தடாகம் வெளியீடு
குழந்தைப் பருவம்: உறைந்த இரவுகள்:டெஸர் ஓஸ்லு
குழந்தைப் பருவம்: உறைந்த இரவுகள்:டெஸர் ஓஸ்லு
டெஸர் ஓஸ்லு என்ற துருக்கி எழுத்தாளர் எழுதிய முதல் நாவல் 'Cold Nights of Childhood'. அதன் தமிழாக்கம் ‘குழந்தைப் பருவம்: உறைந்த இரவுகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது.
இந்த நாவல் கிட்டத்தட்ட அவருடைய சுயசரிதையாக அமைந்திருப்பதால், அவர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவாவது புரிந்துகொள்வது அவசியமாகிறது. எவை உண்மை நிகழ்வுகள், எவை கற்பனையில் உதித்தவை என்று பிரித்துப் பார்ப்பது கடினம். ஒரு பெயர் தெரியாத இளம் பெண் கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது.
அந்த விவரங்கள் ஆசிரியர் அறிமுகப் பகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த நாவல் 1950களில் துருக்கி நாட்டில் நிலவிய சூழலைப் பின்புலமாகக் கொண்டது. அந்தச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு, துருக்கி நாட்டின் வரலாற்றில் சற்றுப் பின்னோக்கிச் சென்று பண்டைய துருக்கியின் வளமான கலாச்சாரத்தையும் புவியியல் அமைப்பையும் அறிவது உதவும்.
தொன்மை வாய்ந்த நாடு, உலக வரலாற்றின் மையம், மனித இனம் குடியேறிய முதல் தளம், நாகரிகங்களின் தொட்டில், கிரேக்க, ரோமானிய, ஓட்டோமன் பேரரசுகளின் தலைமைப் பீடம், ஹோமரின் பிறப்பிடம், கன்னி மரியாளின் இறுதி இருப்பிடம் போன்ற பல அரிய பாரம்பரியங்களைக் கொண்ட நாடு துருக்கி.
பன்னாட்டு மக்கள் வாழும் பல நகரங்களையும், பழமை வாய்ந்த கிராமங்களையும் உள்ளடக்கிய நாடு, கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்களின் மனதைக் கொள்ளைகொள்ளும் கலவையை உடைய நாடு, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க ஆகிய மூன்று கண்டங்கள் ஒன்றுகூடுமிடம், இரண்டு கண்டங்களில் நிலப்பரப்பு கொண்ட ஒரே நாடு, மூன்று பக்கமும் மூன்று கடல்களால் - வடக்கே கருங்கடல், தெற்கே மத்தியதரைக் கடல், மேற்கே ஈஜியன் கடல் - சூழப்பட்ட நாடு, ஆகிய பெருமைகளைக் கொண்ட நாடு. கம்பீரமான மலைகளும், ஐயாயிரம் மைல்களுக்கும் அதிகமான நீண்ட கடற்கரையும் துருக்கியின் அடையாளங்களில் இரண்டு.
துருக்கியின் ஆசியப் பகுதி ஈஜியன் என்றும், ஐரோப்பியப் பகுதி த்ரேஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கண்டங்களிலும் அமைந்துள்ள ஒரே நகரமாக இஸ்தான்புல் விளங்குகிறது.
ஓட்டோமன் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் மீதமிருந்த பகுதியில் 1923ஆம் ஆண்டு நவீன துருக்கி ஒரு குடியரசாக நிறுவப்பட்டது.