தடாகம் வெளியீடு
நிலைமாறும் தீவுகள் அந்தமான் நிகோபாரின் கதை:பங்கஜ் ஷெக்சாரியா
நிலைமாறும் தீவுகள் அந்தமான் நிகோபாரின் கதை:பங்கஜ் ஷெக்சாரியா
இந்தியாவின் அரசாட்சிக்கு உட்பட்ட ஏராளமான தீவுகளைக் கொண்டதாக இந்தியப் பெருங்கடலில் தனித்திருக்கும் தீவுக்கூட்டம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும். இந்தத் தீவுகளின் சமகாலத்திய சிக்கல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே ‘நிலைமாறும் தீவுகள்’ எனும் இந்த நூல். தீவுகளின் கடந்த 20 ஆண்டு கால வாழ்நிலையையும்; தீவுகளின் சுற்றுச்சூழல், உயிர்ப் பன்மயம், வனப்பாதுகாப்பு, வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும் பற்றிய தெளிவான பார்வையையும், முழுமையான கண்ணோட்டத்தையும் அறிவியல் ஆதாரங்களுடன் நூல் வழங்குகிறது. நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருத்தப்பாடுடைய ஒட்டுமொத்தத் தகவல்களையும் இந்த நூல் தருகிறது. தீவு நிலப்பகுதியின் வரைபடத்தைப் போலவும், முன்னெடுக்க வேண்டிய செயல்களுக்கான ஒரு சட்டகம் போலவும் இந்த நூல் அமைந்துள்ளது. தீவுகளின் கவர்ந்திழுக்கும் கடற்கரைப் பகுதிகள், பவளத்திட்டுக்கள், காடுகள், தீவுகளுக்கே உரிய தாவரங்கள், உயிரினங்கள், தீவுகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தொல்குடி மாந்தர் பற்றிய எண்ணற்ற தகவல்களை நூல் கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற பல்வேறு செய்தித்தாள்களிலும், பருவ இதழ்களிலும் நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளும், மாநாடுகளில் அவர் அளித்திருக்கும் கட்டுரைகளும் இந்த நுலில் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகள், தகவல் பலகைச் செய்திகள், நிழற்படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல், தீவுகளில் வசிக்கும் தொல்குடி மாந்தரின் வாழ்க்கைச் சூழலை விரிவாக விளக்குகிறது. இந்த விவரிப்பு இந்தத் தீவுகள் பற்றிய மறுபக்கத்தை நமக்குக் காட்டுகிறது. எந்த அளவுக்கு உணர்வின்றி நாம் நடந்துகொள்கிறோம் என்பது நூலைப் படிக்கும்போது புலனாகிறது.