தடாகம் வெளியீடு
திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள்
திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள்
சுயமரியாதைக் கோட்பாட்டைப் பின்னாளில் பெரியார் பின்பற்றியதால், "நியாயப்படி அயோத்திதாசப் பண்டிதர்தான் சுயமரியாதைத் தலைவர்" எனத் "தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படைத் தலைவரான பாலகுரு சிவத்தின் பேச்சு திராவிடன் பத்திரிகையிலேயே வெளியானதால் திராவிட இயக்கம் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டது தெளிவு. ஆதிதிராவிடத்திலிருந்து திராவிடம் பரிணமித்ததால் முன்னதும் பின்னதும் ஒன்று மற்றொன்றுக்குப் பக்கப் பலமாய் இயல்பாய் இணங்கி இயங்கின. மதவாதத்தைச் சுட்டுவதற்கு சமகாலத்தில் பயன்படுத்தும் "தீவிரவாதம், தீவிரவாதி" என்ற சொற்களுக்கான “Terrorizing, terrorists" என்ற ஆங்கிலச் சொற்களால் ஜாதிவெறியர்களை இரட்டைமலை சீனிவாசனும் ஆர். வீரையனும் குறிப்பிட்டனர். கே.எம். தானியேல் மேஸ்திரி, ராமசொக்கலிங்கம் பிள்ளை, ஜி.எம்.ராஜூ, பள்ளப்பட்டி அ. ராமசாமி, வி.பி.எஸ்.மணி, மு. பெரியசாமி மூப்பன், சின்னபையன் மூப்பன், வீ. மருதைமுத்து மூப்பன், பி. மரியண்ணன், வி.அண்ணாமலை, இளந்திருமாறன், ஏ.எஸ். ஜான், பி.எம்.தாஸ், எம்.தேவதாசன் எம்.எல்.ஸி., ஜி. ஆர். பிரேமையா எம்.எல்.ஸி., அ. பாலகிருஷ்ணன், ஆர்.பி. தங்கவேலன், திருச்சி அந்தோணி, பெ.தா.அலெக்சாந்தர், எம்.சி.ராஜா, சிந்தாதிரிப்பேட்டை மு.கோவிந்தராமன், டி.ஏ.சுந்தரம், பி.பாலசுந்தரம்பிள்ளை, எம்.சி.ராஜா, மீனாம்பாள் சிவராஜ், ப. அழகானந்தம், இரட்டைமலை சீனிவாசன், ஆர். வீரையன், பி.ராஜகோபாலன், பாலகுருசிவன் என அறியப்பட்ட, அறியப்படாத ஆதிதிராவிட ஆளுமைகளின் பேச்சும் எழுத்தும், அம்பேத்கர் - சீனிவாசன் கூட்டறிக்கை, தூத்துக்குடி ஆதிதிராவிடர்கள் நேருவுக்கு வாசித்தளித்த வரவேற்புப் பத்திரம், திருச்சி ஆதிதிராவிட வாலிபர்கள் காந்தியுடன் நிகழ்த்திய உரையாடல், மேல அரசூர் ஆதிதிராவிடர்கள், ஊத்தங்கரை வட்டாட்சி ஆதிதிராவிடக் குடிகளின் கோரிக்கைகள், ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கு, சீலையம்பட்டி "குடும்பர்” மத மாற்றமும் இதற்கு ஆதரவாய் திருவண்ணாமலை ஆதிதிராவிடரின் அறிவிப்பும் போன்ற ஆவணங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.