தடாகம் வெளியீடு
முரண்பாடு:ஹெர்வே லெ தெல்லியே
முரண்பாடு:ஹெர்வே லெ தெல்லியே
பிரெஞ்சு எழுத்தாளர், ஹெர்வே லெ தெல்லியே (Hervé le Tellier)யின் L'Anomalie என்ற நாவல் கல்லிமார் (Gallimard)
பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது 2020 ஆண்டிற்கான கோன்கூர் (Goncourt) என்ற ஃபிரெஞ்சு இலக்கியப் பரிசை வென்றது. இந்த நாவல் ஒரு அறிவியல் புனைகதையாகும். ‘முரண்பாடு’ நாவல் பாரிஸ் நியூயார்க் ஏர் பிரான்ஸ் விமானப் பயணத்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியது. பயணிகளில் தொழில்முறை கொலையாளி பிளேக், நைஜீரிய இசைக் கலைஞன் ஸ்லிம்பாய், பெண் வழக்கறிஞர் ஜோனா, கட்டடக்கலைஞன் ஆந்திரே, அவனுடைய தோழி லூசி, கணையத்தில் நோய்க் கட்டியுடன் அவதிப்படும் தாவீது, தனது வளர்ப்புத் தவளைக்கு அடிமையான சோபியா, எழுத்தாளர் விக்டர் மியெசெல் போன்றவர்கள் பயணம் செய்கிறார்கள். அந்த விமானம் திடீரென ஒரு பிரம்மாண்டமான குமுலோனிம்பஸ் எனும் மேகக்
கூட்டம் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதுகிறது. பயங்கர கொந்தளிப்பை அனுபவித்த அந்த போயிங் விமானம் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் அமெரிக்க இராணுவத்தாரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.மூன்று மாதங்களுக்கு முன்பும், இதைவிட ஒரு பெரிய கொந்தளிப்புக்குப் பிறகு, அதே விமானம் அதே குழுவினருடனும்
அதே பயணிகளுடனும் நியூயார்க்கில் தரையிறங்கியது. முதல் விமானத்தின் இந்த சரியான பிரதி முன்பு பயணித்த அதே நபர்களுடன் இப்போது எப்படி, எங்கிருந்து வந்தது? நகல்கள் யதார்த்தமாக மாறக்கூடும் என்ற கருதுகோளை ஹெர்வே லெ தெல்லியே முன்வைக்கிறார்.