிகள் வாதாடினர்.
திராவிடரின் வரலாற்றையும் அடையாளத்தையும் ஆரியர்வழி காண்பதை மறுத்து திராவிட ஆதாரங்களில் தேடி அவர்கள் திராவிட மதத்தைச் சேர்ந்தோர் என்ற ஓர்மையை உசுப்பிய கா. அலர்மேன்மங்கை, திரா விடருக்கு விக்கிரக பூஜை இல்லை; ஆலயமும் கடவுள் வசிக்குமென வெவ்வேறு இடங்களும் இல்லை; மோக்ஷமும், நரகமும் இல்லை; ஜாதி பேதமில்லை; உயர்வு தாழ்வு இல்லை எனக் கூறும் அவர், திராவிட மதத்துக்கு நன்மை தீமையுண்டு; பொது சிந்தனையுண்டு; வீரக்கல் வழி பாடுண்டு என ஆரிய, திராவிட மதங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அடுக்குகிறார். தமிழ்ப் பௌத்தத்தை அயோத்திதாசப் பண்டிதரும், தமிழ் இசையை ஆபிரகாம் பண்டிதரும், தமிழ்ச் சித்த மருத்துவத்தை ஆனந்தம் பண்டிதரும் மீட்டெடுத்த ஆண்களின் வரிசையில் திராவிட மதத்தை பண்டிதை அலர்மேன் மங்கை மீட்டார். இருப்பினும், வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை திராவிடரும் ஆரியரும் எதிரும் புதிருமாக முட்டிமோதுவது தொடர்ந்தபோதிலும் முரண்பட்ட இவ்விரு பிரிவினரையும் ஹிந்துவாக மாற்றியது அரசியல் வினோதமே. திராவிட மதத்துக்குத் திரும்ப வேண்டுமென அறைகூவல் விடுத்த கா. அலர்மேன் மங்கையின் திராவிட மதம் என்ற நூலும், இந்துதேச சமயங்களைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன; இவை மதங்களின் வரலாற்றை அறிய துணைபுரியும்.