தடாகம் வெளியீடு
இல்லறவாசிகள்
இல்லறவாசிகள்
பகல் தூக்கத்திற்காகப் படுக்கையில் கிடத்திவைத்தபோது தன் மூத்த மகனுடன் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்து நீண்ட நாட்களாகி விடவில்லை. அவன் கேட்டது நினைவில் உள்ளது. “அப்பா உன்னை எங்குப் புதைக்க
வேண்டும் என்று விரும்புகிறாய்? மொராக்கோவா, பிரான்ஸா?
உன் உடல் வெள்ளைத் துணியால் சுற்றப்படுவதை விரும்புகிறாயா? அல்லது அழகான கறுப்பு நிற உடையுடன் சவப் பெட்டியில் வைக்கப்படுவதை விரும்புகிறாயா? உன் கல்லறையை நாங்கள் வந்து பார்வையிட வேண்டும் என ஆசைப்படுகிறாயா? அல்லது அதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? எப்படியும் உனக்கு எதுவும் தெரியப்போவதில்லை. நாங்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, உனக்கு எல்லாமே ஒன்றுதான் இல்லையா? உன் உடல் எரிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. திரைப் படங்களில் பார்த்திருக்கிறேன். அது மிகவும் கொடூரமாக இருக்கும்.
இஸ்லாமும் இப்போது அதைத் தடை செய்துள்ளது என்று நினைக்கிறேன். அப்படித்தானே? போகட்டும், உன்னிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறேன். உனக்குத் தெரியுமா, நீ நீண்ட காலம் வாழ வேண்டும், ஆமாம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன். இருந்தாலும் எந்த நாடு, என்ன துணி என்பதை மட்டும் சொல்” என்றான்.
மகனுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தான். “மகனே, நன்கு யோசித்துதான் சொல்கிறேன். மொராக்கோதான் அந்த நாடு. உடலுக்கு வெள்ளைத் துணிதான். கறுப்பு உடை வேண்டாம். நம்முடைய அசுத்தமான கல்லறைகளை நினைத்தால்தான் கவலை
யாக இருக்கிறது. உன் தாத்தா, பாட்டி கல்லறைக்கு நான் போன போது பார்த்திருப்பாயே, அங்குக் காணப்பட்ட சுகாதாரக்கேடு நம்மை முகம்சுளிக்க வைத்தது. எங்குப் பார்த்தாலும் புட்டிகள், பிளாஸ்டிக் பைகள், செத்துக் கிடந்த பூனைகள், தெருநாய்கள், பிச்சைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள் எனப் பலரது மனிதக் கழிவுகள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நெடுந் துயிலில் ஆழ்ந்துள்ள மறைந்தவர்களுக்கான மரியாதை இல்லை. அவர்களுக்கு அது தேவையில்லை என்று நீ சொல்லலாம். சரி
தான். ஆனால், அப்படி மரியாதை செய்வதுதான் சிறந்த முறை என்பது என் கொள்கை.