தடாகம் வெளியீடு
வெள்ளையானை போல அந்த மலை:எர்னெஸ்ட் ஹெமிங்வே
வெள்ளையானை போல அந்த மலை:எர்னெஸ்ட் ஹெமிங்வே
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் படைப்புகளைத் தவிர்த்து அமெரிக்க இலக்கிய வரலாற்றை ஒருவராலும் எழுத முடியாது. பிரிட்டிஷ் எழுத்து முறையிலிருந்து முழுமையாக விலகி தனித்துவமான அமெரிக்க எழுத்து முறையை உருவாக்கிய அமெரிக்க முன்னோடி எழுத்தாளர் அவர். சிறுகதைகள் மூலமாகத்தான் தன்னை ஒரு எழுத்தாளராக அறிமுகப்படுத்தினார். அவருடைய முதல் படைப்பு, அவர் பாரிஸ் நகரில் வாழ்ந்தபோது 1925இல் பதிநான்கு சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து மேலும் பல சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவை அவரை இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளராக அமெரிக்காவிலும் உலக அளவிலும் நிலைநாட்டின.
எழுத்துப்பணியைத் தொடங்கும்போதே பனிக்கட்டி எழுத்து முறை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி அதையே அவரது அடையாளமாக நிலைநிறுத்தினார். அவருடைய சிறுகதைகள் அமெரிக்க இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்தன.
தொடக்ககால படைப்புகளில், ஹெமிங்வே அவரைப் பற்றி எழுதினார்; அதன் பிறகு, வாழ்நாள் முழுவதும், அவருடைய கதைமாந்தர்களில் அவரை எழுதினார். அனைவராலும் போற்றப் படும், “தி ஹெமிங்வே கோட்” (The Hemingway Code) என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நெறிமுறையை அவருடைய எழுத்துகள் மூலமாக வலுவாக உருவாக்கினார். “வாழ்க்கைப் போராட்டத்தில் தனித்துப் போராடி தோற்றுக்கொண்டிருக்கும் அழுத்தமான சூழ்நிலையிலும், அடக்கமாக, திறமையாக, கண்ணியமாகச் செயலாற்ற வேண்டும்,” என்ற அந்தக் கோட்பாட்டை அவருடைய பல கதைகளில் காணலாம்.