தடாகம் வெளியீடு
உல்லாசச் திருமணம்
உல்லாசச் திருமணம்
இது பற்றி விவாதிக்க மீண்டும் ஒருமுறை முலே அகமதுவைச் சந்தித்தான்."பொதுவாகப் பார்த்தால் உன் குழந்தைகள் பால் கலந்த காபி போன்றவர்கள். ஒருபுறம் கருப்பு காபியும், மறுபுறம் பாலுமாக இருக்கின்றனர். இறைவன் ஏதாவது காரணங்கள் வைத்திருப்பான். இறைவனின் அருட்கொடையை ஏற்றுக்கொண்டு, இது அவருடைய நல்லுள்ளத்தின் அடையாளம் என நினைத்துக்கொள். மனித இனத் தைப் பலவாறாகப் படைத்து அதன்மூலம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி இறைவன் செய்துள்ளார். கருப்பு மனிதருக்கும் வெள்ளை மனிதருக்குமிடையேயும்; அந்நியருக்கும் இதே நாட்டைச் சேர்ந்தவருக்கும்; இங்கிருப்பவர்களுக்கும் அங்கிருந்து வந்தவர்களுக் கும் என இறைவன் பேதம் பார்ப்பதில்லை. நீ கொடுத்து வைத்தவன் என்பதை நினைவில் வை. உனக்குக் கிடைத்துள்ள நல்வாய்ப்பைத் தேவையற்ற விஷயங்களில் விரயமாக்காதே. நம் மதத்தின் மீதும் நம்பிக்கைகள் மீதும் ஈடுபாடு வருமாறு நல்லதொரு கல்வியை அவர்களுக்கு வழங்கு".
தனக்கு இரண்டு புதிய சகோதரர்கள் கிடைத்திருக்கும் மகிழ்ச் சியை வெளிக்காட்டாமல் இருக்க கரீமால் இயலவில்லை. நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றபோது மகிழ்ந்ததைப்போல் அவன் ஆடுவதும் பாடுவதுமாக இருந்தான். பிரசவத்தின் போது, அங்கு இருந்ததால் இன்று காலை அவன் பயிற்சியில் ஈடுபடவில்லை. அம்மாவிடம் அவன்தான் இச்செய்தியை அறிவித்தான். அவள் ஆச்சரியப்படவில்லை. மாறாக,
"ஒன்று வெள்ளை, மற்றது கருப்பு என்பதிலிருந்தே அவள் ஒரு சூன்யக்காரி என்பது புலனாகிறது! இதுவரை யாராவது இப்படிக் கேள்விப்பட்டதுண்டா?" என்றாள்.
கரீம் எதுவும் மறுத்துப் பேசவில்லை. எல்லோருக்கும் இச்செய்தியை அறிவிக்க வீட்டுக்குள் ஓடினான். வாணலி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு,ஒரு மரக்கரண்டியால் அதை அடித்து ஓசை எழுப்பியபடிக் கூவினான்.
"எல்லோருக்கும் ஓர் அறிவி... அறிவிப்பு: ஹஸ்... ஹசன்.. ஹூ...ஹூசேன் வத்திருக்கின்றனர். வாழ்க அப்பா... வாழ்க அம்மா..."
Blurb Description : மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள்,அநீதிகள்,தீமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமாக உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.
மூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில்,ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.
இப்புதினத்தைத் தன் மகன் அமீனுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரீம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன்.இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரீமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
விடாமல் தொடரும் சமூகத் தீமைகள் மீதான தன் அறச்சீற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.