தடாகம் வெளியீடு
இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையில்
இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையில்
தேற்றங்கள், கைகுலுக்கல்கள் மற்றும் தலையாட்டல்கள் இவற்றின் பொருள் என்ன? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான வித்தியாசத்தின் பொருள் என்ன? எனக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்டுள்ள திரைகளின் பொருள் என்ன?
திருச்சபைக்குள்ளும், அதன் மர்மங்களுக்குள்ளும் மற்ற ஏராளமான பேரைப்போல் என்னால் பின்வாங்கிச் செல்லமுடியவில்லை. என் பெற்றோர் அனைத்து வறட்டுக் கோட்பாடுகளையும் நிராகரித் தார்கள். வெள்ளையராக இருக்க விரும்பும் மக்களால் சந்தைப் படுத்தப்பட்ட விடுமுறை நாட்களை நாங்கள் புறக்கணித்தோம். அவர்களுடைய இசைப் பாடல்களுக்கு நாங்கள் எழுந்து நிற்கப்-போவதில்லை, அவர்களுடைய கடவுள்களுக்கு முன்னால் நாங்கள் மண்டியிடப் போவதில்லை, அதனால் அந்த நியாயமான கடவுளும் என் பக்கம் இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு இருக்கவில்லை.
“அடக்கமுள்ளவர்கள், இந்த உலகத்தை மரபுரிமையாகப் பெறுவார்கள்” என்பது எனக்கு எந்த அர்த்தத்தையும் தருவதாக இருக்கவில்லை. அடக்கமுள்ளவர்கள், மேற்கு பால்டிமோரில் அடித்துநொறுக்கப்பட்டார்கள், வால்புரூக் சந்திப்பில் காலில் மிதித்துத்துவைக்கப்பட்டார்கள், பார்க்ஹைட்ஸில் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள், நகரச்சிறையில் துவலைக் குளியலறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். பிரபஞ்சம் குறித்த எனது புரிதல் உடல்சார்ந்ததாக இருந்தது, அதன் அறம்சார்ந்த வில் வளைவு ஒழுங்கின்மை நோக்கி வளைந்து, பிறகு ஒரு பெட்டியில் முடிவடைந்தது. துப்பாக்கியை உருவியெடுப்பது என்பது, உடலின் மீதான அதிகாரத்தை ஒரு குழந்தை தன் கையிலெடுத்துக்கொண்டு, மற்ற குழந்தைகளை நினைவுத்திறனின் எல்லைக்குத் துரத்தக் கூடியது - சிறு கண்களைக்கொண்ட பையன் விடுக்கும் செய்தி இதுவாகத்-தான் இருந்தது. என்னைச் சுற்றியிருந்த அனைத்தையும் அச்சம் ஆட்சிபுரிந்தது. அத்துடன் இந்த அச்சம் பெருங்கனவுடன் இணைக்கப்-பட்டிருந்தது என்பதும், கவலையற்ற பையன்களுடன், பை ((pie) மற்றும் பானையில் வறுத்த கறியுடன், நமது தொலைக் காட்சிப் பெட்டிகளில் வெளிக்காட்டப்படும் வெள்ளை வேலிகள் மற்றும் பச்சைப் புல்தரைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது என்பதும், எல்லா கறுப்பின மக்களுக்கும் தெரிந்திருந்ததுபோல் எனக்கும் தெரிந்திருந்தது.